கட்டுரைகள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 44: நாக்கின் நீளம்

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

“யார் இந்தப் பையன்?” என்றான் ரமேஷ்.

பந்தியில் அமர்ந்திருப்பதைப்போல சப்பணமிட்டு அமர்ந்திருந்த அந்தச் சிறுவன் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். தோலுரித்த உருளைக்கிழங்கைப்போன்ற நிறம்.

“எதிர்த்த வீட்டுல இந்திக்காரங்க இருக்காங்கல்ல, அவங்க வீட்டுப்பையன். டிவி சத்தம் கேட்டதும் உள்ளே வந்து உக்காந்துட்டான்” என்றாள் அமுதா.

மீண்டும் அந்தச் சிறுவன் திரும்பிப்பார்த்துச் சிரித்தான்.

“சீரியல் பார்த்துக்கிட்டிருக்கான். இவனுக்குப் புரியுமா?”

“அவனுக்குத் தமிழே தெரியாது. ஆனா தெரிஞ்சமாதிரி ஆர்வமாப் பார்க்கிறான். பையா, துமாரா நாம் க்யா ஹை?” என்றாள் அமுதா.

“ராம்சிங்” என்று சிரித்த அவன் சிரிப்பில் இப்போது கூடுதல் வெளிச்சம். தனக்குத் தெரிந்த மொழி காதில் விழும்போது கண்களில் வெளிச்சம் கூடும்போல.

அஞ்சிறைத்தும்பி - 44: நாக்கின் நீளம்

இப்போதுதான் திருமணமாகி ரமேஷும் அமுதாவும் சென்னைக்குப் புதிதாகக் குடிவந்திருக்கிறார்கள். இவர்கள் வீடே பள்ளத்தில் இருக்கிறது. அதற்கும் கீழே தாழ்வாரத்தில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் வீட்டில் குடியிருந்தது அந்த வட இந்தியக் குடும்பம். கணவன், மனைவி, ராம்சிங். ‘மெட்ரோ ரயில் வேலை பார்க்கிறார்’ என்றார் ஹவுஸ் ஓனர். நல்ல சிவந்த நிறம். ஆனால் ஏழ்மையின் இருள் அவர்களது முகத்தில் அப்பியிருந்தது. அடர்த்தியான குங்குமப்பொட்டுடன் அவ்வப்போது தலைமுக்காடு போட்டு, வாசலில் உட்கார்ந்து பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருப்பார் மனைவி. ஹான்ஸ் பாக்கெட்டைக் கையில் கொட்டி வாயில் போட்டுக் குதப்பிக்கொண்டிருப்பார் கணவன். இளைஞனாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் வறுமை வயதின் தடங்களை அழித்துவிடுகிறது. களைத்து வயதானவரைப் போல்தான் இருப்பார்.

“ஆமா உனக்கு இந்தி தெரியுமா?” என்றான் அமுதாவிடம்.

“எங்க அப்பா பேசுவார்ல, அதில கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டேன்.”

“உங்க அப்பா இந்தி படிச்சாரா?”

“ஆமா, படிச்சாரு... அவர் ஸ்கூலே எட்டாங்கிளாஸ் தாண்டலை. அவர் டிரைவரா இருந்தப்போ வடநாடு போவார்ல. அப்படிக் கத்துக்கிட்டதுதான். மலையாளம், இந்தியெல்லாம் தெரியும். என்.பி டிரைவர்ல?”

“என்.பின்னா?”

“நேஷனல் பெர்மிட் வண்டி ஓட்டுனாரு” அமுதாவின் குரலில் பெருமிதம் ஒளிர்ந்தது.

பேசிக்கொண்டே வீட்டிலிருந்த மைசூர்ப்பாகையும் கொஞ்சம் மிக்சரையும் ஒரு சிறுகிண்ணத்தில் போட்டுக்கொண்டுவந்து கொடுத்தாள். எந்த மறுப்பும் இல்லாமல் ராம்சிங் வாங்கிச் சாப்பிட்டான். ரமேஷுக்கு அவனைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அவனே இந்த சீரியல்களையெல்லாம் பார்ப்பதில்லை. ராம்சிங் வீட்டில் டிவி இல்லை என்று தெரியும். அதனால் அவனுக்கு இது ஒரு ஆச்சர்யம்போல.

“அமுதா, எனக்கு டீ தா”

அமுதா ராம்சிங்குக்கும் சேர்த்து டீ கொண்டுவந்து தந்தாள். அவன் சூடு பொறுக்க மாட்டாத பாவனையைக் காட்டினான். அமுதா டம்ளரில் ஆற்றித்தந்தாள். வாங்கிக் குடித்துக்கொண்டே டிவி பார்க்கத் தொடங்கினான். அரைமணி நேரத்தில் வாசலில் முக்காடிட்ட நிழல்.

