
கேம் ஷோ
“நீங்க இதெல்லாம் முன்னாடியே சொல்லலையே?” என்று கேட்டாள் லயா.
“ஆமாம். நீங்க முதல்ல சொன்னது வேற. இப்போ சொல்றது வேற” என்றான் அஷ்வத்.

“உங்க அக்ரிமென்ட்ல பேஜ் நம்பர் 37 படிச்சுப்பாருங்க” என்றான் பிரவீன், கேம் ஷோ நடத்தும் சர்வதேச நிறுவனத்தின் அதிகாரி.
‘இந்த கேம் ஷோவில் ஆட்ட விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படும். இந்த விதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் தகுந்த இழப்பீட்டை நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்’ என்றது விதி.
திரையரங்குகள், தொலைக்காட்சிகளிலிருந்து மக்கள் ஓ.டி.டி எனப்படும் இணைய மேடைக்குப் பெரும்பாலும் நகர்ந்துவிட்ட காலமது. கேம் ஷோக்களும் ஓ.டி.டி-க்கு நகர்ந்துவிட்டன. இந்த கேம்ஷோ, எல்லா ஷோக்களையும்போலவே ‘60 நாள்கள் வெளியுலகத் தொடர்பின்றி வாழும் கேம்’ என்றே ஆறு போட்டியாளர்களை அழைத்திருந்தது. அதில் லயாவும் ஒருத்தி. அவள் ஒரு வளர்ந்துவரும் நடிகை. ஆனால் அவள் ‘வளர்ந்துவருகிறாள்’ என்பதையும் அவள்தான் சொல்ல வேண்டும். அஷ்வத் ஒரு மாடல். சினிமா ஒளிப்பதிவாளர், யூடியூப் பிரபலம், இளம் அரசியல்வாதி, ஹோட்டல் பணியாளர் மற்ற நால்வர்.
“வழக்கமா ஒரு வீட்டில உங்களை அடைச்சு, நீங்க என்ன பண்றீங்கன்னு ஆடியன்ஸ் பார்க்கிறது, ரொம்ப போரடிச்சுப்போயிடுச்சு. அப்படியான கேம் ஷோக்கள் போன சீஸன் எடுபடலை. அதே கான்செப்ட்தான். ஆனா வீடு கிடையாது. உங்களை ஆபத்துள்ள, ஆபத்தில்லாத இடங்களுக்குக் கூட்டிட்டுப்போவோம். உங்க உயிருக்கு நாங்க உத்தரவாதம். லட்சக்கணக்கில இன்ஷூர் பண்ணியிருக்கோம். ஆக்சிடென்ட் நடந்தா கவலைப்பட வேண்டியதில்லை” என்றான் இன்னொரு அதிகாரியான சாம்சன்.
“இன்னொரு முக்கியமான விஷயம். இதைத்தான் நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. உலகமே நீங்க என்ன செய்றீங்கன்னு பார்த்துக்கிட்டிருக்கும். ஆனா அது பார்ட் ஆஃப் த கேம்தான். அதிகபட்சம் 5 மணிநேரம்தான் நீங்க அந்த கேம்ல இருக்கப்போறீங்க. அதுல சிலநேரம் நாங்களே நீங்க என்ன செய்யணும்னு ஸ்கிரிப்ட் கொடுத்துடுவோம்” என்ற பிரவீன், சில நொடிகள் இடைவெளி விட்டுச் சொன்னான்.
