சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

குறுங்கதை : 7 - அஞ்சிறைத்தும்பி

அஞ்சிறைத்தும்பி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சிறைத்தும்பி

சிங்கக்குகை

குறுங்கதை : 7 - அஞ்சிறைத்தும்பி

ண்கள் கலங்கிவிட்டன. கெட்டவார்த்தையால் திட்டவேண்டும்போலிருந்தது ஆன்டனிக்கு. நல்ல பையன்கள் கெட்டவார்த்தை பேசக்கூடாது என்று வளர்த்திருந்தார்கள். ஆனால் கெட்டவார்த்தைகளுக்கு நல்ல பையன்கள், கெட்ட பையன்கள் பேதம் கிடையாது. அனைவரின் காதுகளிலும் வந்து விழுபவைதான். கஷ்டப்பட்டு கெட்ட வசவு ஒன்றைத் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான் ஆன்டனி.

சுந்தரம் சாரை நினைத்தாலே கோபமாக வந்தது. என்ன செய்யலாம் இந்த ஆளை? கம்பியை எடுத்து வயிற்றில் செருகிவிடலாமா? அவருடைய பழைய பைக் டயரையாவது பஞ்சராக்கிவிட வேண்டும். அந்தாள் சக பேராசிரியர்கள், மாணவர்கள் என்று யாருடனும் பேசிப் பார்த்ததில்லை. எப்போதாவது கல்லூரி கேன்டீனில் ஒரு காபியை வாங்கி ஆற்றி ஆற்றிக் குடிப்பதைப் பார்த்திருக்கிறான். சூடான காபி வாங்கி அவர் மூஞ்சியில் ஊற்றிவிடலாமா? இதையெல்லாம் செய்வதற்குத் துணிச்சல் இல்லை என்று ஆன்டனிக்கு நன்றாகவே தெரியும்.

ப்ளஸ் டூ வரை அரசுப்பள்ளியில் படித்து வளர்ந்தவன் ஆன்டனி. நன்றாகப் படிக்கும் மாணவன் என்றால் அப்படிக் கொண்டாடுவார்கள் அங்கே. எஸ்.எஸ்.எல்.சியில் பள்ளியில் இரண்டாவது இடம். தேர்வு எழுதும்போது கடும் காய்ச்சல். மாத்திரை போட்டுக்கொண்டுதான் எழுதினான். முதன்முதலாக அவன் பள்ளி அப்போதுதான் 400 மார்க்கைப் பெற்றிருந்தது. எஸ்.எஸ்.எல்.சியில் விட்டதை ப்ளஸ்டூவில் பிடித்துவிட்டான். பள்ளியிலேயே முதல் மாணவன்.

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும் ஒரு தனி அனுபவம், கால் பரீட்சை, அரைப்பரீட்சை, கிளாஸ் டெஸ்ட் பேப்பர்களை அவர்களிடம் கொடுத்துத் திருத்தச் சொல்வார்கள் ஆசிரியர்கள். ஒவ்வொரு பேப்பரும் ஒவ்வொரு டிசைனில் இருக்கும். குறிப்பாக ஆங்கில விடைத்தாள்களைத் திருத்துவ தென்றால் தனி உற்சாகம்தான். மாணவர்களுக்கு ஆங்கிலம் என்பது பெயரிடப்படாத கொடிய மிருகம். அதன் வாலைப்பிடித்து இழுப்பார்கள். காதைத் திருகு வார்கள். கண்களைக் குத்தப்பார்ப்பார்கள். ஆனால் ஏறி சவாரி செய்வது சிரமம்.

Develope the Hints என்று ஒரு வினா இருக்கும். சின்னச் சின்ன ஹின்ட்ஸ் கொடுத்திருப்பார்கள். முழு வாக்கியமாக்க வேண்டும். மாணவர்களுக்கு அதற்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’வுக்கும் வித்தியாசம் தெரியாது. ஹின்ட்ஸ்களுக்கு இடையில் உள்ள கோடுகளில் தங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளை இட்டு நிரப்புவார்கள். அதைப்படித்தால் இதுவரை உலகத்தில் யாரும் எழுதாத பின்நவீனத்துவக் கதை கிடைக்கும். மொழிபெயர்ப்பு விடை இன்னும் மோசம். ‘The war is walking between English army and French army’ என்று ஒரு மாணவன் மொழி பெயர்த்திருந்தான். இங்கிலாந்து ராணுவத்துக்கும் பிரெஞ்சு ராணுவத்துக்கும் போர் நடக்கிறதாம்.

