
நீலச்சுடர்
புத்தரின் கடைசி சீடரான ஆனந்தர் இவ்வாறு கேட்டார்.
“கருணை நிரம்பிய ததாகரே, நீங்கள் ஆத்மாவை ஏற்றுக்கொள்வதில்லை. அனாத்மவாதி என்று அழைக்கப்படுகிறீர்கள். ஆனால் மறுபிறவி தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆத்மாவே இல்லாதபோது மறுபிறவி எப்படி சாத்தியம்?”

“ஆனந்தரே! ஒருவர் இறந்தபிறகு அவரது கடைசி சுவாசக் காற்று என்னவாகிறது? பரந்துகிடக்கும் இப்பிரபஞ்சத்தின் காற்றுமண்டலத்தில் கலந்துவிடுகிறது. பின் அது இன்னொருவரின் சுவாசமாகிறது. மறுபிறவி என்றால் ஒருவர் இறந்தபிறகு இன்னொரு உடலுடன் பிறக்கிறார் என்று அர்த்தமில்லை. ஒருவர் வாழும்போது அவரின் எண்ணம், சிந்தனை, செயல், தத்துவம், லட்சியம், செயல்கள் இவையெல்லாம் அவர் இறந்தபிறகு என்னவாகின்றன? அவை நல்லெண்ணங்கள், நல்ல செயல்கள் என்றால் அடுத்துவரும் தலைமுறை அவற்றை ஏந்திச்செல்கிறது. அங்கே அவர் மறுபிறவியெடுக்கிறார். ஒரு விளக்கிலிருந்து இன்னொரு விளக்கை ஏற்றலாம். இன்னொன்றிலிருந்து மற்றொன்றுக்கு...
- அம்பேத்கர் படித்துக்கொண்டிருந்தபோது வீட்டின் கதவு தட்டப்பட்டது. அடையாளத்துக்காய் பக்கத்தை மடித்துவிட்டு, எழுந்துபோய்த் திறந்தார். வாசலில் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளர் நின்றுகொண்டிருந்தார். அவரின் கண்களில் ஆச்சர்யம் சுடர்ந்தது.
“சொல்லுங்கள்” என்றார் அம்பேத்கர்.
“மகாத்மா காந்திஜியின் வீட்டுக்குச் சென்றேன். அவர் உறங்கச் சென்றுவிட்டார். வீட்டில் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. மொஹம்மத் அலி ஜின்னா வீட்டுக்குச் சென்றேன். அவரும் உறங்கச் சென்றுவிட்டார். அவர் வீட்டிலும் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. ஆனால் உங்கள் வீட்டில் இன்னமும் விளக்குகள் எரிகின்றனவே?”
“காந்திஜி, ஜின்னா இருவரின் நோக்கமும் நிறைவேறியிருக்கலாம். அவர்கள் நிம்மதியில் உறங்கச்சென்றிருக்கலாம். அவர்கள் மக்களின் விடுதலை சாத்தியப்பட்டுவிட்டது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இன்னும் என் நோக்கங்கள் நிறைவேறவில்லை. எம் மக்களின் விடுதலை இன்னும் சாத்தியப்படவில்லை. விடியலுக்கு இன்னும் காலமிருக்கிறது; இன்னும் தூரமிருக்கிறது. முடிவற்றவை என் இரவுகள். இந்த முடிவற்ற பாதை நெடுகிலும் நான் விளக்குகளை ஏற்றிவைக்கிறேன். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு, இன்னொன்றிலிருந்து மற்றொன்றுக்கு.”
“அப்படியானால், மிஸ்டர் அம்பேத்கர், நீங்கள் உங்கள் மக்களைப் பற்றி மட்டும்தான் சிந்திக்கிறீர்களா? நீங்கள் பொதுவான தலைவரில்லையா?”
அம்பேத்கர் புன்னகைத்தார். வாசலில் அவர் தலைக்கு மேலிருந்த புத்தரின் புகைப்படத்தின்கீழ் நீலவிளக்கு ஒளிர்ந்துகொண்டிருந்தது.
1947, மார்ச் 29. பெரிய பெரிய படிக்கட்டுகள் நிறைந்த அந்தப் புராதனக் கட்டடத்தில் அரசியல் சட்டக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள். நீளமான அறை முழுக்கக் காற்றை விசிறியபடி ஆறு மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்தன. அம்பேத்கர் ஒரு புத்தகத்தைக் கூர்ந்து படித்து, அடிக்கோடிட்டுக் கொண்டிருந்தார்.
