சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

குறுங்கதை : 21 - அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

மரணங்களின் சந்தை

ருள் கனத்த போர்வையாய் நாலாபுறமும் அடர்ந்து பரந்தது. மாறாகக் குளிர் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாய் ஊடுருவத் தொடங்கியிருந்தது. கண்களைக் கசக்கிப் பார்த்தபோது தூரத்து மலையில் தெரிந்த சின்ன வெளிச்சமும் அதன் இடையிலான பச்சைமரங்களும் உற்சாகத்தை அளித்தன. குளிரை விரட்டுவதற்கான திரவம் மெல்ல இறங்கியபோது கொஞ்சம் துணிச்சல் மேலெழுந்து வந்தது.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

“இதுவரை எத்தனை நாடுகளைப் பிடித்திருக்கிறீர்கள் என்று தெரியுமா அரசே?” என்று கேட்டான் நிலவெழிலன்.

மேலாடையை இறுகப்பிடித்தபடி புருவத்தை உயர்த்திப்பார்த்த அரசன் உடைவாள் வர்மன், “தெரியவில்லையே. எப்படியும் ஐம்பதுக்கு மேலிருக்குமே?” என்றான்.

“இது 63வது நாடு” என்றான் நிலவன்.

“பரவாயில்லை தளபதி. இதையெல்லாம் நினைவு வைத்திருக்கிறாய். எனக்குப் பெண்களைத் தவிர வேறெதுவும் நினைவில் இருப்பதில்லை. அதுவும் நல்ல குளிர்நேரத்தில் அதைத்தானே நினைக்க வேண்டும்? யுத்தங்களையும் சாம்ராஜ்ஜியங்களையுமா கணக்கு பார்ப்பது?”

“சரிதான் மன்னா. நாம் இதுவரை எத்தனையோ நிலப்பகுதிகளுக்குச் சென்றிருக்கிறோம். எத்தனை வகையான மக்களையோ சந்தித்திருக்கிறோம். எத்தனை சடங்குகள், எத்தனை பழக்கவழக்கங்கள், விதவிதமான பண்பாடுகள்! எத்தனையோ மொழிகளைக் கேட்டிருக்கிறோம். சில மொழிகள், நம் மொழியின் நடுவாந்தரத்திலிருந்து புறப்பட்டதைப் போலிருக்கின்றன. சில மொழிகள் அணில்வாலைப்போல நம் மொழியிலிருந்து முறுகி நின்றிருக்கின்றன. சில மொழிகளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”

“தளபதியே, எனக்குப் புரிந்த ஒரே மொழி யுத்தம்தான்.”

“உண்மைதான் மன்னா. ஆனால் அந்த யுத்தம்தான் நமக்கு இத்தனை பண்பாடுகளை அறியவைத்திருக்கிறது. பெரும்பாலானவை கனத்த கதவுகள். அவற்றை உடைத்தெறியும் வாய்ப்பாகத்தான் இந்த யுத்தத்தை நினைக்கிறேன்.”

“தளபதி, நீ என்னவெல்லாமோ யோசிக்கிறாய், எதையெதையோ பேசுகிறாய். மற்றவற்றில் கவனம் போனால் வீரத்தின் வலிமை குறைந்துவிடும். தளபதியை மாற்றலாமா என்று யோசிக்கிறேன்.”

“மன்னா...” பதறிப்போனான் நிலவெழிலன். அருகிலிருந்த மரத்திலும் அந்தப் பதற்றம் தொற்றிக்கொண்டதைப்போல் லேசாக அசைந்தது.

