
கடைசி மெழுகுவத்தி
“நிஜமாவே தாத்தா காலத்தில இதெல்லாம் கிடையாதா?” - மழையில் நனைந்த கூழாங்கற்களைப் போல் ஆச்சர்யம் நந்தனின் கண்களில் உருண்டது. ‘அப்பாவும் இப்படித்தான் ஆச்சர்யமாய்க் கேட்பார். அப்போது அவர் கண்களும் இப்படித்தான் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டான் பிரகாஷ்.
நந்தனின் முதல் பிறந்தநாள் விழாவை ஒரு மண்டபத்தைப் பிடித்து நடத்தலாம் என்று பிரகாஷ் திட்டமிட்டபோதே ரத்தினம் கேட்டார்.
“எதுக்குப்பா இவ்வளவு செலவு? மண்டபம்லாம் பிடிச்சுப் பண்ணணுமா?”
“அப்பா, உங்களுக்கு நடைமுறையே தெரியலை. இப்ப இதான்பா பழக்கம். என் ஆபீஸ் கலீக்ஸ், காலேஜ்மேட்ஸெல்லாம் இப்படித்தான் பண்றாங்க. இதான்பா சந்தோஷம். ஸ்டேட்டஸும்கூட” என்றான் பிரகாஷ்.

வாசலில் நந்தனின் புகைப்படத்துடன் பேனர். முந்நூறு பேர் வரை குவிந்துவிட்டார்கள். கல்லூரி நண்பர்கள், தெருக்காரர்கள், அலுவலக நண்பர்கள் என்று கூட்டம் களைகட்டியது. கூட்டத்தைப் பார்த்து நந்தன்தான் மிரண்டுபோனான். பாதி விழா வரை அழுதுகொண்டேயிருந்தான். ரத்தினம் அவனைத் தூக்கிக்கொண்டே திரிந்தார். அவனும் பயத்தில் ஒடுங்கிக்கொண்டான். சிறுநீரில் நனைய நனைய மூன்று ஆடைகள் மாற்ற வேண்டியிருந்தது.
‘ஹேப்பி பர்த் டே டு நந்தன்’ என்று எழுதப்பட்ட பெரிய கேக்கில் பெரிய மெழுகுவத்தி. பிரகாஷ் கொளுத்த, நந்தன் ‘ஊத வேண்டும்’ என்று தெரியாமல் கைகளை நெருப்பின் அருகில் கொண்டுபோனான். பதறிப்போன ரத்தினம் அவன் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். பிரகாஷின் மனைவி அபிநயாதான் நந்தனை வாங்கி, மெல்லக் குனியவைத்து ஊதவைத்தாள். மெழுகுவத்தி அணைந்ததும் மண்டபமே ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ பாட, விநோதமாய்ப் பார்த்தார் ரத்தினம்.
பிறகு ஆளாளுக்கு வந்து வரிசையாகப் பரிசுப்பொருள்களைக் கொடுத்தார்கள். சிலர் குழந்தையை வாங்க முயல, யாரிடமும் நந்தன் போகவில்லை. அட்டையைப்போல் தாத்தாவிடம் ஒட்டிக்கொண்டான். கூட்டம் கூட்டமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்கள். கண்களில் வெளிச்சம் மின்ன மின்ன சிரித்தபடி, அழுதபடி, மிரண்டபடி புகைப்படங்களில் பதிவானான் நந்தன்.
கீழே அவனை விட்டுவிட்டு உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். நந்தனோ கேக் வைக்கப்பட்டிருந்த சிறிய டேபிளைப் பிடித்தபடி நின்றுகொண்டே சின்ன விரலால் கேக்கை எடுத்து சாப்பிடத் தொடங்கினான். நூறுகிராம் வரை அவன் சாப்பிட்டபோது, பதறிப்போய் ரத்தினம் அவனைத் தூக்கிக்கொண்டார். அழுது ஆர்ப்பாட்டம் செய்த நந்தன், அவர் வெள்ளைச் சட்டை முழுவதும் கேக் கறையால் கோடு போட்டிருந்தான்.
