பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

குறுங்கதை : 19 - அஞ்சிறைத்தும்பி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

மூன்று குற்றங்கள்

காதலர் தினம் என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? பூங்கொத்துப்போல் இருக்கும் சோனாலி பிந்த்ரேவுக்காக ஒற்றை ரோஜாவுடன் ‘ரோஜா ரோஜா’ என்று பாடும் குணால் நினைவுக்கு வரலாம். காதல் கடிதங்கள், கைக்குட்டை, பழைய பயணச்சீட்டுகள், ஹேர்பின், மீசையின் பழுப்புநிற முடி, டக்-இன் செய்யப்பட்ட சட்டை, பளபளக்கும் பாலீஷ் ஷூ, கொலுசு, ஒற்றைச்சடை, உள்ளங்கைக் கதகதப்பு, தியேட்டர் இருட்டு, முதல் முத்தம், தற்கொலை முயற்சி, நாடகக்காதல்...

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

இன்னும் என்னவெல்லாமோ நினைவுக்கு வரலாம். எனக்கு இரண்டு குற்றங்கள் நினைவுக்கு வரும். கதையின் சுவாரஸ்யத்துக்காக இந்தக் கதையைக் காதலர்தினத்தன்று நடந்ததாகத் தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை. எந்தத் தனித்தன்மையுமற்ற ஒரு நாள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஓர் அரசு மருத்துவமனையின் ஈரம் உலராத தரையிலிருந்தும் மருந்துநெடியடிக்கும் வளாகத்திலிருந்தும் இந்தக் கதைகள் தொடங்குகின்றன. ஸ்வேதாவின் முகத்தைப் பார்த்து, அவள் கண்களை நேருக்குநேர் நோக்கி நாம் இந்தக் கதையைக் கேட்பது சிரமம். ஏனெனில் அவளது முகத்தின் ஒருபகுதி ஆசிட்டால் சிதைந்திருந்தது. அவளது மூக்கு உருகி வழிந்திருந்தது. இடதுகண் அதிகமும் சேதமடைந்திருந்தது. ஸ்வேதாவின் இந்த நிலைக்குக் காரணம் காதல் என்பதை அவள் சொன்னபோது நானும் உங்களைப்போல்தான் ஒரு முன்முடிவான காரணத்தை யூகித்திருந்தேன்.

குற்றம் 1

ஐந்து மாதங்களுக்குப் பிறகு அன்றுதான் பாதுகாப்பை உணர்ந்தாள் ஸ்வேதா. சுகுமாரைக் காதலித்து ஹைதராபாத்துக்கு ஓடிப்போய்த் திருமணம் செய்து, இருவீட்டாருக்கும் தெரியாமல் தலைமறைவு வாழ்க்கைதான் நடத்த வேண்டியிருந்தது. எட்டுமாத இல்லற வாழ்க்கையில் ஸ்வேதா இப்போது ஐந்துமாதக் கர்ப்பிணி.

சுகுமாரின் குடும்பம் இவ்வளவு சீக்கிரம் இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்டது என்பதில் ஒருபக்கம் நிம்மதி, இன்னொருபக்கம் ‘இதை முன்பே செய்திருக்கலாமோ’ என்றும் தோன்றியது. சுகுமார் தன் நண்பர்களைப் பார்க்கச் சென்றிருந்தான். வீட்டில் மாமியார் தனலெட்சுமியும் நாத்தனார் அங்கயற்கண்ணியும் மட்டும் இருந்தார்கள். அந்தப் பேரைக் கேட்டபோதே சிரிப்பு வந்தது ஸ்வேதாவுக்கு.

“என் பேரை யார் கேட்டாலும் சிரிக்கிறாங்க. ஏம்மா எனக்கு இப்படி ஒரு பேர் வெச்சே?” என்று சிணுங்கினாள் அங்கயற்கண்ணி.

“அதை உங்க அப்பாகிட்டதான் கேட்கணும்” என்று சிரித்தார் அம்மா. அங்கயற்கண்ணியின் அப்பாவோ இதற்குப் பதில் சொல்ல முடியாமல் புகைப்படமாகத் தொங்கிக்கொண்டிருந்தார்.

யூடியூபில் பார்த்து சாம்பார் வைக்க முயன்ற ஸ்வேதாவிடம், “இதுக்கெல்லாமா நெட்ல பார்ப்பாங்க” என்றபடி சமையல் பக்குவத்தைச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தாள் அங்கயற்கண்ணி. அப்போது காலிங்பெல் சத்தம் கேட்க, நாத்தனார் வீட்டுக்கதவைத் திறந்தபோது மூன்று மனிதர்கள் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் ஸ்வேதாவின் அப்பா என்பது அவளுக்குத் தெரியாது. அவராக அறிமுகப்படுத்திக்கொண்டே உள்ளே நுழைந்தார். சமையலறையை விட்டு வெளியே வரமறுத்த ஸ்வேதாவைக் கட்டாயப்படுத்தி ஹாலுக்கு அனுப்பிவைத்தார் மாமியார்.

