கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 33: ஒளிச்சேர்க்கை

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

குறுங்கதை

“எம்.எஸ்ஸைப் பார்க்கவே பாவமாய் இருக்குடா. எதைக் கேட்டாலும் பச்சக்குழந்தை மாதிரி முழிக்கிறார்” என்றான் அமெரிக்காவிலிருந்து வந்த சாரதி.

ஆச்சர்யமாக இருந்தது பார்த்திபனுக்கு. வெளிநாட்டிலிருந்து வந்தவனுக்குத் தெரிந்த விவரம் தனக்குத் தெரியவில்லையே என்ற ஆதங்கமும் வந்தது.

“வீட்டுக்குப் போய்ப் பார்த்தியாடா?”

“ஆமாடா. நம்ம செல்வா இல்லை, அவன் ஃபேஸ்புக்ல இதைப்பத்தி போட்டோவோடு எழுதியிருந்தானே, நீ பார்க்கலை?”

இல்லை. அவனது ஃபேஸ்புக் இயக்கம் என்பது பேருக்குத்தான். நேரத்தை விழுங்கும் வெட்டிவேலை என்பது பார்த்திபனின் கருத்து. இப்போது யோசிக்கையில் கொஞ்சம் ஆக்டிவாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. கண்களை மூடி யோசித்தான். ஹேங்கரில் தொங்கிய சட்டை காற்றிலாடி, அவன் கைகளைப் பற்றியது.

பொதுவாக ஆசிரியர்கள் இருவகை. சார்லி சாப்ளின் மற்றும் ஹிட்லர். ஸ்ட்ரிக்ட் என்ற பெயரில் கொஞ்சம்கூடக் காற்றுப்புக முடியாத குடுவை உடலுடன் அலையும் ஆசிரியர்களைக் கண்டாலே மாணவர்களுக்குக் கண்களில் ரத்தம் வழிய வேண்டும். தொடையைக் கிள்ளி ரத்தம் வரவழைப்பது, கைமுட்டிகளில் ஸ்கேலால் அடிப்பது, காதைத் திருகி உயிர்வலி வரவழைப்பது, முதுகுத்தோலை உரித்து உப்புக்கண்டம் போடுவது என்று விதவிதமான தண்டனை முறைகள்தான் ஹிட்லர் ஆசிரியர்களின் இலக்கணங்கள். என்கவுன்டர் ஸ்பெஷ லிஸ்டாகப் போக வேண்டியவர்கள் ஆசிரியர்களாகக் கடமையேற்றி ருப்பார்கள்.

சார்லி சாப்ளின் ஆசிரியர்களைத்தான் மாணவர்களுக்குப் பிடிக்கும். வகுப்பில் சிரிக்க சிரிக்கப் பேசுவார்கள். சமயங்களில் ஜோக்ஸ் அடிப்பார்கள். ஓய்வுநேரங்களில் மாணவர்களுடன் விளையாடுவார்கள். புது ரிலீஸ் படங்கள் குறித்தும் அழகான ஆசிரியைகள் குறித்தும் விசாரிப்பார்கள். பதின்பருவத்து இளைஞர்களுக்கு எப்போதும் வீட்டுடன் ஒரு முறுகல்நிலை முரணிருக்கும். அவர்களுக்கு இந்த சார்லி ஆசிரியர்கள் தேவதைகள்; வழித்துணைத் தெய்வங்கள். காதலையும் சிகரெட்டையும் பகிர்ந்துகொள்ளும் அளவுக்குத் தோழமை நெருக்கம் காட்டுவார்கள். ஆனால் சார்லி சாப்ளினுக்கும் ஹிட்லருக்கும் ஒரே மீசைதான் என்கிற உண்மையும் சமயங்களில் வெளிப்படத்தான் செய்யும்.