பொதுவாக ஆங்கில விடைத்தாள்களே தந்த இன்பத்தைச் சமயத்தில் தமிழ் விடைத்தாள்களும் தரும். அப்படித்தான் ஒருமுறை தனபால் என்ற மாணவனின் விடைத்தாளைத் திருத்தும்போது சிரித்துச் சிரித்துப் புரையேறியது ஆன்டனிக்கு.

‘உவமையைப் பொருளோடு பொருத்தி எழுதுக’ என்று ஒரு வினா உண்டு. ‘குன்றிலிட்ட விளக்குப்போல’ என்றால் ‘மகாத்மா காந்தியடிகளின் புகழ் குன்றிலிட்ட விளக்குப்போல உலகம் முழுக்கப் பரவியது’ என்று எழுத வேண்டும். தீரர் சத்தியமூர்த்தி அய்யரைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. சத்தியமூர்த்தி சுதந்திரப்போராட்ட வீரர். அந்தக்காலத்திலேயே ஆங்கிலம் கற்றவர். ‘சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து அதன் பிடரியைப் பிடித்தாட்டியதைப்போல ஆங்கிலத்தைக் கொண்டே ஆங்கிலேயர்களுக்கு எதிராக உரையாற்றியவர்’ என்று ஒருவரி பாடப்புத்தகத்தில் இருந்தது.

‘சிங்கத்தின் குகைக்குள்ளேயே நுழைந்து அதன் பிடரியைப் பிடித்தாட்டியதைப்போல’ என்ற உவமையைப் பொருளோடு பொருத்த வேண்டும். தனபால் இப்படிப் பொருத்தியிருந்தான்.

‘சத்தியமூர்த்தி அய்யர் சிங்கத்தின் குகைக்குள் எட்டிப்பார்த்தார். சிங்கம் படுத்திருந்தது. மெல்ல குகைக்குள் நுழைந்தார். சிங்கம் மெதுவாக எழுந்து நின்றது. சத்தியமூர்த்தி சிங்கத்தைப் பார்த்தார். சிங்கம் சத்தியமூர்த்தியைப் பார்த்தது. திடீரென்று சிங்கத்தின்மீது பாய்ந்த சத்தியமூர்த்தி அதன் பிடரியைப் பிடித்து உலுக்கோ உலுக்கென்று உலுக்கினார்.’

சிங்கக்குகை
சிங்கக்குகை

ப்படி விடைத்தாள்களைத் திருத்தி ரசித்த ஆன்டனிக்கு இப்போது துயரம் விடைத்தாளின் வடிவில்தான் வந்தது. அவன் படிக்கும் கல்லூரி, மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்த, தன்னாட்சி பெற்ற நிகர்நிலைப்பல்கலைக்கழகம். மாணவர்கள் அவர்கள் சப்ஜெக்ட்களைப் படித்தால் போதாது என்று கிராம முன்னேற்றம், காந்தியச் சிந்தனைகள், ஃபைன் ஆர்ட்ஸ் என்று பல பாடப்பிரிவுகளையும் வைத்திருந்தனர். ஃபைன் ஆர்ட்ஸ் எனப்படும் நுண்கலைகள், மாணவர்களுக்கு ஒரு கொடுங்கனவு.