“இந்த விளையாட்டின் முக்கியமான அம்சமே வேற. அதான் இதை மற்ற கேம் ஷோக்களிலிருந்து வித்தியாசப்படுத்தப்போகுது. இங்கே எப்படி உங்களைச் சுத்தி கேமராக்கள் இருக்குதோ அதேமாதிரி தமிழ்நாட்டின் முக்கியமான பிரபலங்கள் வீட்டில் அவங்களுக்குத் தெரியாம கேமராக்கள் பொருத்தியிருக்கோம். நீங்க என்ன செய்றீங்கன்னு ஆடியன்ஸ் பார்க்கிறமாதிரி, பிரபலங்கள் என்ன செய்றாங்கன்னு நீங்க கண்காணிக்கப்போறீங்க. உங்களை மக்கள் கண்காணிக்கிறது உங்களுக்குத் தெரியும். ஆனா நீங்க கண்காணிக்கிறது அந்தப் பிரபலங்களுக்குத் தெரியாது. அங்கே என்ன நடந்தாலும் சரி, நீங்க பார்க்கணும். உங்களால் பார்க்காம தவிர்க்கவே முடியாது. அப்போ உங்களுடைய உடல்நிலை, மனநிலை இதெல்லாம் எப்படி ஆட்டத்தில் பிரதிபலிக்குதுங்கிறதை அனலைஸ் பண்ணி ஆடியன்ஸ் முன்னால வைப்போம். ஆனா இதை 30வது நாளில்தான் பார்வையாளர்களுக்கு உடைக்கப்போறோம். அதுவரைக்கும் இதைச் சாதாரண கேம் ஷோவா நினைச்சுதான் அவங்க பார்ப்பாங்க” என்றான் பிரவீன்.
“இது தப்பில்லையா?” என்றான் அஷ்வத்.
“டெக்னாலஜி வளர்ந்தபிறகு எதுவுமே தப்பில்லை. லுக் மிஸ்டர் அஷ்வத், உங்க ஜட்டி சைஸ், பிடிச்ச பெர்ஃப்யூம், என்னென்ன போர்ன் சைட் பார்த்தீங்க, யாரோட சாட் பண்ணீங்க, யார் பேரை பாஸ்வேர்டா வெச்சிருக்கீங்கன்னு அத்தனையும் இன்னைக்கு ரகசியமில்லை. எல்லாமே டேட்டாவா மாறியிருக்கு. இதெல்லாம் நீங்க பிரவுஸ் பண்ணணும்னு அவசியமில்லை. ‘எந்த சினிமாவுக்குப் போகலாம்’னு நீங்க யார்கிட்டே பேசினாலும் உங்க ஃபேஸ்புக், ட்விட்டர், மெயில்ல டிக்கெட் புக்கிங் வெப்சைட், பட விமர்சனம் வந்து நிக்கிறதைக் கவனிச்சிருப்பீங்க. சமயங்களில் எதையாவது யோசிச்சாக்கூட அதுதொடர்பான விளம்பரங்கள் உங்களுக்கு வருமே?” என்ற பிரவீனைத் தொடர்ந்தான் சாம்சன்.

“பிரபலங்கள்மீது மக்களுக்கு எப்பவும் ஈர்ப்பும் இருக்கு, வெறுப்பும் இருக்கு. அவங்களோட பணம், செல்வாக்கு, புகழ்மேல மக்களுக்குப் பொறாமை இருக்கு. ‘நாம இருக்கவேண்டிய இடத்தில இவன்/இவள் இருக்கா’ன்னுதான் நினைக்கிறாங்க. சோஷியல் மீடியாவில் பிரபலங்களின் பக்கங்கள் போய்ப்பாருங்க. மக்கள் கெட்டவார்த்தையில் திட்டாத பிரபலமே கிடையாது. பிரபலங்கள் எப்போ அம்பலப்படு வாங்கன்னு காத்துக்கிட்டிருக்காங்க. அவங்க ரகசியங்களைத் தெரிய ஆவலா இருக்காங்க. லயா, நீங்க பெரிய பிரபலம் கிடையாதுதான். ‘ஆனால் நடிகை லயா செய்த காரியத்தைப் பாருங்கள்’னு ஒரு வீடியோவுக்கு எத்தனை வியூஸ் வந்தது?”
“ஒன் மில்லியனுக்கு மேல” என்றாள் லயா.
“உங்களுக்கு எந்தச் சட்டச்சிக்கலும் வராது. நாங்க பார்த்துக்கிறோம்” என்ற பிரவீனின் குரலில் ரிங் மாஸ்டரின் தோரணை.
மறுநாளிலிருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள். சிலசமயம்தான் வீட்டில். அடர்ந்த காட்டில், பனிமலைச்சிகரங்களில், பாலைவனத்தில், நடுக்கடல் பயணம், சுடுகாடு என விதவிதமான இடங்களில் போட்டியாளர்கள் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் கண்காணித்துக்கொண்டிருந்தனர். எங்கிருந்தாலும் பிரபலங்களைக் கண்காணிப்பதற்கான ஏற்பாடு அவர்களுக்குச் செய்யப்பட்டிருந்தது. யார், யாரைக் கண்காணிக்கிறார்கள் என்பது மற்ற ஐவருக்குத் தெரியாது. அதைப்பற்றிப் பேசக்கூடாது என்பது முக்கிய விதி.
“மனுஷங்க எவ்ளோ முன்னேறினாலும் அவங்களுக்கு அடிப்படையில பிடிச்ச விஷயம் செக்ஸும் வன்முறையும். இதயத்தில தமனி, சிரைன்னு ரெண்டு ரத்தக்குழாய்கள் இருக்கும். அந்த ரெண்டு அறையிலும் நிரம்பி வழியறது செக்ஸும் வன்முறையும்தான்” என்றார் ஒளிப்பதிவாளர்.
லயா கண்காணித்தது ஒரு பிரபல கார்ப்பரேட் சாமியாரின் ஆசிரமம். அந்தச் சாமியாரின் பேச்சைச் சிலநாள்கள் கேட்க கேட்க, சிறுவயதில் அவள் படித்த நீதிக்கதைகளும் காமிக்ஸ் மற்றும் பாடப்புத்தகங்களும் நினைவுக்கு வந்தன. எப்படி இதை உலக அதிசயமாகக் கேட்க பக்தர்கள் குவிகிறார்கள் என்று அவளுக்குப் புரியவில்லை. சிலசமயங்களில் அந்த குருஜியின் வித்தியாசமான நடவடிக்கைகள், நடக்கச் சாத்தியமில்லாதவற்றை நடத்திக்காட்டியதாக அளக்கும் பிரதாபங்கள் கொஞ்சம் பொழுதுபோக்காகவும் இருந்தன.
ஆனால் போகப்போகத்தான் அது ஒன்றும் முட்டாள்கூடமோ பொழுதுபோக்கு மையமோ இல்லை என்பது அவளுக்குப் புரிய ஆரம்பித்தது. பெரும் அரசியல் புள்ளிகள், அதிகாரிகள், அவள் ஆதர்சமாய் நினைத்த சினிமா பிரபலங்கள், இவர்களின் உறவுக்காரப் பெண்கள் வந்துபோக அது அதிகாரச் சக்கரத்தின் பிரமாண்டமான அச்சு என்பது புரிந்தது. அங்கே எல்லாமே கிடைத்தன. பக்தி, அறிவுரைகள், சிகிச்சை, போதை, பாலுறவு, பதவி, அதிகாரம்... யாருக்கு எது தேவையோ அது கிடைத்தது. அவர்கள் மூலம் தேவையானதை ஆசிரமம் பெற்றுக்கொண்டது.
கேமரா, குருஜி மற்றும் பிரதான சீடர்களின் படுக்கையறை நோக்கித் திரும்பியபோது அதிர்ந்துபோனாள். ஒருநாள் கிறக்கத்தில் குருஜி அந்தப் பெண்ணிடம் சொன்னார், “போதையும் சந்தோஷமும்தானே ஸ்வர்க்கம். அந்த ஸ்வர்க்கத்தை என்னை நாடி வர்றவங்களுக்குத் தர்றேன்.”
இதையெல்லாம் பார்க்கப் பார்க்க லயாவுக்கு உணர்வின் இழைகள் ஒவ்வொன்றாய் அறுந்தன. `இந்த உலகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது, இது சிறு உலகம்தான். ஆனால் பெரும்பான்மை உலகத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் நிறைந்த சிறு உலகம். அந்த உலகத்துக்கும் இந்த உலகத்துக்குமான அளவுகோல்கள் எல்லாவகையிலும் மாறுபடுகிறதே, இதில் எது சரி, எது தவறு, எதற்கு என்ன அர்த்தம், அர்த்தம் என ஒன்றிருக்கிறதா?’ கேள்விகள் மூளையிலிருந்து புழுக்களைப்போல் ஊர்ந்தன. இந்த நிலை அவளது கேம் ஷோவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. அவளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும்தான். இந்த வித்தியாசங்களை அவர்கள் புரிந்திருந்தாலும் அதிலிருந்து மீள முடியவில்லை.