குறுங்கதை
குறுங்கதை

எம்.எஸ் என்றழைக்கப்படும் எம்.சுந்தர மூர்த்தி மூன்றாவது வகை. கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களும் ஆசிரியர்களும்தான் இப்படிச் சுருக் கெழுத்துப் பெயர்களில் அழைக்கப் படுவார்கள். சுந்தரமூர்த்தி சாருக்கு சயின்ஸ் என்றால் அவ்வளவு உயிர். அவர் சார்லி சாப்ளின் ஆசிரியர் களைப்போல் சிரிக்க சிரிக்க இரட்டை அர்த்த வசனங்கள், புதுப்படப் பெயர் களுடன் பாடம் நடத்த மாட்டார்தான். ஆனால் அறிவியலை அவ்வளவு எளிமையாக விளக்குவார். அவர் சொல்லும் உதாரணங்கள் முப்பதாண்டுக் காலம் பழைமை வாய்ந்தவை என்றாலும் சுவாரஸ்யமானவை. கொள்ளிவாய்ப் பிசாசுக்கும் பாஸ்பின் வாயுவுக்கும் உள்ள ஒற்றுமையை அவரது வார்த்தைகளில் கேட்பது சுகம்.

ஆனால் அவர் மாணவர்களிடம் தோழமை பாராட்டும் ஆசிரியர் அல்லர்; கண்டிப்பானவர் என்றே சொல்ல வேண்டும். தவறு நடந்தால் பாஸ்பரஸாய்ப் பொங்கிவிடுவார். இனப்பெருக்க உறுப்புகள் குறித்து அவர் பாடம் நடத்தும்போது வாய் திறந்து சிரித்துவிட முடியாது. மூலக்கூறுகளின் இயக்கம் குறித்துச் சொல்லும்போது “ஜோடி ஜோடியாப்போகுது” என்று அவர் கையசைவுடன் சொல்வது சிரிப்பை வரவழைக்கும். ஆனால் ரகசியமாய்த்தான் கண்களால் சிரிக்க வேண்டும்.

அவர் டியூஷன் நடத்தினார் என்றாலும் யாரையும் கட்டாயப்படுத்தி அதில் சேர்த்ததில்லை. பல ஆசிரியர்களுக்கு டியூஷன்தான் முதல் நோக்கம். வகுப்பறை என்பது விருப்பமற்று வந்துவிட்டுப் போகுமிடம். சமயங்களில் அவர்கள் சுவாரஸ்யமில்லாமல் யாருக்கும் புரியாமல் பாடம் நடத்துவதே டியூஷன் வரவழைப்பதற்கான தந்திரம்தான் என்று தெளிவு பிறந்தபோது புரிந்தது. வகுப்பறையில் ஹிட்லர் முகம் காட்டும் ஆசிரியர்கள் டியூஷனுக்கு அவர்கள் வீட்டுக்குப் போகும்போது சாப்ளின் முகம் காட்டுவார்கள். ஆனால்

எம்.எஸ்ஸுக்கு எல்லா விடங்களிலும் ஒரே முகம்தான்.

அவருக்கு அறிவியல்மீதுள்ள ஆர்வத்தை அவரது வீடே சொல்லும். மாடியில் வீடு. கீழிருந்து காலிங்பெல்லை அழுத்தினால், மாடியில் அவரே உருவாக்கிய மின் திரையில், யார் வந்திருக்கிறார்கள் என்று காட்டும். பிறகு அவர் பொத்தானை அழுத்தினால் கதவு திறக்கும். அவரே செய்த வாட்டர் பியூரிபையர், விதவிதமான பிம்பங்கள் காட்டும் கண்ணாடிகள், வண்ண வண்ண நீரூற்றுகள் பொங்கும் பெட்டி என்று வீடு முழுக்க எம்.எஸ்ஸின் கைவண்ணம்தான். அதை வேடிக்கை பார்ப்பதில் மாணவர்களுக்கு ஆர்வம்.

ஒருநாள் பார்த்திபன் மயிரிழையில் தப்பிய நாள். யாரோ ஒரு மாணவன் வகுப்பறையில் பட்டாசு வைத்துவிட்டான். வகுப்பறையே அதிர்ந்தது. 9-பி மாணவர்கள் அனைவரையும் தலைமையாசிரியர் அறையில் முழங்காலிட வைத்திருந்தார்கள். தலைமையாசிரியருக்கும் உதவித்தலைமையாசிரியருக்கும் இடையில் பனிப்போர் நடந்தது. ‘நியாயமாக நானிருக்க வேண்டிய இடத்தில் இவனிருக்கிறான்’ என்பது உதவித் தலைமையாசிரியரின் வாதம். ஆசிரியர்களும் இருதரப்பாகப் பிரிந்து நின்றார்கள்.

