Published:Updated:

அல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு! #DoubtOfCommonMan

கஞ்சா செடி

அமெரிக்கா, கனடாவில் அனுமதி... இந்தியாவில் தடை... கஞ்சாவின் சரித்திரப் பின்னணி!

Published:Updated:

அல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு! #DoubtOfCommonMan

அமெரிக்கா, கனடாவில் அனுமதி... இந்தியாவில் தடை... கஞ்சாவின் சரித்திரப் பின்னணி!

கஞ்சா செடி

"அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சாவை சட்டபூர்வமாக மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் சட்டபூர்வ மருந்தாக ஏன் அது பயன்படுத்தப்படுவதில்லை?" என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் வாசகர் நாகராஜன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது.

கஞ்சா செடி
கஞ்சா செடி

கஞ்சா ஒரு போதைப் பொருள்; அதைச் சாப்பிட்டால் மூளையில் குழப்பத்தை ஏற்படுத்தி தடுமாற்றத்தை உண்டாக்கும். அதனால், உடலுக்குப் பெரும் கேடு நிகழும். அது முற்றிலும் தவிர்க்கவேண்டிய ஒரு வஸ்து. இதுதான் இங்குள்ள நிலை. ஆனால் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில், கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அங்கெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்குமுன், கஞ்சா என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அத்துடன் அதன் குணங்கள் மற்றும் அதன் வரலாறு பற்றியும் பார்த்துவிடுவோம்.

மது, புகையிலை, காபியைப் போல பல நாடுகளில் பயன்படுத்தப்படும் கஞ்சா என்ற `மேரியானா' (Marijuana) தோன்றிய இடம் ஆசியா. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் `கன்னாபிஸ் இண்டிகா' (Cannabis indica) மற்றும் `கன்னாபிஸ் சாடிவா' (Cannabis sativa) எனப்படும் கஞ்சா செடிகள் அதிகமாக வளர்கின்றன. கஞ்சா செடியின் இலைகள், மொட்டுகள், விதைகள், நார் மற்றும் அதன் பிசினைக் கொண்டு உருவாக்கப்படும் எண்ணெய் என அனைத்துமே பயன்பாட்டுக்குரியவை. வெவ்வேறுவிதமாகப் பயனளிக்கக்கூடியவை என்பதுடன் கஞ்சாவுக்கென நீண்ட மருத்துவப் பாரம்பர்யமும் உள்ளது.

உலர்ந்த கஞ்சா
உலர்ந்த கஞ்சா

சீனாவில் `மா' என்று அழைக்கப்பட்ட கஞ்சா, கிறிஸ்து பிறப்பதற்கு 2,900 ஆண்டுகளுக்கு முன்பே மருந்தாகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தியாவிலும் இது கி.மு. ஆயிரமாவது ஆண்டு முதல் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் இருந்துள்ளது. தொழுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டது. இதைப் போலவே எகிப்திய, கிரேக்க, ரோமானிய, பெர்சிய நாடுகளிலும் கிழக்காசிய நாடுகளிலும் இது மருந்தாக... குறிப்பாக கண், காது, நரம்பு மண்டலம் உட்பட பல்வேறு உறுப்புகளின் செல்கள் வீக்கத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கஞ்சா இலைகளின் பயன்பாடு அதிகரித்தது. 19-ம் நூற்றாண்டில் வலி நீக்கும் மருந்தாகவும் வலிப்பு, அல்சைமர், மனநோய், அனொரெக்சியா, குளூக்கோமா, புற்றுநோய் எனப் பல்வேறு நோய்களுக்கும் கஞ்சாவை சிபாரிசு செய்ய ஆரம்பித்தனர். இதன் உற்சாகமளிக்கும் குணத்தைக்கொண்டு இதை போதைக்காகவும் பயன்படுத்தினார்கள். கிழக்கு இரானின் ஹிப்பிக்களான ஸ்கிதியர்கள், எரிதழல் மீது கஞ்சா விதைகளை எறிந்து, அதில் வரும் புகையை உள்ளே இழுத்து உற்சாகத்துடன் கூச்சலிடுவார்களாம். இது கி.மு. 440-ம் ஆண்டின் கிரேக்க வரலாற்றுப் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கஞ்சா செடி
கஞ்சா செடி

