Published:Updated:

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான விருது பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? | Doubt of Common Man

நாட்டுப்புறக் கலைகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு, அவர்களது வயது மற்றும் கலைப்புலமைக்கு ஏற்றபடி பரிசுத் தொகையுடனான கலை விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

Published:Updated:

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான விருது பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? | Doubt of Common Man

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு, அவர்களது வயது மற்றும் கலைப்புலமைக்கு ஏற்றபடி பரிசுத் தொகையுடனான கலை விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நாட்டுப்புறக் கலைகள்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் தேவகி என்ற வாசகர், "நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான விருது பெற எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

ஆட்டங்கள், கூத்துகள், சிற்பக்கலை, கட்டடக்கலை, மரவேலைக்கலை, மட்பாண்டக்கலை, வீரக்கலைகள் என்று தமிழர்களின் கலைகள் பல பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இக்கலைகளின் உட்பிரிவுகளாக, கரகாட்டம், காவடியாட்டம், கும்மிக்கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், கணியான் கூத்து, நையாண்டி மேளம், பாவைக்கூத்து, தோல்பாவை, சிலம்பம் என்று எத்தனையோ கலைகள் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்தன.

இந்தக் கலைகளுக்குத் தற்போது பொதுமக்களின் ஆதரவில்லாமல் போனதால், இந்தக் கலைகளை மட்டுமே தொழிலாகச் செய்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் பலரும், அதில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில் மாற்றுத் தொழிலைத் தேடிச் சென்று விட்டனர். வருவாய்க்காக மாற்றுத் தொழிலுக்குச் சென்ற போதிலும், தங்களது கலையை எப்படியாவது காப்பாற்றி, அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று சில கலைஞர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற, சில கலைஞர்களின் நம்பிக்கைகளிலான போராட்டத்தினால் சில நாட்டுப்புறக் கலைகள் மீண்டெழுந்திருக்கின்றன அல்லது அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று சொல்லலாம்.

நாட்டுப்புறக் கலைகள்
நாட்டுப்புறக் கலைகள்

விருதுகள்

தமிழ்நாட்டில் கலைப் பண்புகளை மேம்படுத்தவும், கலைகளைப் பாதுகாக்கும் நோக்கில், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் கலை, பண்பாட்டுத் துறை மாவட்டங்கள் தோறும், மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் மாவட்டக் கலை மன்றத்தை அமைத்திருக்கிறது. இம்மன்றத்தின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு, அவர்களது வயது மற்றும் கலைப்புலமைக்கு ஏற்றபடி பரிசுத் தொகையுடனான கலை விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

18 வயது மற்றும் அதற்குற்பட்ட வயதினருக்கு ‘கலை இளமணி’ எனும் விருதும், 19 வயதுக்கு மேல் 35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு ‘கலை வளர்மணி’ எனும் விருதும், 36 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு ‘கலைச் சுடர்மணி’ எனும் விருதும், 51 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு ‘கலை நன்மணி’ எனும் விருதும், 61 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு ‘கலை முதுமணி’ எனும் விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

கலை இளமணி விருதுக்கு ரூ.4000/-, கலை வளர்மணி விருதுக்கு ரூ.6000/-, கலைச் சுடர்மணி விருதுக்கு ரூ.10000/-, கலை நன்மணி விருதுக்கு ரூ.15000/-, கலை முதுமணி விருதுக்கு ரூ.20000/- என்றும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான தொகையாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.55000/- பரிசுத்தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பம்

பரதம், பாட்டு, ஓவியம், கரகாட்டம், காவடியாட்டம், கும்மிக்கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், கணியான் கூத்து, நையாண்டி மேளம், பாவைக்கூத்து, தோல்பாவை, பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கலியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் – குறத்தி ஆட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம் (வீரக்கலை), நாடகம், இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் மட்டுமின்றி செவ்வியல் கலைகள் உள்ளிட்ட அனைத்து முத்தமிழ்க் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அனைவரும் மேற்காணும் ஐந்து வகையான விருதுகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

நாட்டுப்புறக் கலைஞர்கள்
நாட்டுப்புறக் கலைஞர்கள்

18 வயது மற்றும் அதற்குற்பட்ட வயதினர் கலை இளமணி விருதுக்கும், 19 வயதுக்கு மேல் 35 வயதுக்குட்பட்ட கலைஞர்கள் ‘கலை வளர்மணி’ விருதுக்கும், 36 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட கலைஞர்கள் ‘கலைச் சுடர்மணி’ விருதுக்கும், 51 வயதுக்கு மேல் 60 வயதுக்குட்பட்ட கலைஞர்கள் ‘கலை நன்மணி’ விருதுக்கும், 61 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் ‘கலை முதுமணி’ விருதுக்கும் என்று தங்களது வயதுக்கேற்றபடி விண்ணப்பிக்கலாம்.

இதற்கு முன்பாக, மேற்காணும் ஐந்து விருதுகளில் ஒன்றைப் பெற்றவர்கள், கலைமாமணி, கலைச்செம்மல் போன்ற இத்துறையின் உயர்ந்த விருதுகளைப் பெற்றவர்கள் இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்க இயலாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இதற்கான அறிவிப்பு செய்தியாக வெளியிடப்படுகிறது. இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் கலைஞர்கள், தங்களது வயதுக்கேற்ற விருதினைத் தேர்வு செய்து, அதற்கான விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட கலைகளில் தங்களது பங்களிப்புகள், பெற்ற பாராட்டுகள், பரிசுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், தகுந்த ஆதார நகல்களுடன், தேவையான படங்களுடன் இணைத்து, அவர்களது மாவட்டத்துடன் தொடர்புடைய மண்டல கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

மண்டல அலுவலகங்கள்

தமிழ்நாட்டில் கலை பண்பாட்டுத் துறை மண்டல அலுவலகங்கள், காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் என்று ஏழு இடங்களில் மண்டல அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

காஞ்சிபுரம் மண்டலத்தில், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணமலை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை என்று ஆறு மாவட்டங்களும், சேலம் மண்டலத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என்று நான்கு மாவட்டங்களும், தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை என்று ஏழு மாவட்டங்களும், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை என்று ஐந்து மாவட்டங்களும், மதுரை மண்டலத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் என்று ஐந்து மாவட்டங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி என்று ஐந்து மாவட்டங்களும், கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி என்று நான்கு மாவட்டங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

நாட்டுப்புறக் கலைகள்
நாட்டுப்புறக் கலைகள்

விருதாளர்கள் தேர்வு

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு, ஒன்பது உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் விருதாளர் தேர்வுக் குழு, விருதுக்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, அவ்விண்ணப்பங்களிலிருந்து, தகுதியுடையவர்களைக் கண்டறிந்து, அவர்களிலிருந்து கலை இளமணி, கலை வளர்மணி, கலைச் சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி என்று ஐந்து விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்கிறது.

விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விழா ஒன்றில் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.

கூடுதல் தகவல்கள்

இவ்விருது குறித்து மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்பும், முத்தமிழ்க் கலைகளில் ஆர்வமுடைய கலைஞர்கள், தங்களது மாவட்டத்திற்கான மண்டலக் கலை பண்பாட்டுத் துறையின் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் அல்லது மண்டல அலுவலகங்களில் காஞ்சிபுரம் - 044 - 27269148, சேலம் - 0427 - 2386197, தஞ்சாவூர் - 04362 - 232252, திருச்சிராப்பள்ளி - 0431 - 2434122, மதுரை - 0452 - 2566420, திருநெல்வேலி - 0462 - 2553890, கோயம்புத்தூர் - 0422 - 2320390 எனும் அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டும் பெறலாம்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man