சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

‘கதை’ நாயகிகள்!

‘நீதிக் கதை’ சரிதா!
பிரீமியம் ஸ்டோரி
News
‘நீதிக் கதை’ சரிதா!

கதையாடல்

`உலகிலேயே அருமையான கதைசொல்லி யார்?’

இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் எல்லோரும் சொல்லும் பதில், `பாட்டி, தாத்தா’ என்பதாகத்தான் இருக்கும். உண்மைதான். நம் சிறு வயதில் அவர்கள் நமக்குச் சொன்ன மாயாஜாலக் கதைகளைப் போன்ற த்ரில் அனுபவங்களை, இப்போதுவரும் அனிமேஷன் படங்கள்கூடக் கொடுப்பதில்லை. இன்றோ, குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பழக்கம் பல வீடுகளில் இல்லாமலேயே போய்விட்டது. இன்னொரு பக்கம், விழாக்களில் கதை சொல்லும் நபர்கள் அதிகரித்துவருகிறார்கள். குறிப்பாக, பெண்களில் பலர் குழந்தைகளுக்கான கதைசொல்லிகளாக மாறிவருவது ஆரோக்கியமான விஷயம். அப்படிச் சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் இங்கே...

‘வனி' அத்தை!

மிழ்நாட்டுக் குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கும் புதிய அத்தை, ‘கதைக்களம்’ வனிதாமணி. ஈரோட்டைச் சேர்ந்த இவர், தன் வீட்டில் ‘பட்டாம்பூச்சி’ எனும் பெயரில் நூலகம் அமைத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை மாலையாகிவிட்டால், அங்கு கிளிகளும் மயில்களும் புலிகளும் கரடிகளும், தேவதைகளும் பூதங்களும், டிராகன்களும் வலம்வருகின்றன. ஈரோட்டு நூலகத்தில் தொடங்கிய பயணம், இப்போது தமிழகமெங்கும் தொடர்கிறது.

வனிதாமணி
வனிதாமணி

“குழந்தைகளின் முதல் ஃபிரெண்டு கதைகள்தான். குழந்தைகளுக்கு நான் கதைகள் சொல்லப்போனா, அங்கே அவங்க எனக்குச் சொல்ற கதைகள் இன்னும் அருமையா இருக்கு. குழந்தைகள்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிறேன். அவங்க சொல்றதைக் கேட்க ஒருத்தர் தயாராக இருக்கிறார்ங்கிறதே அவங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்துடும். அவங்ககூட ஜாலியா பேசிக்கிட்டே, அவங்களுக்குப் பிடிச்ச விஷயங்களையெல்லாம் சேர்த்துக் கதையாச் சொன்னா, சொல்பவரையும் அவங்களுக்குப் பிடித்துவிடும். ‘கதைக்களம்’ அமைப்பின் மூலமா குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதோடு, எப்படி கதைகளைச் சொல்வது என்பதைப் பெற்றோர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். அண்மையில், கர்ப்பிணிகள் நிறைந்திருந்த அறையில் கதைகள் சொன்னது ரொம்ப நெகிழ்ச்சியான அனுபவம். ஏன்னா, அங்கே 50 பேர் இருந்தார்கள் என்றால், அவர்கள் ஒவ்வொருவரின் வயிற்றிலிருக்கும் சின்னஞ்சிறு சிசுக்களும் என் கதையைக் கேட்டிருப்பார்கள் அல்லவா?!” சிலிர்ப்புடன் சொல்கிறார் வனிதாமணி.

‘விளையாட்டுக் கதை’ ஷர்மிளா!

ர் அறையில் 5 முதல் 15 வயதுவரையிலான 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள். கையில் ‘மைக்’குடன் ஷர்மிளா. ஒரு மணி நேரமாகியும் குழந்தைகளிடம் உற்சாகமும் சிரிப்பும் குறையவே இல்லை. அந்த அளவுக்குக் கதையோடு விளையாட்டையும், விடுகதைகளையும், பாடல்களையும் பின்னிப் பிணைந்து குதூகலப்படுத்தினார் ஷர்மிளா. இவர் பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

