
மணி ரத்னம் `பொன்னியின் செல்வன்’ நாவலின் பெருவாசகராக இருப்பதால் நாவலுக்கு நியாயம் செய்திருந்தார். கல்கிக்கும் அப்பாவுக்கும் 26 வருட இடைவெளி இருந்தது
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
`பொன்னியின் செல்வன்', சோழர்களின் வீரம், கருணை, காதல், கம்பீரம், அரசியல், கருணை, கர்ஜனை அனைத்தையும் வடித்த இலக்கியமாக முன்னணியில் நிற்கிறது. நாவலின் ஆக்கத்தில் கல்கிக்குப் பெரும் துணையாக இருந்தவர் ஓவியர் மணியம். அவரின் எழுத்தை ஓவியம் வழியாகக் கண்டுகொண்டார்கள் மக்கள். கல்கியின் மீதிருந்த குரு பக்தி, அவரோடு இணைந்து அப்பா மணியம் வேலை செய்தவிதம், நமது பாரம்பர்யத்தைப் பதிவுசெய்த அழகு பற்றியெல்லாம் நம்மிடம் பேசினார் அவர் மகனும், பிரபல ஓவியருமான மணியம் செல்வன்.
`` `பொன்னியின் செல்வன்’ முதல் இதழ் வரும்போதுதான் நான் பிறந்தேன். நானும் பொன்னியின் செல்வனும் ஒன்றாக வளர்ந்த மாதிரியே எனக்கு சந்தோஷம். எனக்கு வயது 72. என்கூட `பொன்னியின் செல்வன்’ நினைவும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. ஐந்து தலைமுறைகளாக `பொன்னியின் செல்வன்’ படிக்கப்பட்டுவருகிறது என்பது ஆச்சர்யமான விஷயம். அப்பாவிடமிருந்த ஓவியத் திறமையைக் கண்டு, வாய்ப்பும் கொடுத்து, அவர் உயரே வருவதற்குக் காரணமாக இருந்தது கல்கி ஐயாதான். அப்பா அதை அடிக்கடி உணர்ந்து சொல்லியிருக்கிறார். அப்பா இதற்கு முன்பு பல ஓவியங்கள் போட்டிருந்தாலும் இந்த நாவலுக்கு, இவ்வளவு பெரிய படைப்புக்கு அப்பா தேர்வானது சந்தோஷமான விஷயம். மூன்றரை ஆண்டுகள் வெளிவந்த இந்தத் தொடருக்கு முன்னேற்பாடுகள் எதுவும் கிடையாது. அப்பாவே இந்த நாவலின் முதல் வாசகராக இருந்தார். அப்படி ஒரு காம்பினேஷன்! கல்கி இப்படி ஒரு சரித்திரக் கதை எழுதப்போவதற்காக மணியம் ஓவியர் ஆனாரா இல்லை இவர்கிட்டேயிருக்கிற திறமையை வெளிப்படுத்த மணியத்துக்காகக் கதை எழுதினாரா என்று தெரியாது. ஆனால் அவர்களுக்குள் அப்படி ஓர் அலைவரிசை இருந்தது.

`கல்கி' என்ற மூன்றெழுத்தை உச்சரித்தாலே, சோழ சரித்திரம் நமது மனக்கண்ணில் பவனி வரும். `கல்கி’ என்றாலும், `பொன்னியின் செல்வன்’ என்றாலும் நந்தினி, ஆழ்வார்க்கடியான் என்று அழைத்தாலும், கல்கி நம் மனக்கண்ணில் தோன்றுவார். கல்கி `பொன்னியின் செல்வனை’ எழுதவில்லையென்றால் ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன், பழுவேட்டரையர், குந்தவை, நந்தினி, சுந்தரச் சோழர் எல்லோரும் அறியப்படாமலேயே போயிருப்பார்கள். எழுத்தாளனுக்கு சொற்கள் எனில் ஓவியனுக்கு நிறங்கள்.
ஒருமுறை எழுத்தாளர் லா.ச.ரா-வின் கதைக்கு சங்கு புஷ்பம் பறித்து அதைப் பார்த்து வரைந்திருந்தேன். லா.ச.ரா அதை ரசித்தபடி, `ரெண்டு விரலாலயும் எடுத்துடலாம் போலருக்கே' என்றார். அதை நான் இன்றுவரை பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அதைப்போல கல்கி ஐயாவும், அப்பாவும் ஒருவரை ஒருவர் புரிந்துவைத்திருந்தார்கள்.
`பொன்னியின் செல்வனி’ன் பெரும் கதை ஓட்டத்தை, அதன் பெரும் போக்கை நீவி தனியே எடுத்து நீண்ட ஓடையாக்கி அதனூடே இருவரும் பயணித்தார்கள். ஏராளமான முகங்கள். மூன்றரை வருடக் கதையோட்டம். இதற்கு ஓவியம் என்பது வாசகர்களோடு நடப்பது போன்றது. ரசிகனின் இதய சிம்மாசனத்தை நோக்கி அவர்கள் ஒவ்வொரு படிக்கட்டாக ஏறிக் கடக்கும் வித்தையை இங்கே கற்கலாம். ஓரிரு வாரங்களில் வாசகர்களின் நாடி அவர்களுக்குத் தெரிந்துவிட்டது. அப்பாவுக்கு கல்கி ஐயாவின் அகம் புரிந்து விட்டது. கல்கிக்கு அப்பாவின் ஆழம் புரிந்துவிட்டது. இரட்டைக் குழல் துப்பாக்கிபோல சொற்களும் வண்ணங்களும் சரியாக புரிந்து மக்களை சென்றடைந்து விட்டன.