“நிலவனுக்கே அச்சமா? வேடிக்கைக்காகச் சொன்னேன். உன்னைமாதிரியான தளபதி அமைவது அரிதினும் அரிது. உனக்கு நினைவி ருக்கிறதா, சாமக யுத்தத்தில் நீ நூற்றுக்கணக்கில் எதிரிகளைக் கொன்றுகுவித்தாய். ஆறாய் ஓடிய ரத்தத்தைச் செந்நாய்கள் நக்கிக்குடித்தன. வில்லின் நாண்போல் நீண்டிருக்க வேண்டிய நெடுயுத்தத்தை நீ ஆறே நாள்களில் முடித்தாய். இறுதிநாள் யுத்தக்காட்சி இன்னும் என் கண்களுக்குள் உறைந்துள்ளது. எதிரிவீரர்களின் பிணங்கள் குவிந்துகிடக்கின்றன. பல உடல்கள் சிதைந்துள்ளன. எது தங்கள் கணவரின் உடல் என்று தெரியாமல் மனைவிமார்கள் தடுமாறினார்கள். பிறகு உடலைக் கண்டுபிடித்த பிறகும் அந்த உடலுக்குரிய சிதைந்த பாகங்களைத் தேடி அலைந்தார்கள். அப்போது பெருமழை பெய்தது. காட்டு விலங்குகளின் அலறல், இடியின் பிளிறல், பூச்சிகளின் சத்தம், குதிரைகளின் கனைப்பொலி எல்லாவற்றையும் தாண்டி அந்த மனைவிமார்களின் அழுகைச்சத்தம் கேட்டது. அது எனக்குப் பிடித்த இசை. மறக்க முடியாத அமுதிசை தளபதி” என்றவாறு இன்னொரு கோப்பையைத் தளபதியிடம் பரிசு வழங்கும் பாவனையில் அளித்தான் மன்னன்.

“சொல்ல மறந்துவிட்டேன். யுத்தத்தைப்போல எனக்குப் பிடித்த இன்னொரு மொழி போதை!”

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

டைவாள் வர்மன் மூன்று மண்டலங்களுக்கு மேல் ஒருநாட்டில் தங்குவதில்லை. யுத்தம், வெற்றி, நாட்டில் தனக்குத் தோதான, கப்பம் கட்டும் விசுவாசமான அரசை அமைத்துவிட்டு, அடுத்த பயணம், அடுத்த யுத்தம் என்று சென்றுகொண்டிருப்பான். தளபதியாக இருந்தாலும் நிலவெழிலனுக்கு ஒவ்வொரு நாடு வந்ததும் ஆச்சர்யமும் ஆர்வமும் அப்பிக்கொள்ளும். இயல்பில் அவனொரு கலைஞன். தண்ணுமை இசைக்கருவி இசைப்பதிலும் அவன் பிறந்த இனக்குழுவுக்கே உரித்தான அலங்காட்டம் ஆடுவதிலும் நிபுணன். செல்லும் இடங்களில் தான் பார்த்த வாழ்க்கையையும் மனிதர்களையும் குறித்து பயணக்குறிப்புகளாய் எழுதிவைத்திருந்தான்.

பகலும் இரவும் வெவ்வேறுவிதமான வாழிடங்களுக்குச் சென்று மனிதர்களைக் கற்பதுதான் தளபதியின் வழக்கம். பல இடங்களில் அவன் தானொரு தளபதி என்று காட்டிக்கொள்ள மாட்டான். அரை மண்டலம் இந்த நாட்டை அலசியதில் அவனுக்கு ஓரளவு இந்நாட்டின் அமைப்பு புரிய ஆரம்பித்தது.

ல்லா நாடுகளிலும் இருப்பதைப்போல் இங்கும் குயவர்கள், பூசகர்கள், பரத்தைகள், பாணர்கள், பணிப்பெண்கள், அரண்மனைப்பணியாளர்கள், உழவர்கள், வணிகர்கள் என மக்கள்குழுக்கள் இருந்தன. இவற்றைத் தாண்டி நிலவனைக் கவர்ந்தவர்கள் இருவகையான மக்கள்குழுக்கள்.

விளவுமலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் தனித்ததொரு காட்டுப்பூவைப்போல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். குளு ஊ என்னும் தானியத்தில் செய்யப்பட்ட மதுவும் உடும்பு இறைச்சியும்தான் அவர்களின் முதன்மை உணவு. மேலும், கிழங்கும் திணைமாவும் தேனும் உண்டுதான். குளு ஊ மதுவை அவர்கள் வெறுமனே அருந்துவதில்லை. அதில் உப்பும் மிளகும் சேர்த்தே அருந்துகிறார்கள். முதல்முறை அருந்திய போது நிலவனுக்குக் கண்களும் மூக்கும் வடியத்தொடங்கின.