மற்ற பாடங்களைவிட ஃபைன் ஆர்ட்ஸ் பாடத்தேர்வு முடிவுகளைத்தான் அனைவரும் பீதியுடன் எதிர்பார்ப்பார்கள். அதில் யார் பாஸ் ஆவார்கள், யார் ஃபெயில் ஆவார்கள் என்று யாருக்கும் தெரியாது. அதிலும் கோல்டு மெடல் கனவிலிருக்கும் மாணவர்களுக்கு ஃபைன் ஆர்ட்ஸ், ஒரு சிம்மசொப்பனம். அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறுவதுடன் எந்தப் பாடத்திலும் அரியர்ஸ் விழக்கூடாது என்பது கோல்டு மெடல் பெறுவதற்கான முக்கியமான விதி. ஆனால் பலரின் தங்கப்பதக்கக் கனவுகளை ஃபைன் ஆர்ட்ஸ் தகர்த்திருக்கிறது.

பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி மாணவர்களை ஒன்றாகச் சேர்த்துத்தான் ஃபைன் ஆர்ட்ஸ் பாடம் நடத்துவார் சுந்தரம் சார். அவரும் பிக்காஸோ, மைக்கேல் ஏஞ்சலோ ஓவியங்கள், மகாபலிபுரம் சிற்பங்கள் என்று என்னென்னவோ நடத்துவார். ஏற்கெனவே ஆன்டனிக்குப் பள்ளியில் படித்த ஆங்கிலத்துக்கும் கல்லூரி ஆங்கிலத்துக்குமே இனம்புரிய வில்லை. சுந்தரம் சார் நடத்துவதை உற்றுக்கவனிக்கத்தான் முயல்வான். ஆனால் அவர் பாடத்தை ஆரம்பித்ததும், லொடலொட வென்று பழைய மின்விசிறி ஓடுவதைப் போலத்தானிருக்கும்.

அவர் விடைத்தாள்களைத் திருத்துவது குறித்தே விநோதமான கதைகள் உலவின. அவரைப் பொறுத்தவரை, பத்து, பதினைந்து அடிஷனல் பேப்பர்கள் வாங்கி, விடைத்தாள்கள் கனமாக இருக்கவேண்டுமாம். ஆன்டனியின் சூப்பர் சீனியர் மாணவர்கள் இருவர் விடைத்தாளில் ‘முக்காலா முக்காபுலா’ பாடலை அப்படியே எழுதிவைத்திருக்கிறார்கள். எதையாவது எழுதிப் பக்கங்களை நிரப்பவேண்டும். தமிழில் ‘முக்காபுலா’ எழுதியவன் ஃபெயில், ஆங்கில ‘முக்காபுலா’ எழுதியவன் பாஸ்.

சுந்தரம் சார் விடைத்தாள் திருத்துவது குறித்த முக்கியமான இரண்டு கதைகள். 1. அவர் ஒரு கனமான குச்சியை வைத்தி ருப்பாராம். விடைத்தாள்களின் இடையில் குச்சியை விட்டுத் தூக்கிப்பார்ப்பாராம். திருப்தியான கனம் இருந்தால் பாஸ். 2. இதுதான் கொடூரக்கதை. எல்லா விடைத்தாள் களையும் ஒரு மேஜையில் வைத்து மின்விசிறியை 5 ஸ்பீடில் வைப்பாராம். புயல் காற்றில் தாக்குப்பிடிக்க முடியாமல் மேஜையிலிருந்து கீழே விழுந்த பேப்பர்கள் எல்லாம் ஃபெயில். தடைகளைத் தாண்டி மேஜையில் இருப்பவை பாஸ்.

கம்மல், மூக்குத்தி, அரைஞாண் கயிறு, கழுத்தில் மாட்டிய சிலுவை, கையில் மாட்டிய தாயத்து என்று அனைத்தையும் கழற்றி, முருங்கைக்கீரையை உருவுவதுபோல் உருவி, குச்சிகளாக மாணவர்களைத் தேர்வெழுத அனுப்பிவைத்தார்கள்.

‘தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்’ என்ற டார்வினின் விதியை சுந்தரம் சார் நிரூபித்தார். விதி என்றாலே விநோதம்தானே! அது ஆன்டனியின் கோல்டுமெடல் கனவில் விநோதமாய் ஆடியது. ஃபைன் ஆர்ட்ஸில் அவன் ஃபெயில்.