“என்ன மிஸ்டர் அம்பேத்கர், டெல்லியில் ரொம்பதான் குளிர், இல்லையா?”

குரல் கேட்டு நிமிர்ந்துபார்த்தார். நிசாருதீன் அகமது.
“ஆமாம் ஆமாம் மிஸ்டர் அகமது. ஆனால் லண்டன் அளவுக்குக் குளிர் இல்லை.”
“ஆனால் நீங்கள் லண்டன்காரரைப் போல்தானே எப்போதும் கோட்டுடன் இருக்கிறீர்கள்?”
அம்பேத்கர் சிரித்தார்.
“எப்படியோ ஆர்ட்டிக்கிள் 15 கொண்டுவந்து விட்டீர்கள். ரொம்ப நல்ல விஷயம். ஒருத்தரைப் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாதுன்னு சட்டம் கொண்டுவர்றது எவ்வளவு பெரிய சாதனை!”
அம்பேத்கர் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது அல்லாடி கிருஷ்ணசாமியின் குரல் கேட்டது. “மிஸ்டர் அம்பேத்கர், தீண்டாமை ஒழிப்புச் சட்டப்பிரிவு, அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்படுது. அடிப்படை உரிமைகளுக்கான நிர்ணயக்குழு உறுப்பினர்களுக்கு, நீங்கள் எழுதிவந்த டிராஃப்டை வாசித்துக்காட்டுங்கள்.”
கோட்டை அழுந்தப் பிடித்தபடி எழுந்த அம்பேத்கர், வாசிக்கத் தொடங்கினார்.
‘தரம், பிறப்பு, தனிநபர், குடும்பம், சமயம், சமயப் பண்பாடு என்னும் செயல்பாடு ஆகியவற்றிலிருந்து உருவாகும் எந்த ஒரு சலுகையும் அல்லது இயலாமை என்பதும் ஒழிக்கப்படும்.’
மூத்த உறுப்பினர் ஒருவர் குறுக்கிட்டார்.
“நோ மிஸ்டர் அம்பேத்கர். இதில மதத்தைக் கொண்டுவர்றது சரியா இருக்காது. இந்தியா இப்போ எரிமலைக்குழம்பு மேல உக்காந்திருக்கு. எந்த நேரம் வேணும்னாலும் மதச்சண்டைகள் வெடிக்கலாம். அதுக்கு நாமே காரணமா இருந்துடக்கூடாது. மதப்பாரம்பர்யத்தை அவ்வளவு சுலபமா இந்தியர்கள் விட்டுத்தர மாட்டாங்க. மிஸ்டர் கே.எம்.முன்ஷி, நீங்க ஒரு டிராஃப்ட் எழுதிட்டு வந்தீங்களே, அதையும் வாசிங்க.”
கே.எம்.முன்ஷி எழுந்து அவைக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வாசித்தார்.
‘`தீண்டாமை ஒழிக்கப்படும். அத்தகைய செயல்பாடு அரசியல் சட்டத்தின்படி தண்டனைக்கு உரிய குற்றமாகும்.’’
‘`இப்படி மொட்டையா சொன்னா எப்படி? தீண்டாமைக்கு விளக்கம் கொடுக்க வேண்டாமா?” என்று கேட்டார் நிசாருதீன் அகமது. ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்ஷியின் வரைவையே ஏற்றுக்கொண்டார்கள். ஏற்றுக்கொள்ளப்பட்டதை மீண்டும் அம்பேத்கர் எழுந்து படித்தார். `‘மகாத்மா காந்தி வாழ்க’’ என்று உறுப்பினர்கள் எழுப்பிய சத்தத்தில் அறை நிறைந்தது. ஜன்னலுக்கு வெளியே புறாக்கள் சிறகடித்துப் பறந்தன. காற்றில் அடித்துக் கொண்டிருந்த ஒரு ஜன்னலுக்கு யாரோ ஒரு சிறுகல்லைக் கொண்டுவந்து முட்டுக் கொடுத்தார்கள்.
1951, செப்டம்பர் 28. இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் அமைந்த கேன்டீன். அந்த இருவரும் சாவகாசமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
“போண்டா நல்லா போட்டிருக்கானே, டேஸ்டா இருக்கு.”
