Published:Updated:

இதுவரை கிடைக்கப்பெற்ற ஓலைச் சுவடிகள் எத்தனை? | Doubt of Common Man

ஓலைச்சுவடிகள்

தமிழ் மொழி வரலாற்றை, துறைகளை அறியக் கல்வெட்டுகள், கட்டடங்கள், கலைகள் எல்லாம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஓலைச்சுவடிகள்.

Published:Updated:

இதுவரை கிடைக்கப்பெற்ற ஓலைச் சுவடிகள் எத்தனை? | Doubt of Common Man

தமிழ் மொழி வரலாற்றை, துறைகளை அறியக் கல்வெட்டுகள், கட்டடங்கள், கலைகள் எல்லாம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஓலைச்சுவடிகள்.

ஓலைச்சுவடிகள்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் சங்கர் கணேஷ் என்ற வாசகர், "இதுவரை கிடைக்கப்பெற்ற ஓலைச் சுவடிகள் எத்தனை? கிடைத்தவற்றில் எத்தனை ஓலைச்சுவடிகள் படிக்கப்பட்டுள்ளன? கிடைத்த ஓலைச்சுவடிகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

தமிழ் மொழி வரலாற்றை, துறைகளை அறியக் கல்வெட்டுகள், கட்டடங்கள், கலைகள் எல்லாம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஓலைச்சுவடிகள் என்னும் பெரும் பொக்கிஷங்கள். நிறைய இடங்களில், நாடுகளில் நம்முடைய தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஓலைச்சுவடிகள் மூலமே பழங்கால நடைமுறைகள் பலவற்றையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். தமிழில் இதுவரை எத்தனை ஓலைச்சுவடிகள் கிடைத்திருக்கின்றன, அவை எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன என்பவற்றைப் பற்றி நமக்குத் தெரிவதில்லை. இந்நிலையில் ஓலைச்சுவடிகளைப் பற்றி நம்முடைய வாசகர் ஒருவருக்கும் சந்தேகம் ஒன்று எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

ஓலைச்சுவடிகள்
ஓலைச்சுவடிகள்
வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலத்தில், உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர். தாமரை பாண்டியன் அவர்களிடம் பேசினோம்.

ஓலைச்சுவடிகளில் தற்போதைய நிலை குறித்து அவர் கூறியதாவது, "18 - 19ஆம் நூற்றாண்டிலிருந்து பல ஓலைச்சுவடிகள் நமக்குக் கிடைக்கத் தொடங்கின. ஆங்கிலேய அதிகாரிகள் பலராலும் கூட பல ஓலைச்சுவடிகள் திரட்டப்பட்டன. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் நூலகங்கள், கல்லூரிகள், அருங்காட்சியகங்களில் உள்ளன. இதில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மட்டுமே தோராயமாக 75 ஆயிரம் ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு அதிக அளவில் ஓலைச்சுவடிகளைத் திரட்டினாலும் கூட, 1942ஆம் ஆண்டுக்குப் பின் உவேசா அவர்களின் காலகட்டத்திற்குப் பிறகு பெரிய அளவில் ஓலைச்சுவடிகள் பதிப்பிக்கப்படவில்லை.

உதவிப் பேராசிரியர், டாக்டர் தாமரை பாண்டியன்
உதவிப் பேராசிரியர், டாக்டர் தாமரை பாண்டியன்

அதற்குக் காரணம் அடுத்த தலைமுறையினருக்கு ஓலைச்சுவடிகளைத் திரட்ட, படிக்க, பதிப்பிக்க பெரிய அளவில் கற்றுக்கொடுக்கவில்லை. இதனால் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குத் தற்போது ஓலைச்சுவடித் துறையில் யாரும் இல்லை. இதனால் இந்தத் துறையில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. திரட்டப்பட்ட ஓலைச்சுவடிகள் நன்முறையில் பாதுகாக்கப்பட்டாலும், அதை நூலாக மாற்றுவதில்லை. ஓர் ஓலைச்சுவடியைப் படித்து, நூலாக மாற்றுவதற்குப் பல நாள்களும் நிதியும் தேவைப்படும். ஆனால் பிரதி எடுப்பதற்கோ, நூலாக்கம் செய்வதற்கோ ஆட்கள் தேவையான அளவு இல்லை என்பதுதான் உண்மை.

பத்து வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் முடிவில் பேராசிரியர் ஒருவர் திரட்டப்பட்ட ஓலைச்சுவடிகளில் ஏழு சதவிகிதம் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். அதற்குப் பிறகு பெரிதளவில் சுவடிகள் எதுவும் பதிப்பிக்கப்படாததால் அந்த எண்ணிக்கை தற்போது பத்து சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும். 2015-ம் ஆண்டு மத்திய, மாநில ஓலைச்சுவடிகள் துறையைச் சேர்ந்தவர்கள் எடுத்த கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் திரட்டப்பட்ட ஓலைச்சுவடிகளைவிட அதிக எண்ணிக்கையிலான ஓலைச்சுவடிகள் தென்மாவட்டங்களில் உள்ள பல சித்த மருத்துவர்களின் வீடுகளிலும், குறிப்பிட்ட சமூகத்தினர்களின் வீடுகளிலும் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அவை இன்னமும் திரட்டப்படாமலே உள்ளன.

ஓலைச்சுவடிகள்
ஓலைச்சுவடிகள்

தமிழகத்தைத் தாண்டியும், கேரளா, கர்நாடகா, இலங்கை, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பல நாடுகளிலும் தமிழ்ச் சுவடிகள் திரட்டப்படாமல் உள்ளன. இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளைவிட அதிக எண்ணிக்கையில் ஓலைச் சுவடிகள் இருப்பது நம் தமிழ் மொழியில்தான். திரட்டப்பட்ட பல சுவடிகள் பாதுகாப்பான இடங்களில் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் சுவடிகளைப் பதிப்பித்தால் மட்டுமே அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும். இல்லையெனில் படிக்கப்படாமலே அப்படியே அழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். மேலும் அறிவியல், சாஸ்திரம், நிகண்டு, யோகம், கணிதம், வானியல் என ஏகப்பட்ட செய்திகளுடன் பல சுவடிகள் உள்ளன. அவற்றைப் பதிப்பித்தால் பல புதிய விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது" என்றார்.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man