அந்தக்காலத்தில் நந்தினியின் கொண்டை அவ்வளவு பேசப்பட்டது. எல்லோர் வீட்டின் கொலுவிலும் அந்தக் கொண்டை பிரத்யேகமாக இடம்பெற்றது. அது கிட்டத்தட்ட ஆண்டாள் கொண்டையின் மறு பரிமாணம்தான். சின்னப் பழுவேட்டரையர் இரும்பு மனிதர். அது ஓவியத்திலும் தெரிந்தது. பெரிய பழுவேட்டரையர் வீரத் தழும்புகளோடு இருப்பார். வயதானாலும் தோளில் புடைத்த தசைத் திரட்சிகளோடு இருப்பார். அதையும் அப்பா ஓவியங்களில் கொண்டு வந்தார். பழுவேட்டரையரின் இரட்டை மீசை புகழ்பெற்றது. அப்படி வைத்திருந்த மனிதர்களைப் பார்த்துவிட்டு அப்பா வரைந்திருந்தார். இன்னமும் சாக்கியர் கூத்து சிற்பங்களில் இரட்டை மீசை மனிதர்களின் வடிவங்கள் இருக்கின்றன.
கல்கி அனுபவ சேகரிப்புகளுக்காகவும், ஓவியங்களுக்கான அடிப்படை அனுபவத்துக்காகவும் அப்பாவை அஜந்தாவுக்கு கூட்டிப் போயிருக்கிறார். `பொன்னியின் செல்வன்’ எழுதும்போது இலங்கைக்கும், மாமல்லபுரத்துக்கும் அழைத்துப் போயிருக்கிறார். ஒவ்வொரு இதழுக்கும் ஒன்பது படங்கள் வரைந்திருக்கிறார். ஒவ்வொரு படமும் கல்கியிடம் காட்டி அவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அச்சுக்குப் போயிருக்கிறது. சமயங்களில் அப்பாவின் ஓவியத்தில் இருந்த நேர்த்திக்கு இன்னும் கூடுதலாக எழுத்தை கல்கி மெருகுபடுத்தியிருக்கிறார். இரவு வரைந்து, கல்கி வீட்டுக்குப் போய் காண்பித்து, திருத்தங்கள் இருந்தால் அதையும் அங்கேயே முடித்து அனுப்பிவிட்டுத்தான் வருவார். அதை அத்தனை ஆத்மார்த்தமாகச் செய்தார் அப்பா. `பொன்னியின் செல்வன்’ கல்கியில் ஆரம்பிக்கும்போது தொடர்ச்சியான அறிவித்தல்கூட இல்லை. ஒரே ஒரு தடவை அடுத்த இதழில் `பொன்னியின் செல்வன் ஆரம்பம்’ என்று வெளியிட்டுவிட்டு உடனே ஆரம்பித்துவிட்டார் கல்கி. அப்படி ஆரம்பித்தது மூன்றரை வருடங்கள் வெளிவந்தது. மூன்று வாரங்களுக்குப் பிறகு கதை சூடுபிடித்து எங்கும் பிரபலமாகிவிட்டது. மக்கள் பழைய பிரதிகளை வாங்கி கதையைத் தாளில் எழுதி வைத்துக்கொண்டார்களாம். அப்படியும் கல்கி அலுவலகம் நோக்கி பழைய இதழ்களைத் தேடி வரும்போது ஐந்து இதழ்களில் வந்த தொடரை இலவசமாக அச்சடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

