Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 34: நழுவும் இசை

குறுங்கதை
பிரீமியம் ஸ்டோரி
News
குறுங்கதை

குறுங்கதை

வண்டியை ஸ்டார்ட் செய்து மாதவன் தெருமுனையைத் தாண்டியதும் உள்ளிருந்து பாட்டு தொடங்கியது. இது அவனது அன்றாடப் பழக்கம். வண்டியோட்டிக்கொண்டே ஆறு பாடல்களைத் தனக்குள் பாடி முடிக்கும்போது அலுவலகம் வந்துவிடும். வண்டியோட்டும் கவனமும் பாடலின் பயணமும் ஒன்றுக்கொன்று சந்திக்காத தனித்தனி இரு பாதைகள்.

அன்றும் அப்படித்தான் மூன்றாவது பாடல் முடிந்து நான்காவது பாடல் என்ன பாடலாம் என்று யோசித்தபோது காலையில் தொலைக்காட்சியில் கேட்ட பாடல், முன்னே வந்து நின்றது.

‘நீங்க முடியுமா...

நினைவு தூங்குமா...

காலம் மாறுமா...

காயம் ஆறுமா..?

வானை நீங்கும் மேகமா

வாழ்வில் உனக்குச் சோகமா...?’

என்று பாடிக்கொண்டிருக்கும்போதே, ‘இதுவும் வண்டியோட்டும்போது பாடப்படும் பாடல்தானே?’ என்ற நினைவு வந்தது மாதவனுக்கு. இது மூன்றாவது பாதை. ‘சின்னதம்பி’ படத்தில் கவுண்டமணி கண்களை மூடிக்கொண்டு வண்டியோட்டும் மீமை, ‘சைக்கோ’ பட நாயகன் உதயநிதியே பகிர்ந்திருந்தது நினைவில் வர, தனக்குள் சிரித்துக்கொண்டான். திடீரென்று இரண்டாவது சரணத்தில் வார்த்தைகள் சிக்கின. அடுத்த வரி என்ன என்று நினைவில் வர மறுக்க, முதல் வரிகளை மீண்டும் மீண்டும் பாடிப் பார்த்தான்.

‘மூன்று காலில் காதல் தேடி நடந்துபோகிறேன்

இரண்டு இரவு இருந்தபோதும் நிலவைக்கேட்கிறேன்’

இதற்கடுத்த வரிகள்தான் புதைந்துபோய் மேலே எழும்ப மறுத்தன.

‘நீ தெய்வம் தேடும் சிலையோ...

உன்னை மீட்க என்ன விலையோ?’ - இந்த வரிகள்தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தன. இதற்கு முன்னால் இருக்கும் இரண்டு வரிகள் நினைவுக்கு வரவில்லை. நான்காவது முறையாக அவன் முயலும்போது பின்னால் வந்த கூரியர் வேன் ஒன்று அவன் பைக்கில் மோதித் தூக்கி வீசியதையும் ரத்தத்தில் நனைந்து அவன் தெருவில் கிடந்ததையும் மாதவன் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஒரு பெருங்கூட்டம் தன்னைச் சுற்றிச் சூழ்வதையும், பதற்றமும் ஆர்வமும் நிறைந்த குரல்கள் மேலே அழுத்த, தான் மூழ்கிக்கொண்டிருந்ததையும் அவன் உணர்ந்தபோதும் ‘அந்த வரிகள் என்ன?’ என்ற கேள்வி அவனிடம் இருந்துகொண்டே இருந்தது.

