Published:Updated:

அவர் பேச்சு பிடிக்கும்!

அவர் பேச்சு பிடிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
அவர் பேச்சு பிடிக்கும்!

அண்ணாவின் உரையைக் கேட்டு நெகிழ்ந்த போப் ஆண்டவர் ‘உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்’ என அண்ணாவிடம் கேட்பார்.

பிரிக்கவே முடியாதது அரசியல்வாதிகளும் மைக்கும்தான். ஆனால், அவர்களுக்கே மிகவும் பிடித்த பேச்சுக்குச் சொந்தக்காரர்கள் யார் என, தமிழகத்தின் சில முக்கிய அரசியல் தலைவர்களிடம் கேட்டோம். ‘`உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது’’ என்ற கண்டிஷனுடன், அதேவேளை, அரசியல் மட்டுமல்லாது இலக்கியம், ஆன்மிகம் இப்படி எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பகிர்ந்துகொள்ளலாம். அதேபோல, நீங்கள் பேசியதிலேயே, உங்களுக்கு மனநிறைவைத் தந்த உரையையும் சொல்லுங்கள் எனக் கேட்க, வெகு உற்சாகமாக அவர்கள் தந்த பதில்கள் இங்கே...

வைகைச்செல்வன் - அ.தி.மு.க

‘`தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்தான் எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர். அவருடைய பேச்சு, ஆழ்ந்த தமிழ் நேசிப்புக்குரிய பேச்சாகவும் கவர்ந்திழுக்கக்கூடிய, சுத்தமான பேச்சாகவும் இருக்கும். ஆன்மிகத் தேடலுடன் எல்லாம் கடந்த நிலையில் இருக்கும் ஒருவர், தமிழ்மொழியின் மீது பற்றுதலோடு பேசும்போது, ஓர் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடும்.

அவர் பேசியதிலேயே நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில், திருக்குறள் செம்மல் மணிமொழியனார் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதைச் சொல்லலாம். ‘அன்பின் வழியது வாழ்க்கை’ என அவர் ஆற்றிய உரை என்னை நெகிழ வைத்தது. இலக்கியத்தில், பேராசியர் கு.ஞானசம்பந்தத்தின் இயல்பான நகைச்சுவைப் பேச்சு மிகவும் பிடிக்கும். அவரின் பேச்சைக் கேட்டு நான் வியந்திருக்கிறேன். அரசியலைப் பொறுத்தவரையில், நாஞ்சில் சம்பத்தின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் மொழிநடை, ஆளுமை, உச்சரிப்பு, நாஞ்சில் நாட்டுத் தமிழ் ஆகியவை என்னை வெகுவாகக் கவர்ந்தவை.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

ஓராண்டுக்கு முன்பாக உலகத் தமிழ்ச் சங்கத்தில், அறிஞர் அண்ணா போப் ஆண்டவரின் முன்பாக ஆற்றிய உரை குறித்துப் பேசினேன். அண்ணாவின் உரையைக் கேட்டு நெகிழ்ந்த போப் ஆண்டவர் ‘உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள்’ என அண்ணாவிடம் கேட்பார். ‘எனக்குத் தனிப்பட்ட முறையில் எதுவும் வேண்டாம். கோவா விடுதலைக்குப் போராடிய மைக்கேல் ரானடேவை விடுதலை செய்யுங்கள்’ என அண்ணா கேட்பார். விடுதலையாகி இந்தியாவுக்கு வந்த ரானடே, அண்ணா எங்கே எனத் தேடியதையும், அவர் இறந்த செய்தியைக் கேட்டுத் தமிழகத்துக்கு வந்து அவரின் கல்லறையில் கண்ணீரைக் காணிக்கையாக்கியதையும் பற்றி நான் பேச, அரங்கமே ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்திருந்தது. அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய தவத்திரு பொன்னம்பல அடிகளார் அந்த உரையின் இடையே மூன்று முறை கண்ணீர் வடித்தார். அந்த உரையை என்னால் மறக்கவே முடியாது.’’

