சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அஞ்சிறைத்தும்பி - 52 - மாமிசம்

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

ரத்தத்தைவிட அதிகமாக கல்யாணராமன் உடம்பில் சந்தேகம் ஊறியது. பழையகாலம் போல அவளைப் பின்தொடர்ந்து கண்காணிக்க முடியாது.

“வார்த்தையிலிருந்து மாம்சம் உருவானது. கடவுள் முதலில் ஆணைத்தான் படைத்தாராம். அப்புறம் ஆணின் விலா எலும்பை எடுத்துப் பெண்ணை உருவாக்கினாராம். இதிலிருந்து என்ன தெரியுது? ஆம்பளைக இடுப்பை ஒடிக்கிறதே பொம்பளைங்க வேலை. ஆண் பலவீனமாயிருக்கக் காரணம் பொண்ணுதான். ஜஸ்ட் ஜோக்கிங்.”

“பொண்ணுங்க எலும்பாவே இருக்கட்டும். எலும்புக்காக நாக்கைத் தொங்கப்போட்டு யாரு அலைவாங்க? சரியாத்தான் கடவுள் ஆம்பளைகளை உருவாக்கியிருக்கார்.”

அஞ்சிறைத்தும்பி - 52 - மாமிசம்

“அப்போ ஆம்பளைங்களை நாய்ங்கிறியா?”

இப்படியொரு வார்த்தை-மாம்சப் போரில்தான் பிரச்னை உருவானது. அப்படியும் சொல்வதற்கில்லை. ஏராளமான பிரச்னைகளில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்.

கிளாராவும் கல்யாணராமனும் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டார்கள். அவள் ஆங்கிலப்பேராசிரியை. இவன் வேதியியல் பேராசிரியர். திருமணமாகி ஒரு வருடம் வரை செம்புலப் பெயல்நீர் வாழ்க்கைதான். மூன்றாண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு குழந்தை உருவாகாதது பிரச்னைகளுக்கான ஒரு காரணம். இன்னும் சொல்லப்போனால் ‘குழந்தை பிறக்காமலிருப்பது பிரச்னைகளைக் கிளற இவனுக்கு ஒரு வாய்ப்போ?’ என்றும் கிளாரா நினைத்தாள்.

ரத்தத்தைவிட அதிகமாக கல்யாணராமன் உடம்பில் சந்தேகம் ஊறியது. பழையகாலம் போல அவளைப் பின்தொடர்ந்து கண்காணிக்க முடியாது. அதற்கான அவசியமும் இல்லை. அவளது தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், வாட்ஸப் செய்திகள் என அனைத்தையும் கண்காணித்து சந்தேகத்தின் கிளை பரப்பினான்.

அஞ்சிறைத்தும்பி - 52 - மாமிசம்

ஒருவருடத்துக்குப் பிறகு கல்யாணராமன் பல்லாயிர ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால ஆயுதங்களை மனதில் வைத்திருக்கும் சாடிஸ்ட் என்பதை கிளாரா கண்டுகொண்டாள். எல்லா சாடிஸ்ட்களுக்கும் இருப்பதைப்போல சிகரெட்டால் சூடுபோடும் பழக்கம் அவனுக்கும் இருந்தது. ஆனால் அவன் ஒரு வலிமையான சாடிஸ்ட் இல்லை. சரியாகச் சொல்லப்போனால், கிளாரா ஒரு பலவீனமான அடிமையில்லை என்பதால் கல்யாண், அவன் கைகளிலேயே அடிக்கடி சூடுவைத்துக்கொள்வான். சண்டை முற்றிப்போகும்போது கைவிரல்களைக் கிழித்து ரத்தத்தால் கடிதம் எழுதுவான்.

முதலில் பரிவு தோன்றியது கிளாராவுக்கு. ஆனால் சூடும் ரத்தமும் ஆறிப்போய் வெறுப்புதான் தோன்றியது. தன் மாம்சத்தைக் கிழித்து ஆயுதமாக்கும் கோழைகள் இந்த சாடிஸ்ட்கள். ‘கடவுள் எலும்பிலிருந்து பெண்ணை உருவாக்கினாரோ இல்லையோ, பாம்பின் விஷத்தை ரத்தமாகவும் தேளின் கொடுக்கை மாம்சமாகவும் கொண்டு கல்யாணராமனை உருவாக்கினார்’ என்று தோன்றியது கிளாராவுக்கு. மனமுறிவு மணமுறிவுக்கு இட்டுச்சென்றது.

