Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 24: காதலின் தீபம் ரெண்டு

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

குறுங்கதை

ராம் கூடியிருந்த கூட்டத்தை அசுவாரஸ்யமாகப் பார்த்தான். இரண்டு பெண்கள் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

நகரின் பிரபலமான கோச்சிங் சென்டரில் இப்போதே சேர்த்துவிட்டால் நீட் தேர்வு வரை உதவியாக இருக்கும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரின் தோற்றத்தைப் பார்க்கும்போது அவர்களின் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்குள்தான் படித்துக்கொண்டிருக்கும் என்று தோன்றியது. ராமின் மகன் சதீஷ் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.

ராமுக்கு இது தினச்சம்பிரதாயம். காலையில் மகனைப் பள்ளியில் விட வேண்டும். மதியம் 1 மணிக்கெல்லாம் பள்ளி முடிந்துவிடும் என்பதால் அவனை அவசரமாக அழைத்துக்கொண்டு சென்று அவசரமாக வீட்டில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அவசரமாக அலுவலகம் செல்லவேண்டும். வீட்டுக்குப் பக்கத்தில்தான் அலுவலகம்.

அப்போதுதான் கூட்டத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தான். பின் புறமிருந்து பார்ப்பதற்கு சைலஜாவைப் போலிருந்தது. சைலஜாவாக இருந்தால் நன்றாகத்தானிருக்கும். எத்தனை வருடங்கள்? 18 வருடங்கள் என்று மூளை அதற்குள் கணக்குபோட்டுச் சொன்னது. சுவரில் சிலையாய் இருந்த ஜீசஸ் வானம் நோக்கிச் சிறகுகளாய்க் கைகளை விரித்திருந்தார். மாடியில் இன்றைய நாளுக்காய்க் கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்திருந்தார்கள் குழந்தைகள்.

அந்தப் பெண் கொஞ்சம் திரும்பியபோது நன்றாக முகம் தெரிந்தது. சைலஜாவேதான். ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; கைவிடுவதும் இல்லை’ வரிகள் மனதுக்குள் ஓடின. மனதுக்குள் ஆரம்பித்த பதற்றம் உடலில் தொற்றிக்கொண்டது. இங்கே எப்படி இவள்..? நல்லவேளை சதீஷ் வந்திருந்தான். கிட்டத்தட்ட அவனை இழுத்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்பினான் ராம்.

ராமுக்கு சைலஜாவுடன் பழகிய நாள்கள் அன்று முழுவதும் ஞாபகமாய் வந்துபோயின. இரண்டு ஆண்டுகள் காதல் இறுதியாண்டில் முடிந்துபோனது. காதலைத் தொடர்ந்திருந்தாலும் அது வெற்றிகரமாகத் திருமணத்தில் முடிந்திருக்குமா என்று யோசித்தான் ராம். கடந்தகாலத்தை நினைத்துப்பார்த்தபோது அதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்ததாகத் தோன்றியது. அந்த நினைவுகள் மட்டும்தான் நிஜம்; அந்த நினைவுகள் மட்டும்தான் சுகம்.

இன்று எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்தான். ‘இதனால் அவள் வாழ்க்கையிலோ தன் வாழ்க்கையிலோ எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. ஆனாலும் ஏன் இப்படி பயந்து ஒதுங்கி விலகிப்போக வேண்டும்; இயல்பாக இருப்போமே’ என்று நினைத்தான் ராம். இன்று கொஞ்சம் சீக்கிரமாகவே பள்ளிக்குச் சென்றுவிட்டான். அவளைக் கூட்டத்தில் பார்த்தாலும் அருகில் சென்று பேசத் தயக்கமாகத்தான் இருந்தது. ‘முதன்முதலில் காதலைச் சொன்னபோது இருந்ததைப் போன்ற பதற்றம் ஏன் இப்போது, எதற்கு இவ்வளவு தயக்கம். இயல்பாய் இருக்க முடியாதா என்ன?’ என்று பல கேள்விகள்.

