
குறுங்கதை
“என்ன தாயி, ரெண்டு மூணுநாளா கண்டுக்கிடறதே இல்லை?” என்றார் சித்தப்பா.
அன்னலெட்சுமிக்கு வெட்கம் பொத்துக் கொண்டு வந்தது. அது என்னவோ இந்தக் கோலத்தில் அவளால் சித்தப்பாவைப் பார்க்க முடியவில்லை. வாரம் முழுக்க ஒரு தபால்காரரையோ வாட்ச்மேனையோ சீருடையில் பார்த்துவிட்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரை வெள்ளைச்சட்டையில் பார்த்தால் அவரை யார் என்று தெரியாமல் குழம்பி விடுவோம். சிலருக்குச் சில அடையா ளங்கள். சரஸ்வதிக்கு வீணை, சண்முகனுக்கு வேல். அதேபோல் சித்தப்பாவுக்கு மீசை.
“அட, புசுபுசுன்னு பெரிய மீசையோடவே சின்னப்புள்ளையில இருந்து பார்த்திருக்கு. இப்போ மொழுக்கடின்னு பார்க்கவும் என்னவோ மாதிரி இருக்கும்ல?”
பெரிய கருப்பு தாத்தா சரியாகப் பிடித்து விட்டார். அன்னலெட்சுமி சிறுவயதிலிருந்தே சித்தப்பாவைப் பெரிய மீசையுடன்தான் பார்த்திருக்கிறாள். அந்த மீசை ஒரு மலைப்பாம்பைப்போல பொசுபொசுவென்று மூஞ்சி முழுதும் சாப்பிட்டிருக்கும். வேர்விட்டுக் கிளைபரப்பும் ஆலமரம்போல, கரை கொள்ளாமல் பாயும் காட்டாற்று வெள்ளம் போல இருக்கும் அவர் மீசை.
சிறுவயதில் அப்பா இறந்தபிறகு சித்தப்பாதான் குடும்பத்தைக் கவனித்துவருகிறார். அண்ணன் சுரேஷ், தம்பி காமாட்சி சுந்தரத்தைவிட இவள் மீதுதான் அவருக்கு உயிர். “அக்கா, உன்மேலதான் அப்பா உசிரா இருக்கார்” என்று சித்தப்பா மகள் விமலா சொல்வாள். அப்பா இறந்தாலும் நிலபுலன், ஆடுமாடுகள் என்று சொத்துகள் இருப்பதால் எந்தக் குறையுமில்லை. இருக்கும் ஒரே குறை, இல்லாத அப்பாவின் பாசம்தான். ஆனால் சித்தப்பா இருந்ததால் அந்தக் குறையுமில்லை.
13 ஆண்டுகளாக கம்பீரமான மீசையுடன் பார்த்துப் பழகியிருக்கிறாள். மகன்கள் இல்லாத மச்சக்காளை தாத்தா இறந்ததால் கொள்ளி வைத்த சித்தப்பா மீசையை எடுத்திருக்கிறார். இவளுக்குத்தான் பார்க்க முடியவில்லை.
அன்னலெட்சுமிக்கு சர்ட்டிபிகேட்டில் ரம்யா என்றுதான் பெயர். சித்தப்பா பெண்களும் பசங்களும் அப்படித்தான் கூப்பிடுவார்கள். ஆனால் அம்மாவுக்கும் சித்தப்பாவுக்கும் மட்டும் வாய்நிறைய அன்னலெட்சுமி என்று கூப்பிட்டால்தான் மனசு நிறையும். அதுவும் சித்தப்பா மீசை மயிரில் பட்டு வரும், ‘அன்ன லெட்சுமி தாயி’ அழைப்பில் இவள் நனைந்து குளிர்ந்துவிடுவாள். ஊருக்குள் பலருக்குப் பெரிய மீசை இருந்தாலும் சித்தப்பாவின் மீசை அதிலிருந்து தனித்துவமாக இருப்பதைப்போல இவளுக்குத் தெரியும். எல்லோருக்கும் அப்படி ஒரு மீசை அமைந்துவிடுவதில்லை. திருவிழாக்கூட்டத்தில் தன் குழந்தை தொலைந்துவிடாமலிருக்கக் கைகளை இறுகப் பற்றிக்கொள்ளும் அம்மாவின் விரல்களைப் போல கிருதாவுடன் இணைந்திருக்கும் அந்த மீசை.

