சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

கீறல்கள் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

பிருந்தா சேது - ஓவியங்கள்: சாய்

வயலினின் நாணைத் தொடுவதுபோல மென்மையாகவும் மரியாதையோடும் கார் `வைப்பர்’களை அவள் மிகுந்த வாஞ்சையோடு துடைத்தாள். கருவண்ண `ஐ 10’ அது. அதன் பெட்ரோல் டாங்க்கின் அருகில், பின்சக்கர ஓரமாக உள்ள பெரிய சிராய்ப்பு... அவள் முதன்முதலாக பார்க் செய்யும்போது, ஆட்டோவுக்கு முன்னால் சென்று நிறுத்தப் பார்த்து, சிறிதே கவனப்பிசகில் ஆட்டோவின் மஞ்சளைப் பூசி நிறுத்தினாள்; அப்போது ஏற்பட்ட சிராய்ப்பு அது.

கார் கற்றுக்கொண்ட புதிதில், யு டர்ன் பண்ணும்போது, சரியான அளவெடுத்துத் திருப்பாமல் திரும்ப, சரியாக காரின் இடுப்பில் ஒரு நெடுங்கோடு. மெல்லிய சிரிப்போடு அதை வருடினாள்.

கார் எடுத்த ஒரு மாதத்தில் முதல் ஆக்சிடென்ட் நடந்தது. பச்சையப்பா காலேஜ் சிக்னல். மும்முனைச் சந்திப்பு அது. சிக்னலில் கிரீன். அவளுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த ‘குட்டி யானை’ யு டர்ன் பண்ணியதும், அவள் பண்ண வேண்டும். எதிர் ரோட்டில் திடீரென்று ஓர் ஆம்புலன்ஸ் வர... உடனடியாக இவர்களுக்கு ரெட் லைட் விழ, கடைசி நொடியில் சிக்னல் மாறியதை உணர்ந்து குட்டி யானை சடர்ன் பிரேக் போட, நொடிக்கும் குறைவான பொழுதில் இவை எல்லாம் நிகழ... சுதாரிக்காமல் நேரே கொண்டு போய் குட்டி யானையின் மேல் மோதியும் மோதாமலும் நிறுத்தினாள். குட்டி யானைக்கு லேசாகச் சிராய்ப்பு. காருக்குச் சரியான அடி. யாரை நோவதென்று புரியவில்லை. இவளுக்கு நாற்பதாயிரம் ரூபாய் பழுத்துவிட்டது.

அதைத் தவிர சொல்லிக்கொள்ளும்படி இந்த மூன்று வருடங்களில், இதுவரை எந்த விபத்துமில்லை... பார்க்கிங் பண்ணும்போது, ரிவர்ஸ் எடுக்கும்போது எனச் சின்னச் சின்ன சிராய்ப்புகள் தவிர.

சிறுகதை
சிறுகதை

இதோ, இந்த நேர்க்கோடு... அவளுடைய கீழ் வீட்டுப் பையன் சைக்கிளை எடுக்கும்போது போட்டது. அவனுக்கு வயது பதின்மூன்று இருக்கும். விலையுயர்ந்த சைக்கிள் வாங்கியிருந்தான். காருக்கு முன்னால் நிறுத்திக்கொள்வான். சைக்கிள் எடுக்கும்போதெல்லாம் ஒரு கீறல் காருக்கு.

போன மாதத்தில் ஒருநாள் வீட்டின் மெயின்டெனன்ஸ் மேனேஜர் முன்னிலையில் வைத்து, சிரித்தபடியே சொன்னாள் ‘`தம்பி, கேர்லெஸ்ஸா சைக்கிள் எடுக்கிறே. `ஏற்கெனவே கீறல் விழுந்த வண்டிதானே...’ன்னு பெரிசுபடுத்தாம இருக்கேன். இனிமே பார்த்து எடு. வண்டியை சீக்கிரமே பெயின்ட் பண்ணப் போறேன்... பார்த்துக்க.’’

தலைகுனிந்து, வெட்கமாகச் சிரித்தபடி, ``இனிமே பார்த்து எடுக்கிறேன் ஆன்ட்டி’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அந்தக் காரின் ஒவ்வொரு புள்ளிக்கும், கோட்டுக்கும், சிராய்ப்புக்கும், ஒடுக்குக்கும் அவளிடம் நிறைய கதைகள் இருந்தன. கதைகளுக்குப் பின்னால் சில அழியாத நினைவுகள் இருந்தன.

