
குறுங்கதை
தனித்து விழும் காகத்தின் இறகைப்போல் ஒரு நிழல் வந்து வீட்டுக்குள் விழ, நிமிர்ந்து பார்த்தான் பிரசன்னா. ஒரு வயதான பாட்டி கையில் ஒரு கேரி பேக்குடன் வாசலில் நின்றுகொண்டிருந்தது.
“தண்ணி கொடு” - கேட்டதுடன், வாயருகில் கட்டைவிரல் வைத்து சைகை செய்தும் காட்டியது. உள்ளே போய் வாட்டர் கேனைத் திறந்தால் தண்ணீர் அடிமட்டத்தில் கிடந்தது. கேனைச் சாய்த்து செம்பில் தண்ணீரைக் கவிழ்த்து ஹாலுக்கு வந்தான். அந்தக் கிழவி ஹாலில் அமர்ந்து கேரிபேக்கைப் பிரித்திருந்தது. உள்ளே ஒரு பொட்டலத்தில் லெமன் சாதம். அருகில் சின்ன கேரிபேக்கில் சாம்பாரா, குருமாவா என்று தெரியவில்லை.
“யாருங்க நீங்க? இங்கே உக்காந்து சாப்பிடறீங்க?” என்றான் பிரசன்னா.
ஒருமுறை அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, சைகையால் தண்ணீர் என்றது. யார் இந்தக் கிழவி? தாடைக்குக் கீழே மாஸ்க் தொங்கியது. ஊர் முழுக்க கொரோனா பயம். யாரைப் பார்த்தாலும் எதைத் தொட்டாலும் சந்தேகம். பின்னால் இருக்கும் காவாய்க்கு அருகில் உள்ள நாதன் தெருவில் ரெண்டு பேருக்கு கொரோனா என்கிறார்கள். உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை. இந்தக் கிழவி யார், அதிகாரமாக உள்ளே நுழைந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது..

“ம்மா, யாரும்மா நீ? இங்கெல்லாம் உக்காரக்கூடாது” என்றான் பிரசன்னா. அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “சாப்பிடறியா?” என்றவாறு விரல்களைக் குவித்து சைகையாலும் கேட்டது. ‘இந்தக் கிழவிக்கு மூளை குழம்பிவிட்டதா, இல்லை திமிரா, யார் இந்தக் கிழவி’ என்று பிரசன்னா திகைத்து நிற்கும்போதே பின்னால் புவனாவின் குரல் கேட்டது, “யாருங்க” என்றவாறே வந்தவள் அந்தக் கிழவியைப் பார்த்து அதிர்ந்து நின்றாள். ஆனால் அந்தக் கிழவியிடம் எந்த உணர்ச்சிகளும் இல்லை. இரண்டாவது கவளம் இறங்கியது.
“யாரும்மா நீ, எந்திரி, எப்படி வந்தே?” என்ற புவனாவின் குரலுக்குத்தான் முகம் சுருங்கியது கிழவி.
“எம் பையன் எங்கே?” என்றது.
“உம் பையனா, இங்கே கேக்கிறே? யாரு நீ?” என்றாள் புவனா உரக்க.
“ஹவுஸ் ஓனர் வெளியே போயிருக்காரு. வந்திடுவாரு. சாப்பிட்டியா?” என்றபடி மீண்டும் விரல்களைக் குவித்து சைகை காட்டியது.
ஏதோ மூளை குழம்பிய கிழவி, வழி தவறி இங்கே வந்துவிட்டது என்பது புரிந்தது பிரசன்னாவுக்கு.
“நடிக்குது. இப்படித்தான் உள்ளே நுழைஞ்சு திருடிட்டுப் போயிடுங்க. ஊர் முழுக்க கொரோனா பயமா இருக்கு. லீவுக்கு ஊருக்குக் கூட போக முடியலை. யாரையும் வீட்டுக்குள்ள விடலை. நீங்க இந்தக் கிழவியை உக்கார வெச்சு வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கீங்க?” என்றாள் புவனா.
பிரசன்னா கிழவியின் அருகில் இருந்த கேரிபேக்கைத் தூக்கினான். கிழவி நிமிர்ந்து பார்த்தது.
“ஒரு நிமிஷம் கீழே வாங்க” என்றான். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதைப் போல் கிழவி பின்னாலேயே வந்தது. அப்பார்ட்மென்ட் கேட்டைத் திறந்தான். கிழவி வெளியே போய்விட்டது.
