Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 38: மொட்டைமாடி கொலைகள்

மொட்டைமாடி கொலைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மொட்டைமாடி கொலைகள்

குறுங்கதை

“அப்பா மொட்டைமாடிக்குப் போலாமா?” சுனில் கேட்டதும் ராகவனுக்குப் படபடப்பு ஆரம்பமானது. தலைசுற்றுவதுபோலிருந்தது.

‘கொஞ்சநேரம் சோபாவில் உட்கார்ந்தால் பரவாயில்லை’ என்றிருந்தது. ஆனாலும் அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ``உங்கப்பா தான் வரமாட்டார்னு தெரியும்ல?” என்றாள் செல்வி. ``அதெல்லாம் தெரியாது. வீட்டுல போரடிக்குது. மாடிக்குப் போலாம்” என்றான் சுனில். ``இங்கேயே விளையாடுடா” என்ற ராகவனின் பேச்சைக் கேட்கத் தயாரில்லை அவன். ``ஏங்க மொட்டைமாடிதானே? பயப்படாதீங்க. வாங்க பார்த்துக்குவோம்” என்று செல்வி அழைக்கவும் அரை இதயத்துடன்தான் வந்தான். சும்மா மொட்டைமாடிக்கு வந்துவிடுவதாலேயே எதுவும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால் அந்த பயம்தான் புழுவைப்போல் உள்ளேயிருந்து அரித்துக் கொண்டேயிருந்தது.

அஞ்சிறைத்தும்பி - 38: மொட்டைமாடி கொலைகள்

மொட்டைமாடிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் ஒரு குழந்தையைப் போல் காற்று தழுவிக் கட்டிக்கொண்டது. சுற்றிலும் பார்க்கும் போது கிட்டத்தட்ட எல்லா மொட்டை மாடிகளிலும் ஆட்கள் இருப்பது தெரிந்தது. வாரயிறுதிகளில் சினிமா, கடற்கரை, வணிக வளாகம், பூங்கா, தீவுத்திடல் பொருட்காட்சி என்று எங்காவது போய்விடுவது வழக்கம். வாரம் முழுதும் வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் அது சிறுமீட்சி. ஆனால் கொரோனாவும் ஊரடங்கும் வாரம் முழுவதையும் ஞாயிற்றுக்கிழமை ஆக்கி வைத்திருக்கிறது. எங்கும் வெளியில் போகாமல் முடக்கிவைத்திருக்கிறது. அதனால்தான் எல்லார் வீட்டு மொட்டை மாடிகளிலும் இவ்வளவு ஆட்கள். புது அனுபவம் என்பதை அவர்களின் உடல்கள் சொல்லிக்கொண்டிருந்தன.

``நாம இந்த ஃபிளாட் வாங்கி எவ்ளோ நாளாச்சு?”

``ஆகஸ்ட் வந்தா மூணு வருஷம்.”

``ஆனா இதுவரைக்கும் நாம மொட்டைமாடி வந்ததில்லை.”

``நீங்க வந்ததில்லைன்னு சொல்லுங்க. நான் துணிகாயப்போட இங்கேதானே வருவேன்?”

``அதுக்குப்பேரு மொட்டைமாடிக்கு வரதில்லை.”

``எங்கே, நீங்க வந்தாத்தானே நாங்க வர முடியும்? உங்களுக்குத்தான் பயமாச்சே” என்றாள் செல்வி.

வெயில் மட்டுப்பட்டு காற்று இதம் கூட்ட ஆரம்பித்தது. சுற்றிலும் உள்ள மொட்டை மாடிகளைப் பார்த்தான். கிட்டத்தட்ட எல்லா வீட்டு மொட்டைமாடிகளிலும் ஏ.சி அவுட்டோர். மூன்றில் இரண்டுபங்கு மொட்டைமாடிகளில் டிஷ் ஆன்டனா. பாரபட்ச மில்லாமல் எல்லா மொட்டைமாடிகளிலும் துணிகளுடனும் இல்லாமலும் கொடிக்கயிறுகள். ஆங்காங்கே சிறுவர்கள் காத்தாடி விட்டுக்கொண்டிருந்தார்கள். அமேசானில் ஆர்டர் செய்தால் காத்தாடி கிடைக்கிறதாம். ஆனால் ராகவனின் சிறுவயது மொட்டைமாடியில் இவை எதுவுமில்லை.

