Published:Updated:

மோடி ஆவணங்கள் என்று இருக்கிறதாமே? அந்த ஆவணங்களில் அப்படி என்னதான் இருக்கிறது? | Doubt of Common Man

மோடி ஆவணங்கள்

மராட்டிய மன்னர்கள் அன்றாட நடைமுறைகள், வரவு செலவு கணக்குகள், கடிதப் போக்குவரத்துகள், அரசியல் குறிப்புப் பொருள்கள் முதலியவற்றை மோடி எழுத்துகளில் எழுதியிருக்கின்றனர்.

Published:Updated:

மோடி ஆவணங்கள் என்று இருக்கிறதாமே? அந்த ஆவணங்களில் அப்படி என்னதான் இருக்கிறது? | Doubt of Common Man

மராட்டிய மன்னர்கள் அன்றாட நடைமுறைகள், வரவு செலவு கணக்குகள், கடிதப் போக்குவரத்துகள், அரசியல் குறிப்புப் பொருள்கள் முதலியவற்றை மோடி எழுத்துகளில் எழுதியிருக்கின்றனர்.

மோடி ஆவணங்கள்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் வருண் என்ற வாசகர், "மோடி ஆவணங்கள் என்று இருக்கிறதாமே? அந்த ஆவணங்களில் என்ன இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

மோடி ஆவணங்கள் என்றவுடன் தற்கால அரசியலை மனதில் கொண்டு, எதையாவது நினைத்துக் குழப்பமடைய வேண்டாம். தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய ஆவணங்கள்தான் மோடி ஆவணங்கள். இதற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது? இந்த ஆவணங்களில் அப்படி என்னதான் இருக்கின்றன?

இது போன்ற சில கேள்விகளுக்கு விடை காணும் ஆவலுடன் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடிகள் துறைத்தலைவரும், பேராசிரியருமான முனைவர் த. கண்ணன் அவர்களை அணுகியபோது, அவர் சொன்ன தகவல்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

“இணைய வரலாற்று எழுத்தியல் சான்றுகளுள் தாள் ஆவணங்களுக்கு முக்கிய இடமுண்டு. அதில் மோடி ஆவணங்கள் என்றழைக்கப்படும் அரிய தாள் ஆவணங்களும் முக்கியமானவையாக இருக்கின்றன. தஞ்சையை மராட்டிய மன்னர்கள் 1676 முதல் 1855 வரை ஆட்சி செய்தனர். அக்காலங்களில் மராத்தியர் குடியேற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டன. அதன் வழியாகத் தஞ்சைப் பகுதிகளில் மராத்தியப் பண்பாடும், மராத்திய மொழிக்கலப்பும் நிகழ்ந்தன. மராட்டிய மன்னர்களின் முக்கிய ஆவணங்கள் மராத்திய மொழியில் மோடி எனும் எழுத்தில் எழுதப்பட்டன. இதனால் இந்த ஆவணங்களில் உள்ளவற்றை நன்கு அறிவதற்குத் தமிழ் மற்றும் மராத்தியப் பண்பாடு, தமிழ் மற்றும் மராத்திய மொழியறிவு போன்றவை தேவையானதாக இருக்கின்றன.

மராட்டிய மன்னர்கள் அன்றாட நடைமுறைகள், வரவு செலவு கணக்குகள், கடிதப் போக்குவரத்துகள், அரசியல் குறிப்புப் பொருள்கள் முதலியவற்றை மோடி எழுத்துகளில் எழுதியிருக்கின்றனர்.

மோடி எழுத்துருக்களால் ஆன ஆவணம்
மோடி எழுத்துருக்களால் ஆன ஆவணம்

மோடி என்பது எழுத்து வடிவம். இந்த எழுத்து வடிவம் தேவநாகரி எனும் எழுத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர் தேவகிரி யாதவ அரசர்களின் அமைச்சர் ஹேமாட்பந்த் என்பவர் ஆவார். மராத்தி மொழி தனித்த எழுத்து வடிவமற்றது. எனவே அம்மொழியைத் தேவநாகரி எனும் எழுத்தினைப் பயன்படுத்தி எழுதிவந்தனர். இந்நிலையில் ஹேமாட்பந்த் அவற்றுள் சில மாற்றங்களைச் செய்து மோடி எனும் புதிய எழுத்து வடிவை உருவாக்கினார். தேவநாகரி எழுத்தை உடைத்து உருவாக்கப்பட்டதால் ‘உடைத்தல்’ எனும் பொருளுடைய ‘மோடணே’ எனும் மராத்திச் சொல்லில் இருந்து மோடி எனும் பெயரும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மோடி எழுத்து, இலங்கையினின்று வந்த எழுத்துமுறை என்பதும் ‘மௌர்யீ’ என்ற அசோகனின் எழுத்தினின்று உருவானது என்பதும் ‘குடிலலிபி’ யினின்று தோன்றியது என்றும், சிவாஜியின் காலத்து பாலாஜி ஆவஜி என்பவர் உருவாக்கியது என்றும் சிலர் கூறி வந்தனர். இது ஆதாரங்களற்ற ஒவ்வாத கருத்துக்கள் என்று முனைவர் பா. சுப்பிரமணியன் என்பவர் மோடி ஆவணங்கள் எனும் நூலின் பதிப்புரையில் குறிப்பிடுகிறார்.

