கட்டுரைகள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 50 - தொடர்பு எல்லைக்கு அப்பால் ஞானம்!

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

குறுங்கதை

ழை வரும்போல்தான் இருந்தது. தயாளன் தப்படிகளை விரைவாக எட்டிப்போட்டான். மழை வருவதற்குள் வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்தபடி டிஷர்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்துப் பார்த்தான். மணி 7.10. எத்தனை அடிகள் நடந்திருப்போம் என்று பார்த்தான். 1230 அடிகளைக் காட்டியது செயலி. 2500 அடிகள் நடப்பது வழக்கம். திரும்பி விடலாம் என்று நினைத்தான். உள்ளே சட்டைப்பையில் வைக்கும் போதுதான் இரவு வந்த ஒரு மிஸ்டு காலைப் பார்த்தான். நசீர் அழைத்திருக்கிறான். ஏன் நள்ளிரவு அழைத்தான் என்று தெரியவில்லை. இந்நேரம் எழுந்தி ருப்பானா என்று தெரியாது. எதற்கும் அழைத்துப்பார்ப்போம் என்று அழைத்தபோது நெடுநேரம் ஒலித்து அடங்கும் நேரம் போனை எடுத்த நசீரின் குரலில் சோம்பல் படர்ந்திருந்தது.

“என்ன நசீர், எழுப்பிட்டேனா, ஸாரி” என்றான் தயாளன்.

“பரவாயில்லை. நேத்து நைட் உங்க அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமப போயிடுச்சு. அதுக்குத்தான் கூப்பிட்டேன்.”

“என்னாச்சு?” என்ற பதற்றத்தில் குளிரும் சேர்ந்துகொள்ள உடல் நடுங்கியது.

“அம்மாவுக்கு...” நசீர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தயாளனின் உடல் குலுங்கியது. நல்லவேளை, கீழே விழுந்திருப்பான். அருகிலிருந்த மின்கம்பத்தைப் பிடித்து சுதாரித்து நின்றுவிட்டான். பத்து விநாடிகளுக்குப் பிறகுதான் என்ன நடந்தது என்று புரிந்தது. அவன் பின்னால் வேகமாய் வந்த பைக்கில் இருந்த இளைஞர்கள் தயாளனின் கைகளில் இருந்த செல்போனைப் பறித்துச் செல்கிறார்கள். பதற்றத்தின் வெப்பம் பரவ அருகில் கிடந்த கல்லை எடுத்து தூர எறிந்தான். அது கீழே கிடந்த ஒரு காலி மதுபாட்டிலில் பட்டு விழுந்தது. பைக்கின் பின்சீட்டிலிருந்து திரும்பிப்பார்த்த இளைஞன், தாடி வைத்திருந்தான். இவனைப் பார்த்துச் சிரித்தபடி கைகாட்டினான். பைக் சென்றுவிட்டது.

தயாளனுக்கு அவமானமும் இயலாமையும் ஆத்திரமும் உடலை அழுத்த, தன்னையறியாமல் கண்களில் நீர் கசிந்தது. இந்தப் பதற்றத்தில் நசீரையும் அம்மாவையும் மறந்துவிட்டிருந்தான். சில விநாடிகளுக்குப் பிறகு இயல்புக்கு வந்தவன் நடக்கத்தொடங்கினான். வீடு செல்லும் வழி நீண்டுகொண்டே போனதைப்போலிருந்தது.

அஞ்சிறைத்தும்பி - 50 - தொடர்பு எல்லைக்கு அப்பால் ஞானம்!

அப்போதுதான் பானு எழுந்து டீ போட்டுக் கொண்டிருந்தாள். அவளிடம் பதற்றத்துடன் நடந்ததைச் சொன்னான். அவள் போட்டது போட்டபடி, நாற்காலியில் இடிந்துபோய் உட்கார்ந்தாள். பானுவின் போனில் நல்லவேளையாக நசீரின் எண் இருந்தது. அழைத்துப்பேசினான். வழக்கமாக அம்மாவுக்கு வரும் இளைப்பு நோய்தான். இப்போது ஒன்றும் பிரச்னையில்லை. எதற்காகக் கவலைப்படுவது என்று தெரியாமல் சோர்ந்துபோய் அமர்ந்தான். பானுவின் போனில் தயாளனின் அலுவலக ஊழியர்கள் யார் எண்ணும் இல்லை. என்ன யோசித்தும் எந்த எண்ணும் நினைவுக்கு வரவில்லை. பதற்றமும் கவலையும் சூழ, குளித்துக்கிளம்பினான்.