சித்தப்பாவின் மீசையைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும். அவர் பேசும்போது, சிரிக்கும்போது, கோபப்படும்போது, ஈரம் பட்டு நனைந்திருக்கும்போது, கைகளால் அளையும்போது என்று மீசையும் சித்தப்பாவைப் போலவே விதவிதமான உணர்ச்சிகள் காட்டும். அவளுக்கு என்னவோ அது ஒரு நாய்க்குட்டி, பூனைக்குட்டியைப் போல உயிருள்ள வளர்ப்புப் பிராணியாகத் தான் தெரிந்தது. ‘தாத்தா இறந்ததற்காக மீசையை மழித்தவர் அதைத் தன் கையில் கொடுத்திருந்தாலாவது மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருக்கலாம்’ என்று நினைத்தவள் ‘என்ன லூசுத்தனமான நினைப்பு’ என்று பின்னந்தலையில் தட்டிக்கொண்டாள்.
சித்தப்பாவைப் பார்த்து மீசைப்பித்து பிடித்ததாலோ என்னவோ அன்னலெட்சுமிக்கு ‘ஆம்பளைன்னாலே மீசை’ என்ற எண்ணம் உருவாகிவிட்டது. ‘ஏன் இந்தி ஹீரோக்களெல்லாம் தாலியறுத்தவ மாதிரி மொழுக்கடின்னு இருக்கானுக’ என்று தோன்றும். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், அஜித், சூர்யா என்று முறுக்குமீசை வைத்த ஹீரோக்களின் படங்கள் என்றால் அவளுக்குப் பிடிக்கும். ஆனால் எல்லாப் படங்களிலும் அவர்கள் அப்படி வந்துவிடுவதில்லை. சில படங்களில் அவர்களும் இந்தி ஹீரோக்களைப் போல மொழுக்கடி என்றிருப்பார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் பேப்பரில், புத்தகத்தில் சினிமா விளம்பரம் வரும்போதெல்லாம் இவளாகவே அவர்களுக்கு மீசை வரைந்துவிடுவாள். ‘இப்பத்தான் உம் மூஞ்சியைப் பார்க்கிறமாதிரி இருக்கு’ என்றும் சொல்லிக்கொள்வாள்.
சினிமா ஹீரோக்கள் என்றில்லை, காலண்டர் முருகன் படம் தொடங்கி கையில் கிடைக்கும் காகிதங்களில் இருக்கும் எல்லா உருவத்துக்கும் மீசை வரைந்துவிடுவாள். சித்தப்பா ஒருமுறை பார்த்து, “சரியாத்தான் பண்ணிருக்கா எம் மவ. முருகன் நம்ம சாமின்னா இப்படி கம்பீரமா மீசையோடதானே இருப்பாரு? ஜெமினிகணேசன் மாதிரி வழுவழுன்னா இருப்பாரு?” என்றபடி மீசையை நீவிக்கொண்டார்.
பிறகு ரம்யாவுக்கு இது ஒரு நோயாகவே மாறிவிட்டது. நேரில் மீசையில்லாத ஆண்முகம் கண்டால் அதில் ஒட்டுமீசை வைத்துவிடவில்லையே தவிர மற்ற எல்லா அறிகுறிகளும் இருந்தன. பாடப்புத்தகங்களில் மீசையில்லாமல் இருக்கும் தலைவர்கள், விஞ்ஞானிகள், கவிஞர்களுக்கும் மீசை வரைந்தாள். இவள் பாடப்புத்தகம் மட்டும் மற்ற பாடப்புத்தகத்திலிருந்து தனியாகத் தெரியும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இவள் பாடப்புத்தகத்தில் அப்துல் கலாமுக்கு மீசை வரைந்ததைப் பார்த்த இங்கிலீஷ் மிஸ், பிரம்பால் பிளந்தெடுத்துவிட்டார். விஷயம் கேள்விப்பட்ட சித்தப்பா கொதித்துப்போய் புல்லட்டில் இவளை ஏற்றிக்கொண்டு நியாயம் கேட்கப்போனார். அங்கே சித்தப்பா புல்லட் சைலன்ஸராய்க் கொதித்ததில் அந்த மிஸ் பத்துநாள்கள் பள்ளிக்கு வரவில்லை.
