சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

திறந்திருக்கும் சன்னலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நதி

ழுத்தே வாழ்க்கையென வாழும் பலநூறு படைப்பாளிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். மாட்டு வண்டி ஓட்டியாக, பழைய பாத்திரங்களை வாடகைக்கு விடுபவராக, வேளாண் கூலியாக, கட்டுமானத் தொழிலாளியாக வாழ்க்கைப்பாட்டை அமைத்துக் கொண்டு தொடர் வாசிப்பும் இடை விடாத எழுத்துமென இயங்கிக் கொண்டிருக்கும் அவர்களால்தான் மொழி உயிர்ப்போடு இருக்கிறது. சிற்றிதழ்கள், கையெழுத்துப் பிரதிகள், இலக்கிய அமைப்புகள், சந்திப்புகளென அவர்கள் எடுக்கிற முனைப்புகள்தான் தமிழ் இலக்கியத்துக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.

இந்த நூலில் அப்படியான 102 படைப்பாளிகளை ஆவணப்படுத்தியிருக்கிறார் கவிஞர் ஆசு. அபி, பழமலய், இந்திரன், ஜெயதேவன், பழநிபாரதி, இளம்பிறை, கண்மணி குணசேகரன் உட்பட தமிழில் காத்திரமாக எழுதிக்கொண்டிருக்கிற பலரும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளார்கள். அதேநேரம், வெளிச்சம் படாமல் இயங்கிக்கொண்டேயிருக்கும் பல இளம் படைப்பாளர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

படிப்பறை

வெறும் தொகுப்பு நூல் என்ற தொனியின்றி, ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு கவிதையைத் தேர்வு செய்து அதன் சொற்சித்திரத்தை உரைநடையாகக் காட்சிப்படுத்துகிறார் ஆசு. அக்கவிதையில் தான் கண்டடைந்த காட்சி, அது நிகழ்த்திய பாதிப்பை எளிய மொழியில் வாசகர்களுக்குக் கடத்துகிறார். பல இடங்களில் அந்தச் சொற்சித்திரமே கவிதையாக உருக்கொள்கிறது.

இவ்விதமான தொகுப்பு தமிழுக்குப் புதிதென்ற வகையில் இந்த நூலை வரவேற்கலாம்.

திறந்திருக்கும் சன்னலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நதி

- ஆசு

வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11, தொடர்பு எண்: 9444640986

பக்கங்கள்: 224

விலை: ரூ. 220

******

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி 

“ஒரு ஊர்ல ஒரு ராசாவாம்...” என்கிற ‘சொல்லல் முறை’யில்தான் நம் கதைகள் ஆதியில் தொடங்கி யிருக்கின்றன. காலப்போக்கில் சொல்லுதலிலிருந்து எழுதுதலுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் கதைநாயகர்கள் ராசாக்கள் ராணிகளாகவே இருந்து, பிறகு அந்த இடத்தை ‘மேல் வரப்பார்கள்’ வெகுகாலம் தக்கவைத்துக் கொண்டி ருந்தார்கள். ‘கீழ்ங்கன்னுகள்’ எழுந்து மெல்லமெல்ல அதில் சாமான்யர்களை கொண்டு வந்தார்கள். அரண்மனை, ஊஞ்சலாடும் பட்டாசாலைகளைப் புறக்கணித்து குடிசைகளுக்குத் திருப்பினார்கள். எழுத்துத் தன்மையிலும் வழக்கமான பாண்டித்தியங்களை விட்டு உழைக்கும் மக்களின் புழுதிச்சொற்கள் பதிந்தன. இந்த மாற்றங்கள் ஏதும் நடைபெறாமல் போயிருந்தால் நமக்குப் பேரிழப்பு. மண், மனை என சாதாரணவர்களாய் வாழ்ந்து மடிந்ததிற்கான எந்தத் தடயமும் இல்லாமல்போயிருக்கும் அல்லது பேராசிரியர் த.பழமலய் சொல்வது போன்று பெயர்சொல்லத் தேவையில்லாத ‘மற்றும் பலர்’ என்கிற உதிரி கதாபாத்திரங்களாக ஆக்கியிருப்பார்கள்.