“ராம்சிங் பையா, ஆவோ” என்று அழைத்தார் அம்மா.

அவன் குடுகுடு என்று ஓடினான். ராம்சிங் அமுதாவைப் பார்த்து இந்தியில் ஏதோ சொன்னாள். அமுதாவும் ‘`அச்சா அச்சா” என்றபடி ஏதோ சொன்னாள். சமாளிக்கிறாள் என்பது நிச்சயம் தெரிந்தது.

அவர் போனபின் “ஏதோ நல்லா இந்தி பேசுவேன்னு சொன்னே?”

“நான் எங்கே சொன்னேன், ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.”

ரமேஷ் சீரியலை மாற்றிவிட்டு நியூஸ் பார்க்கத்தொடங்கினான்.

ரமேஷும் கல்லூரியில் இரண்டு செமஸ்டர் இந்தி படித்தான். ஆனால் இப்போது நான்கைந்து வார்த்தைகளைத் தவிர எதுவும் நினைவில் இல்லை. அவன் ப்ளஸ் டூ வரை தமிழ் மீடியத்தில் படித்தவன். ஆங்கிலம் என்ற நெருப்பாற்றைத் தாண்டுவதே அவனுக்கு யுத்தமாக இருந்தபோது, இந்தி என்பது நெருப்பாற்றில் நீந்திக்கொண்டே நெருப்பு வளையத்தைத் தாண்டுவதைப்போல இருந்தது.

நல்லவேளையாக இவன் வகுப்புக்கு என்று தனி இந்தி வகுப்பில்லை. நான்கு கோர்ஸ் மாணவர்களுக்கும் சேர்த்து அசோகன் என்று ஒரு இந்தி வாத்தியார். “யாஹ் க்யா ஹை?” என்றால் ‘இது என்ன’, ‘பள்’ என்றால் ‘பழம்’, ‘டீவார்’ என்றால் சுவர், ‘லட்கா - லட்கி’ - ‘சிறுவன் - சிறுமி’ - யோசித்துப்பார்த்ததில் இவ்வளவு வார்த்தைகள்தான் இப்போது ரமேஷுக்கு நினைவுக்கு வந்தது.

பெரும்பாலான மாணவர்கள் இந்தி வகுப்புகளில் கலந்துகொள்வது கிடையாது. தேர்வெழுத அட்டென்டன்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக இறுதிநாள்களில் மட்டும் வருவார்கள். அப்படி ஏதாவது புதுமுகத்தைக் கண்டுவிட்டால் அவர்களைக் கேள்வி கேட்டுத் துளைத்தெடுப்பார் அசோகன்.

அஞ்சிறைத்தும்பி - 44: நாக்கின் நீளம்

ஒருமுறை அப்படித்தான் பிரிட்டோ மாட்டிக்கொண்டான்.

‘டீவார் பர் க்யா ஹை?’ என்று கேட்டார் அசோகன் சார்.

பிரிட்டோவுக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டுமுறை அதே கேள்வி. ஆழ்ந்த மௌனம்.

‘சுவரில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டார் அசோகன் சார்.

கொஞ்சமும் தயங்காமல் ‘சுண்ணாம்பு இருக்கிறது சார்’ என்றான் பிரிட்டோ. ஒட்டுமொத்த வகுப்பறையும் சிரித்தது. இதாவது பரவாயில்லை, ஒருநாள் குமரன் இப்படி மாட்டிக்கொண்டான். அவனை ஏற இறங்கப் பார்த்தவர், ‘அ எழுது’ என்றவர், உடனே ‘ஹிந்தியில அ எழுது’ என்றார். அவன் நெடுநேரம் கரும்பலகைக்கு முன்னால் நின்றுகொண்டே இருந்தான்.

ரமேஷ் நான்காம் வகுப்பு படிக்கும்போது முதன்முதலாக ஆங்கிலச் சொற்களைச் சொன்னபோது கிருஷ்ணன் தாத்தாவுக்கு மீசை கொள்ளாத சந்தோஷம்.

“தாத்தாவுக்கு இங்கிலீஷ்ல என்ன?”

“கிராண்ட்ஃபாதர் தாத்தா”

“கிராண்டு பாதர்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர், “நிறைய பாஷை பேசுறவன் நாக்கு நீளமாயிடுமாம். கோவிந்தராஜு தெலுங்கு பேசுவான்ல, அவனுக்கு என்னைவிட நாக்கு நீளம். உனக்கும் நாக்கு நீளமாயிடும் ரமேசு” என்றார் தாத்தா.