குறுங்கதை
குறுங்கதை

சதீஷ் வரும்போதே ஒரு பையனை அழைத்துவந்து, ‘`டாடி, மீட் மை நியூ ஃபிரெண்ட்” என்றான். அருகில் சைலஜாதான். முதன்முறையாக அவனைக் கவனிப்பவள் கண்களில் திடுக்கிடல் இருந்தாலும் புன்னகைத்தாள்.

“எப்படி இருக்கே... இருக்கீங்க?” என்றான் ராம்.

தலையாட்டிச் சிரித்தாள். தலையாட்டிச் சிரிக்கும்போது காதுகளில் ஜிமிக்கி ஆடுகிறதா, முடிக்கற்றை முன்னால் வந்து விழுகிறதா என்று கவனித்தான். அவன் மனதில் பதிந்துபோன சைலஜாவின் அழகான பிம்பங்களில் ஒன்று. அப்படித்தான் இருந்தது.

“வாட்ஸ் யுவர் நேம்?” என்றான் குனிந்து சைலஜாவின் மகனிடம்.

“மை நேம் இஸ் ரஞ்சித், அங்கிள்” என்றான்.

இரண்டு ஏமாற்றங்கள். ‘`ஓகே பை” என்று விடைபெற்றுச் சென்றான். பைக்கில் ஏறும்வரை சதீஷ், ரஞ்சித்துக்குக் கையாட்டிக்கொண்டிருந்தான்.

றுநாள் இன்னும் சீக்கிரமாகவே பள்ளிக்கு வந்துவிட்டான். மைதானத்தில் அமர்ந்து மொபைலை நோண்டிக்கொண்டிருந்த சைலஜாவின் அருகில் அமர்ந்தான். நிமிர்ந்து பார்த்தவள் புன்னகைத்தாள். இயல்பாகத்தான் பேசினான் என்றாலும், பழைய நினைவுகளின் எச்சமாய்க் குறுகுறுப்பு இருக்கத்தான் செய்தது. கணவன் வெளிநாட்டில் பணிபுரிகிறான். மாமியார் துணையுடன் வசிக்கும் சைலஜாவுக்கு ஒரே மகன்தான். அடுத்தடுத்த நாள்களிலும் முன்கூட்டியே வந்தான். இருவரும் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் பழைய நிகழ்வுகளைப் பற்றி இருவரும் பெரிதாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை. கல்லூரி நண்பர்கள், சென்னை வெயில் என்று பொதுவாகப் பேசிக்கொண்டார்கள்.

ன்று சனிக்கிழமை. பள்ளி செல்லும் வேலையில்லை. அலுவலக நண்பன் சாகுல் அழைப்பின்பேரில் லஞ்சுக்கு ஹோட்டல் வந்திருந்தார்கள்.

“காதலைப் பத்தி என்ன நினைக்கிறே சாகுல்?”

“நான் என்ன நினைக்கிறது? தமிழ்நாடே அதைப்பத்தித்தானே நினைக்குது. ஹாலிவுட்ல அவதார், ஜுராசிக் பார்க், ஹாரிபார்ட்டர்னு ஃபேன்டசி படங்கள் வருது. நம்மூர்ல அதிகம் வர்றதில்லை. ஏன் தெரியுமா?”

“ஏன்?”

“எது நடக்கச் சாத்தியமில்லையோ, எது நிறைவேறுறது கஷ்டமோ அதான் ஃபேன்டசி. நம்மூர்ல காதலைச் சொல்லத் தயக்கம், காதலிச்சாலும் சேர்ந்து வாழ முடியுமா, கல்யாணம் நடக்குமான்னு தெரியாது. இவ்வளவு பிரச்னை இருக்கிறதால காதலே ஃபேன்டசி ஆகிடுது. ஒரு பையனும் பொண்ணும் சேருவாங்களா, மாட்டாங்களாங்கிறதே க்ளைமாக்ஸ் வரைக்கும் பிரச்னை” என்றான். தயங்கித் தயங்கி சைலஜாவைச் சந்தித்ததைப் பற்றி சாகுலிடம் சொன்னான் ராம்.