“பானு, உன் போனை எடுத்துட்டுப்போறேன்.”

“அது சார்ஜ் நிக்காதே. அரைமணிநேரத்தில ஆப் ஆகிடும். சார்ஜ் போட்டுக்கிட்டேயிருக்கணும்.”

“எல்லாத்தையும் இப்ப சொல்லு.”

“நான் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கேன். நீங்கதான் போனை ரிப்பேர் பண்ணியே தரலை.”

உண்மைதான். வேறுவழியில்லை. இப்போதைக்கு பானுவின் போனையும் சார்ஜரையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

இந்தப் புது வேலைக்குச் சேர்ந்து பத்துநாள்கள்தான் ஆகின்றன. புதுப் போன் வாங்க வேண்டுமானால் குறைந்தது 12,000 ரூபாய்க்குக் குறைந்து நல்ல போன் இல்லை.

அலுவலகம் சென்றதும் தன் போன் திருடப்பட்ட தகவலைச் சொன்னான். மதியத்துக்குள் ஆறுபேர் துக்கம் விசாரித்திருப்பார்கள். தங்களுக்குத் தெரிந்த, தெருவில் இருந்த, ஊரைச் சேர்ந்தவர்களின் போன்கள் இப்படித் திருடப்பட்ட கதையைச் சொன்னார்கள். அப்படி அணுக்கமான தகவல்கள் இல்லாதவர்கள் பத்திரிகைகளில் படித்த, தொலைக்காட்சியில் பார்த்த செல்போன் திருட்டுகளைப் பற்றிச் சொன்னார்கள்.

“இன்ஷூரன்ஸ் போட்டிருக்கீங்களா ஜி? போன் காணாமப்போச்சுன்னா புது மொபைல் தருவாங்க” என்றான் கோபி. இந்தப் பத்து நாள்களில் ஓரளவுக்குப் பழக்கமானவன்.

“அதெல்லாம் சாதாரணமா கொடுக்க மாட்டாங்க சார். போன் வாங்கிறப்ப அப்படித்தான் சொல்வாங்க. அதுக்கப்புறம் போலீஸ் கம்ப்ளெயின்ட் காப்பி வேணும்னு சொல்வாங்க. அது ஈஸியாக் கிடைக்காது. எல்லாம் கொண்டுபோய்க்கொடுத்தாலும் அது நொள்ளை, இது நொள்ளை, க்ளெய்ம் பண்ண முடியாதுன்னு சொல்வாங்க” என்றார் கேஷியர் அல்போன்ஸ்.

தயாளனுக்கு செல்போன் இல்லாத நிலை, கைகால்கள் வெட்டப்பட்டதைப் போல் தானிருந்தது. இயல்பாக எந்த வேலையும் பார்க்க முடியவில்லை. யாரைத் தொடர்புகொள்வதாக இருந்தாலும், சிறுகல்லை நகர்த்தும் வேலையாக இருந்தாலும் செல்போன் அவசியமாகிவிட்டது. ‘ஆள்பாதி அலைபேசி பாதி’ என்றொரு வாக்கியம் மனதுள் வந்துபோனது. பானுவின் போனைப் பயன்படுத்துவது என்பது கிழிந்த உள்ளாடையுடன் அலைவதைப்போலிருந்தது. பத்து நிமிடத்துக்கு மேல் ஆழ் உறக்கத்துக்குள் சென்றது. எவ்வளவு தட்டியும் எழுப்ப முடியவில்லை. எல்லா இடங்களிலும் சார்ஜருடன் அலையவும் முடியாது.

அவன் வண்டியில் திரும்பும்போது தொலைந்துபோன மொபைல்போனின் ரிங்டோன் கேட்டது. அனிச்சையாக சட்டைப்பையைத் தொட்டுப்பார்த்தவன், உடனே உணர்ந்து திரும்பிப்பார்த்தான். எல்லாம் எண்ணக்கானல், எதார்த்தமல்ல. இந்த உணர்வு அவ்வப்போது தயாளனுக்கு வருவதுண்டு. நடைப்பயிற்சி செல்லும்போதோ, வண்டியில் செல்லும்போதோ தன் மொபைல் ரிங்டோன் காதுக்குள் சன்னமாக ஒலிக்கும். ஆனால் போனை எடுத்துப்பார்த்தால் யாரும் அழைத்திருக்க மாட்டார்கள். மேலதிகாரியிடம் இருந்து வசை வரும் என்ற உள்ளுணர்வு இருக்கும்போதோ மனைவியிடம் சண்டை போட்டுவிட்டுச் செல்லும்போதோ இந்த ரிங்டோன் சத்தம் காதுக்குள் ஒலிக்கும். வழக்கமான ஓசைவலிமையுடன் அல்ல, மிகமிகச் சன்னமாக. ஆனால் போனில் அழைப்பு வந்திருக்காது. பொதுவாகவே கூட்டத்தில் இருக்கும்போது யார் போனுக்கு அழைப்பு வந்தாலும், தன்னிச்சையாக தன் போனை எடுத்துப்பார்க்கும் பழக்கம் பலருக்கு இருப்பதைப்போல்தான் தயாளனுக்கும் இருக்கிறது. அரைமணி நேரத்துக்கு ஒருமுறை போன்காலோ மெசேஜோ வந்தாலும் வராவிட்டாலும் போனை எடுத்து நிலை சோதிப்பதே அனைவரின் வழக்கமாக இருக்கிறது. இவை எதுவும் நிகழாத இன்றைய நாள், தன் வாழ்விலிருந்து கழித்துக் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட காலண்டர் காகித நாள் என்றே நினைத்துக்கொண்டான் தயாளன்.