“குழந்தையைக் கவனிக்க மாட்டீங்களா? இவ்ளோ கேக் சாப்பிட்டா வயித்துக்கு என்ன ஆகுறது?” என்று அவர் சத்தம்போடவும் ரத்தினத்தின் மனைவி லெட்சுமி, பிரகாஷ், அபிநயா எல்லோர் முகத்திலும் சின்னக்கோபம் ‘கூட்டத்தில ஏன் இப்படிக் கத்தணும்?’ என்றது.
பிரியாணி மணக்க மணக்க, கூட்டம் விருந்தை நிறைத்தது.
கேக் வெட்டுவது, பிறந்தநாள் பாடல், கூட்டம், பரிசுப்பொருள்கள், பிரியாணி எல்லாமுமே ரத்தினத்துக்குப் புதியவைதான். பிரகாஷும் அபிநயாவும் பரிசுப்பெட்டிகளைப் பிரிக்கத் தொடங்கினார்கள். ஆடைகள், பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், பேபி சோப்...
ரத்தினம் ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினார். இடையில் புகுந்து கலைக்கப் பார்த்த நந்தனைத் தூக்கிக்கொண்டார்.
கொஞ்சம் கொஞ்சமாகப் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பழகத் தொடங்கினார் ரத்தினம். நந்தனின் மூன்றாவது பிறந்தநாள் விழாவில் அவரே வெட்கத்துடன் ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ பாடினார்.

ஆனால் பெருஞ்சத்தத்துடன் பார்ட்டி பிளாஸ்டர் வெடித்தபோதுதான் பதறிப்போனார். “ஏய் ஏய்” என்றார்.
“ஏன்பா எல்லாத்துக்கும் டென்ஷனாகிறீங்க?” என்று எரிச்சலானான் பிரகாஷ். அபிநயாவின் கண்களிலும் எரிச்சல் எதிரொலித்தது.
“இல்லைடா, வெடிச்சுடப் போகுது...” என்று தயக்கத்துடன் முறையிட்ட ரத்தினம், அப்போது தான் எல்லோர் தலையிலும் நட்சத்திரங்களாய் அப்பிக்கிடந்த வண்ணங்களைப் பார்த்தார். ஏதோ சொல்ல வாயெடுத்தவர், பிரகாஷின் பார்வையைப் பார்த்ததும் நிறுத்திக்கொண்டார்.
அடுத்தடுத்த பிறந்தநாள்களில் வீட்டில் கட்டுவதற்கு அவரே பலூன்களை ஊதித் தந்தார். ஆங்காங்கே கலர் கலர் பேப்பர்களை ஒட்டினார். கொஞ்சம் சத்தமாகவே ‘ஹேப்பி பர்த் டே டு யூ’ பாடினார். இப்போதெல்லாம் நந்தனுக்கான பிறந்தநாள் கேக்குகளை நந்தனே தேர்ந்தெடுக்கத் தொடங்கினான். பிளாக் ஃபாரெஸ்ட்டில் சோட்டா பீம், ஸ்பைடர் மேன், சின்சான் என்று கார்ட்டூன்கள் வரைந்திருக்க வேண்டும்.
“அப்பா பர்த்டேவையெல்லாம் நீங்க கேக் வெட்டி செலபரேட் பண்ண மாட்டீங்களா தாத்தா?” என்று கேட்டான் நந்தன்.
“கேக் எல்லாம் கிடையாது. நான் கேசரி செஞ்சு கொடுப்பேன். அவ்ளோதான்” என்றார் லெட்சுமி.
“அப்பெல்லாம் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவனைக் கோயிலுக்குக் கூட்டிட்டுப்போவேன். காலேஜ் போனதில் இருந்து அவன் கோயிலுக்குப் போறதை நிறுத்திட்டான்” என்று ரத்தினம் சொல்ல, தன் அப்பாவை அண்ணாந்து பார்த்தான் நந்தன்.