குறுங்கதை
குறுங்கதை

நினைவு தெரிந்த நாளில் இருந்தே மாதவனுக்குள் இந்தப் பழக்கம் உருவாகிவிட்டது என்று சொல்லலாம். ஒரு பாடலைக் கேட்டுப் பிடித்துவிட்டால் மீண்டும் அந்தப் பாடலைப் பாடிப்பார்க்கும் ஆர்வம். சிறுவயதில் பாட்டுப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து மனப்பாடம் செய்துகொள்வது வழக்கமாக இருந்தது. சில பாடல்கள் கேட்கும்போது ராகமாக இருக்கும். பாட்டுப்புத்தகத்தில் படிக்கும்போது வெறும் வரிகளாக இருக்கும். ராகம் போட்டுப் பாட வராது. மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்டு பாட்டுப் புத்தகத்தைப் படித்து ராகத்துக்குள் பொருத்திவிடுவான். இப்போதெல்லாம் ‘லிரிக்ஸ் வீடியோ’ பார்த்துப் பாடல் வரிகளை மனனம் செய்தாலும் பாட்டுப்புத்தகம் படித்து ஒட்டியதைப்போல் இல்லாமல் வரிகள் அவ்வப்போது நழுவுகின்றன.

முதலில் ஹம்மிங்காகத் தொடங்கிய பழக்கம் பிறகு பல்லவியாக, முழுப்பாடலாக மாறியது. எப்படியும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் மாதவனுக்கு மனனம். எரிமலைக் குழம்பு கொதித்துக்கொண்டேயிருப்பதைப்போல் எப்போதும் ஒரு பாடல் அவனுக்குள் இசைத்துக்கொண்டேயிருக்கும். சுற்றிச்சூழும் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் விடுபட, மறக்க அவனுக்குப் பாடல் நன்மருந்து. இதுவரை மற்றவர்கள் முன்னால் அவன் வாய்விட்டுப் பாடிய சந்தர்ப்பங்கள் சொற்பம். அப்படிப் பாடிய சந்தர்ப்பங்களில் மற்றவர்களின் எதிர்வினைகளே அவன் குரல் பாடுவதற்கு ஏற்றதில்லை என்பதையும் பாடலின் ராகத்திலிருந்து விலகி அவன் குரல் தொடர்ந்து முட்டுச்சந்துகளில் மோதிக்கொண்டிருந்தது என்பதையும் உணர்த்தியது. அதன்பிறகு அவன் சபைகளில் பாடுவதில்லை. குளியலறையிலும் வண்டியோட்டும்போது மட்டும் சத்தமாகப் பாடுவான். குளியலறையில் அவன் தனியன். மதிப்பிட யாருமில்லை என்பதால் அவனே எஸ்.பி.பியாக, யேசுதாஸாக, ஹரிகரனாக, சித் ஸ்ரீராமாகத் தன்னை உணர்ந்து பாடினான். வண்டியோட்டும்போது பாடினாலும் யாருக்கும் கேட்கப்போவதில்லை. மற்ற நேரங்களிலெல்லாம் மெல்லிதாகப் பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொள்வான்.

ன் திருமண வரவேற்பின்போது வந்தவர்களைக் கவனித்ததைவிட இசைக் கச்சேரியில் வாசிக்கப்பட்ட பாடல் வரிகளைக் கவனிப்பதில்தான் அவனுக்கு கவனம் இருந்தது. இசைக்குழு பாடிய பாடல்களில் மூன்றிலொரு பங்கு பாடல்கள் அவனுக்கு மனனம். அவர்கள் பாடல்களைப் பாடப் பாட தனக்குள் முணுமுணுத்துக்கொண்டான். தன்னையறியாமல் சில சந்தர்ப்பங்களில் சத்தமாகவும் பாட ஆரம்பித்தான்போல. சத்தமாக என்றால் சத்தமாக அல்ல. முணுமுணுக்கும் விகிதத்தில் ஒரு தேக்கரண்டி கூடுதலாக. மணமகளின் சித்தி மட்டும்தான் இதைக் கவனித்திருக்கிறார். அவரது விநோதமான பார்வையே இதை உணர்த்தியது. உணர்ந்துகொண்ட மாதவன் கஷ்டப்பட்டு பாடுவதை நிறுத்திக்கொண்டான். ஆனாலும் மனதின் இசை நிற்கவில்லை. அன்றைய இரவு, மறுநாள் காலை வரை இசைக்குழு பாடிய பாடல்கள் மாதவனுக்குள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இரவு ஏதேனும் வரிகள் மறந்துபோய் சிக்கலை ஏற்படுத்திவிடுமோ என்று அவன் நினைத்ததைப்போல் எதுவும் நடந்துவிடவில்லை.

