பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பாங்காங்கிலி ருந்து டெல்லி நோக்கி அந்த ஏர் இந்தியா விமானம் பறந்துகொண்டிருந்தது. அதன் முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்திருந்த அவனது கண்கள் கலங்கியிருந்தன. அவன் பாங்காங்கின் மிகப்பெரும் போதைப் பொருள் வியாபாரி. ஆனால் அவன் தாய்லாந்து நாட்டுக்காரன் அல்ல. இந்தியாவின் ஒரு பிரபலமான அரசியல் புள்ளியின் வாரிசு. சில மணி நேரங்களுக்கு முன்பு தொலைபேசியில் வந்த தகவல் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

``அவனுடைய தந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில், தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. பிழைப்பது கடினம்"என்ற செய்தி அவனை உலுக்கியது. தந்தை மீது அவனுக்கு அதீத பாசமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால், அவன் தனது போதை மருந்து வியாபாரத்தில் இதுவரை சம்பாதித்த பணம் முழுக்க அவனுடைய தந்தையின் பொறுப்பில்தான் இருந்தது. அது போக அவனது தந்தை தனது 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் சட்டத்துக்கு விரோதமாக ஊழல் செய்து சம்பாதித்தவை முழுக்க அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவற்றை அவர் என்ன செய்திருக்கிறார் என்று அவனுக்கு இதுவரை தெரியாது.
மொத்தப் பணமும் இருக்குமிடம் அவனுக்கு தெரியாது என்பது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் 'தந்தை பணத்தை என்ன செய்திருக்கிறார் என்று அவன் அறியாமல் இருக்க வேண்டும்' என்பது அவர்கள் இருவருக்கிடையே எழுதப்படாத ஒரு ஒப்பந்தமாக இருந்தது. ஏனெனில் போதை மருந்து வியாபாரத்தில் அவன் ஏதாவது ஒரு சமயத்தில் தாய்லாந்து காவல்துறையால் கைது செய்யப்படலாம். அவ்வாறு நேரும்போது, காவல்துறையின் கடுமையான விசாரணைக்குப் பணிந்து பணம் இருக்குமிடம் குறித்த தகவலை அவன் காவல்துறையிடம் கூற நேரிடும். அதனால் சம்பாதித்த முழுப் பணத்தையும் அவர்கள் இழக்க வாய்ப்புண்டு
பணம் எங்கு இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாமலே போய்விட்டால் விசாரணையில் பணம் குறித்த தகவலை அவனால் கூறவே முடியாது. எனவே, போதை வியாபாரத்தைக் கைவிட்டு அவன் இந்தியா திரும்பிய பிறகு பணம் குறித்த விவரத்தை அவனுக்குத் தெரிவித்தால் போதும் என அவருடைய தந்தையிடம் கூறியிருந்தான். எனவே அவன் மூலமும், தந்தை மூலமும் என இரு வழிகளில் வந்த மொத்தப் பணமும் அவனுடைய தந்தையின் கட்டுப்பாட்டில், அவர் ஒருவருக்கு மட்டுமே தெரிந்த இடத்தில் பதுக்கப்பட்டிருந்தது.

அவனுடைய கண்ணீருக்கு இதுவே காரணம். முழுப் பணத்தையும் அவர் எங்கு வைத்திருக்கிறார் என்ற தகவலை அவர் இறக்கும் முன் அவனுக்குக் கூறாமலேயே அவர் இறந்து போய் விட்டார் அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவனுடைய வாழ்வே சூனியமாகி விடும். அவன் விசும்பி அழ ஆரம்பித்தான். அவனது விசும்பலைப் பார்த்த விமானப் பணிப்பெண்கள் அவனுக்கு என்ன நேர்ந்தது எனச் சற்றே ஆச்சர்யத்துடன் விசாரித்தனர். `தந்தை கவலைக்கிடம்' என அவர்களை சமாளித்து அனுப்பினான். நரக வேதனையில் அவனுடைய பயணம் தொடர்ந்தது.