ஷர்மிளா
ஷர்மிளா

“அப்பா தேசிங்கு, தமிழாசிரியர். அவர் குழந்தைகளுக்குப் பாடல்கள் எழுதுவார். அதை வீட்டில் பாடிப் பார்ப்பேன். எங்களுக்கு மகன் பிறந்தப்போ, அவனுக்குக் கதை சொல்ல ஆரம்பிச்சேன். எங்க அப்பார்ட்மென்ட்டிலுள்ள குழந்தைகளுக்குக் கதை சொன்னதுதான் முதல் அனுபவம். அப்போதான் `என்னால கதை சொல்ல முடியும்’னு ஒரு நம்பிக்கையே வந்துச்சு. அதுக்கப்புறம் நிறைய பள்ளிகளுக்கும் விழாக்களுக்கும் போய் கதை சொல்லியிருக்கேன். ஒரு கதையை எவ்வளவு நேரத்துக்கு வேணும்னாலும் சொல்லலாம். ஆனா, அதை சுவாரஸ்யமா கொண்டு போகணும். குழந்தைங்க சோர்வாகுற மாதிரி தெரிஞ்சா, பாட்டு, விடுகதை, சின்னதா ஒரு விளையாட்டுன்னு கதையில சேர்த்துக்கிட்டே போகணும். ஒரு முறை ஜவ்வாது மலையில் இருந்த பழங்குடி மக்கள் பள்ளியில கதை சொன்னேன். நிகழ்ச்சி முடிஞ்சதும், அங்கே இருந்த ஒரு பொண்ணு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தா. அதைவிட சந்தோஷத்தை நாம எப்படிச் சம்பாதிக்க முடியும்... அந்த முத்தம் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தி, நிறைய பயணம் செய்யவெச்சுது. கதை கேட்க மட்டுமல்ல, தங்களைப் பற்றி மனசு திறந்து பேசற ஒரு ஃபிரெண்டா என்னைக் குழந்தைங்க நினைக்கணும். அது மட்டும்தான் என் ஆசை” எனச் சிரிப்புடன் சொல்கிறார் ஷர்மிளா.

‘வி’ அக்கா

சென்னை தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் வித்யா, குழந்தைகளுக்கு ‘வி’ அக்கா. இவரின் கணவர் விழியன், சிறார் எழுத்தாளர். அவரோடு பயணிக்கத் தொடங்கிய வித்யா, தற்போது குழந்தைகளுக்கான சிறந்த கதைசொல்லியாக மாறிவிட்டார். சிறுவர்களுக்குக் கதை எழுத இவர் கணவர் கற்றுத்தருகிறார்.

வித்யா
வித்யா

“உடல்மொழியை அதிகம் பயன்படுத்தும் கதைகளைத்தான் குழந்தைகளுக்குச் சொல்லத் தேர்ந்தெடுப்பேன். ஏனென்றால், குரலில் மட்டுமல்லாமல் உடல்மொழியாகவும் கதையைக் கொண்டு போகும்போதுதான் அனைத்துத் தரப்புக் குழந்தைகளையும் ஈர்க்க முடியும். போன வருஷம், கஜா புயல் பாதித்த பகுதியிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று கதைகள் சொன்னது புது அனுபவம். குறிப்பாக சிக்கல், ‘வானவில்’ பள்ளியில் கதை சொல்லி முடித்தபோது, ‘இவ்வளவு நேரம் எங்க பசங்க அமைதியா உட்கார்ந்து கதை கேட்டது எங்களுக்கே ஆச்சர்யம்தான்’னு ஆசிரியர்கள் சொன்னாங்க. நான் கதை சொல்றதன் முதல் நோக்கம், அவங்களை மகிழ்ச்சியா வைத்திருக்க வேண்டும் என்பதுதான். அடுத்து, கதை மூலமாகத் தருகிற பாசிட்டிவ் அலை அவங்களுக்கு ரொம்பவே உதவும். இதையெல்லாம் தாண்டி, எனக்குள்ள இருந்த தயக்கத்தையும் கூச்சத்தையும் உதறித் தள்ளியது கதை சொல்லும்போதுதான். முன்பெல்லாம் பத்துப் பேர் முன்னாடி பேசறதுன்னா ரொம்ப பயப்படுவேன். இப்போ அப்படி இல்லை” என, தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தையும் பகிர்ந்துகொள்கிறார்.

‘நீதிக் கதை’ சரிதா!

குழந்தைகளுக்கான கதைசொல்லி, ரேடியோ ஜாக்கி, சிறுவர் எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என ஈரோடு, விஜயமங்கலத்தைச் சேர்ந்த சரிதாவுக்குப் பல முகங்கள். `நீதிக் கதைகள் என்றாலே அலுப்பு தருபவை’ என்ற நிலையை மாற்றி, அவற்றையும் சுவாரஸ்யமாகச் சொல்லிவருபவர்.