ரம்யா சிறுவயதில் பாடப்புத்தகத்தில் பொத்திப் பாதுகாத்த மயிலிறகும் அவளுக்கு சித்தப்பாவின் மீசையைத்தான் ஞாபகப்படுத்தும். நல்ல மிருதுவாக, அடர்த்தியாக, அழகாக இருக்கும் அந்த மயிலிறகு. ஆனால் வண்ணமயமான மீசை. சித்தப்பாவுக்கும் மீசையின் வண்ணம் மாறிக்கொண்டுதான் வந்தது. இத்தனைக்கும் அவர் அவ்வளவு சிரத்தை எடுத்து மீசையைப் பராமரிப்பார். பசுநெய், விளக்கெண்ணெய், வண்டி மை என்று விதவிதமாகப் பூசித் திரிவார். கதர் சட்டைப்பைக்குள் எப்போதும் மீசையை சீவ சீப்பு இருக்கும். ஆனால் காலம் அவர் மீசையில் சுண்ணாம்பைத் தடவிப்போனது. வெள்ளையானாலும் அந்தக் கம்பீரம் மாறவில்லை.
ஒருமுறை முனியாண்டி கோயில் கிடாவெட்டுக்குப் போனபோது பொங்கல் வைப்பதற்காகத் தண்ணீர் எடுக்க குடத்துடன் போனவளைப் பாம்பு தீண்டிவிட்டது. விஷ ஜந்துதான். பாம்பு கடித்து விஷம் ஏறுவதைவிட, உடன் வந்த பெண்டுபிள்ளைகள் கத்தியதில் அவளுக்கு மயக்கம் வந்துவிட்டது. காலி எவர்சில்வர் குடம், சத்தத்துடன் உருண்டோட, மயங்கி விழுந்துவிட்டாள். அப்போது படபடப்புடன் வந்த சித்தப்பாதான் அவள் கணுக்காலில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சினார். அப்போது அவரது மீசை பட்டு அவளுக்குக் குறுகுறுப்பாக இருந்தது. அது அவளுக்குப் பாடப்புத்தகத்தில் பத்திரப்படுத்தி வைத்திருந்த மயிலிறகை நினைவூட்டியது.
அன்னலெட்சுமி ப்ளஸ் டூ போனாலும் அவளுக்குப் பாடப்புத்தகத்தில் மீசை வரையும் பழக்கம் மாறவில்லை. அது டவுன் பள்ளிக்கூடம். என்னதான் ரம்யா என்று பெயர் இருந்தாலும் அவளது இன்னொரு பெயரைத் தெரிந்துகொண்டு மாணவிகள் கிண்டல் செய்தார்கள். அன்னலெட்சுமி ஒருநாள் பாதியிலேயே பள்ளியிலிருந்து வந்துவிட, விஷயம் சித்தப்பாவின் மீசையைத் தாண்டிக் காதுகளுக்குப் போனது. இந்தமுறை அன்னலெட்சுமியை அழைத்து வரவில்லை. அவரே சொல்லாமல் கொள்ளாமல் மறுநாள் பள்ளிக்கு வந்துவிட்டார்.
ஆசிரியர் கிராமத்து மிரட்டலுக்கு பயப்படுபவர்போலத் தெரியவில்லை. எனவே நகரத்துக்கே உரிய நகாசு நாகரிகத்துடன் சித்தப்பா பேசினார். ரம்யாவைக் கிண்டலடித்த பெண்களை அழைத்துக் கண்டித்த ஆசிரியர், “உங்க பொண்ணு இன்னும் சின்னப் புள்ளையாட்டம் பாடப்புத்தகத்தில கிறுக்கி விளையாடிக்கிட்டிருக்கு. காலையிலதான் கூப்பிட்டுக் கண்டிச்சேன். இதுக்கும் அழுதுட்டு வந்துடுச்சுன்னா நீங்க நாளைக்கு வந்தாலும் வருவீங்கல்ல” என்றபடி பாடப்புத்தகத்தைத் திறந்து காட்டினார். அந்தப் பக்கத்தில் இருந்த அம்பேத்கர் படத்துக்கு முறுக்குமீசை வரைந்து வைத்திருந்தாள் ரம்யா.