டெல்லியில் இறங்கியதுமே சற்று பயத்துடனே தனது வீட்டினைத் தொடர்பு கொண்டான். `மருத்துவமனைக்கு வரவேண்டாம், நேராக வீட்டிற்கே வரவும்' என்ற தகவல் அவனது பயத்தை அதிகப்படுத்தியது. அடுத்த சென்னைக்கான விமானத்தைப் பிடித்து மிகுந்த பரபரப்புடன் அவனுடைய வீட்டிற்குச் சென்றான். தந்தையை இனி காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்ததால் அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குக் கொண்டு வந்திருந்தனர். அவனுடைய தந்தை தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்றிருந்தார். அவனால் துக்கத்தை தாங்க முடியவில்லை எனக் கதறி அழ ஆரம்பித்தான்.
மெல்ல தன்னை தேற்றிக்கொண்டு, அங்கிருந்த மருத்துவர்களிடம் ``டாக்டர் எங்க அப்பாவுக்கு எப்ப சுயநினைவு திரும்பும்"என்று கேட்டான். அதற்கு மருத்துவர்கள் ``உங்கள் அப்பாவிற்கு மிகவும் வயது ஆகிவிட்டது. கீழே விழுந்ததால் தலையில் பலத்த அடி. ஒரு சிக்கலான அறுவை சிகிச்சை செய்தால் அவரை உயிர் பிழைக்க வைக்கலாம். ஆனால், அறுவை சிகிச்சையைத் தாங்கக்கூடிய உடல் வலு அவருக்கு இல்லை."

``எனவே அவர் தானாகவே கோமா நிலையிலிருந்து மீண்டால்தான் உண்டு. எப்போதும் மீள்வார் என எங்களால் கூற இயலாது. கோமாவிலேயே உயிர் போனாலும் போகலாம். கடவுள் விட்ட வழி."என்றனர். அவனால் ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை. நடுத்தெருவில் நிற்பது போல உணர்ந்தான். மிகுந்த கலக்கத்துடனும் ஏமாற்றத்துடனும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக அதே வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் அவனுடைய அப்பாவின் அந்தரங்க வேலைக்காரனைத் தனியாக அழைத்தான். அவரிடம் ``அண்ணா அப்பா கீழே விழுந்ததும் உங்ககிட்ட ஏதாவது சொன்னாரா? என்று கேட்டான். ``இல்ல தம்பி அவரால தெளிவா பேசவே முடியலை."
``ஆனா அவர் தன்னோட பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்து எங்கிட்ட கொடுத்து `செல்போன், டிரைவர், மேப், போட்டோ' எனப் புரியாதவாறு ஏதோதோ உளறினார். பிறகு அவர் சுயநினைவை இழந்து விட்டார்"என்றான் வேலைக்காரன். அவன் பரபரப்புடன் ``எங்கே அவரோட செல்போன்?" என்றான். வேலைக்காரன் அவனுடைய அப்பாவின் செல்போனை உள்ளறையில் இருந்து எடுத்து வந்து கொடுத்தான். `அவனுடைய மீதி வாழ்க்கை அந்த செல்போனில்தான் அடங்கியுள்ளது. `அதைக் கவனமாக ஆராய ஆரம்பித்தான்.
அது ஒரு சாதாரண ஸ்மார்ட் போன். அதிலுள்ள அனைத்துத் தகவல்களையும் அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்து பார்த்தான். போனை கழற்றியும் பார்த்தான். பணம் எங்கு இருக்கிறது என்பதற்கான எந்த ஒரு குறிப்பும் அதில் இல்லை. அவனால் ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை!