20 நிமிடங்கள் இருக்கும். காலிங்பெல் அடித்தது. திறந்தால் கேசவன் நின்றிருந்தார். பக்கத்து ஃப்ளாட். மருந்துக்கடை வைத்திருக்கிறார்.
“என்ன கீழே ஒரு கிழவி உக்காந்திருக்கு?”
பிரசன்னா நடந்த விஷயத்தைச் சொன்னான். இருவரும் கீழே இறங்கிப்போனார்கள். பார்க்கிங் அருகில் பெயின்ட் டப்பாக்கள், மரக்கட்டைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அந்தக் கிழவி அமர்ந்திருந்தது. சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பத்திரமாக உள்ளே வைத்துவிட்டு, அமர்ந்திருந்தது.
“பாட்டி, யார் நீங்க?” என்று நிதானமாக விசாரிக்க ஆரம்பித்தார் கேசவன்.
“நீ யாரு?” என்றது கிழவி.
“உங்க வீடு எங்கேம்மா இருக்கு?” என்றார் கேசவன்.
“இங்கேதான்” என்றபடி மேலே கையைக் காட்டியது. “ஹவுஸ் ஓனர் வந்திடுவாரு” என்றது.
“இது உன் வீடு இல்லை. வழி தவறி வந்திருக்கே. உன் பேரு என்ன?”
“சாந்தா”
“உனக்கு மகன், மகள் யாரும் இருக்காங்களா?”
“அதான் குமார் இருக்கான்ல?”
“குமார் யாரு, உம் பையனா, போன் நம்பர் வெச்சிருக்கியா?”
“உம் போன்ல குமார்னு போடு, பேசுவான்” என்றது பாட்டி.
அரைமணி நேரத்துக்கும் மேல் போராடிப் பார்த்தார்கள் கேசவனும் பிரசன்னாவும். “வீடு மேலே இருக்கு”, “குமாருக்கு போன் பண்ணு”, “ஹவுஸ் ஓனர் வெளியில போயிருக்காரு” என்பதையே மீண்டும் மீண்டும் சொன்னது கிழவி.
“உன் சொந்த ஊரு என்னம்மா?”
“திருக்கழுக்குன்றம்”
“இங்கே எப்படி வந்தே?”
“பஸ்ல வந்து ஆட்டோவில வந்தேன்.”
“இப்போ ஏது சார் ஆட்டோ, எல்லாம்தான் தடை பண்ணிட்டாங்களே?”
“ஆமா உனக்கு மாஸ்க் யாரு கொடுத்தது?”
“அங்கேதான் கொடுத்தாங்க.”
“சாப்பாடு வெச்சிருக்கியே, அது எங்கே கொடுத்தாங்க?”
“அது எங்கே கொடுப்பாங்க, அங்கேதான் கொடுப்பாங்க. நீ குமார்கிட்ட கேளு” என்றது கிழவி.

“சரி உம் பையன் குமார் என்ன பண்றான்?”
“நாதசுரம்” என்றது.
நேரம் ஆகிக்கொண்டிருந்ததே தவிர பாட்டியிடமிருந்து ஒரு தகவலையும் பெற முடியவில்லை. அதற்குள் அப்பார்ட்மென்டில் இருந்த மற்றவர்கள், எதிர் வீட்டில் இருந்தவர்கள் என்று சிறுகூட்டம் கூடியது.
“போலீஸுக்கு போன் பண்ண வேண்டியதுதான் சார்” என்றார் சாலமன்.
கேசவன்தான் போன் பண்ணினார். இரண்டு மூன்று போலீஸ் ஸ்டேஷன்களின் எண்கள் தரப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு, “உங்களைக் கூப்பிடுவாங்க சார்” என்றார்கள். பத்து நிமிடத்துக்குப் பிறகு ஒரு போலீஸ்காரர் கூப்பிட்டார். ட்ரூ காலர் ஐடி துரைசிங்கம் என்று காட்டியது. விஷயத்தைச் சொன்னதும் “வெயிட் பண்ணுங்க சார். பேட்ரோல் வண்டியை அனுப்புறேன்” என்றார்.
பெங்களூரில் இருந்த குமரவேலுக்கு சென்னையில் இருந்து போன் வந்திருந்தது. ஹவுஸ் ஓனர்தான் பேசினார்.
“தம்பி, வழக்கம்போல அம்மாவைக் காணோம்.”
“என்ன அங்கிள் சொல்றீங்க? தேடிப் பார்த்தீங்களா?”
“எங்கே தம்பி தேடறது, வெளியில போனாலே போலீஸ் துரத்துறாங்க. முடிஞ்சவரைக்கும் தேடினோம்.”
