Published:Updated:

நம் படத்துடன் கூடிய ஸ்டாம்பை வெளியிட முடியும் என்கிறார்களே, எப்படி? | Doubt of Common Man

அஞ்சல் தலை

இந்திய அஞ்சல் துறை 2011 ஆம் ஆண்டு இன்டிபெக்ஸ் 2011 (INDIPEX-2011) எனும் உலக அஞ்சல்தலை சேகரிப்புக் கண்காட்சியினை நடத்தியபோது, 'என் முத்திரை' (My Stamp) எனும் புதிய அஞ்சல்தலை வெளியிடும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

Published:Updated:

நம் படத்துடன் கூடிய ஸ்டாம்பை வெளியிட முடியும் என்கிறார்களே, எப்படி? | Doubt of Common Man

இந்திய அஞ்சல் துறை 2011 ஆம் ஆண்டு இன்டிபெக்ஸ் 2011 (INDIPEX-2011) எனும் உலக அஞ்சல்தலை சேகரிப்புக் கண்காட்சியினை நடத்தியபோது, 'என் முத்திரை' (My Stamp) எனும் புதிய அஞ்சல்தலை வெளியிடும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

அஞ்சல் தலை
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் வித்யா என்ற வாசகர், "அஞ்சல் துறை மூலம் நம் படத்துடன் ஸ்டாம்ப் வெளியிட முடியும் என்கிறார்களே, அது குறித்தத் தகவல்களைத் தர முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

உலகம் முழுவதும் பரவலான பொழுது போக்குகளில் ஒன்றாக அஞ்சல்தலை சேகரிப்பு (Stamp collecting) இருந்து வருகிறது. இது ஒரு லாபமில்லாத முயற்சிதான் என்றாலும், அஞ்சல் தலை சேகரிப்பவர்கள், தனிப்பட்ட ஆர்வத்துடன் பல்வேறு அஞ்சல் தலைகளைத் தொடர்ந்து சேகரித்துக் கொண்டேதான் இருக்கின்றனர். அதற்கென்று தனியாகப் பணத்தையும் அவ்வப்போது செலவழித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்தியா உட்பட சில நாடுகள், அஞ்சல்தலை சேகரிப்பாளர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமான பல்வேறு அஞ்சல் தலைகளை அவ்வப்போது வெளியிட்டு வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கின்றன.

அஞ்சல் தலை
அஞ்சல் தலை
இந்திய அஞ்சல் துறை 2011-ம் ஆண்டு இன்டிபெக்ஸ் 2011 (INDIPEX-2011) எனும் உலக அஞ்சல்தலை சேகரிப்புக் கண்காட்சியினை நடத்தியபோது, அஞ்சல் தலை சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு 'என் முத்திரை' (My Stamp) எனும் புதிய அஞ்சல்தலை வெளியிடும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின் மூலம் நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் பெற்ற வெற்றியைச் சிறப்பிக்கும் வகையில் அவருடைய உருவம் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டு அவருக்குச் சிறப்பு செய்ய முடியும். நம்முடன் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் போன்றவர்களின் பணிகளுக்கான பாராட்டு விழா அல்லது பணி நிறைவுக்கான பிரிவு உபச்சார விழா, குழந்தைகள் பிறந்த நாள் விழா, திருமண நாள் விழா மற்றும் பல்வேறு வகையான சிறப்பு விழாக்கள் போன்றவைகளில் தொடர்புடையவர்களது உருவம்கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டு அவரைச் சிறப்பிக்க முடியும்.

இத்திட்டத்தின் வழியாக, வாடிக்கையாளர்களின் புகைப்படம் (Customer's Photograph), நிறுவனங்களின் இலச்சினைகள் (Logos of Institutions), கலைப்படைப்புகளின் படங்கள் (Artwork Images), மரபு சார்ந்த கட்டடங்கள் (Heritage Buildings), புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் (Famous Tourist Places), வரலாற்று நகரங்கள் (Historical Cities), காட்டுயிர் (Wildlife), விலங்குகள் மற்றும் பறவைகள் (Animals and Birds) உள்ளிட்ட படங்களைத் தனித்தாளில் சிறுபடங்களாக, அஞ்சல் தலைகளாக அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