மெய்ப்பொருள் - பெயரைப்போலவே ஆளும் விசித்திரமானவன்தான். கருத்தரங்கு ஒன்றில் பழக்கம். முதல் சந்திப்பிலேயே கிளாரா இதைச் சொன்னாள்.

“உங்க பேரு ரொம்ப வினோதமா இருக்கு”

“பேரோட அர்த்தம் புரியுதுல்ல?”

“ஏங்க இது புரியாதா, எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. இங்கிலீஷ் பேராசிரியையா இருந்தாலும் திருக்குறள் தெரியும்.”

“அர்த்தம் புரியாத பெயர்கள்தான் இப்ப இயல்புன்னு நம்பப்படுது. அர்த்தம் புரிஞ்சா அது வினோதமான பெயர் ஆயிடுது.”

“நல்லாப் பேசுறீங்க” என்ற கிளாரா அவன் ஆய்வுப்பொருள் பற்றித் தெரிந்தபோது இன்னும் ஆச்சர்யப்பட்டுப்போனாள். உலகம் முழுவதுமுள்ள மாமிச உணவுப்பழக்கங்கள் பற்றியதுதான் அவன் ஆய்வு.

“இதெல்லாமா ஆய்வு பண்ணுவாங்க?”

“என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க... மனிதன் உருவாகும்போதே மாமிசமும் உருவாகிடுச்சு.”

அஞ்சிறைத்தும்பி - 52 - மாமிசம்

“தெரியும். எலும்புத்துண்டிலிருந்துதான் பொண்ணுங்க உருவானாங்க”

சிரித்த மெய்ப்பொருள் “நீங்க சொல்றது ஆன்மிகம். நான் சொல்றது அறிவியல். மனிதர்களின் முதலுணவு இறைச்சிதான். அதுதான் அவனுக்குத் தேவையான ஆற்றலைக்கொடுத்துச்சு. இறைச்சியை மெல்லவும் குத்திக்கிழிக்கவும் ஏற்றமாதிரி நம்ம பல், தாடை அமைப்பே உருவாகியிருக்கு” என்றான்.

“தெரியும். ஆண்களோட நாக்குகூட குத்திக்கிழிக்கிறதுக்குத்தான் உருவாகியிருக்கு.”

வெடித்துச் சிரித்த அவன், “உங்க கதை எனக்குத் தெரியும் கிளாரா” என்றான்.

“அதுதான் யுனிவர்சிட்டி முழுக்கத் தெரியுமே. இப்ப எதுக்கு அந்த ஆராய்ச்சி? உங்க ஆராய்ச்சி பத்திச் சொல்லுங்க.”

“உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். மனிதனோட முதல் கண்டுபிடிப்பு நெருப்பு. அது வெளிச்சத்துக்கு மட்டுமல்ல, மாமிசத்தைச் சுட்டுத்தின்னவும் உதவுச்சு.”

“அப்போ நாகரிகம் அப்பயிருந்துதான் தொடங்குச்சுன்னு சொல்லலாமா?”

“அப்படியில்லை. பச்சை மாமிசத்தில் நாகரிகமில்லை, சுட்ட மாமிசத்தில் நாகரிகம் இருக்குன்னு பார்க்கிறதே ஒரு அதிகாரம்தான்.”

“ஹலோ, அப்போ நரமாமிசம் சாப்பிடறதையும் தப்பு இல்லைங்கிறீங்களா?”

“எல்லாரும் ஆளாளுக்கு இடுப்பில ஒரு தராசைக் கட்டிக்கிட்டு அலையறோம். எதிரில் வர்ற மனுஷியையோ மனுசனையோ அதில உக்கார வெச்சு எடைபோட ஆரம்பிச்சிடறோம். தப்பு, சரியெல்லாம் நம்ம தராசைப் பொறுத்தது. இதைச் சாப்பிட்டா நாகரிகம், அதைச் சாப்பிட்டா அருவருப்புங்கிறதெல்லாம் சரியான விஷயம் கிடையாது. உம்பர்ட்டோ ஈக்கோன்னு ஒரு இத்தாலிய தத்துவவியல் அறிஞர், ‘ஒரு கலாசாரத்தை இன்னொரு கலாசாரத்தால் மதிப்பிட முடியாது’ன்னு சொன்னார். நீங்க கேட்டமாதிரிதான் அவர்கிட்ட கேட்டாங்க, ‘நரமாமிசம் சாப்பிடறவங்ககிட்ட என்ன சொல்வீங்க?’ன்னு. ‘என்னைச் சாப்பிட வேணாம்’னு கேட்டுக்குவேனே தவிர என் உணவுப்பழக்கத்தால் அவங்க பழக்கத்தை அளவிட மாட்டேன்னு சொன்னார்.”