பாலபாரதி - சி.பி.எம்

‘`பேச்சில், கலைஞர்தான் என்னை வெகுவாகக் கவர்ந்தவர். அவருடைய உரையில் இலக்கியம், அரசியல் எல்லாம் கலந்து இருக்கும். அண்ணாவின் பேச்சை நான் கேட்டதில்லை. நாங்கள் வளர்ந்த காலகட்டத்தில், கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள்தான் இருந்தார்கள். அதில், கலைஞரின் உரை எனக்கு இன்ஸ்பிரேஷன்.

பாலபாரதி
பாலபாரதி

அவர் பேசியதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், 2006 தேர்தல் பிரசாரத்தில் அவர் திண்டுக்கல்லில் பேசிய உரையைச் சொல்லலாம். அப்போதுதான் அவரின் உரையை நான் பக்கத்தில் இருந்து முதன்முறையாகக் கேட்டேன். அந்தத் தேர்தலில் நிலம் இல்லாத விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாகத் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். ‘`நிலச் சீர்திருத்தம் குறித்த கருத்துகளை நான் கம்யூனிசக் கொள்கைகளிலிருந்துதான் எடுத்துக்கொண்டேன்’’ என நிலம் குறித்து மிக நீண்ட நேரம் அருமையாகப் பேசினார்.

அடுத்ததாக, நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பரவாயில்லை, எனக்குப் பிடித்த பேச்சாளர் ஜெயலலிதாதான். மரக்காணம் கலவரம் குறித்து, சட்டமன்றத்தில் அவர் பேசியதுபோல் இதுவரை யார் பேசியும் நான் பார்த்ததில்லை. நான் அடிக்கடி இந்த உரையைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதுண்டு. மிகத் துணிச்சலாகப் பேசியிருப்பார்.’’

தங்கம் தென்னரசு - தி.மு.க

‘`திருமுருகக் கிருபானந்த வாரியாரின் உரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் கந்தபுராணச் சொற்பொழிவுக்கும் கதாகாலட்சேபங்களுக்கும் நான் ரசிகன். தி.மு.க-வின் மூத்த தலைவரான துரைமுருகன் அப்படியே கிருபானந்த வாரியாரைப் போல காலட்சேபம் பண்ணுவார். கண்ணை மூடிக் கேட்டால், கிருபானந்த வாரியார் உரை நிகழ்த்துவதைப் போலவே இருக்கும். நான் பலமுறை அப்படிக் கேட்டிருக்கிறேன்.

நான் பேசியதில், இந்த வருடம் ஜனவரியில் மொழிப்போர் தியாகிகள் குறித்து தர்மபுரியில் நடந்த இளைஞரணிப் பாசறைக் கூட்டத்தில் பேசிய உரையும், 2006-ம் ஆண்டு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில், பறவைகள் குறித்து நான் பேசிய உரையும் எனக்கு மிகவும் மனநிறைவைத் தந்தவை.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

பறவைகள் குறித்து நான் பேசியதைக் கேட்ட உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், என்னை வெகுவாகப் பாராட்டினார். அதேபோல, கடந்த வருடம் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை விவாதத்தில் நான் பேசி முடித்தவுடன், என்னுடைய உரை அருமையாக இருந்தது என எங்கள் தலைவர் ஸ்டாலின், தன் கைப்பட ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்தார். அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.’’

நயினார் நாகேந்திரன் - பா.ஜ.க

‘`முன்னாள் சபாநாயகர், மறைந்த காளிமுத்து அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், கொஞ்சம்கூட சலிப்பைத் தராத பேச்சு அவருடையது. அதுமட்டுமல்லாமல், அவருடைய பேச்சில் இலக்கியக் கருத்துகள் செறிவாக இருக்கும். நெடுநல்வாடையிலிருந்து பாரதிதாசன் கவிதைகள் வரை கொஞ்சம்கூடப் பிழையில்லாமல் சொல்லுவார்.