ஆண்டு முழுவதும் வளரக்கூடிய இந்தத் தாவரத்தில், 150-க்கும் மேற்பட்ட உபயோகமான தாவரச் சத்துகள் காணப்படுகின்றன. இவற்றுள் `கேனாபினாய்டுகள்' என அழைக்கப்படும் தாவரச் சத்துகளில் (Cannabinoides), டெட்ரா ஹைட்ரோ கேனாபினால் (THC - Tetra Hydro Cannabinol) கஞ்சா செடியின் முக்கிய ஊக்கப் பொருளாக விளங்குகிறது. மேலும், ஃபிளேவனாய்டுகள், டெர்பினாய்டுகள், ஆல்கலாய்டுகள், லினோலீக் அமிலம் மற்றும் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் இவற்றுள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆசியாவில் `பாங்' என்று அழைக்கப்படும் கஞ்சாச் செடியின் இலைகள் உலர்த்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. `கஞ்சா' என்று அழைக்கப்படும் பெண் செடியின் பிசின் அகற்றப்படாத மலர்கள் மற்றும் கனிகள் கூடிய நுனிப்பகுதிகள், `ச்ரஸ்' என்றும் அழைக்கப்படும் மலராத மொட்டுகளிலிருந்து பெறப்படும் பிசின் போன்றவை ஒன்றைக் காட்டிலும் ஒன்று வீரியம் மிகுந்த போதைத்தன்மை கொண்டவை. இன்றுவரை 15 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் ஏறத்தாழ 18 கோடி பேர் போதைக்காகவே கஞ்சாவை புகைத்துப் பயன்படுத்துகின்றனர் என்பது வருத்தமான செய்தி.

புகைப் பிடித்தல்
புகைப் பிடித்தல்

கஞ்சாவில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை ஆராய்ந்தபோது, ஆச்சர்யமான தகவல்களைத் தந்தன மருத்துவ ஆய்வுகள். கஞ்சாவில் உள்ளது போலவே, நமது உடலின் மூளை, கல்லீரல், குடல், கணையம் ஆகிய உறுப்புகளில் இயற்கையாகவே சுரக்கும் `கேனாபினாயிட்ஸ்' நமது மகிழ்ச்சி, சிந்தனை, வலி, பசி, தூக்கம், நினைவாற்றல், உணர்வுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. ஆக, கஞ்சாவைப் புகைக்கும்போது, அதிலுள்ள முக்கிய மூலக்கூறான டி.ஹெச்.சி (Tetra Hydro Cannabinol) ரத்த நாளங்கள் வழியாக மூளையைச் சென்றடையும். அதன்பிறகு மூளையின் கேனாபினாயிட்ஸ் ரிசப்ட்டார்ஸ் என்ற ஏற்பு புரதத்துடன் இணைந்து விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

கஞ்சாவின் பயன் அல்லது பக்கவிளைவுகளும் அது உடலில் ஏற்படுத்தும் குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகளும் அதை உட்கொள்ளும் அளவைப் பொறுத்ததே. 30 முதல் 60 நிமிடங்கள் வரை நீடிக்கும் குறுகியகால வேதியியல் நிகழ்வில், மூளையின் டோபமைன் அளவை அதிகரித்து, காபா (GABA) என்ற மற்றொரு நியூரோ டிரான்ஸ்மிட்டரின் அளவு கட்டுப்படுகிறது. இது மனநிலையில் உடனடி உற்சாகத்தையும், போதையையும் தற்காலிகமாகத் தூண்டி, `யூபோரியா' (Euphoria) என்ற பறப்பதுபோன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. வலியையும் நன்கு குறைக்கிறது.

குழப்பம்
குழப்பம்

கஞ்சாவை உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும்போது, ஒரு சிலர் சுய கட்டுப்பாட்டை இழந்து, `சைக்சிடெலிக்' (Psychedelic) என்ற மனதை மாற்றும் தன்மைக்கு உள்ளாகலாம். இதனால் மனதின் உள்ளே அடக்கப்பட்டிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேவந்து கட்டுப்பாடின்றி வன்முறைகளில் ஈடுபடக்கூடும். மேலும் நீண்டகால விளைவுகளாக, ஞாபக மறதி, மனநிலை மாற்றங்கள், `ஹாலூசினேஷன்ஸ்' (Hallucination) என்ற அதீத கற்பனைகள், டெல்யூஷன்ஸ் (Delusions) எனும் மாயைகள், அனைத்துக்கும் மேலாக `கேனாபினாயிட் சைக்கோசிஸ்' (Cannabinoid Psychosis) என்ற மன நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