“சரிடா. இப்போ ஃபீல் பண்ணி என்ன பண்றது? காதலிக்கிறதுல ஒரு சுகம் இருக்கிறமாதிரி பழைய காதலியைச் சந்திக்கிறதுலயும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும்.”

“அது உண்மைதான். ஆனா அவ பையனுக்கு என் பேரை வெச்சிருப்பான்னு எதிர்பார்த்தேன். ப்ச். அதாவது பரவாயில்லை. அவ பையன் என்னை அங்கிள்னு கூப்பிடறான்.”

“பின்னே தம்பின்னா கூப்பிடுவான்... அவன் வயசுக்கு நீ அங்கிள்தானேடா?”

“அங்கிள்னா அவளுக்கு நான் அண்ணன் முறை ஆகிடுமே” என்று ராம் சொல்லவும் சாகுல் உரக்க சிரிக்க ஆரம்பித்துவிட்டான். ஹோட்டலில் சிலர் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்கவும், டிஷ்யூ பேப்பரால் வாயைப் பொத்திக்கொண்டான்.

“டே லூசு. தமிழ்மொழியிலதான்டா ஒவ்வொரு உறவுக்கும் டிசைன் டிசைனா பேர் வெச்சிருக்கோம். இங்கிலீஷ்ல பெரியப்பா பையன்னாலும் கசின்தான், அத்தை பையன்னாலும் கசின்தான்.”

ன்று அலுவலகத்தில் கடைசிநேரத்தில் ஆரம்பித்த மீட்டிங் நீண்டுகொண்டே போனது. ‘என்னால் பள்ளி செல்ல இயலுமா என்று தெரியவில்லை. சதீஷை அழைத்துக்கொள்ளவும்’ என்று சுகன்யாவுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான். இருந்தாலும் ஒரு பதற்றம் அவனைச் சூழ்ந்து கொண்டிருந்தது. மீட்டிங் முடிந்ததும் அவசர அவசரமாக பைக்கை எடுத்துக்கொண்டு பள்ளி சென்றான். அதே மைதானத்தில் சைலஜாவும் சுகன்யாவும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஏங்க, உங்க ஊர்க்காரங்கதானாம்ல? அதுவும் காலேஜ்மேட்டாம். சொல்லவேயில்லை?” என்றாள் சுகன்யா.

“உனக்கு அவங்களைத் தெரியாதுல்ல. எனக்கே நாலஞ்சு நாளாத்தான் தெரியும்” என்றான்.

எப்படியாவது சுகன்யாவிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று தீர்மானித்தான். தானாகத் தெரிந்தால் என்ன நினைப்பாளோ? தீர்மானித்தே இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பயமா, தெரியாமல் இருப்பது நல்லதா என்று தெரியவில்லை. நாள்கள் கடந்துகொண்டிருந்தன.

குறுங்கதை
குறுங்கதை

சமயங்களில் கதைகளைவிடத் திருப்பங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்தது வாழ்க்கை. அப்படியானதொரு ஆச்சர்யத்தைத்தான் அன்று தொடங்கிவைத்தாள் சுகன்யா.

“இன்னைக்கு எனக்கு பாலாஜி ஃபிரெண்ட் ரெக் வெஸ்ட் கொடுத்திருந்தான். அக்செப்ட் பண்ணினேன்.”

“யாரு அந்த பாலாஜி?”

“நான் உன்கிட்ட சொல்லியிருக்கேனே, காலேஜ்ல என் பின்னாடி சுத்திச் சுத்தி வந்தான்னு. இப்போ ஆளே மாறிட்டான் தெரியுமா? ரொம்ப குண்டாயிட்டான். காலேஜ் படிக்கும்போது ஸ்லிம்மா இருந்தான்.”

“ஸ்லிம்மா... அழகா இருந்தானா?”

“அழகா இருந்தாத்தான் லவ் பண்ணியிருப்பேனே?”

“இன்னைக்கு பாலாஜி எங்க ஆபீஸுக்கே வந்துட்டான். அந்தப் பக்கம் ஏதோ க்ளையன்ட் மீட்டிங்காம். ரெண்டுபேரும் பக்கத்து ஹோட்டலில் டீ சாப்பிடப்போனோம். காலேஜ் படிக்கும்போது என்னோட ஹேர்பின், தலைமுடி, பஸ் டிக்கெட் இதெல்லாம் சேர்த்துவெச்சிருந்தானாம். சொன்னான்.”

