கட்டுரைகள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 48 - தீர்க்கரேகை

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

மனமும் கைகளில் இருந்த ஓரிணை பாதுகைகளும் கனத்தன சித்திரக்கண்ணனுக்கு. இரு சடலங்களுக்கான கனம் அவை. கையில் பாதுகைகளை ஏந்தி, கவனமாக அதற்கென்று அமைக்கப்பட்ட சிறிய ஆசனத்தில் வைத்து ஏறி அமர்ந்தான் சித்திரக்கண்ணன். எங்கு போகிறோம் என்று தெரியாமல் கிளம்பிய குதிரைகள் மட்டும் உற்சாகத்துடன் விரைந்தன. தேரில் இருந்த சித்திரத்தில் தந்தையும் அண்ணனும் புன்னகையுடன் காட்சியளித்தனர். இறுதியில் எஞ்சியது அதுதான்.

சித்திரனின் மனதில் எண்ணங்கள் சுழன்று எழுந்தன. அவை குதிரையின் வேகத்துடன் போட்டிபோட்டு விரைந்தோடின. தந்தையும் பேரரசருமான ரதமுதல்வன், போர்களில் வெற்றிகளை மட்டுமே கண்டவர். அவருடைய கனத்த பாதுகைகள் பட்ட இடங்களெல்லாம் அவர் ஆளுகைக்குள் வந்தன. வடபுலத்தின் பெரும்பகுதியில் அவரது ‘தீச்சுடர்’ கொடியே பறந்தது. ஆறாண்டுகளாகத்தான் அவர் உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையில் சாய்ந்தார். அண்ணன் கணரதன் அரசுப்பொறுப்பை ஏற்றபோதும் அரியணையில் அமரவில்லை. தந்தையின் பாதுகைகளை அரியணையில் வைத்தே ஆட்சி நடத்திக்கொண்டி ருந்தார். ஒரு நகரமே அழிந்ததைப்போல் தந்தையின் பெருமரணம் நிகழ்ந்தபோது காற்றில் பறந்த கொடித்துணிபோல் அண்ணனின் உயிரும் சேர்ந்து பறந்தது. சடங்குகளெல்லாம் முடிந்தபிறகு வேதியர் சொன்னபடி தந்தையின் பாதுகைகளைப் புனித நதியில் நீராட்டி எடுத்துச் செல்வதற் காகத்தான் சித்திரன் கிளம்பியிருக்கிறான்.

இதுவரை 11 புனித நதிகளில் நீராட்டி தன் பயணம் தொடர்ந்தவன், வானத்தின் துண்டுநிலம்போல் விரிந்துகிடந்த கானுறை மலையைக் கடந்து தும்பாநதியை அடைந்து பாதுகைகளை நீராட்டியெடுத்தான். அப்போதுதான் ஒரு பாதுகையின் முனை அறுந்திருந்ததையும் இன்னொரு பாதுகையின் கீழ்ப்பகுதி பிளந்திருந்ததையும் பார்த்தான். பலமைல் தூரப் பயணத்துக்குப் பிறகு ஒரு வேட்டுவ கிராமத்தை அடைந்தான். தோலால் செய்யப்பட்ட கதவுகளைக் கொண்ட குடிசைகள் நிறைந்த மலைக்கிராமம். எல்லா வீடுகளின் சாளரங்களிலும் தோல் இசைக்கருவிகள் தொங்கின. அந்த இனத்தலைவன் தென்புகன், சித்திரனிடம் இருந்த பாதுகைகளைச் செப்பனிட்டுத் தந்தான். ஏதோ மனதில் தோன்ற அந்த மலைக்கிராமத்திலேயே சிலகாலம் தங்கிவிட்டவன், தலைவரின் மகள் சாக்கியாவை விரும்பி மணம் முடித்தான்.

பாதுகைகள், புனிதநீர் நிரப்பப்பட்ட மண்கலயங்கள், விதவிதமான கனிகளுடன் சாக்கியாவையும் அழைத்துத் தன் அரண்மனைக்கு வந்தான். ஆனால் ஒரு மலையினப் பெண்ணை மணமுடித்து வந்த சித்திரனுக்கு அரண்மனைக் கதவு அறைந்து சாத்தப்பட்டது. ஓர் அறுந்த செருப்பைப்போல வீதியில் விழுந்தான் சித்திரன்.