திடீரென வீடு பரபரப்படைந்தது. அவனுடைய தந்தைக்கு சுயநினைவு வந்து விட்டதாக வேலைக்காரன் வந்து கூறினான். அவன் நான்குகால் பாய்ச்சலில் ஓடினான். அவனுடைய தந்தை கண்களை விழித்து மேலும் கீழும் பார்த்துக்கொண்டிருந்தார். மூச்சு வேகமாக வாங்கியது. அவருடைய இதயத்துடிப்பு இயல்பாக இல்லை. மருத்துவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல், உதட்டைப் பிதுக்கிய வண்ணம் விழித்துக் கொண்டிருந்தனர்.

இவனைப் பார்த்ததுமே தந்தையின் கண்கள் பிரகாசமடைந்தன. ``செல்போன்...செல்போன்...பத்திரம்...பத்திரம்..."என்றார். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ``சொல்லுங்கப்பா. என்னனு தெளிவா சொல்லுங்க"என்றான். ஆனால், அடுத்த வார்த்தை பேச அவருக்கு உயிர் இல்லை! அவன் கதறி அழ ஆரம்பித்தான். ``செல்போன்"எனும் புரியாத புதிர் அவனைக் கலங்கச்செய்தது. தந்தையின் செல்போனை அவன் தன் பொறுப்பில் மிகவும் கவனமாக வைத்திருந்தான்.
தந்தையின் காரியங்கள் அனைத்தும் முடிந்தன. அவன் வீட்டில் தனிமையில் அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தான். அவனுடைய தந்தையின் செல்போன் அவனுடைய கையில் இருந்தது. அவருடைய வங்கிக் கணக்கை சோதித்துப் பார்த்து விட்டான். சில ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே அதில் இருந்தன. அது போக இந்த வீடு. வேறு எந்தச் சொத்தும் அவருடைய பெயரில் இல்லை. அவருடைய வங்கி லாக்கர்களை ஆராய்ந்ததில் குறிப்பிட்ட அளவு நகைகள் மட்டுமே இருந்தன. இவற்றை வைத்து அவனால் வாழ முடியுமா என்று தெரியவில்லை.
அவர் தன்னுடைய ஐம்பதாண்டுக் காலத்தில் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடி பணமும், இவன் பாங்காங்கிலிருந்து சட்டவிரோதமாக அனுப்பிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணமும் எங்கு சென்றது என்றே தெரியவில்லை.
``செல்போன்...செல்போன்...பத்திரம்...பத்திரம்..."என அவர் கூறியதன் மர்மம் அவனுக்குச் சுத்தமாக விளங்கவில்லை. அந்த செல்போனில் பதிவாகியிருந்த தகவல்கள் எதுவுமே பணம் குறித்த எந்தக் குறிப்பையும் கொண்டிருக்கவில்லை. அந்த செல்போனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்து விட்டான். சிம்கார்டு மற்றும் பேட்டரி தவிர பின்புறம் எதுவுமில்லை.

பணம் குறித்த குறிப்பு துண்டுச் சீட்டாக எதுவும் இருக்குமா?என்று போனை முழுக்கக் கழற்றிப் பார்த்தாகிவிட்டது. அப்படி எதுவும் இல்லை. ஒரு சாதாரண செல்போன், அதில் தான் அவனுடைய வாழ்க்கையே அடங்கியுள்ளது. இதன்பிறகு என்ன செய்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை. எப்போதுமே வித்தியாசமாகச் சிந்திக்கும் அவனுடைய சிறுவயது நண்பனின் நினைவு திடீரென அவனுக்கு வந்தது. அவனது நண்பன் தற்போது வக்கீலாக பிராக்டீஸ் செய்துகொண்டிருந்தான். அவனிடம் ஆலோசனை கேட்கலாம் என அவனுடைய வீட்டிற்குச் சென்றான்.
