
கலை
ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில், என் குருநாதரின் ஓவியங்களை மாளாத ஆச்சர்யத்துடன் பார்த்துப் பார்த்து வியந்து, மீண்டும் மீண்டும் `அப்பா, இது வரைந்ததுதானா?’ எனக் கேட்டுக் கேட்டு மாய்ந்தபோது, புன்சிரிப்போடு அப்பா கூறியது இன்றும் என் ஆழ்மனதில் பசுமையாக இருக்கிறது.
புத்தகத்தோடு சேர்த்து என்னைத் தன் மடியில் தூக்கி இருத்தி, `இதோ கீழே பார் ‘சில்பி’ என்று போட்டிருக்கா... ஆமா! இதுதான் கையெழுத்து. கையெழுத்து இருந்தா அது ஓவியம்தான். இது சில்பி அவர் கையாலேயே வரைந்தது’ என்றார் அப்பா.
`அவர் வரைந்தார் என்றால், ஏன் என்னால் வரைய முடியாது?’ என்ற எண்ணம் எழ, `என்னால வரைய முடியாதா?’ என்று கேட்டேன்.
`ஏன் முடியாது... உன்னாலும் முடியும். சில்பியை மனதார வேண்டிக்கொள். கடவுளை வேண்டிக்கொள். எல்லாம் தானா வரும்’ என்றார் அப்பா.

வண்ணங்கள், தூரிகைகள், தாள்கள் என அனைத்தையும் அடுத்த நாளே வாங்கித் தந்துவிட்டார். என் தாத்தா பொக்கிஷம்போல் பாதுகாத்த தீபாவளி மலர்களிலிருந்து ஒன்றை, `நான் பொறுப்பு’ என்று எடுத்து வந்து, என்னிடம் `நீ வரை’ என்று தந்துவிட்டு, அவர் பாடிக்கொண்டிருப்பார்.
அப்படி நான் முதலில் வரைந்தது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். அப்போது எனக்கு ஏழு வயது. குருநாதரின் அருள் பரிபூரணமாக இருந்திருக்க வேண்டும். அவரிடமே வந்து, சிஷ்யர்களே இல்லாத அவருக்குக் குழந்தையாகவே மாறிவிட்டேன். `இனிமேல் `பத்மவாசன்’ எனும் என் குழந்தையையே காண விழைகிறேன்’ என்பது அவரே எழுதியது. இவையெல்லாம் விட்டகுறை தொட்டகுறை. இதை மறுக்கவோ, மாற்றவோ முடியாது. `ஓவியர்கள் வியந்த ஓவியர்’ என்பது அவரது பெருமை. `வியந்த’ என்பதைவிட `வணங்கிய’ என்பதுதான் பொருத்தம்.

ஒருமுறை, காஞ்சி மகாபெரியவர்கள் `அவன் தேவலோகத்திலிருந்து இதுக்குன்னே வந்தவன்’ என்றார். ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் அண்ணாமலையில் உறையும் (அகஸ்தியர் ஆசிரமம்) வெங்கட்ராமன் குருஜி, சில்பி அவர்களைப் பற்றிக் கூறும்போது `தேவலோக சிற்பி மயன், தோளில் கைபோட்டுப் பேசும் ஒரே நபர் சில்பி’ என்றார்.

எனக்கு இவையெல்லாம் வியப்பைக் கொடுப்பதில்லை, `சர்க்கரை இனிக்கும்’ என்பதைப்போல. நான் சர்க்கரையைச் சாப்பிட்டவன்!
ஜனாதிபதியே ஆனாலும் தீபாவளியன்று மட்டுமே பார்க்க முடிந்த காசி அன்னபூரணி, இவருக்கு மட்டும் மாதக்கணக்கில் தரிசனம் கொடுத்தாள். கூட்டம் கூட்டமாக முட்டிமோதி தரிசிக்கும் திருப்பதி வேங்கடாசலபதியே, சில்பியின் கைமூலம் வெளிவந்த பின்னர்தான், வீட்டுக்கு வீடு போய்ச் சேர்ந்தார். அவரும் இவருக்கு மாதக்கணக்கில்தான் காட்சி கொடுத்தார். சமீபத்தில் உலகமே வியந்து போற்றி, ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும் எனச் சுற்றிச் சுழன்றதே, அந்த ஆதி அத்திவரதரும், இவர் கரத்தின்வழி வெளிப்பட விரும்பியே, பல நாள்கள் இவருக்குக் காட்சி தந்து அருள்பாலித்தார். இது என்ன எவருக்கும் எளிதில் கிடைத்துவிடும் பாலன்னமா! தேவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அமிர்தம்!

`குரு... குரு...’ என்கிறோம். எனக்கு வாய்த்த குருபோல் ஆகுமா? அத்தனை கடவுளரும் உச்சிமோந்து, கொஞ்சிக் களித்த பெருமையை உடையவர் என் குருநாதர். என்னை அள்ளி அணைத்து உச்சிமோந்து `நீ என் குழந்தை, நீ என் குழந்தை...’ என்று ஆனந்தக் கண்ணீர்விட்ட பின் எனக்குச் சொர்க்கமென்ன, வைகுண்டமென்ன, கயிலாயமென்ன..!

என் பதினைந்தாவது வயதிலேயே அத்தனையையும் பார்த்துவிட்டேன். என் குரு அட்சய பாத்திரம்... என் குரு அமிர்தக் கடல். அவர், ஆண்டவன் படைத்த அதிசய ஓவியம்!