“ஏம்மா, சொல்லாம கொள்ளாம இப்படிப் பண்ணிட்டியே. எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே? சரி நடந்தது நடந்துபோச்சு. வீட்டுக்குப் போலாம் கிளம்பு” என்றார் ஸ்வேதாவின் அப்பா. அங்கயற்கண்ணி டம்ளரில் கொண்டுவந்து கொடுத்த தண்ணீரை அவர் வாங்கவில்லை. மற்ற இருவரும் வாங்கிக்குடித்து டி.வி இருந்த மேஜைமீது வைத்தார்கள்.

“அவர் வெளியில போயிருக்கார். வந்ததும் அவர்கிட்ட பேசுங்க.”

“27 வருஷமாப் பெத்து வளர்த்தவன் சொன்னா வரமாட்டே, நேத்துவந்த சொந்தம் பெரிசாப் போயிடுச்சா?” அவர் குரல் கொஞ்சம் உயர்ந்தது.

“இல்லை, அவர் வரட்டும்.”

“பையன் வரட்டும். நானே பேசி அனுப்பிவைக்கிறேன்” என்றார் மாமியார்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

“நான் உங்ககிட்ட பேசலைங்க. என் பொண்ணுகிட்ட பேசுறேன்” என்ற அப்பா பத்து நிமிடங்களுக்கு மேல் வாதாடிப்பார்த்தார். அவரின் குரல் உயர்வதும் தழைவதுமாய் நடுக்கடல் பாய்மரம்போல் அல்லாடியது.

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. முடியாம இருக்கா. உன்னைப் பார்க்கணும்கிறா” என்று அப்பா சொன்னபோது குரல் தழைந்ததைப் பார்த்தால் ‘உண்மையாக இருக்குமோ’ என்று தோன்றினாலும், ‘உண்மையென்றால் வந்தவுடனேயே அதைச் சொல்லியிருக்கலாமே. இது தகப்பனின் தந்திரம்’ என்றும் தோன்றியது ஸ்வேதாவுக்கு.

ஒருகட்டத்தில் அப்பாவுக்கும் மகளுக்குமான உரையாடலில் மாமியார், நாத்தனார், ஸ்வேதா அப்பாவுடன் வந்தவர்கள் என அனைவரும் பங்குபெற்று, ஒருகட்டத்தில் யார் என்ன பேசுகிறார்கள், யார் யாரிடம் பேசுகிறார்கள் என்று குழம்பி இரைச்சல் மட்டுமே வீடு முழுக்கச் சுற்றிச்சுற்றி வந்தபோதுதான் ஸ்வேதாவின் அப்பா, தன் பாக்கெட்டிலிருந்த அந்த ஆசிட் பாட்டிலை ஸ்வேதா முகத்துக்கு நேராக வீசினார். வலியால் சிதறிப்போனாள் ஸ்வேதா. உடன் வந்தவர்கள் மற்ற இரு பெண்கள்மீதும் அந்த பவுடரை வீசினார்கள்.

குற்றம் 2

ஒரு மிகப்பெரிய விடுதலை மனநிலையும் விவரிக்க முடியாத மகிழ்ச்சியும் மல்லிகாவை நிறைத்திருந்தன. அவளும் விக்னேஷும் மூன்றாண்டுகளாகக் காதலித்துவருகிறார்கள். பக்கத்துப் பக்கத்து கிராமம்தான். ஆனால் அங்கே பழக்கமில்லை. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் இருவரும் இணைந்து பணியாற்றும்போதுதான் அது தெரியவந்தது. காதலுக்கு அதுமட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.

வீட்டில் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வார்களா என்று மல்லிகாவுக்குத் தெரியவில்லை. ‘என் அப்பா உன்னை அழைத்துவருவார். திருமணம் செய்துகொள்ளலாம்’ என்று விக்னேஷ் அனுப்பிய குறுஞ்செய்தி மல்லிகாவுக்கு ஆயிரம் இறக்கைகளை முளைக்கவைத்திருந்தது. சொன்னபடியே விக்னேஷின் அப்பா நவநீதம் அழைத்ததன்பேரில்தான் இப்போது அவர் காரில் சென்றுகொண்டிருக்கிறாள். காரில் இசைத்துக்கொண்டிருந்த புதுப்பாடலின் வரிகளைத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். ஒரு பெரிய வீட்டின் முன் கார் நின்றது.

“சொந்தக்காரங்க வீடு. சாப்பிட்டுக் கிளம்பிடுவோம். காலையில கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன்” என்றார் நவநீதம். தெரியாத வீட்டில் சாப்பிடுவது கூச்சம்தான் என்றாலும் விக்னேஷின் உறவினர்கள் தனக்கும் உறவினர்கள்தானே என்ற உறவெண்ணமும் எழுந்தது.