“ரொட்டி, சப்ஜியும் நல்லாருக்கு. எங்க மாதாஜி கைப்பக்குவம் மாதிரியே இருக்கு. ஆமா, டெல்லி பாலிடிக்ஸுக்கு வந்திட்டீங்க. இன்னும் எத்தனைநாள் போண்டா, இட்லி, மசால் தோசை, சாம்பார் சாப்பிட்டிக் கிட்டிருக்கப்போறீங்க. எப்போ ரொட்டி, சப்ஜிக்கு மாறப்போறீங்க?”
“மாறுறேன், மாறுறேன். எல்லாம் உடனே மாறிட முடியுமா? படிப்படியாதான் மாறும். ஆனா பாருங்க, இந்த அம்பேத்கருக்கு இது புரியலை. ரொம்ப கோபக்காரரா இருக்காரு. நேத்து பாருங்க, லா மினிஸ்டர் போஸ்ட்டை ரிசைன் பண்ணிட்டுப் போயிட்டாரு.”
“ரொம்பப் பிடிவாதக்காரர்தான். தமிழ்நாட்டில ஒரு போராட்டம் நடந்ததும் ஓ.பி.சின்னு ஒரு பிரிவை உண்டாக்கி, அதுக்கு ரிசர்வேசனும் கொடுக்கணும்னுட்டாரு. கம்யூனிஸ்ட்காரனே பரவாயில்லை. தொழிலாளர்களுக்கு எட்டுமணிநேர வேலைன்னு சட்டம் கொண்டுவந்தாரு. கடைசியாக் கொண்டுவந்தார் பாருங்க, இந்து சட்ட மசோதா. அதை பார்லிமென்ட் ஏத்துக்கலைங்கவும் கோபப்பட்டு ரிசைன் பண்ணிட்டுப்போயிட்டார்.”
“ரிசைன் பண்ணிட்டு ஒரு அறிக்கையும் கொடுத்திருக்கார். அரசியல் சட்டத்தை ஏத்து ஒரு வருஷம் ஆச்சு, இன்னும் ஏன் ஓ.பி.சி முன்னேற்றத்துக்கு கமிஷன் அமைக்கலைன்னு கேட்டிருக்கார். விடமாட்டார்போல இருக்கே. அந்த இந்து சட்ட மசோதா, அப்பப்பா! மசோதாவா அது! பகத்சிங் பார்லிமென்ட்ல வீசின வெடிகுண்டைவிடப் பெரிய வெடிகுண்டு. பொம்மனாட்டிகளுக்கு அவங்க அப்பா சொத்தில பங்கு கொடுக்கணுமாம். விவாகரத்து பண்ற உரிமை கொடுக்கணுமாம். ஏற்கெனவே பொம்மனாட்டிக ஆட ஆரம்பிச்சிட்டாளுக. இன்னும் உரிமை கொடுத்தா, நம்மளைக் கீழ போட்டு மிதிச்சிடுவாளுக. நம்ம கல்ச்சர் என்ன ஆகுறது!”
“ரொட்டி சப்ஜி சாப்பிட்டுப் பழகறதும் நம்ம கல்ச்சருக்கு முக்கியம் ஜி. சாப்பிட்டுப் பழகுங்க!”
கீழே சிதறிக்கிடந்த உணவுத் துணுக்குகளை பறந்துவந்த சில காக்கைகள் கொத்தத் தொடங்கின.
1956, டிசம்பர் 6. தமிழகத்தின் தென்மாவட்டத்தில் உள்ள குக்கிராமம். கறுப்புச் சட்டையுடன் தளர்வான நடையில் நடந்துவந்து கொண்டிருந்தார் சுப்பையா. கையில் சுருட்டப்பட்ட நாளிதழ். கண்களிலும் முகத்திலும் சோகம் அப்பிக்கிடந்தது. மதிய வெயிலில் காலியாக இருந்த கடைவீதியில் எதிர்ப்பட்ட சண்முகம், சுப்பையாவை நிறுத்தினார்.

“என்ன சுப்பையா, எங்கே போறீரு? முகமெல்லாம் வாடிக்கிடக்கு. வெயிலா, விசனமா? ‘ராவணன் உணவகம்’னு ஓட்டல் ஆரம்பிச்சீரே, எப்படிப் போகுது?”