சித்தப்பாவுக்கு எங்கிருந்து கோபம் வந்தது என்று தெரியவில்லை. “கொஞ்சமாவது புத்தியிருக்கா... எது நல்லது, கெட்டதுன்னு தெரியாம எருமைமாடு மாதிரி வளர்ந்து என்ன பிரயோசனம்?” என்றவர் டேபிளில் இருந்த ஸ்டேப்ளரைத் தூக்கி எறிந்துவிட்டார். நல்லவேளையாக ரம்யாமீது அது படவில்லை என்றாலும், அவள் அச்சத்தில் ஒடுங்கிவிட்டாள். ஆசிரியரைப் பார்த்து வேண்டாவெறுப்பாக வணக்கம் வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
சிலநாள்கள் அவர் வீட்டுக்கு வரவில்லை. வெளியூரில் கேஸ் விஷயமாகப் போனதாக சித்தி சொன்னது. பத்துநாளைக்குப் பிறகு வந்த சித்தப்பா, எந்தச் சம்பவமும் நடக்காததைப் போலத்தான் அன்ன லெட்சுமியிடம் பேசினார்.
அவள் கல்லூரிக்குப்போன முதலாம் ஆண்டில் முருகேசனுடன் பழக்கம் ஏற்பட்டது. கடைந்தெடுத்த கறுப்பு நிறம். சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியைப் போல முறுக்கிய உடல். சித்தப்பாவைப்போல பெரிய மீசை வைத்திருக்கலாம் என்று ரம்யா நினைத்தாலும் முருகேசனுக்கு அளவான மீசையே அழகாகத்தான் இருந்தது. இருவருக்கும் காதல் மலர்ந்து தியேட்டரில் படம் பார்க்கும்போது விஷயம் ரம்யா வீட்டுக்குத் தெரிந்தது. கண்காணிப்புகள் தொடர்ந்தன. இருவரும் தனித்தனியாக மிரட்டப்பட்டனர். பூனைக்குட்டியைப் போலிருந்த சித்தப்பாவின் மீசை, வாய்திறந்து கர்ஜிக்கும் கொடிய மிருகமாக மாறியபோது ரம்யா நடுங்கிப்போனாள். பள்ளியில் அவள் நரம்புகளில் பாவிய அதே நடுக்கம்தான்.
இன்றோ நாளையோ எப்படியும் முருகேசனைக் கொன்றுவிடுவார்கள். ரம்யாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்டிலில் படுக்கவைக்கப்பட்டிருக்கும் அன்னலெட்சுமியின் அருகில் ஒரு நாற்காலியில் கால்மீது கால் போட்டபடி மீசையை நீவியபடியே புகைபிடித்துக்கொண்டிருந்தார் சித்தப்பா. புகை வளையங்கள் சித்தப்பா மீசை முடியுமிடத்தின் வெண்வளையங்களைப் போலவே இருந்தன. குட்டிக்குட்டிப் பாம்புகள் அலைபாய்வதைப் போல் ஓடி மறைந்தன. அவளுக்குக் கண்கள் இருட்டிக்கொண்டுவந்தன. சித்தப்பா அன்று வாய் வைத்து உறிஞ்சித் துப்பிய விஷம் இன்று மீண்டும் புகட்டப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ரத்தத்தில் பாம்பின் வேகத்தில் பரவப் பரவ அவளுக்கு ஒளி மங்கிக்கொண்டே போனது. இப்போது சுற்றிலும் இருட்டு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மலைப்பாம்பைப்போல, பெருக்கெடுத்தோடி வரும் வெள்ளம் போல, பெருமழையில் வீழ்ந்த மரம்போல அழுத்த, அன்னலெட்சுமி என்ற ரம்யாவுக்குக் கடைசியாக ஒருமுறை சித்தப்பாவின் மீசையைப் பிடித்துக் கொஞ்சவேண்டும்போல இருந்தது.
- தும்பி பறக்கும்....