நந்தனின் ஒவ்வொரு பிறந்தநாள் முடிந்ததும் அந்த மெழுகுவத்திகளைச் சேகரித்துவைப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரத்தினம். மின்சாரம் இல்லாத நாள்களில் அதைப் பற்றவைக்கலாம் என்று கேட்டாலும் தர மாட்டார். இருள் என்றாலும் கடையில் போய் புது மெழுகுவத்தி வாங்கிவந்து தருவார்.
“இது எதுக்குங்க சின்னப்புள்ள மாதிரி” என்று லெட்சுமி கேட்டாலும், “போடி” என்று சிரித்துக்கொள்வார் ரத்தினம். அது என்னவோ அவருக்கு நந்தனின் கடந்துபோன காலங்களை, அவன் வயதை, அவன் குழந்தைமையைச் சேகரிப்பதுபோல்தான் அந்த மெழுகுவத்திகள். சில குழந்தைகள் கீழே விழுந்த தன் பற்களை எடுத்துச் சிலநாள்கள் பத்திரப்படுத்திவைப்பதைப் போல் என்று சொல்லலாம்.
“தாத்தா, ரொம்ப சிம்பிளா சீன் வெச்சிட்டீங்க? அவ்ளோதானா அப்பா பர்த் டே?” என்றான் நந்தன் விடாமல்.
‘சிம்பிளா சீன் வெச்சிட்டீங்க’ என்பது அப்போது பிரபலமான ஒரு திரைப்பட வசனம் என்பதால் அனைவருமே அதைக்கேட்டுச் சிரித்தார்கள். குழந்தைகள் அறியாமையால் பேசினாலும் மகிழ்ச்சிதான்; புத்திசாலித்தனமாகப் பேசினாலும் மகிழ்ச்சிதான்.
“பிரகாஷ் எட்டாவது படிச்சுக்கிட்டிருந்தான். அப்போ நான் மெட்ராஸ்ல பெரியமேட்டில தோல்ஷாப்ல வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போ அவன் பிறந்தநாள் வந்துச்சு” என்ற ரத்தினத்தை இடைமறித்தான் பிரகாஷ்.
“அப்பெல்லாம் அப்பா எங்களுக்கு இன்லேன்ட் லெட்டர் எழுதுவாரு. ஒரு லெட்டரை நாலு பாக்ஸாப் பிரிச்சு எனக்கு, அம்மாவுக்கு, அண்ணனுக்கு, கணேஷுக்கு எல்லாம் லெட்டர் எழுதுவாரு. அதிலேயும் ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி’ன்னு திருக்குறள் எல்லாம் எழுதுவாரு” என்றான் பிரகாஷ்.
உதட்டைப் பிதுக்கினான் நந்தன்.
“இருடா, முழுசா சொல்லி முடிக்க விடு” என்று பிரகாஷை அதட்டிவிட்டு, சொல்லத் தொடங்கினார்.
“அப்போ மணியார்டர் செய்யணும்னா அதுக்குத் தனியா செலவாகும். எனக்குச் சம்பளமும் கம்மிதான். அப்போ கால் பிளேட் பிரியாணி 30 ரூபாய். நான் என்ன செஞ்சேன், முப்பது ரூபாயை ஒரு பேப்பர்ல மடிச்சு வெச்சு, அதை இன்லேன்ட் லெட்டர்ல வெச்சு, நல்லா ஒட்டி அனுப்பிச்சேன். ஆனா அந்தப் பாவி போஸ்ட்மேன் எப்படி எடுத்தான்னு தெரியலை. இவங்களுக்கு வர்றப்போ அந்த முப்பது ரூபாயைக் காணோம்” என்றார், ஏதோ நேற்று நடந்ததைப் போல் அதே சோகம் தொனிக்க.
“என் புள்ளை முகம் வாடிடுச்சு” என்றார் லெட்சுமி.
“அப்பா, போஸ்ட்மேன்தான் எடுத்தார்னு தெரியுமா? எங்கேயாவது கீழேகூட விழுந்திருக்கலாம்” என்றான் பிரகாஷ்.
“அப்பா பாவம்” என்றான் நந்தன்.