இந்த மோடி எழுத்துகள் சத்ரபதி சிவாஜி காலத்திற்கு முன்பிருந்தே இருந்துள்ளன. எனினும், தஞ்சை மராட்டி மோடி ஆவணங்களில் எழுதப்பட்டிருப்பவை, மராத்திய மோடியில் இருந்து வேறுபட்டவையாக உள்ளன. எனவே, தஞ்சை மராட்டி மோடியை ‘பழைய மோடி’ என்கிறார் டி.வி.போட்தார். மோடி ஆவணங்கள் மராட்டிய மொழியில், மோடி எழுத்தில் எழுதப்பட்ட போதிலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட ஆவணங்கள் மோடி ஆவணத் தொகுப்புகளில் காணப்படுகின்றன. காகிதங்களில் இருந்து எழுதுகோலை எடுக்காமலே எழுதுவதற்கு ஏற்ற முறையில் இந்த மோடி எழுத்துகள் உள்ளன. எனவே மோடி எழுத்துகளை எழுதுவதில் வல்லவர்கள், இதனை எழுதுவதைப் பெரிதும் விரும்பியுள்ளனர்.

தஞ்சாவூரை நவாபு அரசாண்ட காலத்தில் தஞ்சை மராட்டிய ஆவணங்கள் பல அழிக்கப்பட்டுள்ளன. எனவே, கிடைத்திருக்கின்ற மோடி ஆவணங்களில் 18-ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட ஆவணங்கள் அதிக அளவில் கிடைக்கவில்லை. திருப்பனந்தாள் காசிமடத்தில் உள்ள வடமொழி மற்றும் மராத்தி மொழிச் செப்பேடு ஒன்று 1654-ம் ஆண்டிற்குரியதாக உள்ளது. இச்செப்பேட்டின் இறுதியில் உள்ள கையொப்பங்கள் அனைத்தும் ஒரே அளவுடையனவாக மோடி எழுத்தில் இருப்பதைக் கல்வெட்டு ஆய்வாளர் புலவர் இராசு குறிப்பிடுகிறார்.

சமுதாயச் செய்திகளை உள்ளது உள்ளவாறு தெரிவிக்கும் ஆவணமாக மோடி ஆவணங்கள் இருக்கின்றன. இவற்றுள் மெய்க்கீர்த்தி போன்ற புகழ் மொழிகள் இடம் பெறுவதில்லை. அரச பரம்பரையினரின் வெற்றிகளும், கொடைகளும் மிகைப் புனைவுகளும் இடம் பெறுவதில்லை. இந்த ஆவணங்கள் அன்றாட நிகழ்வுகளின் பதிவுகளாக அமைவதால் இவற்றுள் உண்மைத்தன்மைக்கான கூறுகள் மிகுந்துள்ளன என்று கூறலாம். இந்த ஆவணங்களில் மராத்தி எண்களுடன் அரேபிய எண்களின் பெயர்களும் காணப்படுகின்றன.