பாடல் வரிகள் மறந்துவிடுவது என்பது மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத வலி. உள்ளேயிருக்கும் நரம்பு வீக்கம் கண்டுவிடுவதைப்போல், யாராலும் அறிய முடியாதது. நூற்றுக்கும் மேற்பட்ட முறை அவன் பாடிய பாடல்களாகத்தான் இருக்கும். ஆனாலும் சமயங்களில் ஏதாவது ஒரு வரி மறந்துவிடும். ‘ஒரு வரிதானே’ என்று அடுத்த வரிக்குப் போய்விட முடியாது. எறும்புகளின் வரிசைபோல், குடியரசு தின அணிவகுப்பு போல், நேர்த்தியாய் அடுக்கப்பட்ட பெட்டிகளைப் போல் பாடல் வரிகளின் வரிசையும் குலையாதிருக்க வேண்டும்.

அஞ்சிறைத்தும்பி
அஞ்சிறைத்தும்பி

உள்ளாடைக்கு அடுத்தபடியாகத்தான் மேலாடைகளைப் போட முடியும் என்பதைப்போல்தான் வரிசை தவறாமல் பாடும் ஒழுங்கை அவன் கடைப்பிடித்தான். சமயங்களில் இந்தப் பாடலின் வரிகளைப் பாடிக்கொண்டி ருக்கும்போதே இன்னொரு பாடலின் வரிகள் வந்து குழம்பும். இரண்டு பாடல்களின் ராகங்களும் வரிகளும் ஒன்றாகக்கூட இருக்கும். ஆனால் அந்தப் பாடலின் கை கால்கள் வேறு, இந்தப் பாடலின் கை கால்கள் வேறு என்பதில் உறுதியாக இருந்தான் மாதவன். உன் கால்களில்தான் உன் பயணம். கால்களை அகட்டி என் பாதையில் குறுக்கிடாதே என்று பாடல் வரிகளுக்குச் சொல்லிக்கொண்டேயிருப்பான். அவஸ்தையின் இயக்கத்தில் பாடல் வரிகள் சிக்காது. ஆனால் எதிர்பாராத கணத்தில் பாடல் தன்னைத்தானே திறந்து தன் வரிகளை அவன் முன்னால் வைக்கும். பணியில், பயணத்தில், உண்கையில், உறக்கத்தின் வாசலில் நுழையும்போது என்று அது எப்போது வேண்டுமானாலும் நிகழும். அப்போது ஒரு விடுதலை உணர்வும் உற்சாகப் பரவசமும் இசையுடன் சேர்ந்து அவனுக்குள் பரவ ஆரம்பிக்கும். அது அவ்வளவு ரம்மியமானது!

வன் வாழ்க்கையில் நடந்த இரு துயரச் சம்பவங்களிலும் அவனுக்குள் பாடல்கள் ஒலித்துக்கொண்டேயிருந்தன. திருமணமாகி ஒருவருடம் குழந்தையில்லை. சுற்றமும் நட்பும் சூழ கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அடுத்த ஆண்டு மனைவி கர்ப்பமாக, மகிழ்ச்சியும் பாடல்களுமாய் மாதவன் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் பிரசவத்தின்போது குழந்தை இறந்து, துணியில் மூடி சிசுச்சடலம் அவன் கைகளுக்குத் தரப்பட்டபோது அவனுக்குள் ‘நறுமுகையே நறுமுகையே’ பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ஏன் அந்தப் பாடல் அப்போது தோன்றியது என்று அவனுக்குப் புரியவே இல்லை.

