கர்ப்ப காலம் என்பது எதோ, மிகவும் கஷ்டமான காலகட்டம் என்றேதான் இன்றைய பல பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், அது கொண்டாடப்பட வேண்டியதொரு நிகழ்வு. எனவேதான், கர்ப்ப காலத்தை பெரும் திருவிழா போலவே கொண்டாடித் தீர்த்தார்கள் நம் தாத்தாக்களும் பாட்டிகளும். வளைகாப்பு, கலவை சாத விருந்து என அதற்கென பல நிகழ்வுகளையும் அதற்காகத்தான் உருவாக்கி வைத்தனர்.
20, 30 ஆண்டுகளுக்கு முன்னர்கூட கர்ப்பகாலம் என்பது வாழ்க்கைச் சுழற்ச்சியில் வரக்கூடிய ஒரு காலம் மட்டுமே. வீட்டு வேலை, வயல் வேலை என அது, அவர்களின் இயல்பு வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கவே இல்லை. இப்போதுதான், கர்ப்ப காலம் என்றால் தனிப் பயம் தொற்றிக் கொள்கிறது.

இது தேவையில்லாத பயம். தாய்மைக் காலம் எனப்படும், கர்ப்ப காலத்தைக் கொண்டாட்டம் நிறைந்ததாகவும், பயம் இல்லாத யதார்த்த நிகழ்வாகவும் கடக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி வருகின்றனர் பெண்ணியல் மருத்துவர்கள். இது தொடர்கான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு நிகழ்வாக, சென்னை வேளச்சேரியில் உள்ள ப்ளூம் லைஃப் மருத்துவமனை, ‘ப்ளூமிங் மாம்ஸ்’ (Blooming Moms) எனும் நிகழ்ச்சியை நடத்தியது. மருத்துவ வல்லுநர்கள், பெற்றோராகக் காத்திருக்கும் இணையர்கள் மட்டுமின்றி மருத்துவம் சாரா பிற தொழில்முறைகளைச் சேர்ந்தோர், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
கர்ப்பக்காலமும் பிரசவமும் என்ற தலைப்பில், தாய்மையைக் கொண்டாடவும், இயற்கை மகப்பேற்றின் மகத்துவம் குறித்தும் மருத்துவ வல்லுநர்கள் பேசினர்.
தகவல் தொழில்நுட்ப பரவலால், அனைவருக்கும் இன்று இயற்கை மகப்பேறு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது. பல இளம் தம்பதியர், இயற்கை மகப்பேறு முறைகள் மற்றும் பாரம்பரியமாக மகப்பேற்றுக்கு முன்னும், பின்னும் மேற்கொள்ளும் செயல்முறைகளை மருத்துவ வழிகாட்டுதலோடு பின்பற்றவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மென்மையான பிரசவ மருத்துவ முறையின் முன்னோடி மருத்துவர் (Gentle Birth Method) டாக்டர். கவுரி மோத்தா பேசுகையில், கர்ப்ப காலத்தையும் மகப்பேறு நிகழ்வையும் தனித்தனியே எண்ணாமல் தொடர் நிலையாகக் கொள்வதன் அவசியத்தைச் சுட்டினார். குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் முன்பே பெண்ணை உடல், உள, மற்றும் உணர்வு ரீதிகளில் பக்குவப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அப்போது தான் இயற்கையின் போக்கோடு இயைந்து அவரின் பிரசவப் பயணம் இனிதே அமையும் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் வெற்றிகரமான இயற்கை முறை மகப்பேற்றை ஊக்குவிக்கவும், அதிகப்படுத்தவும், மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவச்சிகள் இணைந்த கட்டமைப்பை உருவாக்குவது அவசியமாகிறது. அவர்களின் பட்டறிவும் பகுத்தறிவும் இணையும்போது பாதுகாப்பான மகப்பேற்றுக்கான நல்லமைப்பு உருவாகிறது என ஃபெர்னாண்டஸ் ஃபௌண்டேசன் தலைவரும், தொழில்முறை மருத்துவச்சிகள் கல்வி மற்றும் பயிற்சித் திட்டத்தின் நிறுவனருமான (chairperson of Fernandez Foundation and founder of the Professional Midwifery Education and Training - PMET Programme) டாக்டர். ஏவிட்டா ஃபெர்னாண்டஸ் வலியுறுத்தினார்.
தொடர்ந்து மருத்துவர்களும், பிரசவ முறை வல்லுனர்களும் இது குறித்த கலந்துரையாடலையும் நிகழ்த்தினர். ப்ளூம் லைஃப் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர். கவிதா கௌதம், பிரியங்கா இடிகுலா, பேச்ச்சாளர் மற்றும் நடிகை ஜானகி சபேஷ், மற்றும் பெண்ணியல் மகப்பேறு மருத்துவர் நம்ரிதா ஜார்ஜ் ஆகியோர் பங்குபெற்றனர்.
சிக்கலான மகப்பேறு நிகழ்வுகளில், தாயின் தசைகளைப் பாதிக்காமல் குழந்தையை எளிதில் வெளியே எடுக்க, பெண்ணுறுப்பை விரிவடையச் செய்யும் எபிசியாட்டமி (episiotomy) எனும் குறு அறுவை சிகிச்சை முறை, பண்டைய காலம் தொட்டே நடைமுறையில் இருப்பதைக் குறித்துப் பேசினார்.

தற்போது மகப்பேறு குறித்து அனைவரும் திறந்த மனதுடன் பேசும் போக்கு வளர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், மகப்பேறு நிகழும்போது உடனிருக்க விருப்பம் தெரிவிப்பதை ஆரோக்கியமான போக்குக்கான அடையாளம் என்றனர்.
நடிகர்கள் பிரச்சி மஹத், நிஷா கணேஷ், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் தங்களது பிரசவ அனுபவங்களைத் தாமாக முன்வந்து பகிர்ந்து கொண்டனர். நிகழ்வின் முத்தாய்ப்பாக, அழகுற ஆடைகள் உடுத்திய கர்ப்பிணிப் பெண்கள், ராம்ப் வாக் வலம் வந்து உற்சாகப்படுத்தினர். இரண்டு கர்ப்பிணிகள் தங்களின் முதல் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, பாடலுக்கும் நடனமாடினர். அவர்களுடன் கணவர்களும் இணைந்து கொண்டனர். நடிகர் ஸ்ரீதேவி அசோக் மற்றும் அனிதா சந்தோக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.