அஞ்சிறைத்தும்பி - 48 - தீர்க்கரேகை

சாக்கியாவின் மலைக்கிராமத்தில் தங்கி தேனும் கள்ளும் கனியும் இறைச்சியும் நிரம்பிய வாழ்க்கையைத் தனதாக்கிக்கொண்டான். தன் மகன் சிரமணனுடன் சுள்ளி பொறுக்க ப்போனபோதுதான் பெருநெருப்பு எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தான். அங்கே சற்றே தடித்த புல்லைப்போன்ற மெலிந்த ஒருவனும் இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தார்கள். ஒருத்தி மனைவியாக இருக்கவேண்டும். மண் அகற்றப்பட்ட மலைக்கிழங்கைப்போல் இருந்தவள் மகளாக இருக்கவேண்டும்.

“யார் நீங்கள், என்ன செய்துகொண்டி ருக்கிறீர்கள்?” என்றான் சித்திரன். அப்போதுதான் அந்த மெலிந்தவன் தன் கதையைச் சொல்லத்தொடங்கினான். பாஞ்சவ அரச குடும்பத்தின் ஐந்து சகோதரர்களில் ஒருவன் அனுகூலன். பங்காளிகளுடனான நிலத்தகராறின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிக் கானகத்தில் வசித்த அந்த ஐவரில் இளையவனான அனுகூலன், தேர்ந்த நிமித்திகன். வானத்து நட்சத்திரங்களையும் பூமியின் குறிகளையும் கொண்டு மனக்கண்ணில் கோள்களின் நடமாட்டங்களை யூகித்து எதிர்காலங்களைக் கணித்துச்சொல்பவன்.

பங்காளிகளுடனான போர், அனுகூலன் குறித்துத் தந்த நாளில், குறித்த திசையில்தான் தொடங்கியது. தொடக்கத்தில் வெற்றிகளை ஈட்டிய பாஞ்சவர்கள் 48வது இறுதிநாளில் தோற்றுப்போனார்கள். நான்கு மலைக்கிராமங்களை அவர்கள் ஆள்வதற்காகப் பெருந்தன்மையுடன் கொடுத்துவிட்டு, தங்கள் தலைநகரத்துக்குத் திரும்பிவிட்டார்கள் பங்காளிகள். கணிப்பு தவறியதால் அனுகூலனைக் கானகத்திலிருந்து விரட்டியனுப்பி விட்டார்கள் சகோதரர்கள் நால்வரும். இதோ, அனுகூலன் தன்னிடமிருந்த நிமித்திகச் சுவடிகளை எரித்து, அதன்முன் அழுதபடி நின்றுகொண்டிருக்கிறான். அவன் மனதிலும் தீ ஆள்கிறது.

அவனையும் அவன் குடும்பத்தையும் அரவணைத்து கள் கொடுத்து ஆற்றினான் சித்திரன். அணையாது எரிந்த தீ இதயத்தின் அறைகளைத் தின்ன, சில ஆண்டுகளில் அனுகூலன் இறந்துவிட்டான். அவன் மகள் பொய்யாமொழியை மணம் முடித்தான் சித்திரனின் மகன் சிரமணன்.

“இந்தக் கரங்களில்தான் அந்தக் கொலைவாள் மரணத்தின் பற்களாய் மின்னியது. வெட்டுப்பட்ட தலையின் கண்களை என்ன செய்தும் மூட முடியவில்லை. கண்களை மூட விடாமல், இமைகளுக்கு நடுவே ஒரு கேள்விக்குறி நின்றுகொண்டிருந்தது” என்று தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான் மனச்சாந்தன்.

காடுகள் செழித்திருந்தபோது தந்தை சிரமணனும் தாய் பொய்யாமொழியும் மலைக்குரங்களும் நீலநிறப்பறவைகளும் என வாழ்க்கை ருசித்துக்கிடந்தது. ஆனால் காடு அழிக்கப்பட்டு ஒரு பிரமாண்டக் கோயிலும் அருகிலேயே வேதியர் குடியிருப்பும் கட்டப்பட்டபிறகு நகரத்தின் பணியாள்களாக மாறிப்போனது மனச்சாந்தனின் குடும்பம். அவன் இப்போது தண்டனைக்களத்தில் புகழ்பெற்ற கொலையாள். அரசனால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் தலைகளைத் துண்டிப்பதில் கைதேர்ந்தவனாகியிருந்தான்.

