பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

குறுங்கதை : 17 - அஞ்சிறைத்தும்பி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

உறங்கும் புத்தர்

“குழந்தை பொறந்தாலே சந்தோஷம்தான். ஆனா குழந்தை பொறந்தவுடனே அழுதா, அந்த அழுகைச் சத்தத்தைக் கேட்டு, பெத்தவங்களுக்கு இன்னும் சந்தோஷமா இருக்கும். அப்படித்தான், ஒரு சிலையைச் செஞ்சு முடிச்சாலும் அது கண்ணைத் தொறக்கிறப்பதான் அந்தச் சிலை முழுச்சிலை ஆகுதுன்னு ஐயா சொல்லுவாரு” என்றார் சின்னையன்.

வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த குமரேசன், குட்டியானை வண்டி வாடகைக்கு ஓட்டுகிறார். மகாபலிபுரத்தில் சிறிதும் பெரிதுமாய்ச் சிலைகள் செய்யும் கடையில் வேலை பார்க்கும் சின்னையன், லோடு அடிக்கும்போது நண்பர் ஆனவர். பெரும் பணக்காரர்களின் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகளுக்கு அவ்வப்போது சிலைகளை லோடு அடிப்பார் குமரேசன்.

குறுங்கதை : 17 - அஞ்சிறைத்தும்பி

மகாபலிபுரம், சிலைகளுக்குப் பெயர் பெற்ற ஊர். அர்ச்சுனன் தபசு, கடற்கரைக் கோயில், பாண்டவர் ரதம் என்று பல்லவர்காலச் சிற்பங்கள் ஒருபுறம் இருக்க, புத்தம்புதுப் பளிங்குச்சிலைகள் சாலையோரக் கடைகளில் காட்சியளிக்கும். லோடு அடிக்கும்போது மட்டும் அல்லாமல் ஓய்வுநேரங்களில் சிலைகள் தயாராவதை வேடிக்கை பார்ப்பது குமரேசனின் முக்கியமான பொழுதுபோக்கு. ஆன்டனி சிலைகள் செதுக்கு வதில் கெட்டிக்காரர். அவருக்கு உதவியாளாக நான்கு பேர் இருக்கிறார்கள். சின்னையனுக்கு எடுபிடி வேலைகள்தான். ஆன்டனி கிறிஸ்தவர் என்றாலும் ‘கணபதி ஓவியக்கூடம்’ என்று பெயர் வைத்திருந்தார்.

ஒருநாள் தன் மகன் அகிலனையும் அழைத்து வந்திருந்தார் குமரேசன். அகிலனின் சின்னக் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தன. திருப்பதி வெங்கடாசலபதி, கருப்பணசாமி, அம்மன் சிலைகள் என்று விதவிதமான சிலைகள் இருந்தாலும் நிறைய இருந்தவை புத்தர் சிலைகளும் விநாயகர் சிலைகளும்தான். கணபதி ஓவியக்கூடத்தில் மட்டுமல்ல, பெரும்பாலான ஓவியக்கூடங்களில் புத்தர் - விநாயகர் கூட்டணியே பெரும்பான்மையைப் பிடித்திருந்தது.

“அப்பா, நம்ம வீட்டுக்கு புத்தர் சிலை வாங்கலாம்பா” என்று ஒரு சிலையைக் காட்டினான். தியானத்தில் உறைந்திருந்தார் புத்தர்.

“எவ்ளோ ரேட்டு சின்னு?” என்றார் குமரேசன்.

“முப்பதாயிரம். உனக்கு வேணும்னா ஆயிரம், ரெண்டாயிரம் குறைச்சுத் தருவாரு.”

“என்ன விளையாடறியா? அகிலு, அப்பா ஒருவருஷம் உழைச்சாக்கூட இதெல்லாம் வாங்க முடியாது.”

“சரி, அப்போ சின்ன சிலையா எனக்கு வாங்கிக்கொடு” என்று அவன் காட்டிய சின்னஞ்சிறு புத்தர் ஒற்றைக்கையை உயர்த்தி ஆசி வழங்கினார். அதுவும் ஆயிரம் ரூபாய்.