எப்போதிருந்து தனக்கு மொட்டைமாடி பரிச்சயம் என்று ராகவன் யோசித்துப்பார்த்தான். தொடக்கப்பள்ளியில் படிக்கும்போதிருந்தே மொட்டைமாடி பழக்கம்தான். பள்ளி ஆண்டு விடுமுறையில் குடும்பத்துடன் அப்பளம் வேலை பார்ப்பது வழக்கம். கம்பெனியில் இருந்து எடை நிறுத்தி மாவும், உருட்டுவதற்கான சாதனமும் தந்துவிடுவார்கள். மாவைப் பிசைந்து உருட்டி சிறுதுண்டுகளாக்கி, அப்பளக்கட்டையில் வைத்துத் தேய்த்தால் விரல் அப்பளம் உருவாகிவிடும். பிறகு அப்பளங்களை நியூஸ் பேப்பரில் வைத்துக் காயவைப்பது மொட்டைமாட்டியில்தான்.

அரிசியிலோ, மாவிலோ ஏதேனும் புழு, பூச்சி வந்துவிட்டால் வெயிலில் காயவைப்பதும் மொட்டைமாடியில்தான். மதிய வெயிலில் செருப்பில்லாமல் மொட்டைமாடியில் நடக்க முடியாது. கால் பொத்துப்போகும். மொட்டைமாடியின் விளிம்புச்சுவரில் மூன்று சதுரங்கள் இருக்கும். அந்தக்கால கட்டட அமைப்பு. அதன் இடைவெளித் துவாரத்தில் இருந்து கீழே தெருவைப் பார்த்தால் விநோதமான தோற்றத்துடனிருக்கும் தெரு. கீழே நடந்து செல்லும் மனிதர்களை உயரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு உற்சாகமும் மகிழ்ச்ச்சியும் கொப்புளிக்கும்.

``அம்மா, ஃப்ளைட்ல இருந்து கீழே பார்க்கும்போது இப்படித்தானே இருக்கும்?” என்பான் ராகவன். அப்பாவும் தலையாட்டிச் சிரிப்பார்.

``ஆமா வாராவாரம் விருதுநகருக்கும் சாத்தூருக்கும் உங்கப்பாரு ஃப்ளைட்ல போயிட்டு வர்றாரு. அப்போ கீழே பார்த்து நம்ம வீட்டு மொட்டை மாடியைக் கண்டுபிடிச்சாரு” என்று கிண்டலடித்தார் அம்மா.

``ஏன்பா கடவுள் மேல இருந்து நம்மைப் பார்க்கிறப்போ மொட்டைமாடியில இருந்துதானே பார்ப்பாரு?” என்பான் தம்பி அன்பு.

இப்போது நினைத்தால் ராகவனுக்கு அது சுவாரஸ்யமான உவமையாக இருக்கிறது. வானம் என்பது உலகத்தின் மொட்டைமாடி. மொட்டைமாடியில் இருந்து கீழே இருப்பவர் களைப் பார்ப்பது எப்படி உற்சாகமோ அதேபோல்தான் மொட்டைமாடியில் இருந்து வானத்தைப் பார்ப்பதும் உற்சாகம்தான். மாலை நேரத்து வானத்திலிருந்துதான் அந்த உற்சாகம் தொடங்கும். விசேஷ வீட்டுப் பெண்களைப்போல சூரியன் பொன்னிறமாகியிருக்கும். குறிப்பாக கூடு திரும்பும் பறவைகளைப் பார்ப்பதுதான் அதிகமும் பரவசம் தரும் அனுபவம். நாரைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்வதும், அதைப்போலவே மேலே மேகங்கள் மிதந்து செல்வதும், பார்க்க அப்படியோர் அனுபவம்.

இரவு நேரத்தில் மொட்டைமாடியில் படுத்தபடி வானத்தை அண்ணாந்து பார்ப்பது ஒரு தியானநிலை. எப்போது வெளியே சுடர்விடும், எப்போது மேகங்களுக்குள் மறைந்திருக்கும், எதிர்பாராத நேரத்தில் மீண்டும் வெளியே வரும் என்று காதலிக்கும் பெண்ணைப் பின்தொடர்வதைப் போலவே நிலவை வேவு பார்க்கலாம். நட்சத்திரங்கள் பார்க்க பார்க்க பரிச்சயமாகும். ராகவனின் அப்பா வரிசையாய் இருக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கும் ராகவன், அன்பு, கௌரி என்று தன் குழந்தைகளின் பெயர்களை வைத்தார். பிறகு அவரவர் நட்சத்திரங்களை அவரவர் பராமரிக்கத் தொடங்கினர்.