சரிதா
சரிதா

‘`என் குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்வதென்றால், கதைவழியாகத்தான் சொல்வேன். இடையில் ஓராண்டு ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்போது வேலை அதிகமாக இருந்தாலும், கதை சொல்வதற்காக நேரம் ஒதுக்கத் தவறியதே இல்லை. முகநூலில் பலர் கதை சொல்லும் வீடியோக்களைப் பார்த்ததும், `நாமும் செய்துபார்க்கலாமே...’ என்று தோன்றியது. ஈரோடு டிஜிட்டல் லைப்ரரியில் அனுமதி கேட்டேன். உடனே தந்தார்கள். அங்கு ஆரம்பித்தது பயணம். இதுவரை 5,000 குழந்தைகளுக்குக் கதை சொல்லியிருப்பேன். பெரும்பாலும் நீதிக் கதைகளைத்தான் சொல்வேன். ஏனென்றால், நமது பாரம்பர்யத்திலுள்ள நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும். மறக்க முடியாத ஓர் அனுபவம் உண்டு. குழந்தைகளும் பெற்றோர்களும் இருந்த அந்த நிகழ்ச்சியில் ‘இதுவும் கடந்துபோகும்’ என ஒரு கதை சொன்னேன். அங்கிருந்த ஒரு பெண் என் கைகளைப் பிடித்துகொண்டு நெகிழ்ந்து பேசினார். அடுத்த நாளும் போன் செய்து, அந்தக் கதை தனக்குள் பெரிய நம்பிக்கையைத் தந்ததாகச் சொன்னார். இன்றுவரை அவரின் நட்பு நீடிக்கிறது. இவர்போன்ற மனிதர்களைத் தேடியே என் கதைப் பயணம்” என்கிறார் சரிதா.

‘ரயில் வண்டி’ அனிதா!

சென்னை, ராமாபுரத்தில் குழந்தைகளைவைத்து ‘ரயில் வண்டி’ எனும் கதை நிகழ்வுகளை நடத்திவருபவர் அனிதா. இவர் தங்கியிருக்கும் அப்பார்ட்மென்ட்டுக்கு அருகிலுள்ள குழந்தைகளை வரவழைத்து கதைகள் சொல்லிக்கொண்டிருந்தவர், பிறகு அதையே பெரிய நிகழ்ச்சியாக ஒருங்கிணைக்கத் தொடங்கிவிட்டார். இதுவரை 25-க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தி, குழந்தைகளை உற்சாகப்படுத்தி வந்திருக்கிறார். இவரின் கணவர் மணிகண்டன் புத்தகப் பதிப்பாளர்.

அனிதா
அனிதா

“ஒரு ராஜாவுக்கு கழுதைக் காது இருந்துச்சாம். அது ராஜாவின் சவரத் தொழிலாளிக்கு மட்டும் தெரிஞ்சுடுச்சு. ‘இதை யார்கிட்டேயும் சொல்லக் கூடாது’ன்னு ராஜா சொல்லிட்டார். ஆனா, அந்தத் தொழிலாளி தன் மனைவிகிட்ட சொல்லிட்டார். ‘ஐயோ இந்த ரகசியத்தை யார்கிட்டேயாச்சும் சொல்லணும்போல இருக்கே’ன்னு அவர் மனைவி சொல்ல, ‘அப்புறம் நாம ராஜாவின் கோபத்துக்கு ஆளாகிடுவோம்’னு பயந்தார் சவரத் தொழிலாளி. அவருக்கு ஒரு ஐடியா வந்துச்சு. ‘சரி... ஒரு குழிவெட்டி அதில் நீ அந்த ரகசியத்தைச் சொல்லு. நாம அந்தக் குழியை மூடிடலாம். ரகசியம் குழியோட போகட்டும்’னு சொன்னார். அதன்படியே செய்தாங்க அவர் மனைவி. ஆனா, அந்தக் குழியில வளர ஆரம்பிச்சிருந்த ஒரு மூங்கில் மரம், இந்த ரகசியத்தைக் கேட்டுடுச்சு. அது வளர்ந்ததும், அதில் செய்த முறத்தைப் பயன்படுத்தினப்போ, ‘ராஜா காது கழுதைக் காது’ன்னு ஊரே கேட்கிற மாதிரி சொல்லிடுச்சு. இந்தக் கதையை எனக்கு என் தாத்தா சொன்னார். அதை இப்போ கதை கேட்கவரும் குழந்தைகளுக்குச் சொன்னேன். நான் ரசித்ததுபோலவே இப்பவும் ரசிக்கிறாங்க. அதனால், தாத்தா, பாட்டிகள் சொல்லும் கதைகளாகத் தேடிப் பிடித்துச் சொல்றேன். அதேபோல, புத்தகங்களில் படிச்ச கதைகளையும் சொல்றதோட, அவங்களை எழுதவும்வைக்கிறேன். இப்போ, குழந்தைகள் எழுதின கதைகளைத் தொகுத்துக்கிட்டும் இருக்கேன்” என்கிறார் அனிதா.

இன்னும் நிறைய பெண் கதைசொல்லிகள் வரட்டும்.