``வாடா! காரியம் எல்லாம் முடிஞ்சுதா? நான் உன் வீட்டுக்கு வந்திருந்தேன். அந்தக் கூட்டத்தில் சரியா பேச முடியல. சொல்லு. ஏன் முகம் இன்னும் டல்லா இருக்கு? வயசானவர் தானே. விடு பாத்துக்கலாம்"என்றான் வக்கீல்."அதில்லடா. அவர் போனதுல எல்லாம் எனக்குப் பெரிய வருத்தம் இல்லை. இப்ப ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இங்க பேசலாமா? என்றான். "வா என்னோட ரூமுக்குப் போயிடலாம்" என்று வக்கீல் தன்னுடைய அறைக்கு அவனை அழைத்துச் சென்றான். அறைக்குள் சென்றதும், ``ம்,சொல்லு"என்றான். இவன் பணம் குறித்த உண்மை நிலவரத்தை விளக்கினான்.
``அடப்பாவி!அவ்வளவு சம்பாதிச்சீங்களே ரெண்டு பேரும். இப்ப பணம் எங்க இருக்குன்னு தெரியலையே. எங்க அந்த செல்போன்"என்றான் வக்கில். ``இந்தா பார். உன்னால் ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கலாம்"என்றபடி செல்போனை நண்பனிடம் கொடுத்தான். வக்கீல் செல்போனை வாங்கி அரைமணிநேரம் ஆராய்ந்தான். அவனுக்கும் எதுவுமே புரியவில்லை. "இந்த செல்போனில் அவர் என்ன குறிப்பு கொடுத்திருக்கிறார்? மொத்தப் பணமும் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே" என்றபடி வருத்தத்துடனும் கொஞ்சம் ஏமாற்றத்துடனும் செல்போனை திருப்பிக் கொடுத்தான் வக்கீல்.

``சரிடா. உன் கிட்ட வந்தது முக்கியமான ஒரு விஷயத்துக்காக தான். இந்த செல்போன்ல என்ன ரகசியம் அடங்கியிருக்கிறது என்று என்னால கண்டுபிடிக்க முடியல. இப்ப உன்னாலயும் கண்டுபிடிக்க முடியல. இந்த இரகசியத்தை யார் கண்டுபிடித்துக் கொடுத்தாலும் வரக்கூடிய பணத்தில் 10 சதவிகிதம் நான் கொடுத்துடறேன். ஆனா இதை பகிரங்கமா வெளியே சொல்ல முடியாது. உனக்குத் தெரிஞ்ச கிரிமினல் மைண்ட் கொண்ட நிறைய பேர் இருப்பாங்க. அவங்களைக் கூட்டிட்டு வா. அவங்க இந்த செல்போனை பார்க்கட்டும். ஏதாவது ஐடியா கிடைக்கும்"என்றான்.
வக்கீல் சரி என்று தலையசைக்க, சற்று ஏமாற்றத்துடனே அவன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான். அடுத்த நாளிலிருந்து வக்கீல் பலதரப்பட்ட நபர்களை அவனுடைய வீட்டிற்குக் கூட்டி வர ஆரம்பித்தான். சாதாரண பெட்டி திருடன் முதல் ப்ரொபஷனல் ஹேக்கர்ஸ் வரை அந்த செல்போனை ஆராய்ந்து பார்த்து விட்டனர். அப்படி விசேஷமாக அந்த செல்போனில் எதுவுமே இல்லை.
திடீரென வக்கீல் ``உங்க அப்பா கீழே விழுந்தபோது வேலைக்காரன் கிட்ட ஏதோ சொன்னதா சொன்னில்ல, அது என்ன என்றான்" மிகுந்த பரபரப்புடன்."ஆமாம் அதை நாம் மறந்தே போய் விட்டோம். இரு அவனையே கூப்பிடுறேன் என்று பரபரத்தபடி வேலைக்காரனைக் கூப்பிட்டான். வக்கீல் விசாரிக்க ஆரம்பித்தான் "ஏம்ப்பா பெரியவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்த போது உங்கிட்ட ஏதாவது சொன்னாரா?என்றான்."ஆமாங்கய்யா தட்டுத்தடுமாறி ஏதோ உளறினார். அது என்னன்னு கூட நான்தான் அன்னைக்கே தம்பிகிட்ட சொன்னனே" என்றான் வேலைக்காரன்."அது என்னனு இப்ப சொல்லு பார்க்கலாம் என்றான்"வக்கீல்.