இவனும் அதை நம்பி அவ்வப்போது தன் நாக்கை நீட்டி நீட்டிப் பார்ப்பான். ஆங்கிலப் பாடப்புத்தகம் படிக்கும்போதெல்லாம் நாக்கு அடர்த்தியானதைப்போன்ற உணர்வு வரும். அந்தக் கிருஷ்ணன் தாத்தாவும் செத்துப்போனார். ‘நேத்துல இருந்து அவர் பேசலையே, நாக்கு சுருங்கியிருக்குமோ?’ என்று ரமேஷ் யோசித்தான். ஆனால் அதையெல்லாம் பரிசோதிக்க முடியாதபடி வாயைக் கட்டி தாத்தாவின் உடலை எடுத்துக்கொண்டு போனார்கள்.

“ஏன்டா, லாங்குவேஜ் பேசினா நாக்கு நீளமாகுமா... உன் தாத்தாதான் சின்னப்புள்ளத்தனமாச் சொன்னார்னா நீயுமா அதை நம்புவே?” என்றான் ஒன்பதாம் வகுப்பில் மகேஷ்.

“நான் இப்போ இந்தி படிச்சு மத்யமா எக்ஸாம் எழுதப்போறேன். அப்போ நாக்கு நீளமாகிக்கிட்டே போகுமா?”

அஞ்சிறைத்தும்பி - 44: நாக்கின் நீளம்

“நீ இந்தி வேறயா படிக்கிறே?”

“ஆமாடா. இந்தி படிச்சா பெரிய பெரிய வேலைக்குப் போக முடியுமாம். தங்கராசு பெரியப்பா சொன்னாரு. நம்ம ஊரிலதான் இந்தி படிக்கக்கூடாதுன்னு சொல்லிக் கெடுத்துட்டாங்க” என்றான்.

ரமேஷ் ஆரம்பக்காலத்தில் சென்னையில் வேலை தேடித் திரிந்த காலத்தில் ஒருமுறை கால்சென்டருக்கான நேர்முகத்தேர்வுக்குப் போனான். ஆரம்பக்கட்டத் தேர்வுகளிலெல்லாம் தேர்ச்சிபெற்று குரூப் டிஸ்கஷன் போனான். எழுதுவது என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடலாம். ஆனால் இங்கே ஆங்கிலத்தில் பேச வேண்டும். அவன் அடிவயிற்றில் ஒரு நாய் புரண்டு படுத்தது.

ஆனால் அவனுக்கே ஆச்சர்யமாக, தங்குதடையில்லாமல் ஆங்கிலத்தில் பேசிவிட்டான். ஆனாலும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைத்த ஒருவனை டீக்கடையில் பார்த்தபோது ஒரு வணக்கம் வைத்து அருகில் போனான்.

“என்ன ஜி, இங்கிலீஷ் நல்லாத்தானே பேசினேன்?”

“நாட் பேட் ஜி. ஆனா உங்க லாங்குவேஜில் எம்.டி.ஐ இருக்கு” என்றான் அவன்.

“அப்படின்னா...?”

“மதர் டங் இன்ஃப்ளூயன்ஸ். நீங்க தமிழில யோசிச்சு இங்கிலீஷ்ல பேசுறீங்க. நீங்க யூஸ் பண்ணுற சில வார்த்தைகளை வெச்சு அதைக் கண்டுபிடிக்கலாம். கால்சென்டருக்கெல்லாம் இங்கிலீஷ்லயே யோசிச்சு இங்கிலீஷ்ல பேசணும் ஜி. உங்க மூளைக்குள்ள இருந்து தமிழைக் கழற்றிவைக்கணும் ஜி” என்றான் அவன்.

‘வேலை கிடைப்பதாக இருந்தால் மூளையையே கழற்றிவைப்பேனே’ என்று தனக்குள் யோசித்தான் ரமேஷ்.

ஆங்கிலம் என்பது பேசிப்பேசிப் பழகுவது என்பதை விற்பனைப் பிரதிநிதி வேலையின் மூலம் ரமேஷ் தெரிந்து கொண்டான். ஒருநாள் மகேஷ் மெசேஞ்சர் சாட்டில் வந்தான். பாவம், இந்தி படித்தாலும் அவன் திராவிட நாட்டைத் தாண்டவில்லை. பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கிறான்.

