சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும், விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.
குகைகள் என்றாலே அவற்றில் ஏதோ மர்மம் இருக்கும் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை. பீகார் மாநிலத்தில் உள்ள ஸோன் பண்டார் (Son Bhandar cave) குகைகளைச் சுற்றி நிலவும் கதைகள் மூச்சடைக்க வைக்கின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் உருவானவை இந்த குகைகள். பீகாரில் உள்ள ராஜ்கிர் என்ற பகுதியில் உள்ளன. வைபர் குன்றுகளின் அடிவாரத்தில் இவை உள்ளன.

சமண முனிவர் ஒருவரால் எழுப்பப்பட்ட குகைகள் இவை என்கிறது குப்த மொழியில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு. அதேசமயம் திருமாலின் ஒரு உருவமும் இங்கே இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வு ஒன்றில் இந்தக் குகைகள் புத்த மதம் தொடர்பானவை என்று கூறப்படுகிறது.
ஆனால் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களால் இந்தக் குகைகள் எழுப்பப்பட்டன என்பதைவிட பெரிய மர்மம் ஒன்றும் இது தொடர்பாக உள்ளது.
இந்தக் குகைகள் ஸோன் பண்டார் என்று அழைக்கப்படுகின்றன. ஹிந்தியில் ஸோன் என்றால் தங்கம். பண்டார் என்றால் கிடங்கு. இந்தக் குகையில் எங்கோ ஒரு சுரங்கப் பாதை இருக்கிறது என்றும் அதன் வழியே சென்றால் பெரிய அளவில் புதைத்து வைக்கப்பட்டுள்ள தங்கம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் சுவர்களில் பல ரகசியக் குறியீடுகள் காணப்படுகின்றன. இதை ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக அர்த்தப்படுத்திக் கொண்டு பலரும் இந்தக் குகைக்குள் ஏதாவது ரகசிய வழி இருக்கிறதா என்பதை அறிய முயன்றிருக்கிறார்கள். இதுவரை பலனில்லை.
ஒரு முறை இந்த குகைகளின் சுவர்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கக் கூட பிரிட்டிஷ் அரசாங்கம் முயற்சி செய்திருக்கிறது. ஆனால் சுவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. பிறகு அதைவிடப் பெரிய முயற்சியை அரசு எடுக்கவில்லை.

பீகாரின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இங்கு உள்ள சிற்பங்கள் அல்ல, குகையைச் சுற்றியுள்ள மர்மம்தான்.
*********************
இதோ மற்றொரு குகை மர்மம்.
'சந்திரனில் இறங்கிய சாகசத்துக்கு ஒப்பானதாக இருந்தது' - நிலவில் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் ஒரு குகைக்குச் சென்று திரும்பியதைத்தான் இப்படி வர்ணித்தார்.
ஈக்வடார் நாட்டின் தலைநகர் குயிடோ. அங்கிருந்து எட்டு மணி நேரம் காரில் பயணம் செய்து சாண்டியாகோ நதிக்கரை வழியாக நீண்ட தூரம் சென்றால் அங்கு மூன்று குடிசைகளைக் காணலாம். அவற்றில் ஷுவார் என்ற பழங்குடியைச் சேர்ந்த 12 பேர் வாழ்கிறார்கள். இவர்களின் பணி அங்கிருக்கும் டாயோஸ் என்ற ஒரு குகையை (Tayos Caves) காவல் காப்பதுதான். எதிரிகளின் தலைகளை மின்னல் வேகத்தில் கொய்யும் ஆற்றல் படைத்தவர்கள்.

1972ல் எழுத்தாளர் எரிக் வான் டானிகென் என்பவர் 'The Gold of the Gods' என்ற புதினத்தை எழுதி இருந்தார். அதில் இந்த குகையை வர்ணித்ததுடன் அங்கு ஒரு உலோக நூலகம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதில் உலோகத் தகடுகளில் யாரும் அறிந்திராத ஒரு மொழியில் பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். இது புனைகதை என்று ஒரு சாராரும் நிஜமென்று மற்றவர்களும் கூறத் தொடங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து நாட்டுக் கண்டுபிடிப்பாளர் ஸ்டான் ஹால் என்பவரின் தலைமையில் 100 பேர் அடங்கிய ஒரு குழு இந்த குகையை ஆராயப் புறப்பட்டது. அதில் விஞ்ஞானிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டன் மற்றும் ஈக்வடார் நாட்டு ராணுவத்தினர் ஆகியோர் இடம் பெற்றனர். கூடவே நீல் ஆம்ஸ்ட்ராங்கும் இடம்பெற்றார்.
மேற்படி குகைக்குள் நுழைந்த போது அவர்களுக்கு வியப்புகள் காத்திருந்தன. கற்களினால் ஆன சுரங்கப்பாதைகள். அவை மிகச் சரியான கோணங்களில் வெட்டப்பட்டிருந்தன. பாலிஷ் செய்ததுபோல அவை பளபளவென்று இருந்தன. கி.மு 1500 ஆண்டைச் சேர்ந்த ஒரு இடுகாட்டையும் அங்கே கண்டார்கள். அங்கே ஒருவரின் உடலும் காணப்பட்டது. அதைத் தொட்ட மாத்திரத்தில் அது பொலபொலவென உதிர்ந்தது. உலோக நூலகம் என்று எதுவும் அவர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஏழு மைல் தூரம் உள்ளடங்கியது என்று கணக்கிடப்படும் இந்தக் குகையில் நான்கு மைல் தூரம் மட்டுமே அந்த குழுவினரால் கடக்கப்பட்டது.
மீதமிருக்கும் மூன்று மைல்களில் இனி என்னென்ன வியப்புகள் காத்திருக்கின்றனவோ!