கட்டுரைகள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 28: தொடர்பு எல்லைக்கு அப்பால்...

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

குறுங்கதை

மல்லிகாவைத் தன் அலுவலகத்தில் பார்த்தபோது வருணுக்கு முதலில் அருவருப்புதான் வந்தது. அதற்குப் பின்தான் ஆச்சர்யம், அதிர்ச்சி, ஆத்திரம் என்று ஒன்றன்பின் ஒன்றாக உணர்ச்சிகள் தோன்றின. எல்லா உணர்ச்சிகளிலும் திளைத்து மீண்டும் மீண்டும் ஒரே கேள்விதான் எழுந்தது, ‘இவளுக்கு இந்த இடத்தில் என்ன வேலை?’

அது ஒரு பெரிய நிறுவனம். யாரையாவது அவள் பார்க்க வந்திருக்க வேண்டும் என்றுதான் வருண் நினைததான். ஆனால் அவள் தன் அலுவலகத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள் என்றபோது முதன்முதலில் தன் அலுவலகத்தில் பார்த்த அத்தனை உணர்ச்சிகளும் மறுபடி முதலில் இருந்து வரத்தொடங்கின.

ருண் சென்னைக்கு வேலை தேடி வந்து அலைந்து திரிந்த ஆரம்ப நாள்களில்தான் துரைராஜ் அறிமுகமானார். வருண் ஊருக்குப் பக்கத்து ஊர். ஒரே மாவட்டம் என்றால் சென்னையில் துளிர்விடும் நட்புதான் இருவருக்கும். அப்போது அவர் சொந்தமாக ஒரு சிறிய நிறுவனம் நடத்திவந்தார். வருணுக்கு வேலை தருகிறேன் என்ற பெயரில் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்துச் சேர்த்துக்கொண்டார். அவர் அப்போது சைதாப்பேட்டையில் ஒரு பிளாட் வாங்கியிருந்தார். ஏற்கெனவே நுங்கம்பாக்கத்தில் குடியிருந்தவர், தன் மகன்களின் படிப்பு காரணமாக வீட்டைக் காலி செய்ய இயலாத சூழல். பிளாட்டை வாடகைக்கு விடலாம் என்ற யோசனையில்தான் இருந்தார். ஆனால் வருண் பழக்கமாகவும் வாடகை இல்லாமல் அவனைத் தங்கச் சொல்லிவிட்டார். இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பளம் என்ற மனக்குறை வருணுக்கு. அவருக்கோ ‘வாடகை கொடுக்காமல் புது பிளாட்டில் தங்க வைத்திருக்கிறோமே, அதற்கு இந்தச் சம்பளம் போதாதா?’ என்ற கணக்கு. தான் ஒரு பெருந்தன்மையானவன் என்ற நினைப்பில் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டவர், வருணின் ஒவ்வொரு செய்கையிலும் அந்தப் புகழ்ச்சியை எதிர்பார்த்தார். வருணுக்கு அது அவ்வளவாகக் கைவராத கலை. ஆனாலும் இருந்ததை வைத்து சமாளித்தான்.

அந்த அலுவலகத்தில் துரைராஜ், வருணைத்தவிர இருந்த நான்கு ஊழியர்களுமே பெண்கள். ஒரு பெண் அலுவலகத்தில் இருந்தார். மூவர் விற்பனைப் பிரதிநிதிகள். துரைராஜ் அலுவலகத்தில் பெண்கள் திடீரென்று நிற்பதும் புதிதாகப் பெண்கள் வேலைக்குச் சேர்வதுமாக இருந்தார்கள். ஒருநாள் பியர் பாட்டில் மூடியை உடைத்தபோதுதான் துரைராஜ் உண்மையை உடைத்தார். பெண்களை வீழ்த்துவது மாபெரும் கலை என்றும் அந்தக் கலையில் தான் வல்லவர் என்றும் சொன்னவர் அதற்கான உதாரணங்களாகப் பல சம்பவங்களை அடுக்கினார்.

அதற்குப்பிறகு துரைராஜ் யாரிடம் சிரித்துப் பேசினாலும் ‘சாதாரணமாகத்தான் பேசுகிறாரா, வீழ்த்துகலை நிகழ்த்துகிறாரா’ என்ற சந்தேகம் வர ஆரம்பித்தது வருணுக்கு. அப்போதுதான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தாள் மல்லிகா. அழகு என்று சொல்ல முடியாது. ஆனால் துருதுருவென்ற அவள் இயல்பும் எப்போதும் சிரித்த முகமும் அவள் ரசிக்கத்தக்கவள்தான் என்ற பிம்பத்தை உருவாக்கின. அவள் எல்லோரிடமும் சிரித்துப் பேசினாலும் துரைராஜிடம் கூடுதலாகச் சிரித்துப் பேசியதைப்போலத்தான் தோன்றியது வருணுக்கு.