``கீழே விழுந்த பெரியவர் தன்னோட பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்து எங்கிட்ட கொடுத்து 'செல்போன், டிரைவர், மேப், போட்டோ' எனப் புரியாதவாறு ஏதோதோ உளறினார். பிறகு அவர் சுயநினைவை இழந்து விட்டார்"என்றான் வேலைக்காரன். ``இத்தனை நாளா செல்போன் அப்படிங்கிற ஒரு வார்த்தைய மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருந்தோம். இவன் சொன்னத வச்சி பார்க்கும்போது டிரைவருக்கு இந்த விஷயத்துல உண்மை தெரியும் போல இருக்கு, டிரைவரைக் கூப்பிடு"என்றான் வக்கீல்.
டிரைவரை அழைத்து பெரியவர் ஏதாவது மேப் அல்லது போட்டோ கொடுத்தாரா என்று அதட்டியும் மிரட்டியும் விசாரித்தனர். அவன் தனக்கு ஒன்றுமே தெரியாது என சாதித்தான்."உங்க உப்ப தின்னுட்டு உங்களுக்கு துரோகம் செய்வேனா?" என்றபடி கீழே உட்கார்ந்து ஒப்பாரி போல அழ ஆரம்பித்தான். பணம் இருக்குமிடம் தெரியாததால் அவனுக்குப் பைத்தியமே பிடிக்கும் நிலை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனுடைய மனஅழுத்தம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் தனியாகப் புலம்ப ஆரம்பித்தான். தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தான்.
வக்கீலுக்கும் என்ன செய்வது என்றேதெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவனது புலம்பல் தாங்காமல் மருத்துவமனையில் அவனை அனுமதித்தனர். இறுதி முயற்சியாக வக்கீல் அந்த செல்போனை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்தான். எதேச்சையாக 'கூகுள் டிரைவ்' பகுதிக்குச் சென்றான். அதில் ஒரே ஒரு லிங்க் மட்டுமே இருந்தது. ஆர்வத்துடன் அந்த லிங்கை ஓபன் செய்து பார்த்தான். அது ஒரு கூகுள் மேப் லிங்க். தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த லிங்க் காட்டும் பகுதிக்குச் சென்றான் வக்கீல். அது ஒரு ஒதுக்குப் புறமான தோட்ட வீடு.

வேலைக்காரன் கூறிய `செல்போன், டிரைவர், மேப், போட்டோ' ஆகிய சொற்கள் அவனது நினைவில் வந்தன. செல்போன் ஓகே, கூகுள் டிரைவைத்தான் வேலைக்காரன் டிரைவர் எனக் கூறி இருக்கிறான். மேப் ஓகே. அந்த வீடு தூசி படிந்து காணப்பட்டது. பூட்டினை உடைத்து உள்ளே சென்றான் வக்கீல். ஒரு குடும்பம் வசிக்கத் தேவையான அடிப்படைப் பொருள்கள் அந்த வீட்டினுள் இருந்தன. ஆனால், அவையனைத்தும் தூசி படித்து காணப்பட்டன. வக்கீலுக்கு மீண்டும் ஏமாற்றம் கவ்வியது. திடீரென அவனது மூளை சுறுசுறுப்பானது. வேலைக்காரன் கூறியதில் போட்டோ என்பது என்ன எனச் சுற்றிலும் தேட ஆரம்பித்தான். ஒரு மேஜையின் மேல் வக்கீலின் நண்பனும் அவனது தந்தையும் இருக்கும் போட்டோ இருந்தது.
