சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் திருவிழா என்றவுடன் ராட்டினம், பச்சை குத்துபவர்கள், வளையல் வண்டிக்கார்கள், பலூன் விற்பவர்கள் எனக் கிராமமே களைகட்டும். ஆனால், தற்போது திருவிழாக்களில் பச்சைக் குத்தும் கடை டாட்டூ சென்டர்களாகவும், ராட்டினங்கள் இருக்கும் இடங்கள் டிஜிட்டல் கேம் விளையாடும் இடங்களாகவும், வளையல் பாசி விற்கும் கடைகள், எந்தப் பொருள் எடுத்தாலும் 10 ரூபாய் கடைகளாகவும் அடையாளம் மாறியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, விழுப்புரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தள்ளுவண்டியில் வளையல் விற்கும் ஒரு தம்பதியைச் சந்தித்தேன். சிறுவயதில் அப்பா கொடுக்கும் திருவிழா காசுக்கு காத்திருந்து வளையல் வண்டியை ஆசையாய் எதிர் நோக்கும் நிமிடங்கள் நினைவுக்கு வர, வளையல் வண்டி ஐயாவுடன் உரையாடல் தொடங்கியது.
"என்னம்மா வளையல் வேணுமா, என்ன கலர்?" என வளையலை பிரித்துக்காட்டியவரிடம், வளையல் போடும் பழக்கத்தை நிறுத்தியாச்சுனு சொல்ல மனசு வராமல் ரெண்டு டஜன் வளையல்களைக் கையில் அணிந்துகொண்டேன். 'வளையல் வியாபாரம் எப்படி போகுது அய்யா' எனக் பேச்சுக்கொடுக்க, தயக்கமின்றி பேசத் தொடங்கினார்.
என் பேரு ரவி, இந்தா உட்கார்ந்துருக்குல இது என் சம்சாரம். வளையல் விக்கிறதுதான் எங்க முழு நேர தொழிலு. எங்க தாத்தா காலத்துல இருந்து வளையல் வியாபாரம்தான் பண்ணிகிட்டு இருக்கோம். எங்க தாத்தா, அப்பா வளையல் வித்த காலத்துல, பெட்டி முழுக்க வளையல்களை அடுக்கி, தலையில சும்மாடு வெச்சு, பெட்டியைத் தலையில தூக்கிகிட்டு ஊரு ஊரா போயி, வளையல் வியாபாரம் பார்ப்போம்.
சில நாள் 50 ரூபாய்க்கு வியாபாரம் ஆகும். சில நாள் 500 ரூபாய்க்கும் வியாபாரம் ஆகும். எவ்வளவுக்கு வித்தாலும், கடவுள் நமக்கு படி அளந்தது இவ்வளவுதான்னு சந்தோஷப்பட்டுப்போம்.- ரவி
அந்தக்காலத்துல எங்களுக்குனு ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருந்தாங்க. முப்பது நாளும் முப்பது ஊரு போவோம். விழுப்புரத்தைச் சுத்தி சின்னச் சின்னதா 200 ஊர்கள் இருக்கு. ஒரு ஊருக்கு ஒரு முறை வளையல் விற்கப்போனால், மீண்டும் நாலு மாசம் கழிச்சுதான் அந்த ஊருக்குப் போவோம். வளையல், வளையல்னு கத்திக்கிட்டே நாங்க ஊருக்குள்ள நுழைஞ்சா போதும், கூட்டம் களைகட்டி திருவிழா மாதிரி ஆயிரும். ஒவ்வொரு முறையும் இந்தக் கலர் வேணும், இந்த டிசைன் வேணும்னு ஆர்டர்லாம் கொடுத்து, நாங்க அடுத்த முறை வியாபாரத்துக்கு போகுற வரை அந்தப் பொருளுக்காகக் காத்துருப்பாங்க. ஆனால், இப்போ தடுக்கி விழுந்தா பேன்ஸி ஸ்டோர்கள் இருக்கு. அதனால் எங்களுக்கு வியாபாரம் பெரிய அளவுல நடக்குறது இல்ல.
எங்க அப்பா வளையல் வித்த காலத்துல பெட்டியில் இருந்து தள்ளுவண்டிக்கு மாறிட்டோம். எந்த ஊருல திருவிழான்னாலும் பத்து தள்ளுவண்டிக்காரங்க கடை போடுவோம். வியாபாரமும் களைகட்டும். ஆனால், கடந்த பத்து வருஷத்துல ஃபேஷன் நிறைய மாறிப்போச்சு. நிறைய பொம்பளை புள்ளைங்க வளையல் போடவே விரும்புறது இல்ல. அப்படியே வளையல் போடணும்ன்னாலும் டிரஸுக்கு மேட்சா வாங்க கடைகளுக்கு போயிடுறாங்க.