அவர் பேசியதில், 1996-ம் ஆண்டில் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு மிகச்சிறப்பான ஒன்று. அப்போதுதான் அம்மா சிறைக்குச் சென்று வந்திருந்தார். ‘ஒரு பெண்ணுக்கு காலை எழுந்தது முதல் இரவு உறங்கப்போகும் வரை எவ்வளவு வேலைகள் இருக்கும்’ என பாரதிதாசன் கவிதையைச் சொல்லி, ‘வீட்டில் இருக்கும் பெண்ணுக்கே இவ்வளவு பணிகள் இருந்தால், நாட்டை ஆண்ட தாய்க்கு எவ்வளவு பணிகள் இருந்திருக்கும்’ என அவர் பேசிய விதம் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அடுத்ததாக, சுகிசிவத்தின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பெரும்பாலான உரைகளை நான் யூடியூப்பில் கேட்டிருக்கிறேன். தொய்வின்றி, குறையில்லாமல் ஆன்மிகக் கருத்துகளை முன்வைப்பார். மாணவர்களுக்கு நல்லவிதமான அறிவுரைகளைப் பேச்சின் வழியே வழங்குவார்.

நான் பேசியதில், குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரியில் பேசிய உரையைச் சொல்லலாம். குற்றாலத்தின் பெருமைகளைப் பற்றி, திரிகூட ராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியில் சொல்லப்பட்ட கவிதைகளை, பாடல்களைச் சொல்லிப் பேசினேன். மாணவிகள் மிகவும் ரசித்துக் கேட்டார்கள். எனக்கும் மிக மனநிறைவைத் தந்தது அப்பேச்சு.’’

பீட்டர் அல்போன்ஸ் - காங்கிரஸ்

‘`பெரியவர் குன்றக்குடி அடிகளாரின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பட்டிமன்றத்திலும் நிறைவுரையாக அவர் ஆற்றும் ஒரு மணி நேர உரை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும், ழ,ல,ள, ற,ர போன்ற எழுத்துகளை மிகச் சரியாக உச்சரித்துப் பேசுவார். அரசியலில் கலைஞரின் உரையை மிகவும் ரசிப்பேன். தினத்தந்தி பத்திரிகையின் 75-ம் ஆண்டுவிழாவில் 102 டிகிரி காய்ச்சலுடன் அவர் ஆற்றிய அந்த உரையை, இன்றளவும் என்னால் மறக்கமுடியாது. அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அப்போது கை தட்டினார்கள்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோது, மாணவர் காங்கிரஸ் சார்பாக நானும், மாணவர் தி.மு.க சார்பாக வலம்புரி ஜானும் மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டோம். வலம்புரிஜானுக்கு ஆதரவாக, வைகோ, கணேசமூர்த்தி, துரைமுருகன், முரசொலி செல்வம் ஆகியோரும், எனக்கு ஆதரவாக தண்டாயுதபாணி, குடந்தை ராமலிங்கம் ஆகியோர் பிரசாரம் செய்தனர். அப்போது வேட்பாளரான நாங்கள் இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பேசுவதைப் போல, ஒருவர் மாற்றி ஒருவர் பேசவேண்டும். மாணவர்கள் அந்த உரையைக் கேட்டுத்தான் வாக்களிப்பார்கள். அப்போது நான் ஆற்றிய உரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இன்றளவும் எங்கள் நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் அதைப் பற்றித்தான் பேசுவார்கள். நான் பேசியதில் மறக்க முடியாத அனுபவம் அது.’’

சீமான் - நா.த.க

‘`அரசியலில் அண்ணன்கள் வைகோ, திருமாவளவன் ஆகிய இருவரின் பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு, வைகோவின் பேச்சை, பல கிலோமீட்டர் போய்க் கேட்ட காலங்கள் உண்டு. அதேபோல, திருமா அண்ணனின் பேச்சை பக்கத்தில் இருந்து கேட்டு வளர்ந்தவன் நான்.

