
வளர்ந்துகொண்டேயிருக்கும் ஓவியம்
சிறுகுழந்தையைப்போல கைகளை மடக்கி விரித்து எண்ணிப்பார்த்தாள் ஆதிரா. முழுதாக இன்னும் 18 நாள்கள்தான் இருக்கின்றன. அதற்குள் ஓவியத்தை முடிக்கவேண்டும்.
ஆனால் இன்னமும் சரியான நூல் கிடைக்காமல் தடுமாறுகிறாள். இடம் பெயர்ந்தோர் குறித்து சர்வதேச அளவில் நடக்கும் ஓவியக்கண்காட்சிக்கு ஓவியம் அனுப்பத்தான் இவ்வளவு பிரயத்தனமும். இடம்பெயரும் வலிகள் குறித்து ஆயிரக்கணக்கில், இன்னும் சொல்லப்போனால் அதற்கும் மேல்கூட ஓவியங்கள் வரையப்பட்டுவிட்டன. அந்த சோகத்தின் எடையுடன், கால்கள் தேயும் நீண்ட பயணத்தில் மோதிய கட்டைவிரல் குருதியின் ஈரத்துடன் எத்தனையோ ஓவியங்கள் வரையப்பட்டுவிட்டன. எத்தனை எழுதினாலும் எத்தனை வரைந்தாலும் எத்தனை சொற்களை இறைத்து இறைத்து ஊற்றினாலும் தீராத சோகம்தான். அதை ஓர் ஓவியத்துக்குள் சிறைபிடிப்பது ஆதிராவுக்குப் பெரும் சவாலாக இருந்தது.
பொதுவாக வாகனத்தில் செல்லும்போது, புத்தகம் படிக்கும்போது, ஏதேனும் கொறித்துக்கொண்டிருக்கும்போது, இணையத்தில் அலையும்போது ஏதேனும் சிறுபொறி கிடைத்துவிடும். பின் அது காட்டூத்தீயாய் ஓவியத்தைப் பற்றிக்கொள்ளும். ஆனால் கங்குகள் அணைந்த வெறுமைப்பொழுதுகளில் அலைபாய்ந்துகொண்டிருக்கிறாள் ஆதிரா. ரோகிங்யா முஸ்லிம் அகதிகளின் துயரம் குறித்து எழுதப்பட்டிருந்த புத்தகத்தைப் படித்தபடியே தூங்கியபோதுதான் ஆதிராவுக்கு அந்தக் கனவு வந்தது.
இருள் பந்தாய் உருண்டு ஆதிராவை நோக்கிவருகிறது. அதன் இருபுறமும் கனத்த சிறகுகள் அசைகின்றன. அதன் கீழ்ப்பகுதி பருத்து முன்னோக்கி அடியெடுத்துவருகிறது. இரண்டு பிறைநிலாக்களின் உடைந்தபகுதி அதனூடாக ஒட்டிக்கொண்டு தெரிகின்றன. சின்ன அகல்விளக்கைப்போல் ஒரு வெளிச்சக்கீற்றும் வருகிறது. இத்தனை வெளிச்சத்தையும் கழித்துப்பார்த்தால் அது பிரமாண்டமான இருள்பந்து.
அருகே வந்தபிறகுதான் அது ஓர் யானை உருவம் என்பதை அவளால் கண்டுகொள்ள முடிந்தது. யானை தன் துதிக்கையால் அவள் உடலெங்கும் வருடிக்கொடுத்தது. பிறகு எதிர்பாராத ஒருகணத்தில் அவளைச் சுழற்றி அந்தரத்தில் அடித்தது. அவள் மேகங்களின்மீது போய் விழுந்தாள். பிறகு அதன் வால்நுனியில் சிறுகற்றையாய்க் குவிந்த முடி, தூரிகையாய் மாறியது. அதைக்கொண்டு ஒரு கேன்வாஸில் யானை வரைந்த ஓவியம் என்னவென்று பார்ப்பதற்குள் கனவு கலைந்திருந்தது. ஆதிரா ஒன்றை மறந்துவிட்டாள். ஆமாம், அவளுக்கு ஓவியத்துக்கான பொறி கனவிலும் வரும்.
விடிந்ததும் அம்மாவுக்குப் போன் போட்டு கனவுக்கான அர்த்தம் என்னவென்று கேட்டாள்.
“கணபதியே உன் கனவுல வந்திருக்கார்டி. பிள்ளையாரப்பா உனக்கு ஏதோ நல்லது செய்யப்போறார்” என்றாள் அம்மா.
பிள்ளையாருக்கும் புலம் பெயர்தலுக்கும் என்ன சம்பந்தம்? அவர் இடத்தை விட்டே நகர்வதில்லையே, எங்குமே நகராமல்தானே முருகனை ஏமாற்றி மாம்பழத்தையே வாங்கிக் கொண்டார் என்று தோன்றியது ஆதிராவுக்கு.