“உப்பைக்கொண்டுதான் கடவுள் ரத்தத்தைப் படைத்தார். மிளகைக்கொண்டுதான் அவர் மனிதர்களின் நாக்கைப் படைத்தார்” என்றார் அந்தக் குழுவிலிருந்த முதுமனிதன். வயதேற ஏற உப்பு ரத்தத்திலிருந்து வெளியேறி, தலைக்கு ஏறி நரைக்கத் தொடங்குகிறது என்பது அவர்களின் நம்பிக்கை.

மற்றொரு புதிர் இனம், அடர் காடுகளில் வசிக்கும் நிசி கள்வர்கள். அவர்களுடன் வேறெந்த இனத்துக்கும் தொடர்புகள் இல்லை. உள்ளூரில் அவர்கள் கள்ளம் வைப்பதில்லை. அதேபோல் வெளியூர்க் கள்ளர்கள் இங்கு வராமல் தடுக்கும் காவல் அரணும் அவர்கள்தான். ஆண்டுக்கு ஒருநாள் களவுப்பெருநாள் நடைபெறும். அப்போது ஊர்மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களைத் திறந்து விட்டு அண்டை ஊர்களுக்குச் சென்று விடுவார்கள். அன்று கள்வர் களுக்கான நாள். எந்த வீட்டிலும் எதையும் எடுத்து க்கொள்ளலாம். அன்று பொழுது இருட்டும் நேரம் மீண்டும் நிசி கள்வர்கள் காடுகளில் அடைந்து விடுவார்கள்.

ல்லாவற்றையும்விட நிலவனுக்கு ஆச்சர்யமளித்தது குழந்தைகளின் சந்தைதான். மாட்டுச்சந்தை, குதிரைகள் சந்தை, யானைகள் சந்தை, ஒட்டகச் சந்தை என்று விதவிதமான சந்தைகளைப் பார்த்துள்ளான். மணற்புயல் வீசும் பாலைநிலப்பரப்பில் கரியநிற மனிதர்களும் பெண்களும் விற்கப்படும் அடிமைகளின் சந்தைகளையும் பார்த்துள்ளான். ஆனால் அவன் வாழ்க்கையில் முதன்முதலில் பார்த்த குழந்தைகளின் சந்தை இங்குதான்.

யுத்தத்தில் மரணமுற்ற வீரர்களின் குழந்தைகள், பொருள்வயின் பிரிந்து பயணம் சென்று நெடுநாள் திரும்பாதவர்கள் இல்லக்குழந்தைகள், உடல் ஒச்சமான குழந்தைகள், மூளைவளர்ச்சியற்ற குழந்தைகள் என மாதமொருமுறை வெவ்வேறு நாடுகளில் இருந்தும் இங்கு குழந்தைகள் விற்கப்படுவதுண்டு. குழந்தைகளற்ற தம்பதிகள் எடுத்துக்கொண்டதுபோக மிச்சமுள்ள குழந்தைகள் எடுத்துச் செல்லப்படும். மீண்டும் மீண்டும் பல குழந்தைகள் சந்தைக்குக் கொண்டுவரப்படுவதையும் நிலவன் பார்த்தான். எல்லாச் சந்தைகளிலும் எண்பது தாண்டிய வயது நிரம்பிய முதுகிழவர் ஒருவர், பெரும்பாலான நாள்களில் அவர் குழந்தைகள் வாங்கிச்செல்வதைப் பார்த்தான். இந்த வயதில் இவருக்கு ஏன் இத்தனை குழந்தைகள், இவருக்குக் குடும்பம் இருக்கிறதா, இவரைப் பராமரிப்பதே கடினம், இவருடன் சேர்ந்து இந்தக் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளுமா இவர் குடும்பம் என அடுக்கடுக்கான கேள்விகள் நிலவனிடம்.

நிலவனாக அவரிடம் பேச்சுக்கொடுத்தான். இருமுறை தவிர்த்தவர், ஒருமுறை மட்டும் அவரைக் குதிரைவணிகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். தொடர்ச்சியாக அவனைச் சந்தைகளில் பார்த்தவர், இரண்டு சந்தைகளாக வருவதில்லை.