மணி ரத்னம் `பொன்னியின் செல்வன்’ நாவலின் பெருவாசகராக இருப்பதால் நாவலுக்கு நியாயம் செய்திருந்தார். கல்கிக்கும் அப்பாவுக்கும் 26 வருட இடைவெளி இருந்தது. அப்பா அவரை மானசிகமாக குருவாக நினைக்க, கல்கியோ அப்பாவைப் பெரும் கலைஞனாக மதித்திருந்தார். அப்பா அஜந்தா, மாமல்லபுரம், இலங்கை செல்லும் போதெல்லாம் நேரில் அத்தனை சிற்பங்களையும் பார்த்து உள்வாங்கி ஓவியம் தீட்டினார். `பொன்னியின் செல்வன்’ மாதிரியான நாவல்கள் காலத்தையும், இருப்பிடத்தையும் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும். அதற்காகப் பயணங்கள் முக்கியமானவை என அவர் நம்பினார். என் தந்தை மணியமோ, கோபுலுவோ எல்லோருமே சாதனையாளர்கள். முன்னோடிகள். நானும் அவ்வழியே செல்கிறேன். எனக்கென்று உள்ளுணர்வு சார்ந்தே தனித்தன்மையை ஓவியத்தில் கலக்கிறேன்.
உலகத்தின் எல்லாச் சமூகங்களுக்கும் தங்கள் வரலாற்றை காட்சிப்படுத்துகிற அக்கறை இருக்கிறது. அதற்கான வேலையை அப்பா தன் எல்லா ஆற்றல்களையும் தாரை வார்த்து செய்திருக்கிறார். அடுத்தடுத்து இது மாதிரி பெரிய படைப்புகளைத் திரைப்படமாக்கி கொண்டுவரும் தேவையிருக்கிறது. எல்லா வடிவங்களிலும் வரலாற்றைப் பதிவு செய்தால் நல்லது. இளைய தலைமுறை அந்த எல்லையை விரிவுபடுத்தும். அதன் அவசியத்தை நாம் உணர்ந்துவிட்டதே நல்ல அறிகுறிதான்...'' உற்சாகமாகச் சொல்கிறார் ஓவியர் மணியம் செல்வன்.
****
நான் 16 வயதில்தான் `பொன்னியின் செல்வன்’ படித்தேன். அப்பா சொன்ன சில விஷயங்களை மனதில் நிறுத்திக்கொண்டு படிக்கும்போது அந்தப் படங்களே என்னிடம் பேசுவதுபோல இருக்கும். 18 கேரக்டர்கள் அதில் ஜொலித்தன. கேமராமேன் மாதிரி ஒளியமைப்பைக் கொண்டு நிறுத்தினார். அதில் என்னை மிகவும் பாதித்த ஐந்து படங்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த ஓவியம் எனக்குப் பிடித்தது. ஒரு கோட்டைக்குள் போகும்போது வரைந்த கோணம். கீழேயிருந்து பார்க்கிற கோணத்தில் பல்லக்கு, குதிரை இருக்கின்றன. தூரத்தில் கோட்டையின் வாயில் தோரணங்கள். இந்தக் காட்சியை வித்தியாசமாகச் செய்திருப்பார். கோட்டையைப் பார்த்தால் பெயின்டிங் மாதிரி இருக்கும். லைட் & ஷேட் அழகாக இருக்கும். மயிலையில் அறுபத்து மூவர் உற்சவம் திருவிழா நடக்கும். அதில் சாமி பல்லக்கில் போகும். அப்பா பல காட்சிகளைப் படம் பிடித்து எடுத்திருக்கிறார். அப்படிப் பார்த்த காட்சிகள் அப்பாவின் மனதில் நின்று இந்த ஆங்கிள் எடுத்திருப்பார் என நினைக்கிறேன்.

இந்தக் காட்சியை வாஷ் - டிராயிங் செய்திருக்கிறார். பின்னணியில் இருக்கிற சூழல் அந்தக் காலத்துக்கு நம்மை அழைக்கிறது. இதில் இரவுக் காட்சி பின்னால் மாளிகை ஆர்டிஸ்ட் டச் அதிகமாகத் தெரியும். ஓரத்தில் இருக்கிற பெரும் சுவர். தூரத்தில் லைட்டிங், தண்ணீரின் சலசலப்பு, வானத்து நட்சத்திரங்கள் என இந்த ஓவியம் கலை அம்சம் நிறைந்தது.
****

ஆஹா. நான் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி. அரச பட்டாபிஷேகம். கைகூப்பி அருள்மொழிவர்மன் நிற்கிறார். வேத கோஷங்கள் முழங்குகின்றன. வைணவமும் சைவமும் அங்கே இருக்கின்றன. தோரண வாயில், உடன் யானைகள். குந்தவி இருக்கிறார். பூங்குழலியும், வானதியும் இருக்கிறார்கள். அந்தரத்தில் மணிமுடியும் வாளும் இருக்கின்றன. அவற்றை யாரும் கவனித்துவிடாதபடி ஓவியம் அமைந்திருப்பது சிறப்பு.

இது கோடியக்கரையில் இருக்கிற காட்சி. பூங்குழலி படகில் சாய்ந்தவண்ணம் இருக்கிறாள். ஏகாந்தம் படர்கிறது. தாமரையும் கடலில் கிடைத்த பொருள்களும் இணைந்து ஆபரணமாகியிருக்கின்றன. கலங்கரை விளக்கம், தூரத்துப் படகுகள், அதில் இருக்கிற மனிதர்கள்... இந்த வண்ணம் என் மனதுக்கு நெருக்கமானது.


`பொன்னியின் செல்வன்’ எழுத்துக்காக ஒரு படம் போட்டிருக்கிறார் அப்பா. அதுவே ஓவியமாகிவிட்டது. நிழல் ஓவியமாக யானைகளும் பரிவாரங்களும் இருக்கின்றன. அடர்ந்த காடுகளின் உள்ளிருந்து பார்க்கிற உணர்வை உண்டுபண்ணிவிடுகிறார். ஒரு சின்ன ஓவியத்தில் பறவைக் கூட்டமும், குளமும் வரைந்து அதை இன்னும் அழகாக்கிவிடுகிறார்.