அல்போன்ஸ் சொன்னதைப்போல காவல்நிலையம் சென்று காணாமல்போன அலைபேசி குறித்துப் புகார் கொடுக்கலாமா என்று நினைத்தான். ஆனால் அவன் இதுவரை ஒருமுறைகூட காவல்நிலையம் சென்றதில்லை. வரும்வழியில் பானுவின் செல்போனுக்கு பேட்டரி மாற்றலாம் என்று விசாரித்துப்பார்த்தான். 2000 ரூபாய் ஆகுமாம். இப்போதைக்கு வாய்ப்பில்லை. புதுப் போன் வாங்குவது, பேட்டரி மாற்றுவது இரண்டும் சம்பளம் வந்தால்தான் சாத்தியம்.

வீட்டுக்கு வந்ததும் கேம் விளையாட போன் வேண்டும் என்று ரித்திகா அடம் பிடித்தாள். ஆறு வயதுதான் ஆகிறது. சாப்பிடும்போதில் இருந்து அவளுக்கு போனில் விளையாட வேண்டும். போன் காணாமல்போய்விட்டது என்பதை அவளுக்கு விளக்க முடியவில்லை. பானு குழந்தையின் முதுகில் நாலு சாத்து சாத்தியதும் பெருங்குரலெடுத்து அழுதது. டிவியில் போகோ சேனல் வைத்ததும்தான் சமாதானமானது.

இரவு உறங்கும்போதும் தயாளனுக்குத் தன் மொபைல் போனின் ரிங்டோன் கேட்டது. உடனே எழுந்துவிட்டான். வியர்வை கசகசத்தது. மணி எத்தனை என்று தெரியவில்லை. போன் இருந்தால் எடுத்துப்பார்த்திருக்கலாம். கடிகாரம் பார்க்க விளக்கைப்போட வேண்டும். ஜன்னலின் திரைகளை விலக்கி வெளியில் பார்த்தான். நள்ளிர விருக்கும். அந்தத் தெருவிளக்கின் வெளிச்சத்தில் எதிர்வீட்டு அப்பார்ட்மென்ட் மாடியில் ஓர் இளைஞன் சட்டையில்லாமல் போனில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். ‘இந்த நேரத்தில் என்னத்த பேசுவானுகளோ?’ என்று நினைத்தான். பாத்ரூமில் சிறுநீர் கழிக்கும்போது, அதன் சத்தம் அவன் ஆத்திரத்தைக் காட்டியது.

காலையில் ஒரு செல்போன் என்னவெல்லாம் செய்கிறது என்று தயாளன் ஒரு பேப்பரில் பட்டியலிட்டான். அழைப்பு, செய்திகள், படங்கள், வரைபடம், உடல்நலம் குறித்த தகவல்கள், நினைவூட்டல்கள், கால்குலேட்டர், அலாரம், வங்கிக் கணக்கு, திரைப்படம், இசை, பக்தி, காமம், அரசியல், தட்பவெப்ப நிலை, பயணம், வணிகம்...

அம்மா, மனைவி, குழந்தையைவிட செல்போன் கூடுதலான உறவாகத் தெரிந்தது.

“இந்தப் போனை எடுத்துட்டுப்போங்க. சார்ஜ் நிக்கும்” என்று பானு எடுத்துக்கொடுத்தது, எந்த நவீன வசதிகளும் இல்லாத, பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய போன். வாங்கி சட்டைப்பையில் வைத்துக்கொண்டான்.

அஞ்சிறைத்தும்பி - 50 - தொடர்பு எல்லைக்கு அப்பால் ஞானம்!