அஞ்சிறைத்தும்பி - 28: தொடர்பு எல்லைக்கு அப்பால்...

நான்குநாள்கள் பெங்களூருக்குச் சென்றிருந்தார் துரைராஜ். மற்ற நாள்களைவிட அந்த நான்கு நாள்களில் பெண் ஊழியர்கள் இன்னும் இயல்பாக, இன்னும் நெருக்கமாகப் பழகினார்கள். தைரியமாக துரைராஜைப் போல நடித்துக்காட்டினார்கள். தங்கள் வாடிக்கையாளர்கள் எப்படியெல்லாம் அசடு வழிவார்கள் என்று கதைகதையாய்ச் சொன்னார்கள். மல்லிகா வருணைப்போலவே நடித்துக்காட்டினாள். அந்த நெருக்கமும் இயல்பும் இருந்ததாலோ என்னவோ அவன் மல்லிகாவிடமும் அலுவலகத்திலேயே இருந்த சங்கரியிடமும் துரைராஜ் குறித்து எச்சரித்தான்.

“இப்படிச் சொல்றேன்னு தப்பா நினைச்சுடாதீங்க. அவர் நல்லவர்தான். எனக்குத் தெரிஞ்சவர்தான். ஆனா பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப மோசம். எப்படி பொண்ணுங்களை மயக்கிறது, எப்படா பொண்ணுங்களை வீழ்த்துறதுன்னே குறியா இருப்பார். ஜாக்கிரதையா இருங்க, அவ்வளவுதான் சொல்லிட்டேன்.”

வருண் சொன்னபோது கண்கள் அகல ஆச்சர்யமாய்க் கேட்டவர்கள் தலையைத் தலையை ஆட்டினார்கள்.

து நடந்து இரண்டுமாதங்கள் இருக்கும். தீபாவளி விடுமுறைக்காக ஊருக்குப் போயிருந்தான் வருண். வழக்கத்தைவிட இரண்டுநாள்கள் கூடுதலாக இருக்கவேண்டியிருந்தது. ‘பஸ் கிடைக்கவில்லை. இரண்டு நாள்களில் வருகிறேன்’ என்று துரைராஜுக்கு மெசேஜ் அனுப்பினான். ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இரண்டுநாள் கழித்து அலுவலகம் வந்தபோது அவ்வளவாக முகம் கொடுத்துப்பேசவில்லை துரைராஜ். ‘என்ன பிரச்னையோ’ என்று நினைத்துக்கொண்டான். பெண்கள் எல்லாம் போனபிறகு, கதவைச் சாத்திவிட்டு வந்தவர் எடுத்தவுடனேயே கெட்டவார்த்தையில்தான் ஆரம்பித்தார்.

வருணுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. அவன் பெண்களிடம் சொன்ன செய்தி அவர் காதுக்குப் போயிருக்கிறது. மல்லிகாதான் சொல்லியிருக்கிறாள் என்பதை அவரே வசவுகளுக்கிடையில் சொன்னார். அடித்து விரட்டாத குறையாக அவனை அலுவலகத்தை விட்டுத் துரத்தினார். இரவோடு இரவாக அந்த ஃபிளாட்டைக் காலி செய்துவிட்டு, தன் நண்பனின் மேன்ஷனுக்குச் சென்றான். அழுகை பொங்கிப் பொங்கி வந்தது.

ப்போது யோசித்துப் பார்த்தால் தனக்கு இருந்தது அறவுணர்ச்சியா, இல்லை, துரைராஜ் மீது பொறாமையா, தனக்குப் பெண்களை வீழ்த்தும் திறமையின்மையா, இயலாமையா என்று புரியவில்லை. ஆனாலும் அந்த அவமானத்தின் கசப்பு கொஞ்சமும் குறையவில்லை. அவனுக்குத் துரைராஜ் மீதான ஆத்திரம்கூடக் குறைந்திருந்தது. ஆனால் மல்லிகாவை அவன் மன்னிக்கத் தயாராக இல்லை.

எல்லாவற்றையும் மறந்துதான் இரண்டு வேலைகள் தாண்டி இந்த நிறுவனத்துக்கு வந்திருக்கிறான். மூன்றாண்டுகள் கடந்து சீனியர் என்னும் பொறுப்பை அடைந்திருக்கிறான். எல்லா அலுவலகங்களுக்கும் உரிய வழக்கமான பிக்கல், பிடுங்கல் பிரச்னைகள் இருந்தாலும் போதுமான சம்பளம், உத்தரவாதமான வேலை என்று செட்டில் ஆகியிருந்தான். 120 ஊழியர்களில் 47 பேர் பெண்கள். அவர்களுடன் நெருக்கமும் இல்லை விலகலும் இல்லை என்பது மாதிரியான உறவுதான் வருணுக்கு.