ருமுறை தோழிகளோடு அரட்டையில் நேரம் போனதே தெரியவில்லை. நள்ளிரவாகிவிட்டது. ஒரு தோழிக்கு ராமாவரம் சிக்னல் தாண்டி வீடு. இவள் கொண்டு போய்விடுவதாக காரில் ஏற்றிக்கொண்டாள். சாலிக்கிராமத்திலிருந்து நெசப்பாக்கம் வழியாகப் போனார்கள். வழியெல்லாம் குண்டும்குழியுமாக, பிரேக்கும் க்ளெட்ச்சுமாக அமர்க்களமாகப் போனார்கள். தோழியின் பாராட்டு வேறு... இவ்வளவு இருட்டில், இத்தனை மோசமான ரோடுகளில் எத்தனை அருமையாக ஓட்டுகிறாள் என்று. பாராட்டின் சந்தோஷம் கொஞ்ச நேரம்கூட நீடிக்கவில்லை.

வெகு சோதனையாக ராமாவரம் சிக்னல் வந்தது. வாகனங்கள் வேகமாக விரையும் நாற்சந்தி. ஆளுயரக் குழிக்குள்ளிருந்து மேலேறுவதுபோல இவள்புற ரோடு. கஷ்டப்பட்டு ஏறி, ஏற்கெனவே சிக்னலுக்கு நின்றுகொண்டிருந்த காரின் பின்புறம் நிறுத்தினாள். ஆளுயரச் சறுக்கலில் இரண்டாவதாக காரை நிறுத்துவது சாமானியப்பட்ட வேலையல்ல. நிறுத்தி, பக்காவாக ஹேண்ட் பிரேக் போட்டாள்.

கிரீன் விழுந்தது. காரை எடுத்தால், பின்னே சரிந்தது. பின்புறம் காதலியை அள்ளி அணைக்க வந்ததுபோல மிக நெருக்கமாக ஒரு கார். பயத்தில் பிரேக்கை அழுத்திப் பிடித்தாள். பின்னால் வண்டிகளிலிருந்து ஹாரன்கள் அலற, இவளுக்கு வியர்த்துக்கொட்டியது.

ஆபத்துக்காலத்தில் புத்தி அதிகமாக வேலை செய்யுமாம்! சட்டென்று ஃபர்ஸ்ட் கியர் போட்டு, ஆக்ஸிலேட்டரை அழுத்திய அதே வேகத்தில் ஹேண்ட் பிரேக்கை ரிலீஸ் செய்ய, வண்டி மேடேறியது. `அப்பாடா...’ என்று மூச்சுவிடுவதற்குள், சிக்னலில் ரெட்! இருபுறமிருந்தும் இவளைக் கொல்ல வருவதுபோலச் சீறிப்பாயும் வெளிச்சப் புள்ளிகள். போர்க்காட்சிபோல இருந்தது.

முன்சீட்டில் அமர்ந்திருந்த தோழி, கரப்பான் பூச்சியைக் கண்ட தமிழ்ப்பட ஹீரோயின்போல, வாய்மேல் புறங்கைவைத்து அலற, இவள் அப்படியே நட்ட நடு ரோட்டில் பிரேக்கடித்து நின்றுவிட்டாள். அது பெரிய அகலமான ரோடு. எல்லா வண்டிகளும் இவள் காரைச் சுற்றிக் கடந்து போயின.

சிறுகதை
சிறுகதை

காரைத் தொடுவதற்கே முதலில் அவள் அவ்வளவு பயந்தாள். என்னதான் கார் ஓட்டக் கற்றிருந்தாலும், அவளுக்கே அவளுக்கென கார் வாங்கி, தினமும் ஓட்டும்போதுதான் சில நடைமுறைச் சிக்கல்கள் தெரியவந்தன.

இருபுறமும் வண்டிகள் நெருக்கமாக வந்தால், திண்டாட்டம்தான். காரை நேர்க்கோட்டில் செலுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். திருப்பங்களில் திரும்பும்போது எவ்வளவு இடம்விட்டு ஓட்டுவது என்பதில் குழப்பங்கள் வரும்.

சிக்னலில் நின்று, கிளம்பும்போது படக்கென்று இன்ஜின் ஆஃப் ஆகிவிடும். மறுபடி ஸ்டார்ட் பண்ணி, ஃபர்ஸ்ட் கியர் போடும்வரை பின்னாலிருப்பவர்களுக்குப் பொறுமை இருக்காது. ஹாரன்கள் அலறும். அவரவருக்கு அவரவர் அவசரம்.