இப்போதும் அவனுக்கு வண்டியில் செல்லும்போதும் சமயங்களில் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும்போதும் தன் மொபைல் ரிங்டோன் கேட்டது. தன் பழைய பள்ளி நண்பன் கான்ஸ்டபிளாக இருந்தது நினைவுவர அவனை அழைக்கலாம் என்று முடிவெடுத்து, நசீரிடம் அவன் எண் வாங்கினான். கான்ஸ்டபிள் நண்பனிடம் பேசியபோது அவன் விசித்திரமான கதை சொன்னான். போலீஸ் சீருடையுடன் அவன் சினிமாப்பாடலுக்கு நடனமாடி டிக்டாக்கில் ஏற்றியது தொலைக்காட்சி, சமூகவலைதளங்களில் செய்தியாகி, சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஆறுமாதங்கள் ஆகிவிட்டனவாம்.எதற்கெல்லாம் போனைப் பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்துக்கொண்டான் தயாளன்.

போன் வாங்குகிறோமோ இல்லையோ, எதற்கும் பார்த்துவைப்போம் என்று போகிறவழியில் மொபைல் ஷோரூம் போனான். இவன் அறிந்திராத பல வசதிகளுடன் மொபைல் போன்கள் முகம் காட்டின. போன்களை மட்டுமே இவன் அறிந்திருந்தான். ஆனால் அதற்கான துணைக்கருவிகளே பத்துக்கும் மேற்பட்ட வகைகளில் இவனது பாதிச் சம்பள விலையில் இருந்தன.

பைக் சிக்னலில் நிற்கும்போது வழக்கமாக போனை எடுத்துப்பார்த்தான். எல்லோருக்குமே இருக்கும் பழக்கம்தான். ஆனால் அந்த டப்பா போனில் எதுவுமில்லை. கேம் பகுதியைத் திறந்து பார்த்தான். சுருள் சுருளாகப் பழைய பாம்பு கேம் இருந்தது. செத்த பாம்பு.

“எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுகிறாய். இப்போ உங்க மனசு முழுக்க செல்போன் நினைப்பு. மனசு அலைபாயுறதைத் தடுக்கணும்னா தியானம் பண்ணணும்” என்றான் கோபி. அவன் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவன் என்பது பழகிய பத்துநாள்களில் தெரிந்தது.

“உயிர்ச்சக்தியைத் திரட்டி நெற்றிப்பொட்டில் நிறுத்தணும் ஜி.”

“அப்புறம்?”

“அதைக் கொஞ்சம் கொஞ்சமாக் கீழே இறக்கணும்” என்றான். ‘இறக்கத்தானே போகிறார்கள், அதை ஏன் ஏற்றவேண்டும்?’ என்று தோன்றியது தயாளனுக்கு.

“உங்களுக்கு ஒரு வீடியோ வாட்ஸப் அனுப்புறேன், பாருங்க” என்றான் கோபி.

“இந்தப் போன்ல வாட்ஸப் கிடையாது.”

“ஸாரி ஜி, இந்தாங்க என் போன்லயே பாருங்க” என்று ஒரு வீடியோவைக் காட்டினான்.

ஆன்மிகத்துக்கே உரிய பின்னணி இசை, சம்ஸ்கிருத வார்த்தைகள் ஒலிக்க, ஒரு சாமியார் மூடியிருந்த கண்களைத் திறந்தார்.

“என்ன போன் ஜி?”

“ஒன் ப்ளஸ். அவர் கண்களில் கருணை தெரியுதுல்ல?”

“போன் என்ன ரேட்?”

“சொல்றேன். வீடியோவைக் கவனமாப் பாருங்க.”

உண்மையிலே அவர் குரல் காந்தத்தை அரைத்துத் தடவியதைப்போல வசீகரமாகவும் மென்மையாகவும் இருந்தது. பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்க அவர் குழந்தைகளுக்குப் பாடம் சொல்வதைப்போல பேசிக்கொண்டே போனார்.

