கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 31: சே குவேராவின் கண்கள்

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

மாமிசம் சாப்பிடும் நாள்களில் சமயங்களில் பல்லிடுக்கில் மாட்டிக்கொள்ளும் மாமிசம். அது ஒரே ஒரு நார்தான் இருக்கும். ஆனால் ஏதோ பிரமாண்டமான சதையுருண்டை நம் பல் இடைவெளியில் மாட்டிக்கொண்டதைப் போல் அவஸ்தையளிக்கும்.

பெரிய வலியிருக்காது. இருந்தாலும் வழக்கமான பொழுதைக் குலைக்கும்படி துருத்திக்கொண்டேயிருக்கும். ஏதேனும் குண்டூசி, சேஃப்டி பின் முயன்றும் வராமல், மாட்டிக்கொண்ட கறித்துண்டை நாக்காலேயே எடுக்கப் பிரயத்தனப்படுவதுண்டு. அப்படியான அவஸ்தைதான், நமக்கு நன்கு தெரிந்த முகங்களின் பெயர்கள் மறந்துவிடுவதும். நினைவிடுக்கில் மாட்டிக்கொண்ட பெயரைத் துழாவித் துழாவி எடுக்கவேண்டும்.

தொலைக்காட்சியில் அவனைப் பார்த்த போதும் அப்படித்தான் இருந்தது அரவிந்தனுக்கு. நன்கு தெரிந்த முகம், ஆனால் பெயர் நினைவில்லை. ஆனால் அவன் முகத்தில் படிந்திருக்கும் அப்பாவித்தனம் பரிச்சயமானது. இந்த ஊரடங்கு காலத்தில், வெளியில் திரியும் மக்களுக்கு விதவிதமான தண்டனை தருவது காவல்துறையினருக்கான சிறப்புச் சவாலாகிப் போனது. ட்ரோனில் துரத்தி மக்களை ஓடவிடுவது, ‘கொரோனா நோயாளிகள் இருந்த ஆம்புலன்ஸ்’ என்று உள்ளே அடைத்து பயமுறுத்துவது, கைகள் குவித்துக் கும்பிடுவது, தோப்புக்கரணம் போடவைப்பது, போலீஸார் கூட்டமாகச் சேர்ந்து கொரோனா விழிப்புணர்வுப் பாட்டுப்பாடுவது என்று நூதனமான தண்டனைகளை அள்ளி வழங்கினார்கள். ஒவ்வொரு மாவட்டக் காவல்துறையும் ‘அந்த மாவட்டத்தைவிட நாம் வித்தியாசமாகச் செய்யவேண்டுமே’ என்று ஏதேதோ செய்துகொண்டிருந்தார்கள். அப்படி கரூர் மாவட்டக் காவல்துறை கொடுத்த விநோத தண்டனையைத்தான் அவன் நிறைவேற்றிக் கொண்டிருந்தான். இரண்டு கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு தவளையைப் போல் தத்தித் தத்தித் தாவவேண்டும். அவன் பெயர் இன்னும் நினைவில் வரவில்லை. ஆனால் அவள் பெயர் ஞாபகம் வந்துவிட்டது. ஜெயா... சேகுவேரா... பொம்பளை சேகுவேரா.

ரவிந்தன் படித்த கல்லூரி ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர்போன கல்லூரி. ஆணும் பெண்ணும் சேர்ந்து பேசினால் உடனடியாகக் கண்டிக்கப்படுவார்கள். காலை இறைவாழ்த்து பிரார்த்தனையுடன்தான் கல்லூரி தொடங்கும். திடீரென்று அங்கே ஒரு மாணவப்போராட்டம் வெடித்தது ஆச்சர்யம்தான். ஓர் இடதுசாரி மாணவர் சங்கம் அமைதியாக உள்ளே நுழைந்ததை அறிந்து நிர்வாகம் திடுக்கிட்டது. விடுதி மாணவர்களுக்கு முறையான உணவில்லை, கல்லூரிப் பேருந்து வசதி வேண்டும், சாதியரீதியாகச் செயல்படும் மூன்று துறைத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தேர்வுக்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மொத்தம் 12 கோரிக்கைகளை வைத்துப் போராட்டம் நடத்தப்பட்டது. இதுவரை மாணவர்களுக்கான சங்கமில்லை. யூனியன் வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கை.