“நல்ல விளக்கம். செமினார் ஆரம்பிக்கப்போகுது போகலாம். மதியம் லஞ்ச் நர மாமிசம்தானா?”

“இதுவரைக்கும் அந்தப் பழக்கம் உருவாகலை. கவலைப்படாதீங்க. நர மாமிசம் சாப்பிட்டாலும் உங்களைச் சாப்பிட மாட்டேன்.”

சிரிப்புடன் அரங்கத்துக்குள் நுழைந்தார்கள்.

மெய்ப்பொருள் உலகம் முழுக்கச் சுற்றிக்கொண்டிருந்தான். இந்தியாவில் மூன்றுமாதங்களுக்கு ஒருமுறை பயணம். அதுவும் தமிழகத்தில் எப்போதாவதுதான். கிளாராவுக்கும் அவனுக்குமிடையில் நல்ல நட்பு உருவாகியிருந்தது. தன் ஆய்வு தொடர்பான விஷயங்களை சுவாரஸ்யத்துடன் பரிமாறிக்கொள்வான்.

“ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் - இந்த அஞ்சும்தான் பொதுவா நமக்குத் தெரிஞ்ச மாமிசம். ஆனா இதைத்தாண்டியும் நிறைய உயிரினங்களைச் சாப்பிடறாங்க. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். பன்றிக்கறி முஸ்லிம் சாப்பிட மாட்டாங்க. ஹராம்- விலக்கப்பட்டது. ஆனால் எந்த மதத்திலும் விலக்கப்படாத மாமிசம் மீன் இறைச்சி. உலகத்தின் ஆதி இறைச்சியில் ஒண்ணு. ஆறு, குளம், கடல் பின்னால அணைக்கட்டுன்னு விதவிதமான மீன்களில் விதவிதமான ருசி. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டின்னு தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெரும்பாலும் கடல் சாராத ஊர்கள்தான். அங்கெல்லாம் ஒருகாலத்தில் ஆட்டிறைச்சியும் கோழி இறைச்சியும்தான் பிரதான உணவு. இப்போ நீரிழிவு நோய் காரணமா அங்கேயும் அதிகம் மீன் சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. பெரும்பாலும் ராமநாதபுரத்தில் இருந்துதான் மீன் வருது. மதங்களைத் தாண்டிய மாமிசம் மீன். யேசு மீனையும் அப்பத்தையும் பலபேருக்குப் பகிர்ந்த கதை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இந்து மதத்திலகூட மச்ச அவதாரம் உண்டு.”

அஞ்சிறைத்தும்பி - 52 - மாமிசம்

“ஆனா அது மீன் அவதாரம்தான். மீன் சாப்பிடச் சொல்லலை.”

“சொல்லலைதான். ஆனா சாப்பிடக் கூடாதுன்னும் இல்லை. கண்ணப்ப நாயனார் கதை கேள்விப்பட்டிருப்பீங்க. அவர் வேட்டையாடி விதவிதமான மாமிசத்தைக் கடவுளுக்குப் படைச்சார். அவரும் ஏத்துக்கிட்டார். இதைச் சாப்பிடலாம், இதைச் சாப்பிடக்கூடாதுன்னு கடவுள் தடுக்கலை. மனுசங்கதான் தடுக்கிறாங்க.”

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மனித உரிமைக் கருத்தரங்கில் கலந்துகொண்ட மெய்ப்பொருள், அவன் பதிவுசெய்த வீடியோ ஒன்றை அனுப்பிவைத்தான். கிராமப்புறத்து இந்தியில் பேசிய ஓர் இளைஞனின் மார்புமீது ஆங்கிலத்தில் சப்-டைட்டில் ஓடியது.