“நீங்கள் யார்? ‘நான்’ என்பது என்ன? எண்ணங்கள், செயல்கள், நினைவுகள், இவைதானே ‘நான்?’ இப்போது உங்கள் ஞாபகத்தின் வலிமை என்ன? உங்களால் உங்கள் திருமண நாள், மனைவியின் பிறந்தநாளைச் சரியாகச் சொல்லமுடியவில்லை. அதிகபட்சம் பத்துப்பேருக்கு மேலான போன் எண்கள் நினைவில் இல்லை. மிகச்சிறிய கணக்குக்குக்கூட கால்குலேட்டரை நாடுகிறீர்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் உங்களைவிட உங்கள் கையிலிருக்கும் செல்போன் திறம்படச் செய்கிறது. அப்படியானால் செல்போனைவிட நீங்கள் சிறியவரா, செல்போன்தான் உங்கள் மாஸ்டரா? நீங்கள் என்பது உங்கள் செல்போன்தானா? ஆன்மா என்பது என்ன, உங்கள் செல்போனில் இருக்கும் பேட்டரியா? பேட்டரி தீர்ந்து விட்டால்தான் செல்போன் செத்துப்போகிறதே! அப்படியானால் உங்கள் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? வாழ்க்கையின் உண்மையான அர்த்தம், ஞானம், பேரானந்தம் என்பது, உங்கள் பாஷையில் சொல்லப்போனால் செல்போன் டவர் போல. அதுதான் உங்களை இயக்குகிறது. ஆனால் நீங்கள் அதை அறிவதில்லை. அறியாமல் உங்கள் லௌகீக வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்களில் அமிழ்ந்துபோகிறீர்கள். அப்படித்தான் நீங்கள் உங்கள் செல்போன் டவரிலிருந்து வெகுதூரம் விலகிப்போகிறீர்கள். உங்கள் தொடர்பு எல்லைக்கு அப்பாலிருக்கிறது பேரானந்தம்.”

கேட்க சுவாரஸ்யமாகத்தானிருந்தது.

“Infinite Wisdom - இதுதான் எங்க ஆன்மிகக் குழுமம். சுவாமிஜிதான் எங்கள் திசைகாட்டி. அடுத்த மாதம் சென்னையில் அவர் பங்ஷன் இருக்கு. நான் சொல்ற அட்ரஸுக்குப் போய் புக் பண்ணிக்கங்க” என்றபடி, மடித்துவைத்திருந்த துண்டறிக்கையை எடுத்துக்கொடுத்தான் கோபி. அவன் விரல்நுனியிலும் துண்டறிக்கையின் மடிப்புகளிலும் பணிவு.

அஞ்சிறைத்தும்பி - 50 - தொடர்பு எல்லைக்கு அப்பால் ஞானம்!

அந்த அலுவலக வரவேற்பறையில் இருந்த பெண், மேம்பட்ட உடையணிந்திருந்தார்.

“ஒன்லி எயிட் டிக்கெட்ஸ் ஆர் அவைலபிள். உங்க பேமிலியில் எத்தனைபேர் சார்?” என்றார்.

“நான், மனைவி, குழந்தை.”

“குழந்தைக்கு எத்தனை வயசு?” என்று கேட்டுத் தெரிந்துகொண்டதும், “12 வயசு வரைக்கும் அனுமதி இலவசம். உங்க ரெண்டுபேருக்கு மட்டும் புக் பண்ணினாப் போதும். பே பண்ணுறீங்களா?” என்றார் அந்தப் பெண்.

ஒருகணம் திடுக்கிட்ட தயாளன், “எவ்வளவு?” என்றான்.

“ஒருத்தருக்கு 5000 ரூபாய்தான்” என்றதும் எரிமலையிலிருந்து ஒரு கரண்டி நெருப்பை அள்ளித் தலையில் கொட்டியதைப்போலிருந்தது.

“இல்லைங்க. நான் நாளைக்கு வர்றேன்” என்று வேகமாக நகர்ந்தான் தயாளன்.

“ஆன்லைன் புக்கிங் பண்ணலாம். ஆனா சீக்கிரம் பண்ணுங்க” என்றபடி, ஒரு தகவல் துண்டறிக்கையை எடுத்துக்கொடுத்தார். அவசரமாக வாங்கி, பேன்ட் பாக்கெட்டில் வைத்தபடி வெளியில் வந்தான்.

வண்டியை எடுக்கும்போது எதிரில் இருந்த பிரமாண்ட பேனரைப் பார்த்தான்.

‘நீ பறிகொடுத்ததாய் நினைப்பது இங்கேதான் இருக்கிறது. தொலைத்ததைக் கண்டடைவாய்’ என்ற வாசகம் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. ‘கல்லை எடுத்து எறியலாம்’ என்று தோன்றிய எண்ணத்தை அடக்கிக்கொண்டான். வாயிலில் சொற்ப கூட்டம் இருந்தது.

‘புக்கிங் செய்ய’ என்று அலைபேசி எண்கள் எழுதப்பட்டிருக்க, பேனரில் கைகளைக் காட்டியபடி தாடிக்குள் சிரித்தார் குரு ஜி.

- தும்பி பறக்கும்...