சீமான்
சீமான்

இலக்கியத்தில், என் மாமா காளிமுத்தின் பேச்சையும், அப்பா வைரமுத்துவின் பேச்சையும் சொல்லலாம். நான் பார்த்ததிலேயே, தேவையற்ற வார்த்தைகளைத் தன் பேச்சில் பயன்படுத்தாத இரண்டு பேச்சாளர்கள் இவர்கள் இருவரும்தான். அதீத நினைவாற்றலுடன் தாங்கள் படித்ததை, அச்சுக் கோத்ததைப்போல் பேச்சில் கொண்டு வரும் வல்லமை இவர்களுக்கு உண்டு. வாணியம்பாடி கல்லூரி இலக்கியக் கழகத்தில், காளிமுத்து மாமா பேசிய பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்தது. வைரமுத்து அப்பா பேசியதில் தமிழாற்றுப்படையில் அவர் பேசிய அனைத்து உரைகளும் பிடிக்கும். இவர்களோடு, அப்பா நெல்லைக் கண்ணனின் பேச்சையும், வாணியம்பாடி அப்துல்காதர் ஐயாவின் பேச்சுகளையும் நான் வியந்து ரசித்திருக்கிறேன்.

நான் பேசியதில், 2009-ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில், ஈழப் படுகொலையைக் கண்டித்துத் திரைத்துறை சார்பில் நடந்த கூட்டத்தில் பேசியதைச் சொல்லலாம். அந்தப் பத்து நிமிட உரைதான் என்னுடைய இந்தப் பயணத்தின் தொடக்கம். அதற்கு முன்னால் பதினைந்து ஆண்டுகள், மார்க்சிய, பெரியாரிய மேடைகளில் பேசியிருந்தாலும் அந்தப் பேச்சை என்னால் மறக்கவே முடியாது. என் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றிப்போட்டது அந்தப் பேச்சும் அதன் வீச்சும்தான்.’’

திலகபாமா - பா.ம.க

‘`எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து இன்று வரை என்னுடைய இலக்கிய ஆர்வம் குன்றாமல் இருக்கக் காரணம், புலவர் கீரனின் உரையைக் கேட்டு நான் வளர்ந்ததுதான். என்னுடைய படைப்புகளில் தொன்மங்கள் ஊடாடுவதற்குக் காரணமும் அவர்தான். என்னுடைய சொந்த ஊரான பட்டிவீரன்பட்டியில், 18 நாள்கள் மகாபாரத உரை நிகழ்த்துவார். அது வெறும் ஆன்மிகப் பேச்சாக மட்டும் இல்லாமல் தற்கால வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புபடுத்திய மிக நேர்த்தியான பேச்சாக இருக்கும்.

திலகபாமா
திலகபாமா

இலக்கிய உரைகளில் பொன்னீலனின் பேச்சு மிகவும் பிடிக்கும். அவர் சொல்கிற சம்பவங்கள் நம் கண் முன்னே அப்படியே காட்சியாக விரியும். அதேபோல, சோ.தர்மன், அடித்தட்டு மக்களின் உணர்வுகள் அவரின் மொழியில் இருக்கும். அதேபோல, நடு நாட்டு வட்டார மொழியில், மேடைக்கான அரிதாரமில்லாத கண்மணி குணசேகரனின் பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தவை.

ஈழத்தமிழர்களால் பாரீஸில் ‘பெண் இலக்கியத்தில் உடல்மொழி’ என்கிற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினேன். பல நாடுகளிலிருந்து கலந்துகொண்டார்கள். நான் பேசி முடித்த பிறகு அரங்கமே, இறுக்கமாக அமைதியாக இருந்தது. அந்த அமைதி கொடுத்த நிறைவை மிக முக்கியமானதாக நான் நினைக்கிறேன்.’’