முதல் மூன்று நான்கு மாதங்கள் வரை இரண்டாவது கியரிலேயேதான் போனாள். ஆபீஸில் ‘மேடம், நேத்து உங்களை கேஎம்சிகிட்ட பார்த்தேன்; சைக்கிள் உங்க காரை ஓவர் டேக் பண்ணிப் போயிட்டிருந்துச்சு’ என்று கிண்டலடிப்பார்கள். மெல்ல மெல்லத்தான் மூன்றாவது கியரில் போகத் தொடங்கினாள். அப்புறம் இரண்டு `லாங் டிரைவ்’ போனதில், கார் ஓட்டுவதிலிருந்த பயம் விலகி, நேசம் வந்தது. நான்காவது கியரில் 100 கிலோமீட்டரைத் தொட்டு, முள் அதிலேயே ஆடாமல் அசையாமல் சென்றது மிகுந்த தன்னம்பிக்கை தந்தது. நாற்கரச் சாலைகள், இருபுறச் சாலைகள், சிடி கடைகள், சாலையோர டீக்கடைகளின் ருசி, ஹோட்டல்கள் – அவர்களின் வித்தியாசப் பார்வைகள், ஆட்டோக்காரர்கள் `மாணிக்கமாக’, `பாட்ஷா’வாக அறிவுரைகள் வழங்குவது, திடீரென டூ வீலர்கள் கார் லைனுக்கு வந்து பதறவைப்பது, ஆட்டோக்கள் எப்போது, எதற்காகத் திரும்பும் என்று கணிக்கவே முடியாமல்போவது... எல்லாவற்றுக்கும் பழகினாள்.

சில கெட்ட வார்த்தைகள் கற்றுக்கொண்டாள். கார்க் கண்ணாடியை இறக்காமல், வெளியே இருந்து பார்த்தால் இவள் சிரித்தபடி `சாரி’யாக ஃபீல் பண்ணுவதுபோலத் தெரியும்படி, ‘மகளிர் மட்டும்’ படத்தில் ரேவதி, நாசரைத் திட்டுவதுபோலத் திட்டப் பழகிக்கொண்டாள்.

புரூஸ்லீக்கு `நுன்சாக்’குபோல, ராஜேஷ் வைத்யாவுக்கு வீணைபோல, சிவமணிக்கு டிரம்ஸ்போல, காரை இவள் உடலின் ஒரு பாகமாக ஆகும்படி ஓட்டப் பழகினாள்.

நன்றாக கார் ஓட்டத் தொடங்கிய பிறகும் பெண் என்பதால், சூழலில் பிசகு என்றாலும் என்னவோ இவள்மேல்தான் தவறு என்பதுபோலத் தலையிலடித்துக்கொள்வார்கள். ஓவர் டேக் பண்ணிவிட்டால்போச்சு. செம டஃப் கொடுப்பார்கள். நூலளவு நெருக்கமாக வந்து தட்டிவிட்டுப் போவார்கள். அப்படிச் சில கீறல்கள்.

இன்னும் இரண்டொரு நாள்களில் அத்தனை கீறல்களுக்கும் விடைதரப் போகிறாள். ஆம், கார் சர்வீஸோடு சேர்த்து, ரீபெயின்ட் பண்ணக் கொடுத்திருந்தாள்.

கார் புத்தம் புதிதாக கருவண்டுபோல வந்தது. அதன் மேனிப் பளபளப்பில் மயங்கினாள். மனதுக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி சிறகடித்துக்கொண்டே இருந்தது.

காரை ரீபெயின்ட் பண்ணி நிறுத்தின இரண்டாவது நாள். அதுவொரு ஞாயிற்றுக்கிழமை. கீழ்வீட்டுப் பையன், சுவருக்கும் காருக்கும் இடையில் சைக்கிளைவைத்து இழுத்த இழுப்பில் காரின் இடது பக்கம் நீண்ட, ஆழமான கோடு.

திங்களன்று கார் துடைக்கும்போதுதான் கவனித்தாள். சைக்கிளின் பெடல் நீளமாகக் கோடிழுத்திருந்தது.

அவன் வீட்டுக் கதவைத் தட்டி, ``அவன் இருக்கானா?’’ என்று கேட்டால், ``ஸ்கூலுக்குப் போயிருக்கான்’’ என்றார் அவன் அம்மா.

``பாருங்க... இப்படிப் பண்ணியிருக்கான். ஏற்கெனவே சொல்லியும் இந்த மாதிரி செய்தால் எப்படிங்க... வந்தால் பேசணும்’’ என்றாள். அவ்வளவுதான், அவன் அம்மா உச்சஸ்தாயியில் கத்தத் தொடங்கினார். ``அவன்தான் செய்தான்னு தெரியுமா உங்களுக்கு... நீங்க பாத்தீங்களா?’’