“இது வேலைக்காகாது அகிலு. உனக்கு கார் பொம்மை வாங்கித் தர்றேன்.”

“அப்போ அதோட லேஸ், கிண்டர் ஜாய் வாங்கித் தரணும்” என்றான் அகிலன். வீட்டுக்கு வரும்போது, “அப்பா, அம்மாவுக்குத் தம்பிப் பாப்பா பொறக்கப் போகுதுல்ல. அதுக்குப் புத்தர் பெயர் வைக்கலாம்பா” என்றான்.

பொங்கல் விடுமுறையில் பெரிதாக வேலைகள் இல்லை. பொழுதுபோகாமல் சிற்பக்கூடம் வந்தார் குமரேசன். சின்னையன் மட்டும் அங்கிருந்த ஒரு கல்லில் அமர்ந்து சிவப்பான இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தார். ஸ்டூலில் அமர்ந்திருந்த இளைஞனின் தோள்களில் டாட்டூ, குறுந்தாடி, வண்ணமயமான டி-ஷர்ட் அவன் உலகத்துக்கும் குமரேசன் உலகத்துக்கும் இடையில் உள்ள பள்ளத்தை நிரப்ப, நாலு புத்தர் சிலைகளை வைத்து அடுக்க வேண்டும் என்பதை உணர்த்தின.

“சின்னு, இருக்கிறதிலேயே அதிகம் விற்பனையாகிற சிலை எது?”

“இதென்ன கேள்வி சார், புத்தர் சிலையும் பிள்ளையார் சிலையும்தான்” என்றார் சின்னையன்.

“ஏன் சார், பிள்ளையார் சிலையைக் கும்பிடு வாங்க. சரி, புத்தர் சிலையைக் கும்பிடுவாங்களா? எப்படிக் கும்பிடணும்? தேங்காய், பழம்லாம் படைக்கணுமா, இல்லை, கவுச்சி படைப்பாங்களா?” என்றார் குமரேசன்.

“ஏய் லூசு, புத்தர் சைவம்பா. கவுச்சி ஆகாது” என்று சின்னையன் சொல்லவும், சத்தம் போட்டுச் சிரித்தான் அந்த இளைஞன். பெயர் ஆகாஷ். அவன் அப்பா மூன்று கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறார். ஆகாஷுக்கு சோற்றுக்குப் பிரச்னையில்லை என்பதால் சுற்றுலாவிலும் கலைப்பொருள்களிலும் ஆர்வம் அதிகம்.

“நீங்க சொல்றது சரிதான் சின்னு. பிள்ளையார் சிலைக்கும் புத்தர் சிலைக்கும்தான் டிமாண்ட் அதிகம். புத்தரை வீட்டில வெச்சுக் கும்பிடலாம் மாட்டாங்க. அது ஒரு அழகுப்பொருள் அவ்வளவு தான். பிள்ளையாருக்கு ஒரு மதம் இருக்கிறமாதிரி, புத்தருக்கும் ஒரு மதம் இருக்கு. இலங்கை, சீனா, ஜப்பான், மியான்மர், தாய்லாந்துன்னு பல நாடுகளில் அந்த மதம் இருக்கு” என்று ஆகாஷ் சொல்லவும், “தெரியும் சார். டிவியில சினிமாவில எல்லாம் பார்த்திருக்கேன். மொட்டையடிச்ச சாமியாருங்க, ஆரஞ்சு டிரஸ் போட்டிருப்பாங்க” என்று தன் புத்திசாலித்தனத்தைக் காட்டினார் சின்னையன்.

குறுங்கதை : 17 - அஞ்சிறைத்தும்பி

“என்ன பியூட்டின்னா, காசு, பணம், அரண்மனை, அந்தஸ்து எதுவும் வேணாம்னு காட்டுக்குத் துறவியாப் போனவரு புத்தர். ஆனா இன்னைக்கு புத்தர் சிலை இருக்கிற இடம்லாம் ஒண்ணு பணக்காரங்க வீடு, இல்லைன்னா பணக்காரங்க வந்துபோற ரிசார்ட், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ஸ்” என்று சீரியஸான பாவனையில் சொன்னான் ஆகாஷ்.