மறுநாளும் யானை கனவில் வந்தது. வள்ளி திருமணம் கதையில் வருவதைப்போல அவளைத் துரத்தத் தொடங்கியது. இந்தமுறை அவளை யானை சுழற்றி வீசியபோது கேன்வாஸில் பட்டு சித்திரமாய் உறைந்துபோனாள். மூன்றாம்நாள் கனவில் யானையின் முன்பு கவளம் கவளமாய்ச் சில்லறைக்காசுகள் உருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அதை அள்ளி அள்ளித் தின்னும் யானையின் தந்தங்கள் வழியே ரத்தம் வழிந்தோடுகிறது. வலியில் அலறியபடியே யானை தன் பாதங்களை அழுத்தி அழுத்தி நடக்கிறது. அதன்கீழே பொம்மைக் கட்டடங்களாய் ஆதிரா வீடு உட்பட பல கட்டடங்கள் நொறுங்குகின்றன. இந்தமுறை யானை சுழற்றிவீசியபோது ஆலமரத்தின் மேல் கிளையில் போய்விழுந்த ஆதிரா, அதன் விழுதுகளைப் பிடித்துக் கீழிறங்குகிறாள். அந்த விழுதுகள் யானையின் துதிக்கையாய் மாறியிருந்தன.
எழுந்து அமர்ந்தவளுக்கு மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் ‘நினைவில் காடுள்ள மிருகம்’ என்னும் வார்த்தைகள் மின்னல்கீற்றாய் வந்துபோயின.
மறுநாளிலிருந்து காடுகளில் இருந்து நகரத்துக்கு யானைகள் ஏன் வருகின்றன, ஏன் வயல்களைச் சேதப்படுத்துகின்றன என்ற செய்திகளைப் படிக்க ஆரம்பித்தாள். தூரிகை கொண்டு யானையின் வாலை வரைந்து தன் ஓவியத்தைத் தொடங்கிவைத்தாள்.
ஆதிரா கனவில் யானை வந்த அதே நாள்களில்தான் ஆதிராவும் யானையின் கனவுக்குள் வந்துபோயிருந்தாள். யானையின் கண்களுக்குப் பச்சைநிறம் மட்டுமே பரிச்சயம். புல்வெளிகள், மரங்கள் என பார்க்குமிடமெங்கும் பச்சை. காடு பச்சையைச் சுழற்றி சுழற்றிப் போர்த்தியிருந்தது. பச்சையைப் பார்த்துப் பார்த்துப் பழகிய யானையின் கண்களுக்கு எல்லாமே பச்சைதான். வானம் பச்சை, மேகம் பச்சை, ஓடும் நதி பச்சை. யானையின் கனவுக்குள் நுழைந்த ஆதிரா தன் தூரிகையால் ஒரு நகரத்தை வரையத்தொடங்கினாள். வீடுகள், தொழிற்சாலைகள், மனிதர்கள், கழிப்பறைகள், வணிக வளாகங்கள் என வரைய ஆரம்பித்தபோது அவள் முதலில் அழிக்க ஆரம்பித்தது பச்சையைத்தான். யானையின் கண்களிலிருந்து பச்சை மறைய ஆரம்பித்தது. கட்டடங்கள் எழ எழ, மனிதர்கள் கூடக்கூட பச்சை உதிர்ந்து உதிர்ந்து மறையத் தொடங்கியது. யானை இருந்த வனவெளிச் சித்திரத்தை அழித்து எண்ணற்ற ஆதிராக்கள் புதிய புதிய கட்டடங்களை வரைந்து வரைந்து எழுப்பினார்கள்.

தன் காடுகளைத் தேடி, தன் நதிகளைத் தேடி, தன் பச்சையைத் தேடி ஊருக்குள் வந்த யானை எங்குமே காடில்லாமல், எங்குமே நதியில்லாமல், எங்குமே பச்சையில்லாமல் திகைத்துப்போனது. அதன் பிரமாண்ட உடலைவிடப் பெரும் திகைப்பு. பின் வாழைத்தோட்டங்களில் உள்ள பச்சை மரங்களையெடுத்து சுழற்ற ஆரம்பித்தது. இப்போது யானைக்கு ஒரு பச்சைத் தும்பிக்கை முளைத்திருந்தது.
“தோழர், கண்ணகிநகர், பெரும்பாக்கம் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவா ஒரு கூட்டம் நடத்துறோம். உங்க ஓவியங்களைப் பயன்படுத்திக்கலாம்ல?” என்று தொலைபேசியில் அழைத்துக்கேட்டார் செம்பியன். போராட்டங்களிலெல்லாம் முன்னிற்பவர்.