குறுங்கதை : 7 - அஞ்சிறைத்தும்பி

காலங்கள் மின்னலைப்போல் கடந்தன. மீண்டும் ஃபைன் ஆர்ட்ஸ் எழுதித் தேர்ச்சிபெற்று, கோல்டு மெடல் பெறாவிட்டாலும், எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, இப்போது திருவனந்தபுரத்தில் ஒரு கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகிவிட்டான் ஆன்டனி. ஒருமுறை சொந்த ஊருக்குச் சென்றபோது தனபாலைப் பார்த்தான். கடைவீதியில் தனபாலாகத்தான் இவனை அடையாளம் கண்டு அருகில் வந்து பேசினான். ஒரு கட்சியில் நகரச்செயலாளர் ஆகியிருந்தான். ‘`எந்தப் பிரச்னைன்னாலும் வா, பார்த்துக்கலாம்” என்றான். சிரித்தபடி நகர்ந்தான் ஆன்டனி.

காலையிலிருந்தே கல்லூரி யுத்தப்பரபரப்பு கொண்டிருந்தது. இன்று நீட் தேர்வு. அவன் கல்லூரியும் தேர்வுமையங்களில் ஒன்று. கடும் கெடுபிடி சோதனைகள். கம்மல், மூக்குத்தி, அரைஞாண் கயிறு, கழுத்தில் மாட்டிய சிலுவை, கையில் மாட்டிய தாயத்து என்று அனைத்தையும் கழற்றி, முருங்கைக்கீரையை உருவுவதுபோல் உருவி, குச்சிகளாக மாணவர்களைத் தேர்வெழுத அனுப்பிவைத்தார்கள். சில தமிழக மாணவர்களும் இருந்ததில் ஆன்டனிக்கு ஆச்சர்யமும் ஆறுதலும்.

தேர்வு முடிந்து எல்லாச் சம்பிரதாயங்களையும் முடித்து பைக்கில் கிளம்பி, கொஞ்சதூரம் போனபோதுதான் கவனித்தான். கல்லூரிக்கு எதிர்த்திசையில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார் அவர். சுந்தரம் சார். பாதி அழிக்கப்பட்ட கரும்பலகையைப்போல சில மாற்றங்கள். ஆனால் அவரது அசமந்தம் அவரை அடையாளம் காட்டியது. பைக்கை நிறுத்திய ஆன்டனி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். சுந்தரத்தின் அருகில் ஒரு சிறுமி. இவன் கல்லூரியில் நீட் எழுத வந்தவள்தான். ‘`சாயா சாப்பிடலாமா சார்?” என்றான் ஆன்டனி.

கேரளாவுக்கே உரிய, புகை மண்டிய, கரி அப்பிய சாயாக்கடை. செவ்வாழைகளும் நேந்திரங்களும் தொங்கிக்கொண்டிருந்தன. கண்ணாடிப்பெட்டியில் பழம்பொரி எனப்படும் வாழையப்பங்கள், உளுந்துவடைகள், போண்டாக்கள். அவை எப்போதும் சூடாக இருந்து பார்த்ததில்லை.

“காபிதானே சார் சாப்பிடுவீங்க. சொல்லட்டுமா?”

“ஏதாவது சொல்லுங்க”.

அவர் மகளைப் பார்த்தேன். கண்களில் மிரட்சி படர்ந்திருந்தது.

“இது ரெண்டாவது அட்டெம்ப்ட். சுமாராத்தான் எழுதியிருக்காளாம். ப்ளஸ் டூவில் நல்ல மார்க். ஆனா, நீட் பாஸ் ஆகணும்ல? இன்னும் ஒரே அட்டெம்ப்ட்தான். ப்ச், ஏதாவது நல்ல கோச்சிங் சென்டர் சேர்க்கணும்.”

அவர் முகத்தில் உலகத்தின் அத்தனை களைப்பும் அப்பியிருந்தது. பிறகு அவர் ஒன்றும் பேசவில்லை. மேலே லொடலொடவென்று மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தது.

- தும்பி பறக்கும்...