``வயசானவங்க எல்லாம் செத்து மேலே போய் நட்சத்திரமாயிடுவாங்க. அது சந்துரு பெரியப்பா, இது லோகு மாமா” என்பார் அம்மா.

அஞ்சிறைத்தும்பி - 38: மொட்டைமாடி கொலைகள்

“ஆமா, உனக்கு மொட்டைமாடின்னதும் என்ன ஞாபகம் வரும்?”

``என் அத்தை பையன் பிரணவ் இருக்கான்ல, அவன் மொட்டைமாடியில்தான் எனக்கு புரபோஸ் பண்ணினான். கிஸ்ஸடிக்கக்கூட ட்ரை பண்ணினான்.”

``அடிப்பாவி, அடிச்சானா இல்லையா?”

``ட்ரை பண்ணுனான்னு சொன்னா, அடிக்கலைன்னுதானே அர்த்தம்? அதுக்குள்ள அவன் சித்தி மாடிக்கு வந்துட்டாங்க.”

``டிஸ்ஸப்பாயிண்டிங். அப்புறம் புரபோஸல் என்னாச்சு?”

``என்னத்த ஆகும், ஏதாவது ஆகியிருந்தா நீங்களும் நானும் கல்யாணம் பண்ணி மொட்டைமாடியில் நின்னுக்கிட்டிருப்போமா?”

``ஆமா, மொட்டைமாடின்னதும் உனக்கு அத்தை பையனும் முத்தமும் மட்டும்தான் ஞாபகம் வருதா? வேற எதுவும் ஞாபகம் வரலையா?”

ராகவன் சொன்னதும் சிரித்த செல்வி, “இதெல்லாம் எனக்கும்தான் நடந்துச்சு. வத்தல், நட்சத்திரம் எல்லாம். ஆனா கொஞ்சம் வித்தியாசமான அனுபவம்கிறதால சொன்னேன். ஆமா நீங்க நல்லபுள்ளை மாதிரியே சொல்றீங்களே. வேற மொட்டைமாடித் திருட்டு தம் அனுபவம்லாம் இல்லையா?”

``ச்சேச்சே. என் சித்தப்பா மொட்டைமாடியில் பீர் அடிக்கிறதைப் பார்த்திருக்கேன், அவ்ளோதான்.”

``சித்தப்பாவா, இல்லை நீங்களா?”

சிரித்த ராகவனுக்கு உண்மையில் மொட்டைமாடி என்றால் ஞாபகம் வருவது அந்தக் கொலைதான், அதைக் கொலை என்று சொல்ல முடியாவிட்டாலும்.

நண்பன் கண்ணபிரான் வீட்டு மொட்டைமாடி மிகப்பெரியது. ஒரு மைதானம் அளவுக்கு விரிந்தது. எட்டுக் குடித்தனங்கள் வசிக்கும் வீடு என்பதால் மொட்டைமாடியில் அவ்வளவு பிரமாண்டம். ஒரு ஞாயிற்றுக்கிழமை, மொட்டைமாடியிலேயே பிரானும் நண்பர்களும் கால்பந்து விளையாடத் தொடங்கினார்கள். தனக்குக் கடத்தப்பட்ட பந்தை லாகவமாக வாங்கி, மொட்டைமாடியின் மூலைக்கு வந்த பிரான் வலதுகாலை ஓங்கி அடிக்க எத்தனிக்கையில், பரமு அவன் இடதுகாலுக்குள் தன் காலை நுழைத்தான். பிரான் பந்தை அடிப்பதைத் தடுப்பதுதான் பரமுவின் நோக்கம். ஆனால் பிரான் மொட்டைமாடிச் சுவருக்கு அப்பால் போய் எகிறி கீழே விழுந்து, அங்கேயே இறந்துபோனான். பந்து இடதுமூலையில் விசையுடன் வந்து விழுந்தது. கதறல்கள், கூட்டம், ரத்தம், கோரம், காவல்துறை விசாரணை என்று கழிந்த நாள்களில்தான் ராகவனுக்கு மொட்டைமாடி என்றாலே பயம் வந்தது.

மொட்டைமாடி என்றில்லை. உயரமான இடங்களில் நிற்கும்போது எல்லாம் பயமும் தலைசுற்றலும் வந்தன.