“நீ என்ன சொன்னே?”

“சிரிச்சேன்.”

“உனக்கு ஒண்ணும் தோணலையா?”

“ம். அப்பெல்லாம் எனக்கு நிறைய முடி இருக்கும். கல்யாணமாகி சதீஷ் பிறந்தபிறகு முடி நிறைய உதிர்ந்திருச்சு.”

‘உலகம் முழுக்கவே அருவியின் நிறம் வெள்ளை. ஆனால் உன் கூந்தல் அருவி மட்டும் கறுப்பு’ என்று சுகன்யாவிடம் எழுதிக்கொடுத்தது ஞாபகம் வந்தது ராமுக்கு. ‘எவ்வளவு அபத்தமாக உளறியிருக்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டான்.

“சதீஷ் பர்த் டேக்கு பாலாஜியை இன்வைட் பண்ணியிருக்கேன்.”

“ஏன்?”

“ஏன்னா... சும்மாதான். உன் காலேஜ் மேட் சைலஜாவையும் இன்வைட் பண்ணியிருக்கேன்.”

ராமை மீண்டும் பதற்றம் சூழ்ந்துகொண்டது.

சுகன்யா அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருந்தபோது ஃபேஸ்புக் இன்பாக்ஸில் வந்தான் பாலாஜி.

“ஹாய்... உன் பையனுக்கு கிஃப்ட் வாங்கணும். அவன் பேர் என்ன?”

“.......’’

“ஹேய், வாட்ஸ் யுவர் சன் நேம்?”

“சதீஷ்”

“ஹேய்... அப்போ அது உண்மைதானா? ஃபிரெண்ட்ஸ் சொல்லுவாங்க, உனக்கு சதீஷ்மேல ஒரு கிரஷ்னு...”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. என் ஹஸ்பெண்ட்தான் இந்தப் பேர் வெச்சாரு. சரி, மறக்காம பர்த் டேக்கு வந்துடு.”

காலிங்பெல் அடித்தது. ராம்தான் கதவைத் திறந்தான். சுகன்யா சொன்னதைப்போல் பாலாஜி அவ்வளவு குண்டாகவெல்லாம் இல்லை.

“வாங்க. நான் ராம், சுகன்யா ஹஸ்பண்ட்” என்றபடி கைகுலுக்கினான். பாலாஜியின் கைகளில் சின்ன நடுக்கம் இருந்ததைப்போல் தோன்றியது. பிரமையோ?

“ஒய்ஃபைக் கூட்டிட்டு வரலையா?” - வேண்டுமென்றேதான் கேட்டான்.

“அவங்களுக்கு ஆபீஸ்ல வொர்க் முடிய லேட் ஆகும்னாங்க” என்றான் பாலாஜி.

சோபாவில் இருவரும் அமர, சுகன்யா டம்ளரில் கூல் டிரிங்க் நிரப்பிக் கொண்டுவந்து கொடுத்தாள். அவள் சேலைக்குப் பின்னால் வெட்கப்பட்டபடி பதுங்கிவந்தான் சதீஷ்.

“ஹேப்பி பர்த் டே சதீஷ்!” என்றான் பாலாஜி.

“தேங்க்யூ அங்கிள்” என்றான் சதீஷ்.

இப்போது பாலாஜியின் கண்களில் நிஜமாகவே திடுக்கிடலும் ஏமாற்றமும் கடந்துபோயின. அவசரமாக கூல்டிரிங்க்கைக் குடித்தான்.

இருவரும் சில நிமிடங்கள் பேசியிருப் பார்கள். கையில் கிஃப்ட் பாக்ஸுடன் பக்கத்து அபார்ட்மென்டிலிருந்து ஆட்கள் வரத்தொடங்கினார்கள்.

மீண்டும் காலிங்பெல் அடித்தது. ராமைப் பதற்றம் சூழ்ந்துகொண்டது.

- தும்பி பறக்கும்...