அதற்குப்பிறகு மல்லிகாவுக்கு நிகழ்ந்தது வாழ்வின் பெருந்துயரம். அவள் அந்த வீட்டுக்குள் நுழைந்ததுதான் தெரியும். மதிய உணவுக்குப் பிறகு, ‘`கொஞ்ச நேரத்துல கிளம்பிடலாம். ரெஸ்ட் எடுத்துக்க” என்றார் நவநீதம்.

அதற்குப்பிறகு மூன்று நாள்கள் நவநீதம் அந்த வீட்டில் வைத்து மல்லிகாவைப் பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த வீட்டிலிருந்த உறவினர்கள் இதெல்லாம் இயல்புதான் என்பதைப்போல நடந்துகொண்டனர். வேளாவேளைக்குச் சாப்பாடு வந்தது. சாப்பிட மறுத்த மல்லிகாவுக்கு மிரட்டல்கள் வந்தன. ஒருபுறம் பாலியல் வன்முறையும், இன்னொருபுறம் ‘இவையெல்லாம் விக்னேஷுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா?’ என்ற சந்தேகமும் மல்லிகாவை இருட்டுக்குள் தள்ளின. முதல்முறை நடந்தபோது ‘விக்னேஷ் வந்துவிட மாட்டானா, அவன் தோள்களில் சாய்ந்து அழவேண்டும்’ என்று தோன்றியது. ஆனால் மறுபடி மறுபடி நடந்தபோது அவளுக்குக் காதல், உலகம், வாழ்க்கை என எல்லாவற்றின்மீதான பிடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுக்கொண்டே போனது.

மூன்று நாள்களுக்குப் பிறகு மல்லிகாவைக் கொன்றுவிட முடிவுசெய்து நவநீதம் தன் உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட கார் டிரைவர் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தபிறகுதான் இந்த வன்கொடுமை முடிவுக்கு வந்தது.

காவல்துறை சொல்லித்தான் விக்னேஷுக்கு நடந்த சம்பவங்கள் தெரியவந்தன. தன் அப்பாவை நினைத்தபோது மலக்குழிக்குள் விழுந்ததைப் போலிருந்தது விக்னேஷுக்கு. மல்லிகாவை நினைக்கும்போது ஒரு பிரமாண்டமான எரிமலையின் வாயிலில் தலைகீழாக நுழைந்ததைப்போலிருந்தது.

நவநீதமும் உறவினர்களும் சிறைக்குச் சென்றுவிட்டார்கள். மல்லிகாவை விக்னேஷ் திருமணம் செய்துகொண்டதுடன் இந்தக் கதை முடிகிறது.

குற்றம் 3

மூன்றாவது குற்றத்தை நானே ஒப்புக்கொண்டு உங்களிடம் ஒரு மன்னிப்பையும் முன்வைக்கிறேன். மேலே நீங்கள் படித்த இரண்டும் கதைகள் அல்ல. சென்ற வாரம் செய்தித்தாள்களில் இடம்பெற்ற செய்திகள். வழக்கம்போல் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. மாற்றப்படாவிட்டாலும் தவறில்லை.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

நாளிதழை வாசிக்கும் உங்களுக்கும் எனக்கும் மட்டும் அவை செய்திகள். ஸ்வேதாவுக்கும் மல்லிகாவுக்கும் அவை சிதைந்துபோன வாழ்க்கைத் துண்டு; எத்தனைமுறை அழுதாலும் அடங்காத துரோகத்தின் வடுக்கள்; உறவுகள் புனிதமானவை என்று சொல்லப்பட்ட கதைகளின் முகமூடி கழன்று விழுந்த கணம். நம் இலக்கியங்கள் காதலைப் பேசுகின்றன. நம் இதிகாசங்கள் காதலைப் பேசுகின்றன. நம் தெய்வங்கள் காதலைப் பேசுகின்றன; நம் திரைப்படங்கள் காதலைப் பேசுகின்றன; நம் பாடல்கள் காதலைப் பாடுகின்றன. நமது வாழ்க்கையும் நமது சுவாசமும் நம் ஒளிமிகு விழிகளும் காதலால் நிறைந்திருக்கின்றன. எந்தவொரு கணத்திலும் காதலின் வசீகரத்தின் பக்கம் சாயத் தயாராகவிருக்கிறோம். ஆனால் அந்தக் காதலை மறுக்க நமக்கு ஆயிரம் அடையாளங்களிருக்கின்றன. அதனாலேயே காதலை மறுத்துக் கொலை செய்யவும் பாலியல் வன்கொடுமை செய்யவும் பெற்ற மகளின் முகத்தில் திராவகம் வீசவும் தயாராகிறோம். எல்லாவற்றையும் நிகழ்த்திவிட்டு எந்தக் குற்றவுணர்வுமின்றி மீண்டும் திரைப்படங்கள் பார்த்து, பாடல்கள் ரசித்து, இதிகாசக் கடவுள்களை வணங்கி இன்னுமொரு குற்றத்துக்குத் தயாராவோம்.

- தும்பி பறக்கும்...