“அதுக்கென்ன தோழர், தாராளமாப் பயன்படுத்திக்கங்க” என்றாள் ஆதிரா.
ஒருநாள் அந்தப் போராட்டத்துக்குச் சென்று அந்த மக்கள் ஒலிபெருக்கியில் முன்வைத்த எல்லாத் துயர அனுபவங்களையும் வாரி எடுத்துவந்திருந்தாள். அதன் வண்ணம் ஒன்றாகவே இருந்தது.
நகரத்தின் மையப்பகுதியிலிருந்து அவர்களை நகரத்தின் முதுகுப்பகுதிக்கு விசிறியடித்திருந்தார்கள். இப்போது நகரம் முகம் திரும்பி அவர்களைப் பார்க்கமுடியாது. நடுமுதுகின் தேமல்போல அவர்கள் அங்கே கிடப்பார்கள். இந்த நகரம் அவர்களைப் பார்க்க விரும்புவதுமில்லை. இந்த நகரத்தைக் கட்டியமைத்தவர்கள் அவர்கள்தான். இந்த நகரம் பெற்றுப்போட்ட மைந்தர்கள் அவர்கள்தான். ஆனால் இப்போது நகரம் அவர்கள் கைகளிலிருந்து நழுவியிருக்கிறது. அந்தக் கரங்கள் அழுக்குக்கைகள் என்ற புகாரின் காரணமாக, நகரத்தை அழகுபடுத்துவதற்காக அவர்கள் இடம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் உழைத்துப்பிழைக்கும் இடம், அவர்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்கள், அவர்களின் கொண்டாட்ட நிகழ்விடங்கள் எல்லாவற்றிலிருந்தும் தொலைதூரத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இனி அவர்கள் சொற்பக்கூலியில் பெரும்பகுதியைப் பேருந்துக்கட்டணத்துக்குக் கொடுத்து மீண்டும் நகரின் மையப்பகுதிக்கு வந்து அதன் அழகு கெடாமல் ஒளிந்து ஒளிந்து உழைத்துவாழ வேண்டும். அவர்கள் குழந்தைகள் பல கிலோமீட்டர் பயணித்துப் படிக்கவேண்டும். அவர்கள் பைகள் கனத்திருக்கின்றன.
இப்போது அவர்கள் ஆதிராவின் ஓவியத்துக்குள் வந்திருந்தார்கள்.
“இது எங்களுக்கு மோசமான நாள்” என்று சேத் சொல்லும்போதே அவர் குரல் துக்கத்தால் நடுங்குகிறது.
வட கனடா மாகாணமாகிய அல்பெர்ட்டாவில் உள்ள கால்கரி நகரம் அது. புதிதாக ரிங்ரோடு போடப்பட்டு அதன் திறப்புவிழாவில் பேசும் அந்த இளைஞனின் முழுப்பெயர் சேத் கார்டினல் டாஜிங்ஹௌஸ். பூர்வகுடி இளைஞனான சேத் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில்தான் அந்தச் சாலை புதிதாகப் போடப்பட்டிருக்கிறது. இழந்த துண்டுநிலம் அவன் கண்களில் மணிகளாய் உருண்டுகொண்டிருக்கிறது.
“இந்தச் சாலை என் குடும்ப நிலத்தின் மேல் போடப்பட்டிருக்கிறது. மக்கள் இன்றிலிருந்து என் வீட்டின் மேல் பயணம் செய்யப்போகிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக, தினமும் என் நிலமும் வீடும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து, இந்தச் சாலையாக உருமாறுவதைக் கண்கூடாகப் பார்த்துவருகிறேன். இது தரும் மன அழுத்தங்களை எல்லாம், நானும் என் குடும்பமும் இனி அனுதினமும் சுமக்க வேண்டும். உங்களுக்கு இது ஒருபோதும் புரியப்போவதில்லை. இன்று இந்தச் சாலை திறப்பு என்னும் செய்தியைக் கேட்டதிலிருந்து என் தாய் வீட்டில் அழுதுகொண்டிருக்கிறார். என் நிலத்திலிருந்து ஒரு பிடி மண்ணைச் சுமந்து நிற்கிறேன். என் மண்ணை விடவும் எனக்கு எதுவும் சிறந்த பாதுகாப்பைத் தரப்போவதில்லை. அது இந்தச் சிறு பையில், இனி எப்போதும் எங்களுடன் இருக்கும். இந்தச் சாலைக்கு நான் இதைக் காணிக்கையாக்க விரும்புகிறேன்” என்று சொன்ன அந்தப் பழங்குடி இளைஞன் தன் சுருண்டு தொங்கிய கூந்தல் முடியைக் கத்தரித்து, வளர்ச்சியும் நாகரிகமும் இழைத்துக்கட்டப்பட்ட அந்தச் சாலையின்மீது வீசுகிறான். தென்னிந்தியக் கிராமத்துப் பெண்கள் ஆவேசத்தில் வாரியிறைக்கும் புழுதியைப்போல் அந்த முடிக்கற்றை சாலையில் அப்பிக்கொள்கிறது.