வியாபாரம் சரியா இல்லாததால நிறைய வண்டிக்காரங்க வேற தொழிலுக்குப் போயிட்டாங்க. திருவிழாக்களில்கூட வளையல் வண்டிக்காரங்களைப் பார்க்க முடியுறது இல்ல. ஒரு காலத்துல எங்க குடும்பத்துக்கே சோறு போட்ட தொழிலு. என் புள்ளைங்க மூணு பேரையும் வளையல் வித்துதான் படிக்க வெச்சேன். அதனால இப்பவும் இந்தத் தொழிலைவிட்டுப் போக மனசு வராமல் பண்ணிட்டு இருக்கோம்.
வண்டியை வெளியூர்களுக்கு எடுத்துகிட்டுப்போனாலும் வியாபாரம் ஆகாததால் விழுப்புரம் பழைய பஸ்டாண்டுக்கு வெளியேதான் ரெகுலர் வியாபாரம். வளையலோட சேர்த்துப் பொட்டு, க்ளிப்னு மத்த பொருள்களையும் வியாபாரத்தில சேர்த்துருக்கோம்.
எங்ககிட்ட வளையல் போட்டுக்கிட்டா ராசினு எல்லா வளைகாப்பு விஷேசத்துக்கும் எங்களைத்தான் கூப்பிடுவாங்க. ஆனால், இப்ப அந்த நம்பிக்கையெல்லாம் மக்கள்கிட்ட இல்லை.- ரவி
தினமும் காலையில் நானும் என் சம்சாரமும் வியாபாரத்துக்கு வந்துருவோம். வண்டிக்குள்ளேயே அடுப்பு வெச்சிருக்கோம். அதனால் மதிய சாப்பாடு இங்கேயே சமைச்சுப்போம். எல்லா நாளும் வியாபாரம் இருக்கும்னு சொல்ல முடியாது. சில நாள் 50 ரூபாய்க்கு வியாபாரம் ஆகும். சில நாள் 500 ரூபாய்க்கும் வியாபாரம் ஆகும். எவ்வளவுக்கு வித்தாலும், கடவுள் நமக்கு படி அளந்தது இவ்வளவுதான்னு சந்தோஷப்பட்டுப்போம்.
வளையல்கள் எல்லாம் மொத்தமாகச் சென்னையில இருந்து வாங்கிட்டு வந்துருவோம். வளையல்களில் மொத்தம் 10 சைஸ் இருக்கு. ஒவ்வொரு சைஸ்சிலும் வெவ்வேற கலர்னு மூனு மாசத்துக்கு ஒரு முறை வாங்கிட்டு வருவேன். சில வளையல்கள் வியாபாரம் ஆகாமல் அப்படியே நின்னுரும். அந்த வளையல்களை வந்த விலைக்கு வித்துருவேன்.
20 வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் எங்ககிட்ட வளையல் போட்டுக்கிட்டா ராசினு எல்லா வளைகாப்பு விஷேசத்துக்கும் எங்களைத்தான் கூப்பிடுவாங்க. ஆனால், அந்த நம்பிக்கையெல்லாம் மக்கள்கிட்ட இல்லைன்னாலும், சிலநேரத்தில் வளைகாப்புகளுக்கு மொத்தமா ஆர்டர் கொடுத்து வாங்கிட்டுப் போவாங்க, சில கல்யாணங்களுக்குக்கூட ஆர்டர் வருது. என் தொழிலை என் புள்ளையும் பண்ணணும்னு ஆசை. அவனுக்கு ஒரு வண்டியும் வாங்கிக்கொடுத்தேன். ஆனால், கட்டுப்படி ஆகலைன்னு வேற தொழிலுக்குப் போயிட்டான்.
விழுப்புரம் மாவட்டத்திலேயே இப்போ நாங்க மட்டும்தான் வளையல் வண்டிக்காரங்க. எங்க காலத்துக்கு அப்புறம் இப்படி ஒரு வளையல் வண்டியை நீங்க பார்க்கக்கூட முடியாதுனு நினைக்கிறேன்.
கால மாற்றம் நடக்குது, மக்கள் அதுக்கு தகுந்த மாதிரி மாறுறாங்க. எல்லாமே ஏத்துக்கக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால், காலத்துக்கு ஏற்ப பசி மாறாதே. வளர்ச்சி வளர்ச்சினு தொழில்களை மட்டும் இல்ல, அதை நம்பி இருக்க தொழிலாளர்களையும் சேர்த்து அழிக்கிறீங்கனு மறந்துறாதீங்க மக்கா" என்று விடைபெற்றார் வளையல்கார ஐயா... அவர் அணிவித்துவிட்ட வளையலில் ஓசை காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்க, மனபாரத்துடன் பயணம் தொடங்கியது.