அஞ்சிறைத்தும்பி - 31: சே குவேராவின் கண்கள்

நிர்வாகம் அதைக் குலைக்க என்னென்னமோ முயற்சிகள் செய்துபார்த்தது. ஆனால் பலிக்கவில்லை. 16 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடைபெற்றிருக்கிறது. அதுவும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் போராட்டம். மாணவர் போராட்டம் இதுவரை நடந்ததில்லை. முதன்முறையாக அதுவும் வீரியமாக நடக்கிறது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருத்தி ஜெயலெட்சுமி.

‘வீ வான்ட் யூனியன், பிரின்சிபல் ஆனியன்’ என்று அவள் உரத்து முழங்கும்போது மாணவர் களும் அதை எதிரொலித்தார்கள். கல்லூரி வாசலில் பந்தல் போட்டு மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். “தண்ணிக்குள்ள இருக்கிற வரைக்கும் பாஸ்பரஸின் சக்தி தெரியாது. வெளியில் வந்தால்தான் அதன் சக்தி, வீரியம், ஆற்றல் தெரியும். மாணவத் தோழர்களே வெளியில் வாருங்கள், எங்கள் குரல் உங்கள் குரல், உங்கள் உரிமைக்கான குரல்” என்று அவள் பேசிய பேச்சு வளாகத்திலிருந்து மாணவர்களைப் போராட்டப் பந்தலுக்கு அழைத்துவந்தது.

ண்ணாவிரதத்தைத் தாண்டிப் போராட்டம் வெவ்வேறு வடிவங்களை எடுத்தது. முதல்வர் அறைக்கு முன்பு கைதட்டும் போராட்டம், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்துக் கவியரங்கப் போராட்டம், கல்லூரிப் பெயர்ப்பலகையின் மீது மை பூசும் போராட்டம் என்று பல போராட்டங்கள். காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் மாணவர் தலைவர்களிடம் பல சமரசங்களை முன்வைத்தும் அவர்கள் எதையும் ஏற்கவில்லை.

போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக இரண்டு மாணவர்கள்மீது வழக்கு போடப்பட்டது. இதைக் கண்டித்து வாயைத் துணியால் மூடும் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தினாள் ஜெயா. மூக்கில் பாதியும் வாயும் துணியால் மூடப்பட்டிருக்க அவள் கண்களில் நெருப்பு பறந்தது. அப்போதுதான் அவளை அரவிந்தன் நண்பர்கள் ‘பொம்பளை சேகுவேரா’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

17 நாள்கள் தொடர்ந்த போராட்டம் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. கல்லூரி நிர்வாகமும் இறங்கவில்லை. மாணவர் அமைப்பும் தளரவில்லை.

“நிர்வாகத்துக்குக் காது கேட்கலைன்னுதான் முதல்வர் அறை முன்னாடி கைதட்டிப்பார்த்தோம். நாம பேசக்கூடாதுன்னு வாய்ப்பூட்டு போட்டதால வாய்மூடிப் போராட்டம் நடத்தினோம். ஐம்புலன்களில் அடுத்த புலன் கண். எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் கல்லூரி நிர்வாகத்தின் கண்கள் திறக்கலை. நாளை கண்களைக் கட்டிக்கிட்டு போராட்டம். தயாராய் இருங்கள் நண்பர்களே. நம் கண்கள் மூடட்டும், நீதியின் கண்களும் நிர்வாகத்தின் கண்களும் திறக்கட்டும்” என்று ஆவேசமாகப் பேசினாள் ஜெயா.