மல்லிகா வருவதற்கு முன்புவரை அப்படித்தான் இருந்தது. ஆனால் அவள் வந்ததற்குப் பிறகு ஏனோ அவன் தன் இயல்புநிலை இழந்தான். அவளிடம் பேச வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஆனால் கேன்டீனில், தண்ணீர் குடிக்கச் செல்லும் வழியில், பாத்ரூம் போகும்போது, இன்னொரு பெண்ணிடம் பேசும் அவசியம் நேரும்போது அவள் பக்கத்தில் இருக்கும்போது என்று ஏதேனும் சந்தர்ப்பங்கள் அமைந்துகொண்டுதான் இருந்தன. அவள் என்ன செய்கிறாள் என்று தெரியாததைப்போல கவனித்தான். காற்றில் பறக்கும் கொடியைப்போல அவள் கண்களில் எப்போதும் ஒரு தவிப்பு பறந்துகொண்டேயிருந்தது.

தனக்கிருந்த தயக்கமும் சங்கடமும் அவளுக்கும் இருக்கும் என்று ஒருகணம் தோன்றினாலும் அவள் மீதான கோபத்தை வருண் குறைத்துக்கொள்ளவில்லை. அவளாக இவனிடம் வந்து ஏதும் பேசவில்லை. ஆனால் இவனுடன் பேசக்கூடிய சந்தர்ப்பங்களை அவள் தவிர்க்கவில்லை. அவள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டாள் என்றும் அவன் திரைத்துறையில் அசிஸ்டென்ட் கேமராமேனாக வேலை செய்கிறான் என்றும் மாலதிதான் சொன்னாள். அவனுக்கு இவள் கதையெல்லாம் தெரியுமா என்று யோசித்தான் வருண். ஆனால் உண்மையில் துரைராஜுக்கும் மல்லிகாவுக்கும் இடையில் பாலியல் உறவு இருந்திருக்குமா என்பது வருணுக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆர்வக்கோளாறில் அவள் உளறிவிட்டாளா, ஏன் வருண் சொன்னதை துரைராஜிடம் சொல்லவேண்டும் என்பது குறித்தெல்லாம் அவன் யோசித்தான். ஆனால், ‘தேவையில்லாமல் யோசிக்கிறோமோ’ என்று தோன்றவும் அதைத் தவிர்க்கப் பார்த்தான். ஆனால் அதற்குப் பிறகுதான் குமிழிகளாய்க் கேள்விகள் மீண்டும் மீண்டும் கொப்புளித்தன.

ருண் டீம் லீடர் ஆன மகிழ்ச்சிச் செய்தியை அதிகாரி சொன்னபோது இருந்த மனநிலை அந்த டீமில் மல்லிகாவும் இருக்கிறாள் என்று தெரிந்தபோது இல்லை. ஒரு வாரம் ஓடியிருந்தது. அலுவல்ரீதியாகத்தான் பேசினான் என்றாலும் வருணால் முடியவில்லை என்பது அவனுக்கே தெரிந்தது. பேசாமல் டீம் மாறலாமா அல்லது வேலையில் இருந்து விலகிவிடலாமா என்று யோசித்தான். ஆனால் அவனே எதிர்பாராமல் மல்லிகா வேலையிலிருந்து விலகிவிட்டாள். என்ன காரணம் என்று தெரியவில்லை. தான் காரணமில்லை என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

குறுங்கதை
குறுங்கதை
த்து நாள்களுக்குப் பிறகு ஒருநாள் இரவு 9 மணி. மல்லிகா போனிலிருந்து அழைப்பு வந்தது. அவளுடன் இதுவரை ஒரு வார்த்தைகூட போனில் பேசியதில்லை என்றாலும் அலுவலகத்தில் எல்லோரின் எண்களையும் சேவ் செய்து வைப்பது வழக்கம். வருண் போனை எடுக்கவில்லை.

நான்கு நாள்களுக்குப் பிறகு அவள் விஷமருந்தித் தற்கொலை செய்துகொண்டதாக மாலதி சொன்னாள். ஆச்சர்யமாக இருந்தது வருணுக்கு. அவளுக்கும் அவள் கணவனுக்கும் இடையில் பிரச்னை என்றாள் மாலதி. ஏனோ முதல்முறை மல்லிகாவை நினைத்துப் பரிதாபமாக இருந்தது அவனுக்கு. அலுவலக நண்பர்கள் எல்லாம் போனதால் அவனும் இறப்பு வீட்டுக்குச் சென்றான். கண்ணாடிப் பெட்டியில் கண்களை மூடிப் படுத்திருந்தாள் மல்லிகா. அந்த மனநிலையிலும் துரைராஜ் அங்கே வந்திருப்பாரா என்று தேடிப் பார்த்தது மனம். பார்த்தவரை அவர் தென்படவில்லை. கிளம்பிவிட்டான்.

இரவு. கொஞ்சம் தயக்கமாக இருந்தது, நீண்ட யோசனைக்குப் பிறகு அவள் எண்ணுக்கு போன் செய்தான். தொலைபேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

- தும்பி பறக்கும்...