“என்ன பண்றதுன்னு தெரியலையே அங்கிள். பெங்களூரில இருந்து கிளம்பி உடனே வர முடியாதே. என்ன நிலைமைன்னுதான் உங்களுக்குத் தெரியுமே.”
“தெரியும் தம்பி. எனக்கும் என்ன செய்றதுன்னு தெரியலை. உங்களுக்குத் தகவல் சொல்லணும்ல, அதான் போன் பண்ணினேன். நைட்டு வரைக்கும் பார்க்கிறேன் தம்பி. பார்த்துட்டு நைட் கூப்பிடறேன்” என்றபடி போனை வைத்துவிட்டார்.
வருகிறேன் என்று சொன்ன துரைசிங்கம் வருவதாகத் தெரியவில்லை. இரண்டுமுறை தொடர்பு கொண்டாயிற்று.
“ஏதாவது காசு வர்றமாதிரி இருந்தா வருவான், இந்தக் கிழவி விவகாரத்தில எதுவும் தேறாதுல்ல?” என்றார் பாலன், எதிர் வீட்டுக்காரர்.
மூன்றாவதுமுறை துரைசிங்கத்தைத் தொடர்புகொண்டபோது, “நீங்களே அனுப்ப முடியலையா?” என்றார்.
“இல்லையே சார். அந்தக் கிழவி போக மாட்டேங்குது. விவரமும் சொல்லத் தெரியலை. திருக்கழுக்குன்றம்கிது. நாதஸ்வரம்ங்குது.”
“டிரைவர் இல்லை. அதான் பேட்ரோல் வண்டி எடுத்துட்டு வர முடியலை. இருங்க டூ வீலர் எடுத்துட்டு வர்றேன்” என்றார். அப்படியும் அரைமணி நேரம் கழித்துத்தான் துரைசிங்கம் வந்து சேர்ந்தார். போலீஸ்காரர் வந்தவுடன் கூடியிருந்த கூட்டம் விலகி சமூக இடைவெளி விட்டு நின்றது.
“என்ன பாட்டி, சாப்பிட்டியா?” என்றார்.
“இல்லையே” என்றது கிழவி.
“சாப்பாடு எங்கே வெச்சிருக்கே, எடுத்துட்டு வா” என்றதும் பெயின்ட் டப்பாவுக்குள் வைத்திருந்த சாப்பாட்டை எடுத்துவந்தது.
“சரி சாப்பிடு. கொஞ்சம் தண்ணி கொடுங்க” என்று போலீஸ்காரர் சொன்னதும் மேல் ஃபிளாட்டில் இருந்து தண்ணீர் வந்தது.
பொட்டலத்தைப் பிரித்து லெமன் சாதத்தைச் சாப்பிடத் தொடங்கியது.
“எங்கே வாங்கினே, நல்லாருக்கான்னு பாரு, கெட்டு கிட்டுப்போயிருக்கப்போகுது. நல்லாருக்குல்ல?” என்றார் போலீஸ்காரர்.
தலையாட்டியபடி ‘சாப்பிடறியா?’ என்று விரல்களைக் குவித்துக்காட்டியது.
“நான் சாப்பிட்டேன். ஊறுகாய் ஏதும் இருந்தா அதுக்குக் கொடுங்க” என்றார் துரைசிங்கம். ஊறுகாய் வந்து சேர்ந்தது. அலங்கரிக்கப்படாத கிராமத்து அம்மன் சிலையைப்போல கிழவி நிதானமாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கியது.
“இந்தக் கிழவிக்கு இதே பொழப்பாப் போச்சு. இதோட அஞ்சாவது தடவை. எங்கே போய்த் தேடறது?” என்று அலுத்துக்கொண்டார் ஹவுஸ் ஓனர்.
“இந்த டூ இயர்ஸாத்தான்பா இப்படி.”
“ஒருவகையில பாவம்தான்டா சாந்தா. புருஷன் அருணாசலம் நாதஸ்வரம் வாசிக்கிறவர். கோயிலில் அவர் வாசிப்பில மயங்கித்தான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணுச்சு. அந்தப் பொழப்பு எவ்ளோ நாளைக்கு. கடைசியில வருமானம் இல்லாம, வாசிக்கவும் முடியாம குடிச்சே செத்தான் அருணாசலம். ஒரே பையன். கஷ்டப்பட்டு வளர்த்துப் படிக்கவெச்சு, கல்யாணமும் பண்ணிக்கொடுத்துடுச்சு. அவனும் பெங்களூருக்குக் கூப்பிட்டான். போய் ஒழுங்கா இல்லையே. நமக்குக் காசு அனுப்பித்தான் பார்க்கச் சொன்னான். எவ்ளோதான் பார்க்கிறது. திடீர் திடீர்னு நினைவு தப்பிடுது. சம்பந்தம் இல்லாமப் பேச ஆரம்பிச்சிடுது.”