மறுநாள் முதல்வர் அறைக்கு முன்பு கண்களைக் கட்டி நடந்த போராட்டம் திடீரென்று முன்னேறியது. இழுத்து நெருக்கிக் கொண்டு முதல்வர் அறைக்குள் நுழைந்தார்கள். கையில் கிடைத்த பொருள்கள் நொறுக்கப்பட்டன. பொறுமை தகர்ந்தது. அலுவலகப் பணியாளர்கள் மிரண்டு ஓடினார்கள். எத்தனை பேர் கண்கட்டுடன் போராடினார்கள், எத்தனை பேர் அவிழ்த்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஜெயா கண்கட்டை அவிழ்க்கவில்லை.

குறுங்கதை
குறுங்கதை

“நீதியின் கோரிக்கை, நிர்வாகமே கேட்கிறதா?” என்ற அவள் முழக்கம் சுவர்களைச் சுற்றிச் சுற்றி வந்தது. அத்தனை இரைச்சல்களுக்கு இடையிலும் தனித்ததொரு நெருப்புத்துண்டாய் அவள் குரல் எரிந்தபடியே சுழன்றது. காவல்துறை உள்ளே புகுந்து அப்புறப்படுத்த ஆரம்பித்தது. ஜெயாவின் மீது படர்ந்த அழுத்தமான இரு கரங்கள் அவள் மார்புகளை அழுத்தின. சடாரென்று கண்கட்டை அவிழ்த்த ஜெயா, அந்த நடுத்தர வயது போலீஸ்காரரைச் சுவரோடு சாத்திவைத்து காறி உமிழ்ந்து கன்னத்தில் அறைந்தாள்.

ல்லூரி கால வரையறையின்றி மூடப்பட்டது. அத்துமீறிய போலீஸ்காரர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 40 நாள்களுக்குப் பிறகு கல்லூரி திறக்கப்பட்டது. போராட்டக்குழுவின் எட்டு கோரிக்கைகளைக் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. நான்கு கோரிக்கைகளைப் பரிசீலிக்கக் கால அவகாசம் கேட்டது. மாணவர்களுக்கான யூனியன் கிடைத்தது மிகப்பெரிய வெற்றி. ஜெயா கல்லூரி மாணவர் சங்கத்தின் துணைச்செயலாளர் ஆனாள்.

இதெல்லாம் ஆச்சர்யமில்லை. ஆனால் ஜெயா காதலிப்பாள் என்பதுதான் அரவிந்தன் போன்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பெண்களைக் காதலிப்பதற்கான அடிப்படை நளினம். அது ஒரு பொம்பளை சே குவேராவுக்கு எப்படி இருக்கும் என்பது அரவிந்தன் போன்றவர்களின் வாதம். ஜெயா காதலிக்கிறாள் என்றதுமே அது இயற்கைக்குப் புறம்பான எட்டாவது அதிசயமாகவே அவர்களுக்குத் தோன்றியது. அதுவும் தன்னைப்போலொரு ஆம்பளை சேகுவேராவைக் காதலித்தால் கூட அவர்களுக்கு வியப்பு இருந்திருக்காது. அவளைக் காதலித்த மாணவன் கெமிஸ்ட்ரி மூன்றாமாண்டு.

‘பழம்’, ‘சாம்பார்’ என்றெல்லாம் அழைக்கப் படுவதற்கான தகுதிகளில் 60 சதவிகிதமுள்ளவன். புரட்சியும் முரட்டுத்தனமும் பொருந்தாத சட்டைகள் அவனுக்கு. சிகரெட் குடிப்பது மட்டும்தான் அவனைக் கொஞ்சம் அந்நியமாக்கிக் காட்டியது. ஜெயாவைக் கெஞ்சிக் கூத்தாடித்தான் காதலுக்குச் சம்மதிக்க வைத்திருப்பான். ஜெயா தன் காதலை யாருக்கு பயந்தும் மறைக்கவில்லை. கல்லூரியில், பேருந்தில், கேன்டீனில், நூலகத்தில் என்று தைரியமாகத் தான் அவனுடன் பேசினாள்.

“இப்போ கொஞ்சம் அந்த சேகுவேராவுக்கு நளினம் வந்தமாதிரியிருக்குல்ல, எல்லாம் காதல் செய்யும் மாயம்” என்றான் அரவிந்தன்.