குளியலறையில் கேமராக்கள் இல்லை என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அவள் அணிந்த உடைகளுடனே குளிக்கத்தொடங்கினாள்.
ஆறாம் நாள். “உன் தங்கச்சி உன்னைவிட சில விஷயங்களில் அழகா இருக்கா” என்று அஷ்வத் சொன்னபோது அவளுக்குச் சந்தேகம் வந்தது. அவள் குடும்பப்பேட்டி சில மீடியாக்களில் வந்திருக்கிறது என்று அவள் யோசிக்கும்போது, அங்கே பெரிய அலாரம் அடித்தது. அஷ்வத்துக்கு அவசர அழைப்பு. அதன்பின் அவன் வரவில்லை. ‘தவிர்க்கவியலாத காரணங்களால் அஷ்வத் வெளியேறுகிறார்’ என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவனை வெளியேற்றமாட்டார்கள், கேம் முடிவதற்குள் இந்த ரகசியங்கள் கசிய அனுமதிக்கப்படாது, அவன் வேறெங்கோ மாற்றப்பட்டிருக்கிறான் என்றுதான் லயா நினைத்தாள்.
‘அவன் ஏன் என் தங்கையைப் பற்றிச் சொன்னான்? என் வீடும் கண்காணிப்பில் இருக்கிறதா?’ என்ற கேள்வி லயாவைத் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. ஒரு ராட்சத இயந்திரத்தின் அழுத்தம்.

மூன்றே நாள்களில் அவள் தன் தங்கையை அந்த ஆசிரமத்தில் பார்த்தாள். அடுத்து என்ன நடக்கக்கூடாது என்று நினைத்தாளோ அது நடந்தது. எது நடந்ததோ அது மோசமானது. அவளால் அதைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. எதையும் நிறுத்தக்கூடிய சக்தியோ அதிகாரமோ அவளுக்கு இல்லை. ஆனால் அவளை அதைப் பார்க்கவைக்கக்கூடிய சக்தி, அதிகாரத்துக்கு இருந்தது.
மறுநாள். இன்று வீட்டில்தான் கேம். தனக்குக் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டின்படி ஒளிப்பதிவாளர் லயாவை நெருங்க வேண்டும். அதற்கு அவள் என்ன எதிர்வினை செய்யப்போகிறாள் என்பது நிகழ்ச்சியின் வெற்றியைத் தீர்மானிக்கும். சமையலறையில் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த லயாவுக்கு, அவர் நெருங்கும்போது மீண்டும் மீண்டும் மந்திரம்போல் குரல்கள் கேட்டன. எல்லாமும் நினைவுக்கு வந்தன. ஏதேதோ நினைவுக்கு வந்தன. அவள் கைகள் எப்போது கத்தியை எடுத்து அவரைத் தாக்கத்தொடங்கின என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவள் ஒரு ராட்சத இயந்திரமாகியிருந்தாள். அந்தச் சத்தத்தின் முன்னால் வேறெந்தச் சத்தமும் கேட்கவில்லை.
சமையலறையில் மூன்று கத்திகள் இருந்தன. மற்றவர்கள் நெருங்கிவந்தபோது என்ன நடந்தது, யார் உயிருடனிருந்தார்கள், யார் கொல்லப் பட்டார்கள் என்று தெரியவில்லை.
‘மறுநாள் நிகழ்ச்சியைக் காண முடியாது’ என்பது தெரியாமலே பார்வையாளர்கள் இன்றைய எபிசோடை ரசித்துக்கொண்டி ருந்தார்கள். அடர்ந்த காட்டுக்குள் லயா வழியைத் தொலைத்துவிட்டாள். ‘`எங்கே இருக்கீங்க? யாராச்சும் இருக்கீங்களா?” என்று குரலெழுப்பியபடி அவள் ஓடிக்கொண்டிருந்தாள். அப்போது மரத்திலிருந்து ஒரு புழு அவள் தோள்மீது விழுந்தது. பயந்து அலறினாள் லயா.
- தும்பி பறக்கும்...