கஞ்சா மூலம் ஏற்படும் மனநோய் மற்றும் சமூக வன்முறையைக் காரணம் காட்டி, சென்ற நூற்றாண்டில், ஐக்கிய நாடுகள் சபை மூலம் உலகமெங்கும் கஞ்சாவைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டது. அத்துடன், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் மருந்தியல் குறிப்பேடுகளில், மருந்து என்ற பெயரிலிருந்து கஞ்சா நீக்கப்பட்டதுடன் அதைப் பயன்படுத்தவும் முழுமையான தடை விதிக்கப்பட்டது. இதே காரணங்களுக்காக 1985-ம் ஆண்டு இந்தியாவும் கஞ்சா பயன்படுத்துவதை எல்லா வடிவத்திலும் முற்றிலுமாக தடைசெய்தது. இந்தநிலையில், கடந்த 2004-ம் ஆண்டு, அமெரிக்கா தனது 29 மாநிலங்களில் கஞ்சாவுக்கான தடையை நீக்கியது. உலக அளவில் ஏறத்தாழ 23 நாடுகளிலும் தடை நீக்கப்பட்டது. அத்துடன் அதைச் சட்டபூர்வமாக அனுமதிக்க, `இந்தக் கஞ்சா எனப்படும் `கன்னாபிஸ்' (Cannabis) உண்மையிலேயே பாதுகாப்பானதுதானா ?' என்ற விவாதம் இப்போது பொதுமக்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், அரசியல் சட்ட வல்லுநர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் உயிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இதற்கான பதிலை, `மருத்துவ மரிஜுவானா' எனப்படும் மருத்துவக் குணங்கள் மட்டுமே உள்ள கஞ்சா என்பதன் மூலம் விளக்குகிறது ஹார்வர்டு பல்கலைக்கழகம்.

மூளை
மூளை

'பொதுவாக, டி.ஹெச்.சி. (Tetra Hydro Cannabinol) அதிகமுள்ள கஞ்சா, `சிபிஐ ரிசெப்டார்' (CB1 receptor) என்ற ஏற்பியுடன் இணைவதால், அதிகளவு போதையை ஏற்படுத்தும். இதனால் அதற்கு அடிமைப்படுவதுடன் குழப்பம், ஞாபகமறதி, கட்டுப்பாடற்ற நிலை மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், சி.பி.டி. (Cannabidiol) அதிகமுள்ள கஞ்சா, 'CB2 receptor' என்ற ஏற்பியுடன் இணைவதால், இது வலி நிவாரணியாகச் செயல்படும். அத்துடன் தூக்கமின்மை, மன அழுத்தம், வலிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி, பார்கின்சன் நோய், பசியின்மை, ஆஸ்துமா, மூட்டுவலி, புற்றுநோய் போன்றவற்றால் உருவாகும் நாள்பட்ட வலிகளையும் போக்கும். எனவே, இந்த டி.ஹெச்.சி மற்றும் சி.பி.டி ஆகியவற்றின் பயன்பாடுகளைப் பொறுத்தே கஞ்சா பாதுகாப்பானதா அல்லது போதையை மட்டுமே அதிகரிக்குமா என்பதைத் தீர்மானிக்கமுடியும்' என்கிறது இந்த ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு.

ஆக.. நாம் நினைப்பதுபோல அல்லாமல், டி.ஹெச்.சி குறைவாகவும், சி.பி.டி அதிகமாகவும் உள்ள பதப்படுத்தப்பட்ட `கன்னாபிஸ்' என்ற கஞ்சாவைத்தான் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் புகைக்கப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் மாத்திரைகள், சூயிங்கம், ஜூஸாகவும் காபி, டீ, சிகரெட் போலவும் பயன்படுத்த அனுமதிக்கின்றனர். இதன் இறக்குமதி கண்காணிக்கப்படுவதால் சட்டவிரோதமான போதை மருந்து கடத்தலையும் இது பெருமளவு குறைத்துள்ளது என்கிறது அமெரிக்க அரசின் ஒரு பிரகடனம்.

புகை
புகை

இன்றைக்கும் வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை மற்றும் மகா சிவராத்திரியன்று பால் அல்லது தயிரில் `பாங்' எனப்படும் போதைப்பொருள், கிராம்பு, ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றைச் சேர்த்து பானமாக உட்கொள்கிறார்கள். அப்படியிருக்கும்போது கஞ்சாவுக்கு ஏன் இன்னும் தடைநீக்கவில்லை என்றால் அதற்கான பதிலும், மேற்கூறியதிலேயே உள்ளது. ஆம்... மக்கள் தொகையும் விவசாயமும் நிறைந்த இந்தியாவில், இயற்கையில் நன்றாகச் செழித்து வளரும் இந்தத் தாவரத்தின் உற்பத்தியையோ பயன்பாட்டையோ, ஒரு தொழிற்சாலை உற்பத்திப் பொருளைப் போல கண்காணிக்க முடியாது. அத்துடன் விலைகுறைவு, பயன்படுத்துவது சுலபம் என்பதால் சீக்கிரமாக மக்களை, அதுவும் இளைஞர்களைச் சென்றடையும். அதனால் கஞ்சாவைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும், அதன் பக்க விளைவுகளும் ஒன்று சேர்ந்து பயமுறுத்தும். அதனால்தான் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் இளைஞர்களின் எதிர்காலம் கருதி அரசு இதன் மீதான தடையை நீக்க யோசிக்கிறது.