பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
"பாதை போட்டவர்களைப் பயணிப்பவர் நினைக்க வைப்பது வரலாறு'' என்பார் மு.வ. வரலாற்றைப் படிக்கும்போது நம்மை நமக்கே உணரவைப்பதில் உன்னத கருவியாய் விளங்குகிறது.
தமிழகத்தில் விடுதலைக்கு வேரூன்றியவர்களில் பாளையக்காரர்கள் மிக முக்கியமானவர்கள். சுகபோகமாக வாழ்வை வாழ வழியிருந்தும் மக்களின் உணர்வுகளை மதித்து ஆங்கிலேயரை எதிர்த்து குரல் கொடுத்து தம் இன்னுயிரையும் அர்ப்பணித்துள்ளனர். அதில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரை நினைத்ததும் நினைவுக்கு வருவது வானம் பொழிகிறது, பூமி விளைகிறது எனும் வசனம். இதை அவர் பேசினாரா என்றால் வழக்காறு உள்ளது. ஆனால், வரலாற்றில் இல்லை என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

கட்டபொம்மன் படம் மட்டுமே பார்த்து வளர்ந்த எனக்கு எம்.பில் வரலாறு படிக்கும்போது பேராசிரியர்களால் சொல்லப்பட்ட இந்தச் செய்தி வியப்பாக இருந்தது. மேலும், விவரம் தெரிந்துகொள்ள டாக்டர் க.வெங்கடேசன் அவர்கள் எழுதிய தற்கால தமிழ்நாட்டு வரலாறு புத்தகத்தைப் படிக்க அதில் விரிவாக இருந்தது.
மேலும், பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்திலும் கப்பத்தொகை நிலுவை 3,310 பகோடா (ரூபாய்) என உள்ளது. ஏற்கெனவே கட்டிக்கொண்டிருந்ததில் நிலுவை என்று அச்செய்தியை உணர முடிகிறது. மேலும், ஜாக்சன் துரையைச் சந்தித்து விளக்கமளிக்க முயன்று அவர் சென்ற பாதையிலேயே 400 மைல்கள் சென்று செப்டம்பர் 19-ல் ராமநாதபுரத்தையும் அடைந்ததையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1957-ல் சக்தி கிருஷ்ணசாமி, `வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற நாடகத்தை எழுதினார். சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து அதைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது இடம் பெற்ற வசனங்களே நாம் இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கும் வசனங்கள்.
எனக்குத் தெரிந்த சின்னச் சின்ன தகவல்களை இங்கே பகிர்கிறேன்...
#பாளையக்காரர்கள்
தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையக்காரர்கள் தோன்றினர். பாளையக்காரர்கள் எனில் பாளையம் அல்லது பெரு நிலப்பரப்புக்கு உரிமையாளர் ஆவர்.

1792-ல் ஏற்பட்ட கர்நாடக ஒப்பந்தப்படி கப்பம் வசூலிக்கும் உரிமை ஆங்கில கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாளையக்காரர்கள் பின்பு கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
#கட்டபொம்மன்
கட்டபொம்மனின் மூதாதையர்கள் வீரமிக்கவர்கள். தெலுங்கில் மூதாதையர் பெயர் கெட்டிபொம்மு என்பது தமிழில் கட்டபொம்மன் ஆனது. கெட்டி பொம்முவுக்கு வாரிசு இல்லாததால் ஜெகவீரபாண்டியன் பாளையக்காரர் ஆனார். அவர் மரணத்துக்குப் பின் தன் 30 வது வயதில் அரியணை ஏறினார்கட்டபொம்மன். இவர் பதவியேற்ற இரு ஆண்டுகளில் வரி செலுத்தும் முறையை கம்பெனி கைப்பற்றியது.
#நேர்மையாய் வரிகட்டியவர்
வீரபாண்டிய கட்டபொம்மன் விதிகளை என்றும் மதிப்பவராக, சட்டத்துக்குக் கட்டுப்பட்டவராக நவாப்புக்கோ, கம்பெனிக்கோ கட்ட வேண்டிய வரியை எவ்வித சுணக்கமுமின்றி கட்டிவந்துள்ளார். இவர் மீது ஆங்கிலேயருக்கும் இணக்கமான உறவே இருந்தது.
உண்மையில் மழை இல்லாததால் விளைச்சல் குறைந்தது. பஞ்சத்தால் மக்கள் அவதிப்பட்டதால் வரி வசூல் செய்து கட்டமுடியவில்லை.

#காலின் ஜாக்சன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற காலின் ஜாக்சன் 1798 மே 31 உடன் கப்பத்தொகை நிலுவை ரூபாய் 3,310 கட்ட வேண்டுமென நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், உயரதிகாரிகள் அதற்குச் சம்மதிக்காததால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க விரும்பி தன்னை ஆகஸ்ட் 18-ம் நாள் ராமநாதபுரத்தில் சந்திக்கச் சொல்லிவிட்டு நெல்லை, குற்றாலம் சுற்றுலாச் சென்றுவிட்டார். அவரை சந்தித்து நிலைமையை விளக்கக் குற்றாலம் சென்றார். ஆனால், அங்கு சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அவர் சென்ற பாதையிலேயே 400 மைல்கள் சென்று செப்டம்பர் 19-ம் தேதி ராமநாதபுரம் ராமலிங்க விலாசை அடைந்தார்.
#அவமதிப்பு
இச்சந்திப்பில் கட்டபொம்மனும் அவரின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளையும் கலெக்டர் முன்பு மூன்று மணி நேரம் நிற்கவைக்கப்பட்டனர். பஞ்சத்தால் கப்பம் கட்ட முடியாததை ஜாக்சன் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது, அரண்மனையை விட்டுச் செல்லக் கூடாது எனக் கைது செய்ய ஆணையிட்டதால் தப்ப முயன்றபோது ஏற்பட்ட கைகலப்பில் கிளார்க் கொல்லப்பட்டார். அவரின் அமைச்சர் கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தன் தம்பி ஊமைத்துரையின் மூலம் தப்பிவிட்டார்.

#விசாரணை கமிஷன்
பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தவுடன் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கம்பெனிக்கு விரிவாக ஆளுநர் எட்வர்ட் கிளைவ்க்கு கடிதம் எழுதினார். இதைப் பரிசீலித்த ஆளுநர் நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டும், சிவசுப்பிரமணியனை விடுவித்தார். மேலும், வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், காசர்மேயர் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைத்தார்.
அதில் முக்கியமாகக் கட்டபொம்மன் நிரபராதி எனவும் 23 நாள்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும், கலவரத்தில் உயிரிழந்த கிளார்க்கின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கவும் கூறியது. ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

#சாது மிரண்டால்
தான் பட்ட அவமானத்தை நினைத்து ஒரு முடிவுக்கு வந்த கட்டபொம்மன் ஆங்கிலேய அதிகாரியை நம்பக்கூடாது என எண்ணி மருதுபாண்டியருடன் இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்து இறுதி மூச்சுக்காற்று உள்ளவரை போரிட்டு 1799-ல் அக் 16-ல் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு மாண்ட கட்டபொம்மன் என்றென்றும் நினைவுகூரக்கூடியவர்.
- மணிகண்ட பிரபு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.