
சேவற்சண்டைக்காரர்களுக்கு என்று தனி உலகம் இயங்குவதையும் அந்த உலகத்துக்கென்றே இருக்கும் தனித்துவமான விதிகள், நெருக்கமான உறவுகள், பணத்தை மதிக்காத பண்பு ஆகியவற்றைப் பதிவதில் வெற்றிபெற்றிருக்கிறார் பாலகுமார் விஜயராமன்.
சேவல் சண்டையை வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாகக் கருதும் ஒரு தலைமுறை, நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் வாழும் அடுத்த தலைமுறை ஆகியவற்றின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் ‘சேவல்களம்’.

சேவற்சண்டைக்காரர்களுக்கு என்று தனி உலகம் இயங்குவதையும் அந்த உலகத்துக்கென்றே இருக்கும் தனித்துவமான விதிகள், நெருக்கமான உறவுகள், பணத்தை மதிக்காத பண்பு ஆகியவற்றைப் பதிவதில் வெற்றிபெற்றிருக்கிறார் பாலகுமார் விஜயராமன். ஆனால் இதில் உள்ள நுட்பம் அடுத்த தலைமுறையை விவரிக்கும் சித்திரிப்பில் இல்லை. ‘நாவல் பாத்திரங்கள் பெரும்பான்மையும் ‘நல்லவர்’களாகவும் குணவான்களாகவும் இருப்பது இன்றைய சூழலில் பெருத்த ஆசுவாசத்தைத் தருகிறது’ என்று பெருமாள் முருகன் பின்னட்டையில் எழுதியிருக்கும் அம்சம்தான் உண்மையில் நாவலின் பெரும்பலவீனம். வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களையும் முரண்களையும் பேசுவதே இலக்கியம். ஆனால் இந்த நாவலில் எல்லாச் சம்பவங்களும் நூல்பிடித்து நேர்கோட்டில் செல்கின்றன. யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. மக்கள் பிரச்னைக்காகத் ‘தீக்குளித்து’ இறந்துபோன ரமேஷின் கதை மட்டுமே மற்ற கதைகளில் இருந்து தனித்துத் தெரிகிறது.

ஈழப்பிரச்னைக்காக தற்கொடை செய்த முத்துக்குமாரையும் மொழிப்போராட்டத்தின் தற்கொடை ஈகியர்களையும் நினைவுபடுத்தும் பாத்திரம் ரமேஷ். ஆனால் அந்தச் சித்திரிப்பில் அத்தனை பிழைகள். ரமேஷ் வந்து செல்லும் ‘மக்கள் படிப்பக’த்தில் நடைபெறும் உரையாடல்கள், அது இடதுசாரி சார்புடையது என்று சித்திரிக்கிறது. ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் ‘சகோதரர்’ என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழகிப்போட்டிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் ‘சகோதரர்கள்’ ரமேஷ் உடலில் தீயைப் பற்றவைத்துவிட்டு ‘உயிராயுதம் ஏந்துவோம் சகோதரா’ என்று முழக்கமிடுவதாக அபத்தமாகச் சித்திரித்திருக்கிறார் நாவலாசிரியர். ‘உயிராயுதம்’ என்னும் வார்த்தை முத்துக்குமார் கடிதத்தில் உள்ள வார்த்தை. இடதுசாரிகளின் அரசியல் வரலாற்றில் தீக்குளிப்புகள் நடந்ததில்லை. திராவிட இயக்கம் மற்றும் ஈழ ஆதரவுப் போராட்டங்களில் நிகழ்ந்த தீக்குளிப்புகள், அதன் பின்னுள்ள உணர்ச்சிவயப்பட்ட மனநிலையைக் குறித்து விமர்சிக்கலாமே தவிர அவற்றை ‘மற்றவர்கள் கொளுத்திவிட்டதாக’ப் படைப்பில் சித்திரிப்பது நேர்மையான செயல் அல்ல. நாவல் முழுக்க ஆங்காங்கே இடதுசாரிகள், திராவிட இயக்கம், தமிழ்த்தேசியம், சிறுபான்மையினர் மீதான வெறுப்பு என்று வலதுசாரி மனநிலை அடிநீரோட்டமாய் ஓடுகிறது.
இலக்கியமாக மாறாமல் நின்றுவிட்டபோதும் சேவற்சண்டையின் நுட்பம் அறியவும் சுவாரஸ்யத்துக்காகவும் இந்நாவலை வாசிக்கலாம்.
சேவல்களம்
பாலகுமார் விஜயராமன்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் - 629 001.
email :
publications@kalachuvadu.com
பக்கங்கள்: 200
விலை: 225 ரூபாய்