இப்போதுதான் இவ்வளவு செலவு செய்து, ரீபெயின்ட் பண்ணியிருந்தாள். காரைப் பார்க்கப் பார்க்க, நினைக்க நினைக்க பொங்கிப் பொங்கி வந்தது.

``இதுல பார்க்கறதுக்கு என்னங்க இருக்கு; மொதோவே அவன் நிறைய கோடிழுத்திருக்கான். `வண்டியை பெயின்ட் பண்ணப்போறேன். இனிமே கவனமா சைக்கிளை எடு’ன்னு சொல்லியிருந்தேன். வேணும்னா மெயின்டெனன்ஸ் மேனேஜரைக் கூப்பிட்டுக் கேட்டுப் பாருங்க’’ என்றாள். அந்தம்மாள் ஒரேயடியாகத் தன் மகன் செய்திருக்கவே மாட்டான் என்று சாதித்தார்.

இவளுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. இப்போதுதான் இவ்வளவு செலவு செய்து, ரீபெயின்ட் பண்ணியிருந்தாள். காரைப் பார்க்கப் பார்க்க, நினைக்க நினைக்க பொங்கிப் பொங்கி வந்தது.

ஹவுஸ் ஓனரிடம் போய்ச் சொன்னாள். ``அந்தம்மாகிட்ட பேசறது வேஸ்ட்மா. அவனுக்கு நான் சைக்கிளுக்கு வேற இடம் குடுக்குறேன்... உன் காரை டிஸ்டர்ப் பண்ணாமல்’’ என்றார்.

ந்தச் சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பையன் சாதாரணமாகக்கூடக் கண்ணில்படவில்லை. ஆனால் பார்த்தால், அவனிடம் பேசியே ஆக வேண்டும் என நினைத்துக்கொண்டாள். ஒருநாள் சாயங்காலம் அவள் ஆபீஸ் முடிந்து உள்ளே வரவும், அவன் சைக்கிளோடு வெளியே கிளம்பவும் சரியாக இருந்தது. அவனை ``ஏ தம்பி நில்லுப்பா...’’ என்றாள். அதற்குள் மேலேயிருந்து அவன் அம்மா, ``என் பையன் பண்ணலைங்க. நீங்க பாத்தீங்களா... கண்ணு நீ போடா’’ என்று சொல்ல, இவளும் சளைக்காமல் சத்தமாக ``டேய் தம்பி நில்லு. இப்போ புதுசா நீ வாங்கியிருக்கிற உன் சைக்கிள்ல யாராவது கீறல் போட்டாலோ, இல்லை டயரைக் கிழிச்சாலோ நீ சும்மா இருப்பியா... உனக்கு எப்படி இருக்கும்...’’

கிட்டத்தட்ட அரை மணி நேர வாக்குவாதத்துக்குப் பிறகு, ``வருத்தமா இருக்கும் ஆன்ட்டி... சாரி ஆன்ட்டி’’ என்றான்.

`ப்பா..! இவ்வளவுதாண்டா. நீ பண்ணினதுக்கு சாரியா ஃபீல் பண்ணே பாரு. இதைத்தான் நான் கேட்டது. மூணு வருஷக் கீறல். ரீபெயின்ட் பண்ண ஏழாயிரம் ரூபா செலவு பண்ணியிருக்கேன். நான் காசு பேசலை. பொருளுக்கும் வருந்தலை. என் பிள்ளை பண்ணிருந்தால் மன்னிக்க மாட்டேனா... அப்படி மன்னிக்கிறேன். ஆனால், இனிமே பார்த்து நடந்துக்கோ’’ என்றுவிட்டுப் போய்விட்டாள்.

டுத்தநாள் காலை, ஆபீஸுக்குச் சீக்கிரமே கிளம்பினாள். கார் எடுக்கப் போனவள், அப்படியே அதிர்ந்து நின்றாள். அதே காம்பவுண்டில் குடியிருக்கும் அடுத்த போர்ஷன் மூன்று வயதுக் குழந்தை, தன் பொம்மைக் காரை இவளது காரில்வைத்து ‘உர்ரூம்...’ என்று ஓட்டிக்கொண்டிருந்தது. அது போட்ட கோடு, சைக்கிளின் பெடலைவைத்து இழுத்ததைப்போலவே இருந்தது.