“இந்தக் கிழவியைப் பாரேன். நிதானமா சாப்பிடுது. போலீஸ்னு எந்த பயமும் இல்லை” என்று பிரசன்னாவிடம் கிசுகிசுத்தாள் புவனா.
“சாப்பிட்டியா, வா போலாம்” என்றார் துரைசிங்கம்.
“எங்கே?”
“ஹவுஸ் ஓனர், நாகாத்தம்மன் கோயில்கிட்ட நின்னுக் கிட்டிருக்கார். உன்னைக் கூட்டிட்டு வரச் சொன்னார். இப்பதான் குமார் போன் பண்ணாரு.”
“குமாரு போன் பண்ணானா? கச்சேரியெல்லாம் முடிஞ்சதா?”
“முடிஞ்சுச்சாம். உனக்கு ஏதோ வாங்கிட்டு வந்திருக்கான். வா போலாம்.”

சாப்பாட்டுப் பொட்டலம், குருமா கேரி பேக்கை யெல்லாம் ஒரு பெரிய கேரி பேக்கில் போட்டு முடிச்சுட்டுக்கொண்டது. “நீ சாப்பிடலை?” என்றது துரைசிங்கத்தைப் பார்த்து.
சாப்பிட்டாச்சு என்று சைகை செய்து போலீஸ்காரர் கேட்டைத் திறக்கவும், கேரி பேக்குடன் வெளியில் வந்தது.“நீ போய்க்கிட்டே இரு. தோ வந்துட்டேன்” என்றார் துரைசிங்கம். நடக்க ஆரம்பித்து ஆறு வீடுகள் போனதும் மீண்டும் வந்த வழியிலேயே திரும்பி வந்தது கிழவி.
“நாந்தான் உன்னைப் போகச் சொன்னேன்ல, போய்க்கிட்டேயிரு, தோ வந்துட்டேன்” என்றார் துரைசிங்கம்.
“சார் நீங்க அந்தாண்டை போகவும் திருப்பி வந்துடப்போகுது” என்றான் பிரசன்னா.
“அதெல்லாம் வராது. முக்கு போய்த் திரும்பினா வந்த வழி மறந்துடும்” என்றார் துரைசிங்கம்.
வெயில் உச்சிமண்டையில் கீறியது. சேலைத் தலைப்பால் முக்காடு போட்டபடி நடந்துகொண்டிருந்தது கிழவி. எங்கிருந்தோ நாகஸ்வர இசை கேட்டது. சுற்றிலும் அமைதி. வாகன ஓசையில்லை. கடைகள் சாத்தப் பட்டிருந்தன. குழந்தைகள் விளையாடவில்லை. காகங்களைக்கூடக் காணவில்லை. நிழல் தேடி ஒதுங்கிய நாயைத் தவிர அமைதியில் மிதந்தது நகரம் என்பதால் நாகஸ்வர இசை துல்லியமாகக் கேட்டது. கொஞ்சம் விரைவாக எட்டுப் போட்டு நடந்தது கிழவி. எப்படியும் அந்த இசையைப் பிடித்துவிட வேண்டும். மெயின்ரோட்டைப் பிடித்து நடந்தபோது ஒரு சிறுகோயில் வந்தது. அங்கிருந்துதான் நாகஸ்வர இசை வருகிறது. நெருங்க நெருங்க ஓசை அதிகமானது. கோயில் பூட்டியிருந்தது. தூசி படர்ந்திருந்தது. சுற்றும் முற்றும் பார்த்த கிழவி, கேரிபேக்கைக் கதவின் வழியாகத் தூக்கிப் போட்டது. சாப்பாட்டுப் பொட்டலம் அம்மன் சிலை அருகில் போய் விழுந்தது. விரல்களைக் குவித்து அம்மன் சிலையிடம் சைகை காட்டியபிறகு, தரையில் படுத்தபடி கண்களை மூடிக்கொண்டது கிழவி. நாகஸ்வர இசை கண்களின் வழியாக இறங்கியது. இப்போது ரத்த ஓட்டம் தெளிவாகத் தெரிந்தது. நாகஸ்வரம் ரத்தத்துக்குள் இறங்கியிருந்தது. இன்னும் சிறிதுநேரம் அந்த இசை கேட்டுக்கொண்டுதானிருக்கும்.
- தும்பி பறக்கும்...