ஒன்றும் புரியவில்லை என்றாலும் சின்னையனும் குமரேசனும் அதே பாவனையில் கேட்டுக் கொண்டார்கள்.

“நீங்க கலைப்பொருள் கண்காட்சியெல்லாம் போனதில்லையா?” என்று ஆகாஷ் கேட்கவும், மையமாகத் தலையாட்டிவைத்தார் குமரேசன்.

“சண்டே மயிலாப்பூர்ல ஒரு எக்ஸ்போ இருக்கு. வாங்க போலாம், கார்லயே போலாம்” என்றான் ஆகாஷ்.

“பையனையும் கூட்டிட்டு வர்றேன் சார்” என்றார் குமரேசன்.

ந்தக் கண்காட்சியிலும் நிறைய இருந்தவை பிள்ளையார் சிலைகளும் புத்தர் சிலைகளும்தான். கண்ணாடி போட்ட பிள்ளையார், புத்தகம் படிக்கும் பிள்ளையார், லேப்டாப் பார்க்கும் பிள்ளையார் எல்லாம் இருந்தாலும் குமரேசனுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. விநாயகர் சதுர்த்திக்கே கார்கில் பிள்ளையார், பிகில் பிள்ளையார், கிரிக்கெட் பிள்ளையார், பாகுபலி பிள்ளையார் என்று விதவிதமான பிள்ளையார் சிலைகளைப் பார்த்திருக்கிறார். அவருக்கு ஆச்சர்யமாக இருந்தவை புத்தர் சிலைகள்தான்.

“இது என்ன சார், புத்தர் மூஞ்சி வேற வேற மாதிரி இருக்கு?”

“ஆமா. தாய்லாந்து புத்தர், மியான்மர் புத்தர், இலங்கை புத்தர்...”

“புத்தர் ஒருத்தர்தானே?”

“ஒருத்தர்தான். ஆனா அந்தந்த நாட்டு மக்கள் அவங்கவங்க மூஞ்சி மாதிரி புத்தர் மூஞ்சியை மாத்திட்டாங்க. இது என்ன தெரியுதா?”

“செட்டியார் சிலை சார்”

சிரித்த ஆகாஷ், “ஊஹூம். இதுக்குப்பேரு லாஃபிங் புத்தா. சிரிக்கும் புத்தர். இதை வீட்டுல வெச்சா நல்லது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. இங்கே பார்த்தீங்களா, தம்பி மாதிரி குட்டியூண்டு புத்தர். இது பேபி புத்தா. உனக்கு நான் வாங்கித் தர்றேன்டா. என் அன்பளிப்பு” என்றான் ஆகாஷ்.

“இல்லை அங்கிள். இது வேண்டும்” என்று அகிலன் காட்டிய புத்தர், ஒருபக்கம் சாய்ந்து தலையைக் கைகளால் முட்டுக்கொடுத்து, கண்கள் மூடியிருந்தார்.

“இது ஸ்லீப்பிங் புத்தா” என்றபடி அந்தச் சிலையை வாங்கி அகிலனுக்குப் பரிசளித்தான். விலை மூவாயிரம் ரூபாய். குமரேசனுக்குக் கொஞ்சம் வயிற்றெரிச் சலாக இருந்தது. அது சரிதானா என்று தெரியவில்லை.

காரில் வரும்போது, “உங்களுக்கு ஜென் கதை ஒண்ணு சொல்றேன்” என்றான் ஆகாஷ்.

“ஜென்னுன்னா காரா சார்?”