“அதை ஏன்டா கேக்கிறே, சீன க்ளையண்டுக்கு அவுட் சோர்ஸிங் பார்க்கிறோம். அவனுகளுக்கு இங்கிலீஷே சரியாத் தெரியாதுடா” என்றான் சோகமாக மெட்ரோ ரயில் வேலையில் பெரிய கிரேன் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் இறந்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. மீண்டும் தொடங்கச் சில மாதங்களாகும். இடைப்பட்ட ஐந்து மாதங்களில் ராம்சிங்கின் அப்பாவும் அம்மாவும் சில தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார்கள். ‘ராமேஷ் ஜி’, ‘கொதுமை’, ‘டக்காளி’ என்று பழுதுடன் சில வார்த்தைகளை அவர்கள் பேசிக் கேட்க, நன்றாகத்தானிருக்கும். ராம்சிங் சிரிப்பில் சினேகம் கூடியது. மொழியைத் தாண்டி சின்னச்சின்ன பாவனைகள், உடல்மொழிகள் வழியாகவே ராம்சிங், அவன் அம்மாவுடன் உரையாடிக் கொண்டிருந்தாள் அமுதா.

இப்போதைக்கு வேலைகள் கிடையாது, வாடகை கொடுக்க முடியாது என்பதால் வீட்டைக் காலி செய்யும்வேலைகளில் மும்முரமாக இருந்தார் ராம்சிங்கின் அம்மா. அவன் அப்பா, புகைப்படங்களைத் துணியால் துடைத்துக்கொண்டிருக்கும் போதுதான் செல்வராசு வந்தார். வடமாநிலத் தொழிலாளர்களை ஒப்பந்தப் பணிகளுக்கு அனுப்பும் தரகர் அவர். ரமேஷுக்கும் அவர் பழக்கம்தான். அவர் வீட்டுக்குள் போன சில நிமிடங்களில் ராம்சிங் அப்பாவின் குரல் பெரிதாகக் கேட்டது. பிறகு அவர் கையில் சில ரூபாய்த்தாள்களைத் திணித்துவிட்டு ரமேஷ் வீட்டுக்கு வந்தார் செல்வராஜ்.

“என்ன சார் பிரச்னை?”

“வழக்கமான பிரச்னைதான். செட்டில்மென்ட் பண்ணுறப்போ காசு கூடக் கேட்பாங்க” என்றபடி “தண்ணி கொண்டு வாம்மா” என்றார் அமுதாவைப் பார்த்து.

அவர் பொய் சொல்கிறார் என்பது ரமேஷுக்குத் தெரியும் என்பது செல்வராஜுக்கும் தெரியும். அவர் போனபிறகும் ராம்சிங் அப்பா-அம்மாவின் கூச்சல் கேட்டுக்கொண்டுதானிருந்தது.

“பேசின கூலியைவிட குறைச்சுக் கொடுத்திருக்கான் அந்தாள்” என்றாள் அமுதா.

“தெரியும். சத்தம் கேட்டப்பவே தெரிஞ்சது. கோபத்துக்கும் பசிக்கும் வார்த்தைதான் வேற, மொழி ஒண்ணுதான்” என்றான் ரமேஷ்.

“பாவம்ல, நம்மை நம்பித்தானே அசலூர்ல இருந்து வந்திருக்காங்க?’’

அவர்கள் காலிசெய்து கிளம்பிப்போகும்போது பைநிறைய பலகாரங்கள், கொஞ்சம் பருப்பு, காய்கறிகள் மற்றும் வீட்டில் கூடுதலாக இருந்த ஒரு செல்போனையும் கொடுத்து அனுப்பினாள் அமுதா. ராம்சிங்குக்கு இனிமேல் இங்கு வரமாட்டோம் என்பது புரிந்ததா என்று தெரியவில்லை. எப்போதும்போல் பளீர் என்று சிரித்தான். ஏனோ அவர்கள் போனபோது கண்கள் கலங்கின ரமேஷுக்கு.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ரமேஷ் வீட்டுக்குத் திரும்பியபோது அமுதா வீடியோ காலில் கையாட்டிக்கொண்டிருந்தாள். இவன் எட்டிப் பார்த்தான். மறுமுனையில் ராம்சிங் சட்டையில்லாத உடம்புடன் சிரித்துக்கொண்டிருந்தான். இவனைப்பார்த்ததும் கொஞ்சம் கூடுதலாகச் சிரித்தான். அமுதாவுக்கும் அவனுக்கும் என்ன புரிந்தது என்று தெரியவில்லை. அமுதா போனை இறக்கி தன் வயிற்றைக் காட்டினாள். மூன்றுமாதக் கர்ப்ப மேடு

- தும்பி பறக்கும்....