வேறு எந்த போட்டோவும் அந்த வீட்டில் இல்லை. குறிப்பில் கூறப்பட்ட போட்டோ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணியபடி அந்த போட்டோவின் பின்புற ஸ்குரூக்களைக் கழற்றினான். போட்டோவின் பின்புறம் ஒரு துண்டுச் சீட்டு ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு ஸ்விஸ் வங்கி கணக்கு விவரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கணக்கு எண், பெயர், வாரிசுதாரர் பெயர், வங்கியின் பெயர், கணக்கு விவரம், முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை என அனைத்துமே தெளிவாக அந்தத் தாளில் இருந்தன. தொகையைப் பார்த்ததும் வக்கீலுக்கு மயக்கமே வந்துவிட்டது கிட்டத்தட்ட 2800 கோடி ரூபாய். அந்த அரசியல்வாதி மொத்தப் பணத்தையும் ஒரு சுவிஸ் வங்கியில் முதலீடு செய்து, அந்தத் தகவல்களை ஒதுக்குப்புறமான தனது வீட்டில் உள்ள புகைப்படத்தின் பின்னால் யாரும் அறியாதவாறு மறைத்து வைத்துள்ளார். அந்த வீட்டின் இடம் குறித்த மேப்பை கூகுள் டிரைவில் சேமித்துள்ளார். அதனால்தான் `செல்போன், டிரைவ், மேப், போட்டோ' என வேலைக்காரனிடம் சுயநினைவை இழக்கும் தறுவாயிலும் அவர் கூறியுள்ளார்.
பணம் இருக்குமிடத்தை தான் கண்டுபிடித்ததால் நண்பன் கூறியபடி தனக்கு 10 சதவிகிதப் பணம் கிடைக்கும் என்பது வக்கீலுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. மிகுந்த உற்சாகத்துடன் துண்டுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த சுவிஸ் வங்கியைத் தொடர்பு கொண்டான்.'வாரிசாக நியமிக்கப்பட்ட மகன் உரிய ஆவணங்களுடன் வங்கியை அணுகினால் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்' என்ற பதில் கிடைத்தது.'ஆனால் கணக்கு வைத்திருப்பவர் இறந்து அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் வாரிசுதாரர் வங்கியை அணுகாவிட்டால் அந்தக் கணக்கு செயலற்றதாகிவிடும்' என்ற விதியும் வங்கியிலிருந்து அவனுக்குக் கூறப்பட்டது.

"பத்து ஆண்டுகள் எதற்கு நாளையே வருகிறோம்" என்று வங்கிக்கு பதில் அளித்த வக்கீல், மிகுந்த உற்சாகத்துடன் நண்பனைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றான். மருத்தவமனையில் டாக்டர்கள் குழு அவனைச் சுற்றி நின்றிருந்தது."டாக்டர்,என் பிரண்டுக்கு இப்ப எப்படி இருக்கு?"என்று தலைமை மருத்துவரிடம் வக்கீல் வினவினான்."அதை ஏன் கேக்குறீங்க!கடந்த சில நாளா ரொம்ப மன அழுத்தத்தில் இருந்ததால இவருடைய நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கு.நீங்களே பேசிப் பாருங்க"என்றபடியே டாக்டர் வருத்தத்துடன் சென்றார். வக்கீல் நண்பனின் படுக்கை அருகே சென்று "டேய். மொத்தப் பணமும் எங்க இருக்குன்னு தெரிஞ்சிருச்சு" என்று உற்சாகத்துடன் கூற அவன் சிறிதும் சலனமின்றி அமர்ந்திருந்தான். வக்கீல் பதற்றத்துடன் "டேய் உனக்கு என்னடா ஆச்சு?" என அவனைப் பிடித்து உலுக்க,எங்கேயோ அண்ணாந்து பார்த்தபடி அவன் "செல்போன்" என்றான்!
-அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.