Published:Updated:

ரயில் பயணத்திற்கான முன்பதிவில் இருக்கும் குறியீடுகள் குறித்துக் கூற முடியுமா? | Doubt of Common man

Train Journey

REGRET/WL என்று இருந்தால் இதற்கு மேல் முன்பதிவு செய்ய இயலாது என்று அர்த்தம்.

Published:Updated:

ரயில் பயணத்திற்கான முன்பதிவில் இருக்கும் குறியீடுகள் குறித்துக் கூற முடியுமா? | Doubt of Common man

REGRET/WL என்று இருந்தால் இதற்கு மேல் முன்பதிவு செய்ய இயலாது என்று அர்த்தம்.

Train Journey
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் செல்வம் என்ற வாசகர், "ரயில் பயணத்திற்கான முன்பதிவில் குறிப்பிடப்படும் சில குறியீடுகளுக்கு அர்த்தம் தெரியவில்லை. அது குறித்துத் தெரிவிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

நெடுஞ்சாலைகளில் செல்லும் பேருந்து (Bus), மகிழுந்து (Car) உள்ளிட்ட வாகனங்களில் எவ்வளவு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், அவை தொடருந்து (Train) பயணம் போன்று இனிமையானதாக இருப்பதில்லை. மேலும், தொடருந்துப் பயணம் நம் உடலுக்கு எவ்விதமான துன்பங்களையும் தருவதில்லை. குறிப்பாக, நெடுந்தொலைவுப் பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட தொடருந்துப் பயணமே மிகச் சிறப்பானதாக இருக்கிறது. தொடருந்துப் பயண நாளுக்கு, 120 நாள்கள் முன்பாகவும், குறிப்பிட்ட தொடருந்து புறப்படும் நேரத்திற்கு முன்பாக, அந்தத் தொடருந்து முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படுவதற்கு முன்பு வரையும் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

முக்கியத் தொடருந்து நிலையங்களிலும், குறிப்பிட்ட சில அஞ்சல் அலுவலகங்களிலும், அனைத்து இணையச் சேவை மையங்களிலும் தொடருந்துப் பயணத்திற்கான முன்பதிவுகளை நேரடியாகச் செய்துகொள்ளலாம். இணையம் பயன்படுத்தும் திறனுடையவர்கள், தங்களது கணினி மற்றும் அலைபேசி வழியாகவும் முன்பதிவுகளைச் செய்துகொள்ள முடிகிறது.

முன்பதிவு செய்வதற்கான IRCTC இணையதளம்
முன்பதிவு செய்வதற்கான IRCTC இணையதளம்

தொடருந்துப் பயண முன்பதிவுகளுக்கு, தொடருந்துகளில் இடம் பெற்றிருக்கும் வகுப்புகள், பயணத்திற்கான இருக்கை / படுக்கை வசதி மற்றும் பயணச்சீட்டின் இருப்பு நிலை குறித்துச் சில குறியீடுகளின் வழியாகப் பயணிகளுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குறியீடுகளுக்கான பொருளைப் பலரும் முழுமையாக அறிந்திருப்பதில்லை. எனவே, அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அது குறித்த சில தகவல்கள் இங்கு தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.

தொடருந்து வகுப்புகள்

தொடருந்துப் பயணத்திற்கு முன்பதிவு செய்யும் போது, நாம் எந்த வகுப்பில் பயணம் செய்ய வேண்டுமென்பதைத் தேர்வு செய்து கொள்ளலாம். தொடருந்தில் இடம்பெற்றிருக்கும் வகுப்புகளுக்கான குறியீடுகள் மற்றும் அந்த வகுப்பில் செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்துக் கீழே தரப்பட்டிருக்கின்றன.

1A -குளிரூட்டப்பட்ட (AC) முதல் வகுப்பு

ஒவ்வொரு பெட்டிக்கும் 2 அல்லது 4 படுக்கைகள் இருக்கும். பயணிகள் அவர்களுக்கான பெட்டியின் கதவுகளை மூடிக்கொள்ளலாம். சிறிய மேசைகள், திரைச்சீலைகள் போன்றவையும் இருக்கும். இப்பயணிகளுக்கு உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்படும். உதவியாளர்களை அழைக்கும் வசதிக்கான பொத்தான் இருக்கும். ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு குப்பைத் தொட்டி இருக்கும். நிபந்தனைகளுக்கு உட்பட்டு, செல்லப்பிராணிகள் அவர்களுடன் பயணிக்க அனுமதிக்கப்படும். சில தொடருந்துகளில் பெட்டிக்குள்ளேயே கை கழுவுமிடங்கள் இருக்கும். இப்பயணிகளுக்குப் போர்வைகள் வழங்கப்படும்.