பிறகு அந்த முடிகள் காற்றில் பறந்து ஓரிடத்தில் குவிகின்றன. இப்போது அவை யானைவால் முடியின் தோற்றத்துக்கு வந்திருக்கின்றன.
சேத், ஆதிராவின் ஓவியத்துக்குள் வந்துவிட்டான். அவனுக்குப் பின்னால் காடுகளிலிருந்து துரத்தப்பட்ட பழங்குடிகள் தங்கள் புராதன ஆயுதங்களுடனும் செயலிழந்த தெய்வங்களுடனும் ஆதிராவின் ஓவியத்துக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள்.
மக்கள் இன்றிலிருந்து என் வீட்டின் மேல் பயணம் செய்யப்போகிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக, தினமும் என் நிலமும் வீடும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து...
இதற்கிடையில் ஆதிரா தன் பழைய கல்லூரித்தோழியைச் சந்தித்தாள். ஆதிரா இதுவரை திருமண வாழ்க்கைக்குள் செல்லவில்லை. அந்தத் தோழியோ நான்கு குழந்தைகளைப் பெற்றிருந்தாள். ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் வசிக்கிறாளாம்.

“ஆளாளுக்குத் தனிக்குடித்தனம் போற இந்தக் காலத்துல பாரம்பரியம், கலாசாரத்தைக் காப்பாத்துற வாழ்க்கையா நினைச்சா பெருமையா இருக்கு” என்று சொன்ன தோழி, தன் கூட்டுக்குடும்பத்தில் உள்ள 23 பேருக்கும் என்னென்ன உணவு பிடிக்கும், எப்படி சமைத்துப்போடுவாள் என்பதை உற்சாகமாக விளக்கினாள். அவள் இட்ட உணவுப்பட்டியல், அவர்கள் அமர்ந்திருந்த உணவகத்தின் மெனுகார்டைவிட நீளமாக இருந்தது. ஆதிராவுக்குத் தன் எதிரே ஒரு பிரமாண்டமான சமையல் கரண்டி அமர்ந்திருப்பதைப்போலவே தோன்றியது.
“இந்தா குலசாமி கோயில் துன்னூறு” என்று ஒரு கோயில் பெயரைச் சொல்லியபடி அவள் தந்ததை வாங்கிக்கொண்டாள். ஆதிராவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றாலும், தோழி கல்லூரிக்காலத்திலிருந்தே பக்திப்பழம் என்பதால் அவள் குலதெய்வம் பெயர் தெரியும். ஆனால் இப்போது சொன்ன பெயர் அதுவல்ல.
“அதெல்லாம் அப்பா, அம்மா வீட்டில. எந்த வீட்டுக்கு வாக்கப்பட்டுப் போறோமோ அந்தக் குடும்பம் குலசாமிதான் நம்ம குலசாமி” என்றாள் தோழி.
இவள் தன் வீட்டை விட்டுப் புலம்பெயர்ந்து வந்துவிட்டாள். இவள் தெய்வம் புலம்பெயர முடியாமல் கால்கள் கட்டிப்போடப்பட்டு அங்கேயே செய்வதறியாது நிற்கிறது.
திருமணமாகித் தன் நிலம் விட்டு வந்தவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டாள். ஆதிராவின் அம்மா தொடங்கி கல்லூரித்தோழிகள் வரை பலரும் ஓவியத்துக்குள் வந்துவிட்டார்கள். திருப்பூர்ப் பின்னலாடைத் தொழிற்சாலையில் உழைப்பவர்கள், தங்கள் கிராமங்களையும் உறவுகளையும் விட்டுவிட்டு சென்னையின் வெப்பம் இறக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின்கீழ் பக்கெட் தண்ணீரோடு வசிக்கும் வட இந்தியத் தொழிலாளர்கள், வளைகுடாப் பாலைவனத்தின் வெம்மையில் வதைபவர்கள், இந்தக் கதையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ஏதோ ஒரு நாட்டின் எல்லையில் திருட்டுத்தனமாய் நுழைந்துகொண்டிருக்கும் அகதிகள் என ஏராளமானோர் ஆதிராவின் ஓவியத்துக்குள் வந்துவிட்டார்கள். இது எப்போது முடியும் என்று தெரியவில்லை.
ஆதிராவின் கைகளில் மடித்தபடி பத்துக்கும் குறைவான நாள்களே இருக்கின்றன. அதற்குள் இந்த ஓவியம் முடிந்துவிடுமா?
- தும்பி பறக்கும்...