அப்படி வெட்டுப்பட்ட தலைகளில் ஒன்றுதான் கட்டடக் கலைஞன் மாசறுநிலவனின் தலை. மயன்தான் பாதாளலோகத்தைக் கட்டியெழுப்பியதாகப் புராணங்கள் கூறுகின்றன. ‘இரண்டாம் மயன்’ என்று தலைமை அமைச்சரால் சிறப்பித்துச் சொல்லப்படுபவன் மாசறுநிலவன். அவன் வரைந்த வரைபடத்திலிருந்துதான் மன்னனின் அத்தனை கட்டடங்களும் எழுந்தன.

வடபுலத்திலிருந்து வந்த சமயத்தின்பால் ஈர்ப்புகொண்டு மன்னன் நாடெங்கும் அதன் வழிபாட்டிடங்களை எழுப்பிக்கொண்டே போனான். உடலெங்கும் கொப்புளங்களாய் எழுந்த அந்தக் கட்டடங்கள் அனைத்தும் மாசறுநிலவனின் மனச்சித்திரத்தி லிருந்தே எழுந்தவை. அவன் ஒருநாள் நாடோடி இனத்தைச் சேர்ந்த நகைவிழியாளைத் திருமணம் செய்துகொண்டபோது நாடே கொந்தளித்தது. இதுவரை அவனால் எழுப்பப்பட்ட புனிதத் தலங்கள் அனைத்தும் தீட்டுப்பட்டதாக வேதியர்கள் கூறியதன்பேரில் அரசன், இரண்டாம் மயனுக்கு மரண தண்டனை விதித்தான்.

அந்தத் தலைதான் மனச்சாந்தனின் கொலை வாளால் வெட்டுப்பட்டது. அவன் கண்களில் தொக்கிய கேள்வியைக் கைகளில் ஏந்தி ஆவேசத் தோற்றமடைந்தாள் நகைவிழியாள். அவளுடன் நாடோடிக்கூட்டமும் இணைந்தது. வேதியர் குடியிருப்பில் வளர்க்கப்பட்ட வேள்வித் தீயிலிருந்துதான் முதல் எரிப்பு தொடங்கியது. இரண்டாம் மயனால் எழுப்பப்பட்ட எல்லாக் கட்டடங்களையும் எரிக்கத் தொடங்கினார்கள் நகை விழியாளும் நாடோடிகளும். தப்பிப்பிழைத்த சில குடும்பங்களில் மனச்சாந்தனின் குடும்பமும் ஒன்று.

போர்க்களம், அணைந்து போன ஒரு பிரமாண்ட அடுப்பைப்போல இருந்தது. மரணம் முடிந்தவரை வாய்நிறைய தின்றதுபோக, ஆங்காங்கே வெட்டுப்பட்டுக் கிடந்தவர்கள், இறுதிவாய்த் தண்ணீருக்காகப் போராடிக்கொண்டிருந்தனர். போர்க்களங்களில் பிணங்களையும் வெற்றியையும் பார்த்து அலுத்துப்போயிருந்தான் உதிரசேனன். இந்தக் கொலைகளைத் தவிர்க்கும்படி தன் மரணம் வரை தந்தை மனச்சாந்தன் வலியுறுத்திக்கொண்டு தானிருந்தார். ஆனால் பிணங்களின் மீது நாட்டப்பட்ட வெற்றிக்கொடியிலிருந்து வீசும் காற்று சுகமளித்தது சேனனுக்கு. கொஞ்சம் கொஞ்சமாய் மனம் இந்த ரத்தக் கொண்டாட்டத்தில் இருந்து விலகிக் கொண்டிருந்தது. தளபதியிடம் நேற்று இரவு நிகழ்ந்த உரையாடல்தான் இருட்டின் நீளத்தை அதிகப்படுத்தியது.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று நம் செய்யுள்கள் சொன்ன வழியைச் சமீபமாக மனம் நாடிக்கொண்டிருக்கிறது. பிணங்களைப் பார்த்துப் பார்த்து மனம் விறைத்துப்போயிருக்கிறது தளபதி” என்றான்.

“சேனா, யாதும் ஊரே என்ற செய்யுள் பாடப்பட்டதன் காலமும் களமும் உனக்குத் தெரியவில்லை. யுத்தமே நமது மொழி. வெற்றியே நமக்கான இலக்கணம். ஒவ்வொரு ஊராய் வெற்றி கொள்ளும்போது நம் ஆளுகைக்குள் வரும் ஊர்கள் எல்லாம் நம் ஊரே. ஆகவேதான் யாதும் ஊரே” என்றான்.