FC - முதல் வகுப்பு

ஒவ்வொரு பெட்டிக்கும் 2 அல்லது 4 படுக்கைகள் இருக்கும். பயணிகள் அவர்களுக்கான பெட்டியின் கதவுகளை மூடிக்கொள்ளலாம். புத்தகங்கள் வாசிப்பதற்கென்று தனித்தனி விளக்குகள் இருக்கும். முன்பதிவு செய்யும் பட்சத்தில் கூடுதல் கட்டணத்தில் போர்வைகள் வழங்கப்படும்.

2A - 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட (AC) படுக்கை வகுப்பு

பெட்டியிலிருக்கும் ஒவ்வொரு கேபினிலும் 6 படுக்கைகள் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். திரைச்சீலைகள் இருக்கும். வாசிப்பதற்கென்று தனித்தனி விளக்குகள் இருக்கும். போர்வைகள் வழங்கப்படும்.

இருக்கை வசதி (CC) கொண்ட ரயில் பெட்டி
இருக்கை வசதி (CC) கொண்ட ரயில் பெட்டி

3A - 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட (AC) படுக்கை வகுப்பு

பெட்டியிலிருக்கும் ஒவ்வொரு கேபினிலும் 8 படுக்கைகள் இருக்கும். போர்வைகள் வழங்கப்படும்.

3E - 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட சிக்கனமான (AC - Economy) படுக்கை வகுப்பு

பெட்டியிலிருக்கும் ஒவ்வொரு கேபினிலும் 9 படுக்கைகள் இருக்கும். போர்வைகள் வழங்கப்படும். (கரிப் ராத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில தொடருந்துகளில் போர்வைக்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். முன்பதிவு செய்யும்போது கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்)

CC - குளிரூட்டப்பட்ட (AC) இருக்கை வகுப்பு

இப்பெட்டியிலிருக்கும் ஒவ்வொரு வரிசைக்கும் 5 இருக்கைகள் இருக்கும். இதில் இருக்கை வசதி மட்டுமே இருக்கும். இப்பெட்டியில் நின்றுகொண்டு பயணிக்கக்கூடாது. உடன் எடுத்துச் செல்லும் பொருள்களை மேலே வைத்துக்கொள்ளலாம். முன் இருக்கும் இருக்கையின் பின்புறத்தில் சிறிய மேசைகள் இணைக்கப்பட்டிருக்கும்.

SL - படுக்கை வகுப்பு

பெட்டியிலிருக்கும் ஒவ்வொரு கேபினிலும் 8 படுக்கைகள் இருக்கும். இங்கு ஜன்னல்களைத் திறக்கலாம், மூடலாம். ஆனால், கண்ணாடிகள் இருக்காது. போர்வைகள் வழங்கப்படுவதில்லை.

2S – இரண்டாம் நிலை இருக்கை வகுப்பு

இப்பெட்டியில் ஒவ்வொரு வரிசைக்கும் 6 இருக்கைகள் இருக்கும். இவ்வகுப்பில் முன்பதிவு செய்தவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படும். முன்பதிவு செய்யாதவர்களுக்கான இரண்டாம் நிலை இருக்கை வகுப்புப் பெட்டிகளில் பெஞ்சுகள் இடம் பெற்றிருக்கும்.

பயணச்சீட்டு இருப்பு நிலை

தொடருந்தில் இடம்பெற்றிருக்கும் இருக்கை முறை மற்றும் பயணச்சீட்டு இருப்பு நிலை சில குறியீடுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் குறியீடுகளும் அதற்கான விளக்கங்களும் கீழே தரப்பட்டிருக்கின்றன.

AVAILABLE- பயணச்சீட்டு உள்ளது.

CAN / MOD- பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டது அல்லது பயணியின் விவரம் திருத்தப்பட்டுள்ளது.

CNF / Confirmed- பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டது. (குறிப்பிட்ட தொடருந்துக்கான முன்பதிவு அட்டவணை தயார் செய்யப்பட்ட பிறகு பெட்டி அல்லது படுக்கை / இருக்கை எண் தெரிய வரும்).