சென்ற மாதம் அவன் வீட்டைத் திடீரென்று காலி செய்யும் சூழல். மனைவிக்கும் வீட்டு உரிமையாளருக்குமான சிறுமனத்தாங்கல், வீட்டைக் காலிசெய்யும் நிலைக்குக் கொண்டு வந்தது. வாடகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு அவன் கையில் வழங்கப்பட்டபோது அவன் மனதில் ‘தேசாந்திரி பாடிடும்...’ பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அதிலும் ஒரு வரி, பிறர் காண இயலா இடத்தின் மச்சத்தைப்போல் ஒளிந்திருந்தது. இருக்கும் பிரச்னையைவிட மறந்துவிட்ட பாடல்வரி தீவிரமாக அழுத்தியது.

அலுவலகத்துக்கு வண்டியில் செல்லும் பாதையெங்கும் அந்த வரிகளையே நினைத்துக்கொண்டு சென்றான். திடீரென்று ‘கூரையில் தங்குமோ பால்நிலா? சொல்லடா, எங்குமே செல்லடா’ என்று வரிகள் வந்துவிழ, சாலையோரத்து டீக்கடையில் வண்டியை நிறுத்தி ஒரு டீ குடித்தான். அன்று கூடுதலாய் சக்கரை.

பாடல் வரிகள் எளிதாக மற்றவர்களைத் தொற்றிக்கொள்ளும். தொலைக்காட்சியிலோ பண்பலையிலோ மற்றவர்கள் பாடும்போதோ காதில் வந்து விழும் வரிகள், அதிலும் காலையில் முதன்முதலாகக் கேட்கும் வரிகள் அன்றைய நாள் முழுதும் மீண்டும் மீண்டும் ஒரு குழந்தையைப் போல் வந்து நம் கால்களைக் கட்டிக்கொள்ளும்.

அது ஒரு தொற்றுநோய். வண்டுகளின் குச்சிக் கால்களில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தம்போல், கூட்டத்தினிடை விடப்படும் கொட்டாவிபோல், அச்சம்போல், வதந்திபோல், நெருப்புபோல், கலவரம்போல் தொற்றிப் பரவும்.

காலையில் எழுந்து நடைப்பயிற்சி முடித்து, டீ குடித்துக்கொண்டே நாளிதழ்களைப் புரட்டிவிட்டுத் தொலைக்காட்சியைப் பார்த்தபடி இருபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மாதவனின் வழக்கம். தொலைக்காட்சி என்றால் பாடல்கள்தான். பாடல்களில் கரையும்போது வலி தெரியாது பயிற்சி முடிப்பான். பிறகு அதிலொரு பாடலை எடுத்தபடி குளியலறைக்குள் நுழைவான். அந்தப் பாடல் அலுவலகப் பயணம் தொடங்கி அன்றைய நாள் முழுதும் அவனைப்போர்த்தியிருக்கும். அப்படித்தான் இந்த ‘நீங்க முடியுமா’வும் அன்று அவனுடன் வந்தது. வேலை கிடைக்குமா என்று நண்பன் ஒருவனைச் சந்திக்கச் சென்றபோதுதான் அந்த விபத்து நடந்திருந்தது.

அஞ்சிறைத்தும்பி - 34: நழுவும் இசை

மாதவன் கண் விழித்துப் பார்த்தபோது மனைவியும் தம்பியும் அருகிலிருப்பது தெரிந்தது. இரு செவிலியர்கள் அருகிலிருக்க, டாக்டர் நின்றிருந்தார். ஏதோ வாய் திறந்து சொன்னார். அவனுக்குக் கேட்கவில்லை. கண்களை மூடிக்கொண்டான். மீண்டும் திறந்தபோது டாக்டர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அவனுக்குக் கேட்டன. அறுந்துபோன அந்த இழை அவன் கையில் கிடைத்திருந்தது. அது அவன் விபத்துக்குள்ளாகுவதற்கு முன் அவன் கையில் சிக்காமல் தவிக்கவிட்ட பாடல் வரிகள்தான்.

“நீ கடந்துபோன திசையோ...

நான் கேட்க மறந்த இசையோ...”

- தும்பி பறக்கும்...