“அடப்போடா. அவ அப்படியேதான் இருக்கா. இவன்தான் அவகிட்ட குழையறான். அன்னைக்கு லேப் வாசலில் நின்னு பேசறப்போ கரப்பான்பூச்சி சந்துரு வந்துட்டார்னு அலறியடிச்சு ஓடுறான். அவ கரப்பான்பூச்சியையே பிள்ளைப்பூச்சி மாதிரி பார்த்துட்டு மெதுவாத்தான் நகர்ந்துபோனா” என்றான் பாஸ்கர்.

புதிய கல்வியாண்டின் தொடக்கம். பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்த ஜெயாவிடம் பிசிக்ஸ் முதலாமாண்டு மாணவி கௌசல்யா அழுது குமுறிக்கொண்டிருந்தாள். என்ன பிரச்னை என்று தெரியவில்லை. யாரும் ஜெயாவிடம் போய் அப்படிக் கேட்டுவிடவும் மாட்டார்கள். அவளைச் சமாதானப்படுத்தி பேருந்து ஏற்றிவிட்டாள் ஜெயா. எப்போதும்போல் இயல்பாகச் சிரித்தபடி காதலன் ஜெயா அருகில் வந்தான். திடீரென்று செருப்பைக் கழற்றி அவன் முகத்தில் அடிக்க ஆரம்பித்தாள். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

ராகிங் என்ற பெயரில் முதலாண்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறியிருக்கிறான் அவன் என்பது அதற்கப்புறம்தான் தெரிந்தது. அதற்காக ரோட்டில் வைத்து இப்படியா செருப்பாலடிப்பாள்? அவன் கல்லூரியிலிருந்து நின்றுவிட்டான். ஜெயாவும்தான். அன்றுதான் அவள் பெற்றோரை மாணவர்கள் பார்த்தார்கள். அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். பிள்ளைப்பூச்சியாய் இருந்தது தாய்ப்பூச்சி. போராட்டம் நிறுத்தாத ஜெயாவின் படிப்பை அந்தச் சம்பவம் நிறுத்தியது. அவள் வெளியூருக்கு அனுப்பப்பட்டாள் என்றும் கல்யாணமாகிவிட்டது என்றும் பல செய்திகள். அவனைப் பற்றியும் உறுதியான செய்திகள் இல்லை. அவன்தான் இப்போது தொலைக்காட்சியில் தவளை தண்டனைக்குட்பட்டிருக்கிறான்.

ன்றுடன் அவனை அரவிந்தன் மறந்துவிட்டான். ஆனால் இரண்டே நாள்களில் மீண்டும் அவனை நினைக்கும் சந்தர்ப்பம் வந்தது. இந்தமுறை ஜெயாவையே. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி ஒட்டுமொத்தச் சென்னையே நான்குநாள்களுக்கான பொருள்கள் வாங்கக் குவிந்த நாள் அது.

“ஏம்மா குழந்தையெல்லாமா இந்தக் கூட்டத்தில கூட்டிட்டுப்போவீங்க?” என்று மைக்கில் கேட்டார் ஜீப்பில் இருந்த போலீஸ்காரர். வரிசையாக இருசக்கர வண்டிகள் நிற்க, எட்டிப்பார்த்தான் அரவிந்தன். மூன்று வண்டிகளுக்கு முன்னால், சீட்டு கிழிந்திருந்த பைக்கில் முன்சீட்டில் தலைமுடி உதிர்ந்து மிச்சம் நரைத்தபடி ஒருவர் அமர்ந்திருக்க, பின்சீட்டில் ஒரு பெண் தன் குழந்தைக்கும் மாஸ்க் போட்டு அமர்ந்திருந்தாள். வண்டி கிளம்பும் தருணம், அந்தப் பெண் தன் பின்னாலிருந்த பைக்கைப் பார்த்தாள்.

முகம் மூடி கண்கள் மட்டும்தான் தெரிந்தன. பொம்பளை சேகுவேரா ஜெயலெட்சுமியின் கண்கள்தானே அவை? ஆனால் அந்தக் கண்களைப் போல இல்லை இவை.

- தும்பி பறக்கும்...