My Stamp விண்ணப்பப் படிவம்
My Stamp விண்ணப்பப் படிவம்

இந்த அஞ்சல் தலை வெளியிடுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் அஞ்சல் தலை சேகரிப்புச் சிறப்புச் சேவையகம், முக்கிய அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் சுற்றுலாத்தலம் அமைந்திருக்கும் இடங்களிலுள்ள அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றில் “என் முத்திரை” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வலுவலகங்களில் என் முத்திரை அஞ்சல்தலை வெளியீட்டிற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதனை முழுமையாக நிரப்பித் தனி நபர்கள் ஒரு தாளுக்கு ரூ.300/- (ரூபாய் மூன்று நூறு) கட்டணமாகச் செலுத்த வேண்டும். அத்துடன் இந்திய அரசு அல்லது மாநில அரசு வழங்கிய நம்முடைய அடையாள அட்டை நகல், நாம் சிறப்பிக்க விரும்புபவரது மார்பளவிலான ஒளிப்படம் மற்றும் சிறப்புப் படம் போன்றவற்றைக் குறுந்தகடு மூலமாக இணைத்து அளிக்க வேண்டும்.

இதைப் பெற்றுக் கொண்ட அஞ்சல் அலுவலகத்தினர், எட்டாவது நாளில் நாம் சிறப்பிக்க விரும்பிய நபரின் உருவத்துடன், ரூ.5/- மதிப்பு கொண்ட 12 அஞ்சல் தலைகளைக் கொண்ட, சிறப்பு அஞ்சல் தலைத் தாளினை நமக்கு அளிக்கின்றனர். நாம் சிறப்பிக்க விரும்புபவரது சிறப்பு நாளுக்குப் பத்து நாள்களுக்கு முன்பாகவே விண்ணப்பித்திச் சிறப்பு அஞ்சல் தலைத் தாளைப் பெற்றுக்கொள்வது நல்லது.

கூட்டாண்மை நிறுவனங்கள் (Corporate), அமைப்புகள் (Organizations) தங்கள் பணியாளரைச் சிறப்பிக்கவோ அல்லது சிறப்புகளை வெளிப்படுத்தவோ என் முத்திரைத் திட்டத்தின் கீழாக அஞ்சல் தலை வெளியிட விரும்பினால் அதையும் அஞ்சல் அலுவலகங்கள் செய்து தருகின்றன. நிறுவனங்கள் என் முத்திரைத் திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது, குறைந்தது 5000 அஞ்சல் தலைத் தாள்கள் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு அஞ்சல்தலைத் தாளுக்கு ரூ.300/- என்று கட்டணமாகக் கொண்டு ரூ.15,00,000/- செலுத்த வேண்டும். கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இத்திட்டத்திற்கான 20 சதவிகிதம் கட்டணக் கழிவு போக, ரூ.12,00,000/- செலுத்த வேண்டியிருக்கும். கூடுதல் எண்ணிக்கையிலான சிறப்பு அஞ்சல்தலைத் தாள்கள் தேவைக்கு 5000 எனும் எண்ணிக்கையின் மடங்குகளாக அச்சிட்டுப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தக் கூடுதல் எண்ணிக்கைகளுக்கும் 20 சதவிகிதம் கட்டணக் கழிவு உண்டு.

அஞ்சல்துறையின் இணையதளப் பக்கம்
அஞ்சல்துறையின் இணையதளப் பக்கம்

என் முத்திரை அஞ்சல் தலைத் தாளில் இடம்பெறக்கூடிய படங்கள் சட்ட விரோதமான, அவமதிக்கக்கூடிய அல்லது ஒழுக்கக் குறைபாடு கொண்ட படங்களாகவோ, நேர்மையற்ற, ஏமாற்றக்கூடிய அல்லது தேசபக்தி இல்லாத படங்களாகவோ, அரசியல், சமயம் தொடர்பான உள்ளடக்கங்களைக் கொண்ட படங்களாகவோ இருக்கக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

தனிநபர்களுக்கு ரூ.300/- செலவில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பிக்க முடியும் என்பதால் நாம் நமக்குப் பிடித்தவர்கள், நண்பர்கள் போன்றவர்கள் வெற்றியினை அல்லது அவர்களது சிறப்புகளைப் பாராட்டும் விதமாக அவரது ஒளிப்படத்துடனான அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு இந்திய அஞ்சல் துறையின் இணையதளத்தை அணுகலாம். இணையதளப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man