நடுநாட்டின் செஞ்சி தமிழினியன் அப்படியான சராசரியர்களைப் பேசுகிற படைப்பாளியாக முக்கியத்துவப்படுகிறார். அவரின் ‘ஊராகாலி’ சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் வாசித்தேன். கொடும் பஞ்சத்திலும் தான் வைத்திருக்கும் தானியங்களைக் கொடுக்காமல் பல்க்கிட்டித்தனமாய் வைத்திருக்கும் அதே பழமலைத் தாத்தா, நெடுநாள் கழித்துப் பெய்யும் மழைக்குப் பின் வீட்டிற்கு இரண்டு மரக்கால் என இலவசமாய் விதைமணிகளைக் கொடுத்து மண்ணை உயிர்ப் பிக்கிறார். பெயர் சொன்னாலே ஓடிவருகிற மாடுகளினுடனான நெருக்கத்தில் நெகிழ வைக்கிறார், ராமசாமி கவுண்டர். அதேநேரம் வயல்களைப் பாழாக்கும் எலிகளைப் பிடிக்கும் தொழிலாளி களத்தில் படிநெல்லுக்கு நிற்கையில் “கடன்வாங்கி பயிர் வைச்சவனே வீட்டுக்கு நெல்லு எடுத்துகிட்டுப் போவுல. அதுக்குள்ள நீ எடுத்துகிட்டுப் போவுணும்னு நிக்கிற...” என்று சொல்லி முரணாகிறாள் பங்கஜம்.

இப்படி எதிரும் புதிருமான முக்கியத்துவப்படுத்தப்படாத மனிதர்களின் கதைகளை எழுதியிருக்கும் செஞ்சி தமிழினியன் ஏற்கெனவே ராக்காச்சிப் பொம்மை, சொப்புக்கடை, மரத்தின் நிழல் எனக் கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டு நடுநாட்டு இலக்கிய வெளியில் நம்பிக்கைத்தக்க எழுத்தாளராக மிளிர்ந்து வருகிறார்.

- கண்மணி குணசேகரன்

செஞ்சி தமிழினியன் - எஸ்.வி.ராஜதுரை
செஞ்சி தமிழினியன் - எஸ்.வி.ராஜதுரை

ஆளுமை போற்றுதும்!

தமிழ்ச்சமூகம் கொண்டாடவேண்டிய கோட்பாட்டு ஆளுமை எஸ்.வி.ராஜதுரை. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய விடுதலைத் தத்துவங்களைத் தன் சிந்தனைநெறிகளாகக் கொண்ட எஸ்.வி.ராஜதுரை அரசியல் சார்ந்தும் இலக்கியம் மற்றும் தத்துவங்கள் சார்ந்தும் எழுதியுள்ள நூல்கள் தமிழ் சிந்தனைவெளியை அகலப்படுத்தின. தமிழின் பல முக்கியமான சிந்தனையாளர்களைப் போல மார்க்சிய-லெனினிய இயக்கப் பின்னணி கொண்ட எஸ்.வி.ஆர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தொடங்கி கிராம்ஷி, பிராங்க்பர்ட் மார்க்சியம் எனப் பல்வேறு மார்க்சியப்போக்குகள் குறித்த நூல்களை எழுதியுள்ளார். இந்திய சமூக அரசியல் குறித்த இவரது ‘இந்து-இந்தி-இந்தியா’, ‘பதி பசு பாகிஸ்தான்’ நூல்கள் சமூகச் செயற் பாட்டாளர்களுக்கான வரலாற்றுக்கையேடு. ‘பெரியார் : ஆகஸ்ட் 15’, ‘பெரியார் : சுயமரியாதை சமதர்மம்’ நூல்கள் வழியே பெரியார் குறித்த மிகப்பெரிய ஆவண முயற்சியைச் செய்தது எஸ்.வி.ஆர் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்த மகத்தான பங்களிப்புகள். சார்த்தர், ஷீலா ரௌபாத்தம் போன்ற சிந்தனையாளர்கள் குறித்த உரையாடல்களைத் தொடங்கிவைத்தவர் அவர். அரசியல் மற்றும் கோட்பாட்டுப் புத்தகங்களுடன் ‘சொல்லில் நனையும் காலம்’, ‘ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்’, ‘அக்மதோவா : அக்கரைப்பூக்கள்’, ‘கல்தெப்பம்’, ‘சாட்சி சொல்ல ஒரு மரம்’, ‘பார்வையிழத்தலும் பார்த்தலும்’ போன்ற புத்தகங்கள் வழியே உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி உரையாடல்களைத் தொடங்கிவைத்தார். எழுத்தும் செயற்பாடும் இரு கரங்களெனக் கொண்ட எஸ்.வி.ராஜதுரை நம் காலத்தின் நம்பிக்கை வழிகாட்டி.

- சுகுணா திவாகர்