பேராசிரியர் முனைவர் த. கண்ணன்
பேராசிரியர் முனைவர் த. கண்ணன்

1950 - 1952-ம் ஆண்டுகளில் மோடி ஆவணக் கட்டுகள் மேஜர் எஸ். என். கத்ரே (Major S. N. Gadre) என்பவரால் ஆராயப்பட்டன. அவர் மோடி ஆவணங்களை முழுமையாக ஆராய்ந்து, பொருண்மைகளின் அடிப்படையில் அதனை மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். அப்பிரிவுகளுக்கு A, B, C என்று பெயரிடப்பட்டன. நிலையாகக் காப்பதற்குரிய ஆவணங்கள் முதலாவது பிரிவான A பிரிவிலும், எடுத்துக்காட்டு முறையில் போற்றுதற்குரிய என்ற நிலையிலான ஆவணங்கள் இரண்டாவது பிரிவான B பிரிவிலும், அழித்தற்குரியவை மற்றும் தேவையற்றவை என்ற நிலையிலான ஆவணங்கள் மூன்றாவது பிரிவான C பிரிவிலும் பிரிக்கப்பட்டன. முதலிரண்டு பிரிவுகளும் முக்கியமானவை எனக் கருதப்பட்டு சென்னை ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மூன்றாவதாய் உள்ள தொகுப்புகள் பயனற்றவை என்றும், அதனை அழித்துவிடலாம் என்றும் முதலில் கருதப்பட்டது. ஆனால், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று தஞ்சாவூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, அத்தொகுப்புகள் தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் வைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த மோடி ஆவணங்களில், தஞ்சை மராத்திய அரசர்களின் ஆட்சிக் காலத்தில் நிலவிய பல்வேறு பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், அரச பதவிகள், வருவாய் தொடர்பான செய்திகள் மட்டுமின்றி அரசர்களின் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.

குடிமக்களைப் பாதுகாப்பவர்கள் என்று கருதப்படும் மன்னர்கள், தம் ஆட்சிப்பகுதியில் இருந்த பெண்களின் மீது பாலியல் குற்றங்கள் இழைப்பது இந்திய வரலாற்றில் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன. தஞ்சை மராத்திய மன்னர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பெண்களின் நிலை குறித்த பல கொடூரமான செய்திகளை மோடி ஆவணங்கள் வழியாக அறிய முடிகின்றன.

தஞ்சை மராத்திய மன்னர்கள் மேற்கொண்ட பாலியல் குற்றங்கள் மோடி ஆவணங்களில் பதிவாகியுள்ளன. மன்னர்களின் அதிகாரப்பூர்வமான மனைவியர்கள் ‘ராணிகள்’ என்ற பட்டத்துடன் அரண்மனைகளில் வாழ்ந்தனர். மற்றொரு பக்கம், மராத்திய மன்னர்களின் காமக்கிழத்தியர்கள் வாழ்வதற்குத் தனியாக அரண்மனைகள் உருவாக்கப்பட்டிருந்தன.

இரண்டாம் சரபோஜி மன்னன் (1798-1832), தஞ்சை அருகிலுள்ள திருவையாறு என்னும் ஊரில் ஆற்றங்கரையோரம் கல்யாண மகால் என்ற பெயரில் மாளிகை ஒன்றைக் கட்டியுள்ளான். இம்மாளிகையினுள் மன்னனின் காமக்கிழத்தியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்குத் தங்க வைக்கப்பட்ட பெண்கள் ‘கல்யாண மஹால் மகளிர்’ என்று அழைக்கப்பட்டனர்.

தேவநாகரி மற்றும் மோடி எழுத்துரு பட்டியல்
தேவநாகரி மற்றும் மோடி எழுத்துரு பட்டியல்

இரண்டாம் சிவாஜி (1832-1855) என்ற மன்னனின் அதிகாரப்பூர்வ மனைவியர் எண்ணிக்கை இருபது. அவர்களைத் தவிர்த்து, தஞ்சாவூரில் ‘மங்கள விலாசம்’ என்ற பெயரில் அரண்மனையொன்றைக் கட்டி அதில் தன் காமக்கிழத்தியரைத் தங்க வைத்திருந்தான். அவர்களின் எண்ணிக்கை நாற்பத்தெட்டு. இப்பெண்கள் ‘மங்கள விலாச மகளிர்’, ‘மங்கள வாச மகளிர்’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர். இம்மன்னன் இறந்த போது நாற்பத்திரண்டு மங்கள விலாச மகளிர் இருந்ததாகவும், இவர்கள் மராட்டியர், பிராமணர், கவரை நாயுடு, கிறித்தவர் எனப் பலதரப்பட்டவர்கள் என்றும் கல்வெட்டாய்வாளர் செ. இராசு குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு வழக்கில் இல்லாமல், எழுத்துருவில் மட்டுமே இருக்கும் வகையில் அமைந்த மோடி எழுத்துருக்களைக் கொண்ட மோடி ஆவணங்கள், மொழிப் பன்மைத்துவ ஆய்வுகளுக்கும், தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள மொழிக் கலப்புகள் குறித்த ஆய்விற்கும் துணை நிற்கின்றன. இந்த ஆவணங்கள் குறித்த ஆய்வுகளில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித்துறைப் பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man