நிசி கள்வரில் திறமைசாலி நாகவரன். வெளிச்சமும் காற்றும் நீரும் புகமுடியாத இடத்திலும் புகுந்து விடக்கூடியவன். உள்ளூரில் கள்ளம் வைப்பதில்லை என்ற குலவிதியை முதன்முறையாக நிலவெழிலனுக்காக மீறியிருக்கிறான். தன் குழு தாண்டி எந்த நண்பர்களையும் ஈட்டியிராத அவன் வாழ்க்கையில் நுழைந்த முதல் மனிதன் என்பதைத் தவிர வேறென்ன காரணமிருக்க முடியும்?

அந்த முதுகிழவரின் பெயர் விமலநந்தன் என்பதை அவர் வீடுகளிலிருந்து களவாண்டு வந்த சுவடிகள் மூலம் அறிந்துகொண்டான் நிலவன். உலர்மீன்களுடன் குளு ஊ மதுவை அருந்தியபடி சுவடிகளைப் படிக்கத் தொடங்கினான்.

குறுங்கதை
குறுங்கதை

‘விமலாதீகம் - காலக்கணியம்’ என்னும் சுவடியை மூன்றுமுறை படித்தபோதுதான் விமலநந்தன் விமலாதீகம் என்னும் புதிய மதத்தைத் தானே உருவாக்கித் தானே பின்பற்றியிருக்கிறார் என்பதை நிலவனால் அறிய முடிந்தது. ‘குழந்தைமையே உன்னதம்’ என்பதே அந்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடு. குழந்தை, பிறந்து ஆறு மாதங்கள் வரை மட்டுமே புனிதத்துடன் இருக்கிறது. அதற்குப் பின் வளர வளர மற்றவர்களின் கருத்துகள் ஏற்றப்பட்ட கழுதையாக மாறிவிடுகிறது. எனவே, வன்முறையற்ற பேரன்பும் அறியாமையும் குழந்தை பிறந்து ஆறேழு மாதங்கள் வரை மட்டுமே சாத்தியம் என்பதுதான் விமலநந்தனது கொள்கை. விமலநந்தன், 26 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்; 42 குழந்தைகள் வரை தத்து எடுத்து வளர்த்தார். ஆனால், குழந்தைகள் ஆறு மாதங்கள் வளர்ந்தபிறகு, அவற்றைக் கொன்று விடுவார். இவ்வாறாக, குழந்தை மையின் புனிதத்தைக் காத்துவந்தார். 26 குழந்தைகளையும் பெற்று, கொல்வதற்குள் விமலநந்தனுக்கு இப்போது 90 வயது ஆகிவிட்டது என்பதை அந்தச் சுவடிகள் மூலம் அறிந்துகொண்டான்.

காலக்கணியத்தின் இறுதிப்பகுதி இப்படிச் சொன்னது. “உலகம் இனி யுத்தத்தின் குழந்தைகளையே பெற்றெடுக்கும். எல்லாக் குழந்தைகளும் வளர்ந்து யுத்தத்தின் வசம் ஒப்படைக்கப்படுவர். எந்தக் குழந்தையும் குல அடையாளத்துடன் பிறப்பதில்லை. ஆனால் சுமத்தப்பட்ட குல அடையாளம் யுத்தத்தை ஈன்றெடுக்கும். வாலும் வேளும் வில்லும் அம்பும் என்றிருக்கும் ஆயுதங்கள் மாறும்; யுத்தம் மாறாது. யுத்த வழிமுறை மாறும்; மரணம் மாறாது. குழந்தைகள் யுத்தத்தில் இறப்பதைவிட, குழந்தைகள் குழந்தைகளாக இறப்பதே புனிதமானது.”

விமலநந்தனைப் பல ஆண்டுகளாகக் காணவில்லையாயினும் அவரைத் தேடுவார் யாருமில்லை. நிலவெழிலனின் பயணக்குறிப்புகள் கிடைத்தால் கீழ்க்காணும் மூன்று முடிவுகளில் ஏதேனும் ஒன்றை நாம் அடையலாம்.

1. கொல்வதற்கு இனி குழந்தைகள் இல்லை. இப்போது தானே ஒரு குழந்தை யாக இருப்பதை உணர்ந்த விமலநந்தன் வடக்கிருந்து உயிர்துறந்தார்.

2. மன அழுத்தம் தாளாது மலையுச்சி யிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

3. நிலவெழிலனால் கொல்லப்பட்டார்.

- தும்பி பறக்கும்...