நந்தனின் பத்தாவது பிறந்தநாளின்போது ஒரே ஒரு பெரிய மெழுகுவத்தியை கேக்கின்மீது வைத்தான் பிரகாஷ். சுற்றம், நட்பு, தெரு என்று ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் கூட்டம் சுருங்கிச் சுருங்கி, இப்போது குடும்பம் மட்டும்தான்.
“என்னடா, பத்தாவது பிறந்தநாளுக்கு ஒரே ஒரு மெழுகுவத்தி வெச்சிருக்கே?” என்றார் ரத்தினம்.
“பின்ன... தாத்தா, கேக் முழுக்க கேண்டில்ஸ் வைக்கச் சொல்றீங்களா? அப்போ நாம கேக் சாப்பிட முடியாது. கேண்டிலைத்தான் சாப்பிடணும்” என்றான் நந்தன்.
“நைன்த் பர்த்டே வரைக்கும்தான்பா நம்பர்ல கேண்டில்ஸ். அப்புறம் ஒண்ணுதான்” என்றான் பிரகாஷ்.
ஏனோ ‘ஹேப்பி பர்த் டே’ பாடும்போது ரத்தினத்தின் குரலில் உற்சாகம் குறைந்ததைப் போல் இருந்தது.
சரியாக நந்தனின் பிறந்தநாளுக்கு ஒருவாரம் இருக்கும்போது இறந்துபோனார் ரத்தினம். தெரு முழுக்கக் கூட்டம். கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரத்தினத்தின் உடல் அருகே அழுதுகொண்டிருந்த பெண்களில், தாத்தா சேகரித்துவைத்திருந்த மெழுகுவத்திகளை நந்தன் துழாவிக்கொண்டிருந்ததை அபிநயா மட்டும் கவனித்தாள்.

வெளியே நாற்காலிகளில் ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். எல்லோருக்கும் தேநீர் வழங்கப்பட்டிருந்தது. ஒருவர் அங்கேயும் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.
பிரகாஷின் நண்பன் லோகு, “அப்பாவுக்கு போஸ்டர் அடிக்கணும்டா. அடிச்சு நம்ம தெரு, பக்கத்துத் தெருன்னு ஒட்டிடுவோம். அப்பதான் துக்கத்துக்கு வர்றவங்களுக்கு அட்ரஸ் தெரியாம இருந்தாலும் கண்டுபிடிக்க ஈஸியா இருக்கும். ஆமா, எப்போ எடுக்கப்போறீங்க?”
“மூணு மணிக்கு எடுத்துடலாம்டா” என்றான் பிரகாஷ்.
தெருமுனைக்குப் போன லோகு திரும்ப வந்தான். துக்கம் விசாரிக்க வந்த தன் மேலதிகாரி யிடம் பேசிக்கொண்டிருந்த பிரகாஷிடம் கண்களைக் காட்டினான். பிரகாஷ் அவரை உள்ளே அனுப்பிவிட்டு லோகுவிடம் வந்தான்.
“போஸ்டர்ல ‘தோற்றம், மறைவு’ போடணும்ல. அப்பா பொறந்தநாள் என்ன?” என்றான் லோகு.
பிரகாஷுக்குத் தெரியவில்லை. இவ்வளவுநாள் அவன் அதை யோசித்ததில்லை என்பதே, அந்த துக்கத்திலும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“தெரியலையேடா?”
“சரி, அப்பாவுக்கு எத்தனை வயசிருக்கும்?”
“75 வயசிருக்குமா?”
“சரி, ரவுண்டா வேணாம். 77ன்னு வெச்சிக்குவோம்” என்றபடி சின்ன மனக்கணக்கு போட்டவன், “1937 மார்ச் ஒண்ணாந்தேதின்னு வெச்சுக்குவோம். 01.03.1937ன்னு தோற்றம் போட்டுக்குவோம்டா” என்றான்.
சின்னத் தயக்கத்துடன் தலையாட்டினான் பிரகாஷ்.
- தும்பி பறக்கும்...