சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை - விபரீத ராஜ யோகம்

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

25 ஆண்டுக் காலகட்டத்தில் எழுதப்பட்ட 15 கதைகள்.

ஒரு நல்ல சிறுகதை மெள்ள நம் மனதைத் தன் மொழியினால் ஆக்கிரமித்துக் கதைக்களத்துக்குள் இழுத்துச்சென்று இறுதியில் திகைப்பின் வாசலில் நிறுத்திவிடும். அந்த அனுபவத்தை வழங்குவதுதான் கல்யாணராமனின் ‘விபரீத ராஜ யோகம்’ சிறுகதைத் தொகுப்பு.

25 ஆண்டுக் காலகட்டத்தில் எழுதப்பட்ட 15 கதைகள். மனிதர்களின் மன உணர்வுகளை எந்தப் பாசாங்குமின்றி எளிய மொழியில் முன்வைக்கும் உணர்வுபூர்வமானவை இக்கதைகள்.

இந்தத் தொகுப்பின் முக்கியமான கதைகளாக `பிம்பங்கள் மாயைகள் லீலைகள்’, `பிரும ஞானம்’, `விபரீத ராஜயோகம்’, `சிரிப்பு’, `மூளைப்பிளிறல்’ ஆகிய கதைகளைச் சொல்லலாம். ‘விபரீத ராஜ யோகம்’ வாழ்வின் மீதான நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பும் கதை. தொடர்ந்து வாழ்வில் துன்பங்களையே சந்திக்கும் கல்யாண நரசிம்மன் எப்படித் தன் வாழ்வை நகர்த்துகிறான் என்பதுதான் கதை. ஒருகட்டத்தில் அவன் பெரிய ஆசைகளைக் கைவிடுகிறான். அவனிடம் வாழ்வின் மீதான புகார்கள் இல்லை. அதிர்ஷ்டம் மீதான சடவுகள் இல்லை. தனக்குக் கிடைத்தவை குறித்த பெரும் நிறைவு அவனுக்குள் தோன்றிவிடுகிறது. ஒருவகையில் அது ஞானிகளும் துறவியரும் அடையவிரும்புகிற மனோநிலை. ஆனால் நரசிம்மன் தன் எளிய வாழ்விலிருந்தே அந்நிலையை அடைந்துவிடுகிறான்.

பெரும்பாலும் கல்யாணராமனின் மனிதர்கள் கல்யாண நரசிம்மனைப் போன்று இயல்பானவர்கள். `சிரிப்பு’ கதையில் வரும் கதை நாயகியைப் போல தன்னைத்தானே எடைபோட்டுக்கொள்கிறவர்கள். மிகை மதிப்பீடுகள் இல்லாதவர்கள். சலிப்பையும் வெறுப்பையும் தயங்காமல் வெளிக்காட்டுபவர்கள். கல்யாணநரசிம்மனின் மனைவி காமாட்சிபோலவும் பிரும ஞானத்தில் வரும் அம்மாபோலவும் அன்பும் ஞானமும் சேர்ந்தவர்களாக மாறி மனதில் எளிதாக இடம்பிடிப்பவர்கள்.

இந்தத் தொகுப்பில் மாறுபட்ட ஒரு கதை ‘ஜலசமாதி.’ தொன்மங்களைத் தொட்டுக் கதை சொல்வது தமிழ் மரபில் புதுமைப்பித்தனில் தொடங்கித் தொடர்கிறது. ஆனால் பலரும் மீட்டுருவாக்கம் செய்வதில் கவனம் செலுத்துகையில் கல்யாணராமனோ செவ்வியல் தன்மையோடு அவற்றை விருப்புவெறுப்பின்றிக் கதையாக்குகிறார். ராமாயணத்தில் ராமன் எப்படி ஜலசமாதி ஆகிறான் என்பதை விளக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் ராமன் அடைந்த இடர்கள், சாபங்கள், பாவங்கள் ஆகியவற்றைப் பேசி முடிகிறது. “யாராய் வேண்டுமானாலும் பிறக்கலாம். ஆனால் ராமனாய் மட்டும் பிறக்கவே கூடாது!” என்னும் வேதனை மிகுந்த வரிகள் இதுவரை கதையுலகம் பேசாத ஒரு நிதர்சனம். அதைப் பேசத் துணிவும் மொழியும் தேவை. அவை இந்தத் தொகுப்பெங்கும் நிறைந்து கிடக்கின்றன.

படிப்பறை - விபரீத ராஜ யோகம்

விபரீத ராஜ யோகம் - கல்யாணராமன்

வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்,

669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

இ-மெயில்: nagercoil@kalachuvadu.com

விலை: ரூ. 200; பக்கம்: 176