``இதுக்குப் பேரு அக்ரோபோபியா” என்றார் உளவியல் மருத்துவர்.

``வெர்ட்டிகோன்னு ஹிட்ச்காக் ஒரு படம் எடுத்திருக்கார். அதில் துப்பறியும் நிபுணருக்கு ரெண்டு வியாதி இருக்கும். ஒண்ணு உங்களுக்கு இருக்கிற அக்ரோபோபியா. இன்னொண்ணு வெர்ட்டிகோ. தன்னைச் சுற்றியிருக்கிற பொருள்கள் திடீர்னு சுத்துறதாத் தோணும் உணர்வு. குற்றவாளி ஒவ்வொரு மாடியா தாவித் தாவி ஓடறப்போ இவருக்கு அவனைப் பிடிச்சாக வேண்டிய கட்டாயம். ஆனா உயரம்னா பயம். நீங்க ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ பார்த்திருக்கீங்களா?”

``பார்த்திருக்கேன். ஆனா கமலுக்கு அப்படி எந்த வியாதியும் இருக்காதே. ‘வாழ்வே மாயம்’ல இருந்து ‘உத்தம வில்லன்’ வரைக்கும் அவர் ஃபேவரைட் வியாதி கேன்சர்தான்.”

சிரித்த மருத்துவர், “உண்மைதான். ஆனா வசூல்ராஜாவில் கருணாஸுக்கு இந்த போபியா இருக்கும். படத்தில் கமல் டாக்டர் இல்லை, ஆனா கருணாஸ் பேஷன்ட்” என்று சிரிப்பைத் தொடர்ந்தார்.

அதிலிருந்து மொட்டைமாடிகள் முதல் மலைப்பகுதிகள் வரை தவிர்க்க ஆரம்பித்தான் ராகவன். “மலையேறணும்னாலும் மச்சான் துணை வேணும்னு சொல்வாங்க. மச்சானுக்கு மலையேறுறதுன்னாலே பயம்” என்று சிரிப்பான் செல்வியின் தம்பி.

மீண்டும் ஒருமுறை வானத்தைப் பார்த்தான். வானத்தைப் பார்க்கும்போதுதான் இவ்வளவு பெரிய பூமியில் நாம் ஒரு குமிழி, இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நாமொரு துளிநீர் என்று தெரிகிறது. வானம் பார்த்து எத்தனை நாள்கள் இருக்கும் என்று யோசித்தான் ராகவன். 20 ஆண்டுகள் இருக்கும். வீடு, அலுவலகம், சாலை, வாகனம் என்பதைத் தாண்டி முழுதாய் பத்து நிமிடங்கள் வானத்தைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகின்றன. அதுவும் மொட்டைமாடியில் இருந்து வானத்தைப் பார்க்கும்போதுதான் அதன் பிரமாண்டம் தெரிகிறது.

வானம் பார்த்தல் ஒரு கலை. வானமே ஒரு கலை. மேகம் விதவிதமாய்ச் சித்திரங்களைத் தீட்டுவதும், பறவைகளின் இசைக்கலவையும் கவிதையையும் கதையையும் வாரி வாரி வழங்கும் மிகப்பெரிய கலைக்கிண்ணம் இந்த வானம்.

யோசித்தபடியே சுவரின் ஓரத்தில் வந்த ராகவனைத் தடுத்து நிறுத்தினாள் செல்வி. “பார்த்து நடங்க. கீழே எதுவும் பார்க்காதீங்க. தலை சுத்தப்போகுது” என்றாள். தலையாட்டி நகர்ந்தவன் அரைக்கண்களால் கீழே பார்த்தான். தலை ஒன்றும் சுற்றவில்லை. புன்னகைத்தபடி சுற்றியிருந்த மொட்டைமாடிகளை நோட்டம் விட்டுவிட்டு, வானத்தை செல்போனால் படம் பிடித்தான்.

அப்போதுதான் ஆறாவது தெருவில் இருந்த ஒரு வீட்டின் மொட்டைமாடியில் இருந்து விடப்பட்ட காத்தாடியின் மாஞ்சா நூல் அறுந்து, சைக்கிளில் வந்த முதியவரின் கழுத்தை அறுத்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் ‘த போலார் எக்ஸ்பிரஸ்’ ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஸ்டீவ் பிங்க் 27வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

- தும்பி பறக்கும்....