“நான் உத்தரப்பிரதேசத்தில் ------------- கிராமம். மூணு தலைமுறையா விவசாயக்குடும்பம். எங்ககிட்ட மூணு பசுமாடும் ஒரு காளைமாடும் இருந்துச்சு. திடீர்னு ஒரு பசுமாட்டுக்கும் காளைக்கும் கழிச்சல் வியாதி வந்திடுச்சு. உள்ளூர் வைத்தியர் என்னென்னவோ மருந்து கொடுத்தும் நிக்கலை. கண்ணு ரெண்டும் செருகிடுச்சு. டவுன்ல இருக்கிற மாட்டாஸ்பத்திரிக்குக் கொண்டுபோகச் சொல்லி வைத்தியர் சொல்லிட்டாரு. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆம்புலன்ஸ் இல்லாம தன் மனைவியின் பிணத்தைச் சுமந்துவந்தாரே டோக்லாசிங், அவர் எங்க பக்கத்து கிராமம்தான். மனுசங்களுக்கே இப்படின்னா மாட்டு வைத்தியம் எப்படி எங்கூர்ல இருக்கும்?

அன்னைக்கு நைட்டு டெம்போவில மாடுகளை ஏத்திட்டு வைத்தியம் பார்க்கிறதுக்காக எங்க அப்பா போனாரு. கறி வெட்டறதுக்காக மாடுகளைக் கடத்திட்டுப்போறார்னு பத்துப்பேரு கையில கத்தி, அரிவாளோட கூடிட்டாங்க. அப்பா எவ்வளவோ சொல்லியும் அவங்க நம்பலை. ‘பசு என் தாய்டா. அம்மாவை அறுத்து விக்கப்போறியா?’ன்னு கூட்டத்துக்குத் தலைவர் ஆவேசமாக் கேட்டிருக்கார். அவர் ஒரு ரியல் எஸ்டேட் முதலாளி. அவருக்கும் மாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. நாங்க மாடுகளோடயே வளர்ந்தவங்க. அந்தக் கும்பல் கல்லால அடிச்சு, அரிவாளால் வெட்டி அப்பாவைக் கொன்னுட்டாங்க.”

“அந்த மாடுகளுக்கு என்னாச்சு?”

“அதுங்க கழிசலில் கண்ணு செருகி கதறி உயிரை விட்டுடுச்சு. அப்பாவையும் காப்பாத்த முடியலை. மாடுகளையும் காப்பாத்த முடியலை.”

மெய்ப்பொருள் தன் ஆய்வு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அவ்வப்போது கிளாராவுக்கு அனுப்பிவைப்பான்.

“ஐரோப்பா முழுக்கவே நத்தை சாப்பிடும் பழக்கம் உண்டு. இங்கிலாந்தில் நெருப்புக்கோழி ஸ்டீக் பிரபலம். அசாமில் நாய்க்கறி சாப்பிடும் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். பச்சையாக சாப்பிடப்படும் ஜப்பானிய மீன் சுஷி. அல்பேனியாவின் சுவையான உணவு தவளைக்கால் வறுவல். பசஸி - ஜப்பானில் கிடைக்கும் பச்சையான குதிரைக்கறி. கொரிய தெருக்கடைகளில் கிடைக்கும் பட்டுப்புழுத் துவையலின் பெயர் பொயிண்டேகி”

படிக்கும்போதே கிளாராவுக்கு குமட்டல் வந்தது. மெய்ப்பொருளையும் உம்பர்ட்டோ ஈக்கோவையும் நினைத்து அடக்கிக்கொண்டாள்.

“யாகங்களில் உயிரினங்களைப் பலியிடுவதற்கு எதிரா தோன்றிய மதம் புத்த மதம். கொல்லாமையை வலியுறுத்திய புத்த மதத்தைக் கடைப்பிடிக்கிற எல்லா நாடுகளிலும் அசைவம் உண்டு. மதத்தைக் கடைப்பிடிச்சவங்க மாமிசத்தை விலக்கலை.”

கிளாராவுக்கும் அது ஆச்சர்யமாகத் தானிருந்தது.

“உலக அளவுல அதிக மாமிசம் சாப்பிடுற தேசம் சீனா. ஒரு நாளைக்கு சராசரியா ஒருத்தர் 160 கிராமுக்கு மேல இறைச்சி சாப்பிடுவாங்க. இப்படி எல்லா புத்த நாடுகளிலும் இறைச்சி உண்டு. புத்த மதத்தில் முழுமையா மாமிசம் இல்லைன்னு சொல்ல முடியாது. அங்கேயும் விலக்கப்பட்டது, அனுமதிக்கப்பட்டது உண்டு. ஒரு பவுத்தர் விருந்தினராகப் போகும்போது அவருக்கு மாமிசம் பரிமாறப்பட்டா அதை அவங்க ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த பவுத்தருக்காக திட்டமிட்டு ஓர் உயிரைக் கொன்னு சமைக்கக்கூடாதாம். இன்னும் என் ஆராய்ச்சி முழுமையடையலை. புத்தமத நூல்கள், பவுத்த மடாலயங்கள் எல்லாவற்றையும் முழுசா ஆராய்ச்சி செய்யணும். புத்தர் இறந்ததற்குக் காரணமே அவர் கெட்டுப்போன கீரை அல்லது கெட்டுப்போன பன்றி மாமிசம் சாப்பிட்டது தான்னு ஒரு கதை இருக்கு.”

