சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

பாரதியார் முதல் பிரபஞ்சன் வரை பல்வேறு தமிழ் இலக்கியவாதிகளின் கவனம் கவர்ந்த பேரூற்று ஆனந்த ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள்.

ஒரு டைரி என்பது வெறுமனே அந்தரங்கத் தகவல்களைப் பதிவு செய்யும் களம் என்பது சமீபத்திய நிலைமை. ஆனால் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிரெஞ்சு இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள ஒரு டைரி உதவியது என்றால் அது ஆனந்த ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள்தான். கல்வெட்டுகள் முதல் அயல்நாட்டு யாத்திரிகர்களின் பயணக்குறிப்புகள் வரையிலான பல்வேறு குறிப்புத்தடயங்கள் வழியே வரலாற்றைப் புரிந்துகொண்டதைப் போலவே ஓர் முக்கியமான அதிகாரியின் நாட்குறிப்புகள் வழியாக வரலாற்றை அறிந்துகொண்டதை நவீனகால அறிதலின் தொடக்கம் என்று சொல்லலாம்.

பாரதியார் முதல் பிரபஞ்சன் வரை பல்வேறு தமிழ் இலக்கியவாதிகளின் கவனம் கவர்ந்த பேரூற்று ஆனந்த ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள். அந்த நாட்குறிப்புகளைக் காலவரிசைப்படி 12 தொகுதிகளாகத் தொகுத்திருக்கிறார்கள் டாக்டர்.மு.ராஜேந்திரன், இ.ஆ.ப மற்றும் டாக்டர்.அ.வெண்ணிலா ஆகிய இருவரும். 1700 காலகட்டத்துத் தமிழில் எழுதப்பட்ட நாட்குறிப்புகளைத் தற்காலத்தில் படிப்பதற்கு ஏற்றவகையில் சில இடங்களில் செப்பனிட்டும் வெளியிட்டுள்ளார்கள். அத்துடன் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களுக்கு இணையாக இப்போது பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றின் தொடர்ச்சியில் காலங்கள் மாறும்போது மொழியும் எப்படியெல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் ஆச்சர்யத்துடன் அறிய முடிகிறது.

பிரெஞ்சு அரசு நிர்வாகம், அரசு அதிகாரிகளின் மனநிலை, தமிழ்ப்பண்பாட்டுக்கும் பிரெஞ்சுப்பண்பாட்டுக்கும் நடந்த பரிமாற்றங்கள், வெவ்வேறு படிநிலைகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை, தண்டனைமுறைகள், போர் குறித்த செய்திகள், கப்பல் போக்குவரத்து, வணிகம் என்று ஏராளமான செய்திகளைத் தெரிந்துகொள்ள ஆனந்த ரங்கப்பிள்ளை உதவுகிறார்.

கொஞ்சம் வரலாறும் அதிகம் புனைவும் கொண்டு வரலாற்று நாவல்கள் படைக்கப்பட்ட காலம் மாறி, வரலாற்றின் நம்பகத்தன்மை மீதும் ஆதாரங்கள் மீதும் தமிழ் எழுத்துச்சூழல் கவனம் செலுத்தும் காலம் இது. மேலும் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் காலமும் இது என்பதால் ‘அகநி’ பதிப்பகத்தின் வெளியீடான ‘ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு’ தொகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.

படிப்பறை

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு

பதிப்பாசிரியர்கள் :
டாக்டர்.மு,ராஜேந்திரன் இ.ஆ.ப
டாக்டர்.அ.வெண்ணிலா

தொகுதிகள் : 12

வெளியீடு :
அகநி, 3, பாடசாலை தெரு, அம்மையப்பட்டு,
வந்தவாசி - 604 408. தொலைபேசி : 98426 37637/94443 60421

விலை: 8400 ரூபாய்