“நல்லாப்போகுது. பல பிரச்னை வரத்தான் செய்யுது. ஆபீசருக்கு மொட்டை பெட்டிஷன் எழுதிப்போடறாங்க. நைட்டு கூரை மேல காவாலிப்பயலுக கல்லெறியறாங்க. எல்லாத்தையும் சமாளிச்சுட்டுத்தான் நடத்திக்கிட்டிருக்கேன்.”
“அதுக்கா இவ்ளோ விசனப்படறீரு? கடவுள் புண்ணியத்தில... சரி ஒமக்குப் பிடிக்காது. ஒம்ம மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும் ஓய். கவலைப்படறதை விடும்.”
“அதுக்குக் கவலைப்பட்டேன்னு ஒம்மகிட்ட யாரு சொன்னா? அம்பேத்கர் இறந்துட்டாரு” என்றபடி அந்த நாளிதழை விரித்து நீட்டினார்.
‘உலகமேதை டாக்டர் அம்பேத்கார் உயிர்நீத்தார்’ என்றது ‘விடுதலை’ தலைப்புச்செய்தி.
`‘தொழிலாளர் அமைச்சர், சட்ட அமைச்சரா இருந்தாரே அவர்தானே? இதுக்கா அவ்வளவு விசனம்? அவர் அவங்க தலைவர் ஆச்சே, நீரு ஏன் வாடறீரு?”
“என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. அவர் எவ்ளோ பெரிய மனிதர். அவருக்குத் தெரியாத விஷயமே கிடையாது. புராணம், இதிகாசம், இலக்கியம், பொருளாதாரம், தத்துவம்னு படிச்சவரு. தடிதடியா புத்தகம் எழுதினவரு. அதனாலதான் ‘சட்டமேதை’ன்னு போடாம ‘உலகமேதை’ன்னு போட்டிருக்காரு அய்யா. ‘அடக்கமுடியாத துயரத்துடன் வெளியிடுகிறோம்’னு செய்தி எழுதியிருக்காரு பாருங்க. அய்யா விமர்சிக்காத தலைவர்களே கிடையாது. காந்தி, ராஜாஜி, திரு.வி.க, அண்ணாதுரைன்னு எல்லாரையும் திட்டியிருக்காரு. அவர் தலைவருன்னு சொன்ன ஒரே ஆளு அம்பேத்கருதான். அண்ட்ராயர்ல மடிச்சுவெச்சிருக்கீரே ரூபா நோட்டு. அதை அச்சடிக்கிற ரிசர்வ் பாங்கை உருவாக்கினது அம்பேத்கருதான். எங்க அய்யா சொல்லுவாரு, ‘ஒரு மனுஷனைப் பணத்தை வெச்சுதான் மதிக்கணும்னா ரிசர்வ் பாங்கைத்தான் மதிக்கணும், படிப்பை வெச்சு மதிக்கணும்னா லைப்ரரியைத்தான் மதிக்கணும்’னு. அதெல்லாம் தாண்டி இந்த மனித சமூகத்துக்கு உழைக்கிறவங்கதான் காலாகாலத்துக்கும் நிலைச்சு நிப்பாங்க. அப்படிப்பட்டவருதான் அம்பேத்கரு.”
“எப்பா போதும். சூனாமானாகாரங்களுக்குச் சொல்லவா வேணாம், அது எப்படிய்யா, மைக், மேடை இல்லாமலே பிரசங்கத்தை ஆரம்பிச்சுடறீரு? நான் வர்றேன். பையன் பன்னீர்செல்வம் என்ன பண்றான்?”
“ஸ்கூலுக்குப் போறான்” என்றபடி மீண்டும் நாளிதழைச் சுருட்டிக் கையில் வைத்தபடி நடக்கத்தொடங்கினார் சுப்பையா.
2016. வீடு இருண்டுகிடந்தது. அந்த இருட்டு தனத்தின் விரிந்துகிடந்த கூந்தலின்மீதும் அப்பிக்கிடந்தது. கன்னமேடுகள் அழுதழுது உப்பியிருந்தன. இனியும் நீரில்லை. கண்கள் வறண்டிருந்தன. பிள்ளைகள் பசியால் சுருண்டிருந்தனர். யாரோ கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு அவசரமாய் எழுந்தாள் தனம். பாக்கியம் சின்னம்மாதான். கூந்தலை அள்ளி முடிந்தாள்.
“என்னடி தனலெட்சுமி, வீடு இப்படி இருண்டுகிடக்கு. வீடான வீட்டுல விளக்கேத்து றதில்லையா? புள்ளைகளா, சாப்பிட்டீங்களா?”