அதிசயமாக இருந்தது. கல்யாணராமன் பத்து தடவைக்கு மேல் தொலைபேசி அழைப்பு விடுத்திருந்தான். கிளாரா எடுக்கவேயில்லை. ‘உன்னைச் சந்திக்க வேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ்’ என்று செய்திகள் அனுப்பியிருந்தான். அவனைச் சந்திப்பதற்கு ஏன் அச்சப்பட வேண்டும் என்ற மனதுடன் ஓர் உணவகத்தில் அவனைச் சந்தித்தாள்.

“எப்படி இருக்கே கிளாரா?”

``நான் நல்லாருக்கேன். நீங்க?’’

“நல்லாருக்கேன்” என்றவனுக்குத் திருமணமாகிவிட்டதாம்.

“அவ வேலைக்குப் போகலை. வீட்டுலதான் இருக்கா. ஆறுமாசமாச்சு. முழுகாம இருக்கா”

அவன் குரலில் உற்சாகம் தெரிந்தது. அது வன்மம் தடவப்பட்ட உற்சாகமென்று கிளாராவுக்குத் தோன்றியது. குழந்தை பிறக்காமலிருந்ததற்குத் தான் காரணமில்லை என்று சொல்வதுதான் அவன் நோக்கம். இதற்காகத்தான் இந்தச் சந்திப்பு என்று புரிந்துபோனது கிளாராவுக்கு.

“வாழ்த்துகள். அப்பாவாகப்போறீங்க”

“ஆமா. சந்தோஷமா இருக்கு. கிளாரா. நீ கல்யாணம் பண்ணலையா... ஒரு பையனோட சுத்துறேன்னு கேள்விப்பட்டேன்?”

எரிச்சலுடன் “நான் யார்கூட சுத்தினா உங்களுக்கு என்ன கல்யாண்?” என்றாள்.

“எனக்கென்ன, ஒண்ணுமில்லை. சும்மாதான் கேட்டேன். தப்பான அர்த்தமில்லை. நாம பிரிஞ்சாலும் நண்பர்களா இருக்கலாம். உனக்கு ஒண்ணு தெரியுமா, என் மனைவி சைவம். நானும் சைவமாகிட்டேன்”.

“பால் குடிப்பீங்கல்ல, அதுவும் ரத்தம்தான்.”

“நீ இப்படிச் சொல்வேன்னு தெரியும். நோ மில்க். நான் வீகன் டயட்.”

“நான் பேலியோ டயட். அரிசி, கோதுமை, தானியம், கிழங்குன்னு எந்த கார்போ ஹைட்ரேட்டும் கிடையாது. இறைச்சி மட்டும்தான்” என்ற கிளாரா, ஒரு சிக்கன் டிக்காவும் சில்லி பீப்பும் ஆர்டர் செய்தாள்.

“அந்தப் பையன் உன்னைவிட சின்னப் பையனாமே. மாமிசம் சாப்பிடறதைப் பத்தி ஆராய்ச்சி பண்றானாமே. நீ வெறுமனே சிக்கன், பீப் மட்டும்தானா, நாய்க்கறி, பன்னிக்கறியும் சாப்பிடுவியா?”

நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் எரிச்சல் தெரிந்தது.

“இல்லை. நீதான் ஒரே விஷயத்தில திருப்தி அடைய மாட்டியே. வெரைட்டின்னாதானே உனக்குப் பிடிக்கும்?”

கையிலிருந்த முள்கரண்டியை அவன் முகத்தில் எறிந்தாள். அது ஒன்றும் அவன் வார்த்தை யளவுக்குக் கூர்மையில்லை.

“டேய். நீ சைவத்துக்கு மாறினாலும் உன் மனசெல்லாம் வேட்டையாடற மிருகம்தான் வாய்பிளந்து நிக்குது. யூ ஆர் எ மேல்சாவனிஸ்ட் பிக்.”

பாதரச மாமிசமென உருண்ட அவள் கண்களில் வெப்பம் தெரிந்தது.

(தும்பி பறக்கும்)