சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

சாமான்ய மக்கள் முதல் சர்வ வல்லமை படைத்த வல்லரசுகள் வரை தங்கத்தை ஒரு கௌரவப் பொருளாகவே பார்க்கின்றனர்.

ஜொலிக்கும் தங்கத்துக்குப் பின்னால் இருக்கும் இருண்மையான வரலாறு உலகம் அறியாதது. அதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் சிறு முயற்சிதான் ‘பொன்னி.’

படிப்பறை

சாமான்ய மக்கள் முதல் சர்வ வல்லமை படைத்த வல்லரசுகள் வரை தங்கத்தை ஒரு கௌரவப் பொருளாகவே பார்க்கின்றனர். ஆனால், அந்த ‘மஞ்சள் பிசாசு’ குடித்த ரத்தம் பலரும் அறியாதது. கோலார் தங்கவயலில், தங்கத்தை வெட்டியெடுக்கும் வேலையின் பொருட்டு, நசுக்கப்பட்ட ஏழைப் பாட்டாளிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்த நாவல்.

முன்னுரையில் இடம்பெற்றுள்ள, கேஜிஎஃப் தொழிலாளியின் ‘மாயமாய் உயிரை மாய்க்கும்’ பாடலே அம்மக்களின் துயர்மிகு வரலாற்றைச் சொல்லிவிடுகிறது. உரிமை மறுக்கப்பட்ட சுரங்கப் பாட்டாளிகள்மீது சிறிதளவேனும் மானுட நேயத்தோடு நடந்துகொள்ளும் மனிதராக இருக்கிறார் ஜேம்ஸ் மார்ட்டின் என்னும் வெள்ளை அதிகாரி. ‘எந்த இடத்தில் தங்கம் இருக்கிறது?’ என்பதைக் கண்டறிவதற்காக ஆங்கிலேயர்களால் தென்னாப்பிரிக்கா விலிருந்து வரவழைக்கப்பட்டவர். துணிச்சல் மிக்க கிராமத்துப் பெண்ணான செல்லம்மாவின் மீது காதல் கொள்கிறார். தங்கம் அறிதலில் அவரின் திறமை நிராகரிக்கப்பட, தென்னாப்பிரிக்காவுக்கே திரும்பிச் சென்றுவிடுகிறார், தான் மையல் கொண்ட செல்லம்மாவோடு. ‘இரணிய சேனை’ என்னும் பெயரில் காலம் காலமாகத் தங்கத்தைக் கட்டிக் காக்கும் தன் தேரையர் இன மக்களை விடுவிக்கவும் தங்கள் நிலத்தில், தம் மக்களின் உழைப்பில் வெட்டி எடுக்கப்படும் தங்கத்தில், உரிமை இல்லாது வறுமையில் வாடும் தம் மக்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும் சபதம் எடுத்துக்கொள்கிறார் செல்லம்மா. காலங்கள் கடந்து தன் பாட்டி செல்லம்மாவின் கனவை நனவாக்க வருகிறாள் பேத்தி பொன்னி மார்ட்டின். கோலாரில் இருந்து வெட்டியெடுக்கப்பட்டு உலகெங்கும் கொண்டு செல்லப்பட்ட, டன் கணக்கான தங்கக் குவியல்களைக் கோலாருக்கே கொண்டு வருவதோடு முடிகிறது முதல் பாகம். பல துணை, இணை கதாபாத்திரங்கள் நாவலின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

படிப்பறை

கி.பி 2-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் ஆரம்பித்து, 1940 என சுதந்திரத்திற்கு முன்பான காலத்தினுள் சென்று, 2018-ல் நடப்பதாகப் பல கால அடுக்குகளில் விரிகிறது நாவல். பொன்னி கதாபாத்திரம் மூலமாக சாகச உணர்வையும் அம்மக்களின் வாழ்வின் மூலம் பெருந்துயரத்தையும் எனப் பல கலவையான உணர்வுகளைக் கடத்தி நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிறது இந்நாவல்.

பொன்னி

- ஷான் கருப்பசாமி

வெளியீடு :

வாசல் படைப்பகம், 226, எஸ்கேசி ரோடு, ஈரோடு - 638001

தொடர்பு எண் :

99423 19506

பக்கங்கள் : 320

விலை : ரூ.280