“ஊஹூம். அது ஒரு... சரி வேணாம். கதையைக் கேளுங்க. வெளிநாட்டில கடுமையான குளிர். ஒரு புத்த சாமியார் மடத்துல தங்கியிருந்தார். குளிர் தாங்க முடியலை. அங்கே நிறைய மரத்தாலான புத்தர் சிலைகள் இருந்துச்சு. இவர் நைட்டு முழுக்க ஒவ்வொரு சிலையா எரிச்சு குளிர் காஞ்சாரு. காலையில மடத்துக்கு வந்த தலைமைத் துறவிக்கு கோபமான கோபம். செம டென்ஷன் ஆகிட்டாரு. ‘ஏன் புத்தர் சிலையை எரிச்சே?’ன்னு கேட்க, ‘குளிருச்சு, எரிச்சேன்’னார் இவர். சத்தம்போட்டு அவரை வெளியே அனுப்பிட்டார் தலைமைத் துறவி. கொஞ்சநேரம் கழிச்சு வெளியே வந்து பார்த்தா, சிலையை எரிச்ச அந்தத் துறவி மைல்கல்லைக் கும்பிட்டுக் கிட்டிருந்தார். ‘என்ன செய்றீங்க?’ன்னு தலைமைத் துறவி கேட்க, ‘உங்களுக்கு மரத்துல புத்தர் இருந்தாரு. எனக்கு மைல்கல்லில புத்தர் இருந்தாரு’ன்னு சொன்னாரு’’ என்று சிரித்த ஆகாஷ் “புரியுதா?” என்றான்.

குறுங்கதை : 17 - அஞ்சிறைத்தும்பி

“சார். தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க பேசுறது முக்காவாசி புரிய மாட்டேங்குது” என்றார் குமரேசன்.

“அங்கிள். திருப்பதி வெங்கடாஜலபதி கண்ணு மூடியிருக்குமாம். அவர் எப்போ கண்ணு திறக்கிறாரோ, அப்போ உலகம் அழிஞ்சுடும்னு என் ஃபிரெண்ட் சொல்வான். ஸ்லீப்பிங் புத்தா கண்ணு முழிச்சா உலகம் அழிஞ்சுடுமா?” என்ற அகிலனின் தலைமுடியைக் கலைத்துச் சிரித்தான் ஆகாஷ்.

முதலில் ‘இந்தப் புத்தர் சிலை இவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறதே’ என்றுதான் நினைத்தார் குமரேசன். ஆனால் அந்த வீட்டின் பிரமாண்டத்துக்கு முன், புத்தர் பேபி புத்தராகத் தெரிந்தார்.

“கரெக்டா பார்த்து இறக்குங்க. ஃப்ளோர்ல கீறல் விழக்கூடாது. சிலைக்கும் ஒண்ணும் ஆகக் கூடாது” என்றார் அந்த ஷார்ட்ஸ் அணிந்த பணக்காரர்.

“ஸ்வீப்பிங் புத்தால்லாம் வாங்க மாட்டீங்களா?” என்றார் குமரேசன்.

“அது ஸ்லீப்பிங் புத்தாப்பா” என்று திருத்தினார் சின்னையன்.

“ச்சேச்சே, அதெல்லாம் வெச்சா வீடு விளங்காது” என்றார் அவர் வெடுக்கென்று. குமரேசன் முகத்தில் இருள் படர்ந்தது.

“ஏன்ப்பா கௌதம் தூங்கிக்கிட்டேயிருக்கான்?” என்றான் அகிலன்.

“எந்திரிச்சான்னா அழுவான். பரவாயில்லையா?” என்றார் குமரேசன்.

“பாப்பால்லாம் ஒருநாளைக்கு 15, 16 மணிக்குத் தூங்கும்டா. நீ சின்னப்பிள்ளையா இருக்குறப்பவும் அப்படித்தான் தூங்குவே” என்று அகிலனின் அம்மா யசோதா சொல்லிக்கொண்டிருக்கும்போது, குமரேசனின் போன் அடித்தது.

இவர்கள் பிரமாண்ட புத்தர் சிலைகளை இறக்கிவைத்திருந்த நான்கு வீடுகளில் சிலைகளைக் காணவில்லையாம். இரவில் இருந்த அவற்றை, அவ்வளவு கனமான சிலைகளை யார் எடுத்துச்சென்றார்கள் என்று தெரியவில்லை என்று தகவல் சொல்லியிருந்தார் சின்னையன்.

“புத்தர் நைட்டு எந்திரிச்சுக் காட்டுக்குப் போயிருப்பார்ப்பா. அவருக்குத்தான் பணக்கார லைஃப் பிடிக்காதே?” என்றான் அகிலன்.

“இங்கே பாருங்க, குழந்தை சிரிக்குது” என்றார் யசோதா.

தூக்கத்திலேயே புன்னகைத்தான் கௌதம்.

- தும்பி பறக்கும்...