மனம் ஒப்பவில்லை சேனனுக்கு. அவன் புத்த சங்கத்தில் இணைந்து ‘தம்மநந்தன்’ என்னும் பெயர் மாற்றித் துறவியானான். கடைசிப்போர்க்களத்திலிருந்து கைப்பிடி கழன்ற, ரத்தத்தில் நனைந்த தன் குறுவாள் மற்றும் காதறுந்துபோன இரு செருப்புகளையும் எடுத்துவந்திருந்தான். பழைய பாதையை நினைவூட்டும் குறுவாள் அவனுடையது. ஆனால் செருப்புகள் யாருடையவை என்றுதான் தெரியவில்லை.

அஞ்சிறைத்தும்பி - 48 - தீர்க்கரேகை

விறகு டிப்போவின் அருகில் காத்துக்கிடந்தான் கேசவன். அந்தக் கிழவர் இந்த வழியாகத்தான் வரவேண்டும். அவர் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சின் பொறிதான் அவனுக்குள் வெப்பத்தைக் கிளர்த்தி மனம் வேள்வித்தீயாய் எரிந்துகொண்டிருந்தது.

“மயிர்நீக்க ஒரு சாதி, மலமெடுக்க ஒரு சாதி, துணிவெளுக்க ஒரு சாதின்னு ஒதுக்கிவெச்ச மாதிரிதான் சமையலுக்குப் பொம்பளைங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்க. ஒருத்தன் மேல, ஒருத்தன் கீழ, பொண்ணுங்க அடிமைங்கிறதும் ஒழியணும். கேட்டா சாஸ்திரம் சொல்லுதுங்கிறான் வெங்காயம்” என்று ஆரம்பித்து கேசவன் நம்பிக்கொண்டிருந்த அத்தனைமீதும் தீவைத்துக்கொண்டிருந்தார் அந்தக் கிழவர். தீ படபடவென்று பற்றியெரிந்தது.

“நான் சொன்னேன்னு எதையும் ஏத்துக்காதீங்க. வீட்டுக்குப் போய் நல்லா யோசிங்க. நான் சொன்னது சரின்னு தோணுச்சுன்னா ஏத்துக்கங்க, இல்லைன்னா விட்டுடுங்க” என்று அவர் பேசும்போதே கூட்டத்திலிருந்து கிளம்பிவிட்டான். அவர் ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் இப்படிச் சொல்லித்தான் முடிப்பார் என்று சொல்லியிருந்தார்கள். அந்த நேரம் கிளம்பினால்தான், தான் பணிபுரியும் விறகு டிப்போவின் அருகில் மறைந்துநின்று அந்தக் காரியத்தைச் செய்ய முடியும்.

இருட்டில் வெள்ளைத்தாடி அசைய ஒரு ரிக்‌ஷாவில் வந்துகொண்டிருந்தார் அந்தக் கிழவர். அவரைப் பார்த்ததும் தன் மனசுக்குள் தகித்த அத்தனை கங்குகளையும் திரட்டி அதே ஆத்திரத்துடன் தன் கையிலிருந்த செருப்பை வீசியெறிந்தான். கிழவர் பதற்றமானாரோ இல்லையோ, ரிக்‌ஷா ஓட்டி வந்தவர் பதற்றமாகி, ‘`யாருடா அது?” என்று குரல் கொடுத்ததும் கேசவன் இருட்டுக்குள் விரைந்து ஓடி மறைந்தான்.

“எந்தக் களவாணிப்பயன்னு தெரியலைங்கய்யா. பயந்தாங்கொள்ளி ஓடிட்டான்போல. வாங்க போவோம்” என்றார் ரிக்‌ஷாகாரர்.

“அட இருங்க, அந்த ஒத்தைச்செருப்பை வெச்சு அவர் என்ன பண்ணப்போறாரு, நான்தான் என்ன பண்ணப்போறேன்? எப்படியும் அடுத்த செருப்பை வீசுவாரு. காத்திருப்போம்” என்று தன் கையிலிருந்த தடியை ரிக்‌ஷா இருக்கையில் சாய்த்துவிட்டு தாடியைத் தடவியபடி காத்திருந்தார் அந்தக் கிழவர்.

- தும்பி பறக்கும்....