அறைக்குள் நுழைந்த தலைமையாசிரியர் எப்போதும் கையில் வைத்திருக்கும் டவலால் முகத்தை முழுவதுமாகத் துடைத்தார். பிறகு மணியை அழுத்தி அலுவலக உதவியாளரை அழைத்துக் கண்களால் சைகை காட்டினார். ஒரு நீண்ட பிரம்பு வந்து சேர்ந்தது. போர்க்களத்தில் நுழைந்த மதயானையின் ஆவேசத்துடன் மண்டியிட்ட அனைவரையும் வெளுத்துத் தாக்கினார். களைப்படைந்தவர் மீண்டும் முகம் முழுவதும் டவலால் துடைத்து இரண்டாம் சுற்றுத் தாக்குதலைத் தொடங்கினார்.

வாட்டர் பாட்டிலை எடுத்து முக்கால் பாட்டிலைக் காலிசெய்து மளமளவென்று குடித்தார். ஏறியிறங்கும் அவர் தொண்டைக் குழியை மாணவர்கள் அச்சத்துடன் நோக்கினர். மறுபடி மணியை அழுத்த, அலுவலக உதவி யாளர்கள் கையில் துண்டுக்காகிதக் கற்றையுடன் நுழைந்தார்.

“யாரு இந்தக் காரியத்தைச் செஞ்சாங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும். ஆளுக்கு ஒரு துண்டுச்சீட்டில யார் செஞ்சாங்கன்னு எழுதித்தாங்க.”

இருபது நிமிடங்கள் அந்த அறை முழுவதும் விஷவாயுவைப்போல அமைதி சூழ்ந்தது. பிறகு துண்டுச்சீட்டுகளைச் சேகரித்தவர், பார்த்துக் கொண்டே வந்தவர், “பார்த்திபன் யாரு?” என்றார். இரண்டு பார்த்திபன்கள் எழுந்து நின்றார்கள். அவர் ஏதோ சொல்ல வாயெடுக்கும்போது அலுவலக உதவியாளர் அருகில் வந்து தமிழாசிரியர் துரைசாமி இறந்ததைச் சொன்னார். எந்தப் பார்த்திபன் என்று தெரியாமலே அந்தத் தண்டனைப்படலம் முடிந்துபோனது.

செல்லப்பிள்ளை என்றெல்லாம் எம்.எஸ் விஷயத்தில் சொல்ல முடியாது. ஆனால் அவர் பாடம் நடத்தும்போது பார்த்திபன்தான் எப்போதும் பாடப்புத்தகத்தைப் படிப்பது வழக்கம். அவன் படிக்கப் படிக்க, அவர் விளக்கம் தருவார். ஒருநாள் அவர் அமர்ந்து விளக்கிக்கொண்டிருந்தார். நன்றாக ஞாபக மிருக்கிறது, சிவப்புச்சட்டையில் வெள்ளைக் கட்டங்கள் போட்ட சட்டை. பார்த்திபன் விளையாட்டுத்தனமாக அவர் பின்னாலிருந்து, புத்தகத்தில் மறைத்த பேனாவால் அவர் சட்டையில் மையடித்தான். அதைக் கண்டுகொண்ட மாணவர்கள் ரகசியமாய்ச் சிரித்தபடி அதை வரவேற்றனர். உற்சாகத்தால் அவன் மையடித்துக்கொண்டேயிருந்தான்.

றுநாள் அந்தச் சட்டையுடன் அவர் வகுப்பறைக்குள் நுழைந்தபோது பார்த்திபனின் மேல் ஒரு மலைப்பாம்பு விழுந்து அழுத்தியதைப்போலிருந்தது.

“யார் என் சட்டையில மையடிச்சது?” என்றார்.

வகுப்பறை முழுதும் அமைதி. இரண்டு நிமிடங்களில் எம்.எஸ் சென்றுவிட்டார். எல்லோரையும் தலைமையாசிரியர் அறைக்குள் வரச்சொல்லி உத்தரவு வந்தது. மீண்டும் முழந்தாள்களில் நின்றார்கள். தலைமையாசிரியர் விடுமுறை. கிளார்க் வின்சென்ட் துண்டுச்சீட்டுகளை விநியோகித்தார். இந்தமுறை மிகச்சரியாக ‘கே.பார்த்திபன்’ என்று எழுதப்பட்ட துண்டுச்சீட்டு வந்தது. கே.பார்த்திபனைத் தவிர மற்றவர்கள் அனுப்பப்பட்டனர்.

தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்த எம்.எஸ், “நீயா பண்ணினே... ஏன் பண்ணினே?” என்றார்.

பார்த்திபனின் கண்களில் நீர் திரண்டது.

“இந்தா, இதை நாளைக்குத் துவைச்சு வந்து கொடு” என்று கைகளில் சட்டையைத் திணித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

பார்த்திபனும் ராஜுவும்தான் ஆலமரக்குளத்தில் சென்று துவைத்துவந்தார்கள்.

றுநாள் வகுப்பறைக்குள் நுழைந்த உதவித்தலைமையாசிரியர் பார்த்திபனைப் பிரம்பால் சரமாரியாக அடித்தார்.

“எவ்ளோ திமிர் இருந்தா வாத்தியார் சட்டைமேல மையடிப்பே?” என்றபோது அவர் கண்களில் நெருப்பு பறந்தது.

தொய்ந்துபோய் பார்த்திபன் அமர்ந்தபோது அடுத்த பாடவேளைக்கு எம்.எஸ் நுழைந்தார். அனைவரும் எழுந்துநின்றார்கள். கண்களைத் தாழ்த்தியபடி பார்த்திபனும் நின்றான். நேராகப் பார்த்திபன் அருகே வந்தவர், புத்தகத்தை அவன் கைகளில் திணித்து. “படி” என்றார் எம்.எஸ்.

வீடு மாறியிருந்தார். சாரதியிடம் விசாரித்துப்போனபோது “மாடி வீடு” என்று அடையாளம் காட்டினார், கீழே சட்டை அணியாமல் தண்ணீர்க் குடத்தைத் தூக்கிச்சென்றவர். கதவைத் திறக்க பொத்தான்கள் ஏதுமில்லை. கட்டிலில் அமர்ந் திருந்த எம்.எஸ்ஸிடம் எந்தச் சலனமும் இல்லை. வயதான ஒரு அம்மா, தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, சிறிதுநேரத்தில் பார்த்திபனுக்குத் தேநீர் கொண்டுவந்து கொடுத்தது.

குறுங்கதை
குறுங்கதை

“ஒரே பையன். கல்யாணத்துக்குப் பத்திரிகை கொடுக்கிறதுக்காக அம்மாவும் பையனும் திருச்சிக்கு கார்ல போனாங்க. ஆக்ஸிடென்ட். அங்கேயே இறந்துட்டாங்க. மூணு மாசத்தில இவர் இப்படி ஆகிட்டார்” என்றது அந்தம்மா.

பலநாள் அழுக்குச்சட்டையுடன் நரைத்த தாடியுடன், நோய் வாய்ப்பட்ட கிழட்டுச் சிங்கத்தைப் போல் அமர்ந்திருந்தார் எம்.எஸ். மெல்ல அவர் சட்டையைக் கழற்றினான் பார்த்திபன்.

“சட்டையைத் துவைங்க. ரொம்ப அழுக்காயிருக்கு பாருங்க” என்றான் பார்த்திபன்.

“அவர் எங்கே போகப்போறாரு, வீட்டுக்குள்ளே யேதானே இருக்காரு?” என்றது அந்தம்மா.

“நான் வேணும்னா துவைக்கட்டுமா?” என்ற பார்த்திபனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சட்டையை வாங்கியபடி உள்ளே சென்றது அந்தம்மா.

தன் லேப்டாப் பேக்கைத் திறந்து அதை ஆர்வமாக எடுத்து மேஜைமீது வைத்தான்.

“சார், என் பையன் ஸ்கூல் சயின்ஸ் எக்ஸ்பிஷனுக்காகச் செஞ்சது, பாருங்க” என்றபடி கைகளைத் தட்டினான் பார்த்திபன். விளக்கு எரிந்தது.

எம்.எஸ் கண்களில் ஆர்வத்தின் வெளிச்சம். அவனைப் பார்த்தபடி சிறிதாய்ப் புன்னகைத்தார். மெல்ல எழுந்து மேஜையின் அருகில் வந்தவர், கைகளைத் தட்டினார்.

- தும்பி பறக்கும்...