GNWL - பொதுக் காத்திருப்புப் பட்டியல் (General Waiting List). இது காத்திருப்புப் பட்டியலின் பொதுவான வகையாகும். இப்பிரிவில் பயணச்சீட்டு பெற்றவர்களுக்குப் பயணச்சீட்டு உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. அப்படி உறுதி செய்யப்படும் நிலையில் பயணச்சீட்டு RAC நிலைக்கு மாறிவிடும்.

தொடருந்து
தொடருந்து

உதாரணமாக, உங்கள் முன்பதிவுக்கான பயணச்சீட்டில் “GNWL12/WL4” என்ற இருப்பு நிலையில் இருந்தால், 12 என்பது பொதுக் காத்திருப்புப் பட்டியலின் ஆரம்ப நிலையையும், 4 என்பது ஒட்டுமொத்தக் காத்திருப்புப் பட்டியலின் நிலையையும் குறிக்கிறது. ஏனெனில் 8 பயணிகள் தங்களது உறுதிசெய்யப்பட்ட அல்லது காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டனர். உங்களின் பொதுக் காத்திருப்புப் பட்டியலின் நிலை இந்தப் பயணத்தில் தனிப்பட்டதாக இருக்கும்.

NOSB -படுக்கை வசதி கிடைக்காது. பெற்றோர்கள் கோரியபடி அவர்களுடன் பயணிக்கும் ஐந்து வயதிற்கு உட்பட்டவர்களுக்குப் படுக்கை வசதியை ஒதுக்காமல் இருப்பதற்காக இந்தக் குறியீடு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

PQWL - ஒதுக்கீட்டுக் காத்திருப்புப் பட்டியல் (Pooled Quota Waiting List). இது ஒரு தொடருந்து நிலையத்திற்கு மட்டுமல்லாமல் பல சிறிய தொடருந்து நிலையங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பட்டியல்.

RAC - பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டு உறுதி செய்யப்படுதல் (Reservation against Cancellation). இதில் இருக்கை உறுதி செய்யப்பட்டது, அதாவது, ஒரு இருக்கையினை இருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும். RAC நிலையிலான பயணச்சீட்டு CNF ஆக மாறினால் தனிப்பட்ட படுக்கை ஒதுக்கப்படும்.

R# # RAC - பெட்டி எண் அல்லது படுக்கை எண். படுக்கை வசதி கொண்ட இந்த இருக்கை 2 RAC பயணிகளுக்குக் கொடுக்கப்படும். உதாரணமாக, “RA1, 12” என்பது A1 பெட்டியில் 12ஆம் இருக்கை எண்ணைக் குறிக்கிறது.

REGRET/WL - இதற்கு மேல் முன்பதிவு செய்ய இயலாது.

RELEASED - பயணச்சீட்டு ரத்து செய்யப்படவில்லை, வேறு ஏதாவது இருக்கை கொடுக்கப்படும்.

தொடருந்து
தொடருந்து

RQWL - இரண்டு இடைப்பட்ட நிலையங்களுக்கு இடையேயான காத்திருப்புப் பட்டியல் (Remote Location Waiting List). ஓர் இடைப்பட்ட நிலையத்திலிருந்து இன்னொரு நிலையத்துக்குப் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது, அது வேறு ஒதுக்கீட்டிலோ காத்திருப்புப் பட்டியலிலோ சேராத போது, இப்பட்டியலில் சேர்க்கப்படக்கூடும்.

TQWL - தட்கல் காத்திருப்புப் பட்டியல் (Tatkal Quota Waiting List). காத்திருப்புப் பட்டியலில் எண்ணிக்கை குறையும் போது RAC-க்குப் பதிலாக உறுதி செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட இருக்கை கிடைக்கும்.

WL# - காத்திருப்புப் பட்டியல் எண். உறுதி செய்யப்பட்ட அல்லது காத்திருப்புப் பட்டியலிலுள்ள பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படும் போதெல்லாம் இந்த எண்ணிக்கை குறையும். உதாரணமாக, “WL4” எனில் உங்களுக்கு இருக்கை கிடைக்க தற்போதுள்ள பயணிகளில் 4 பேர் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். இருவர் ரத்து செய்தால் “WL2” என மாறிவிடும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man