‘இல்லை’ என்று தலையாட்டின இருபிள்ளைகளும்.
“ஏன்டி தனம். புள்ளைகளைப் பட்டினி போடலாமா? எல்லாம் கேள்விப்பட்டுத்தான் வந்தேன். தாத்தா பேருதான் ஒம் புருஷனுக்கும் வெச்சிருக்கு. அவர் எவ்ளோ பெரிய மனுஷன். ஊருல ஒரு பிரச்னைன்னா முத ஆளா நிப்பாரு. உங்க மாமனாரு மட்டும் என்னவாம், பன்னீர்செல்வம் ஸ்கூலில என்கூடதான் படிச்சாரு. அவரும் மரியாதையான மனுஷன். ஆனா ஒம் புருஷன்...? ரெண்டுபேரு பேரையும் கெடுக்கணும்னு தட்டழிஞ்சு கிடக்கான்.”
“ஆமா சின்னம்மா, எந்நேரமும் குடி. கோயிலு அரசமரத் திண்ணையில சூதாட்டம். ஒரு வேலைக்கும் போறதில்லை. குடிக்கிறதுக்குக் கூட ஒழைக்கிறதில்லை. போன வருஷம் என் அப்பாரு செத்துப்போனாரு. சொத்தைப் பிரிச்சு வாங்கிட்டு வான்னு ஒரே சண்டை. அன்னிலேருந்து என் அண்ணன் என் மூஞ்சியில முழிக்கிறதில்லை. சொத்தைப் பிரிச்சு வாங்கிட்டு வந்த காசு, என் கையில காதில இருந்த நகைய வெச்சுக் குடிச்சுட்டு அலையுது சனியன். அதேமாதிரி ஆகாத நாலுபேரு கூட்டாளின்னு அந்தாளுகூட அலையறானுக. சாதி சொல்லி ஊரில பஞ்சாயத்து பண்ணிக்கிட்டுத் திரியுதுக. நேத்து அம்பேத்துகரு சிலைய உடைச்சிருக்கானுக. வெறி. போலீசு சும்மா விடுமா, ஸ்டேசனுக்குத் தூக்கிட்டுப் போயிடுச்சு.”
“எல்லாம் கேள்விப்பட்டுதான் வந்தேன் தனம். ஊரே பதற்றமாயிருக்கு. பக்கத்தூர்லேருந்து போலீசு வந்து இறங்கியிருக்கு. செலையைச் சுத்திக் கூண்டு செய்யப்போறாங்களாம். இவனுக்கு எதுக்கு வேண்டாத வேலை? மப்பு உப்பு கேக்குதாம், அள்ளிப்போட ஆளு கேக்குதாம்.”

“ஸ்டேஷன்ல இருந்து வரட்டும். போதையில தூங்குறப்போ தலையில கல்லைத்தூக்கிப்போட்டுக் கொன்னுட்டு நானும் ஜெயிலுக்குப் போயிடணும். இல்லைன்னா, நீயும் வேணாம், ஒன் தாலியும் வேணாம்னு வெவாகரத்துப் பண்ணிட்டு எம் புள்ளைகளைக் கூட்டிட்டு கண்காணாத ஊருக்குப் போகணும்.”
“அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதேடி. பொம்பளைங்க கொஞ்சம் தணிஞ்சுதான் போகணும். எல்லாம் மாறும்.”
“மாறும் மாறும். ஆனா ஆம்பளைக மாற மாட்டாய்ங்க.”
“மொதல்ல நீ மொகத்தைக் கழுவி ஒரு பொட்டை வை. புள்ளைகளக் கூட்டிட்டுக் கிளம்பு. நாலு நாளைக்கு நம்ம வூட்டுல இருக்கலாம். அதுக முகம் வாடியிருக்கு பாரு. வீடு இப்படி இருண்டுகிடக்கக் கூடாது. கருப்பசாமி துடியான சாமி. ‘எம் புருசன் மனுசனாகணும்’னு கருப்பை வேண்டிக்கிட்டு விளக்கை ஏத்து. எல்லாம் நல்லபடியா நடக்கும்.”
குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிளம்பத் தயாரானாள் தனலெட்சுமி. கதவைப் பூட்டுவதற்கு முன் விளக்கைப் பற்றவைத்தாள். காற்றில் நீலச்சுடர் அசைந்தது.
- தும்பி பறக்கும்...