Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 26: காலமாற்றத்தில் கலைகள், கலைஞர்கள்!

தூங்காநகர நினைவுகள்: கலைகள், கலைஞர்கள்!

மதுரையில் திரையரங்குகளின் வருகை நாடகங்களுக்கும் பெரும் வசதியான அரங்குகளாக மாறி வாய்ப்பளித்தன. மேலமாசி வீதியில் இருந்த ஒரு கொட்டகையிலும் ஏராளமான நாடகங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 26: காலமாற்றத்தில் கலைகள், கலைஞர்கள்!

மதுரையில் திரையரங்குகளின் வருகை நாடகங்களுக்கும் பெரும் வசதியான அரங்குகளாக மாறி வாய்ப்பளித்தன. மேலமாசி வீதியில் இருந்த ஒரு கொட்டகையிலும் ஏராளமான நாடகங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தூங்காநகர நினைவுகள்: கலைகள், கலைஞர்கள்!
மதுரையின் இரவு நேர வாழ்க்கை இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே பாடல் பெற்றது. மதுரையின் அல்லங்காடிகள்தான் இன்று உலகம் முழுவதும் இருக்கும் இரவு நேர வாழ்க்கைக்கு முன்னோடி என்றால் மிகையில்லை. மதுரையில் இரவு நேர வாழ்க்கை என்பதைவிட மாலைநேரத்திலேயே வாழ்க்கையில் ஒரு குதூகலம் தொற்றிக்கொள்ளும். வேனல் காலம் முழுவதுமே இரவின் வெக்கையைப் போக்க ஏதேனும் வேடிக்கைகள் அவசியம்தானே?

பகலெல்லாம் உழைத்துக் களைத்து வருபவர்களுக்கு மாலையில் ஏதேனும் ஒரு கொண்டாட்டம், திருவிழா, கூத்து, நாடகம், பொதுக்கூட்டம் காத்திருக்கும். மதுரையில் குறுக்கு நெடுக்காக நீங்கள் ஒரு நடை நடந்தால் அங்கே குழாய் ஸ்பீக்கரில் ஒரு அறிவிப்போ, பாடலோ ஒலித்துக்கொண்டிருக்கும், நெருங்கினால் அங்கே உங்களின் அன்றைய மாலைப்பொழுதை ஒப்புக் கொடுப்பதற்கான ஒரு கூடுகை நிகழ்வு காத்திருக்கும்.

தெய்வத்திற்குக் காணிக்கை - கிடாவெட்டு
தெய்வத்திற்குக் காணிக்கை - கிடாவெட்டு

மதுரைக்கு சுற்றுவட்டாரங்களிலிருந்து குடிபெயர்ந்து வந்த மக்கள் அனைவருமே தங்களின் தட்டுமுட்டு சாமான்களுடன் தங்களின் தெய்வங்களையும் சுமந்து வந்தார்கள். மதுரையின் திசையெங்கிலும் கிராம தெய்வங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இந்த ஒவ்வொரு தெய்வத்திற்கும் வருடம் ஒரு முறை கோவில் கொடை எடுப்பார்கள். அவர்களின் உறவினர்கள் அனைவரையும் அழைத்து மகிழ்வார்கள். பொங்கல் வைத்தல், ஆடு-கோழி பலியிடுதல் என அவர்களின் வாழ்வில் பெரும் கோலாகலமான நாளாக இது இருக்கும். ஒவ்வொரு திருவிழாவிலும் நிச்சயமாக அந்தத் திருவிழாவின் வரவு செலவைப் பொறுத்து அங்கே அன்று ஒரு கேளிக்கை நடைபெறும்.

பறையிசைக் கலைஞர்கள்
பறையிசைக் கலைஞர்கள்

ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மி, வில்லுப்பாட்டு, மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பறையாட்டம் என அவர்களின் விருப்பம் போல் நிகழ்த்துகலைகள் இடம்பெறும். இந்த ஒரு நாளிற்குப் பின் மக்களும் உழைக்கச் சென்றுவிடுவார்கள், அவர்களின் தெய்வமும் மதுரை வெயிலைப் பருகத்தொடங்கும். மனிதனும் தெய்வமும் ஒரே வாழ்வியலைக் கொண்டிருக்கும் நிலமிது.

அன்றைய திருவிழாக்களில் மேடை போட்டு நாடகங்கள் நடத்தப்பட்டன. திருப்பரங்குன்றம், வண்டியூர், பாண்டிகோவிலில் நாடகங்கள் வழமையாக நடைபெறும். மக்கள் பெரிய எண்ணிக்கையில் மாட்டு வண்டி கட்டிக்கொண்டும், ஜட்கா வண்டிகளில் சென்றும் நாடகங்கள் பார்த்திருக்கிறார்கள். ஶ்ரீ வள்ளிநாடகம், விகட வைத்தியன், லலிதாங்கி, நந்தனார் நாடகம், மீராபாய், கிருஷ்ணலீலா, பவளக்கொடி, ஞானசௌந்தரி, மனோகரா, குலேபகாவலி, இரணியன், பாமா விஜயம், கதரின் வெற்றி, தசாவதாரம், சகுந்தலா சரிதம், நல்லதங்காள், வீர பாண்டிய கட்டபொம்மன், லவகுசா, மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நளதமயந்தி, இராம இராவண யுத்தம், சித்திராங்கி விலாசம், சிவலீலா நாடகம், சந்திராவளி, பட்டினத்தார், சிவாஜி, பக்த நந்தனார், கோவலன், மந்திரகுமாரி என ஏராளமான நாடகங்களை மதுரை மக்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.

சங்கரதாஸ் சுவாமிகள்
சங்கரதாஸ் சுவாமிகள்
எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்
எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்

மதுரையில் தத்துவ மீனலோசனி நாடக சபையைத் தொடங்கி அதன் ஆசிரியராக சங்கரதாஸ் சுவாமிகள் இருந்தார். மதுரையில் நடிகர்களுக்கு உடுப்பு பற்றிய ஞானம், நடுங்காத தேகம், ஞாபக சக்தி, குரல் வலிமை ஆகிய நடிப்பு சார்ந்த துறைகளில் மதுரகவி பாஸ்கரதாஸ் பயிற்சியளித்திருக்கிறார். எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ், கே.பி.ஜானகி (எ) ஜானகியம்மாள் ஆகியோர் மதுரையில் நாடகங்களை மக்களிடம் கொண்டு சென்றதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள். அமெரிக்கன் கல்லூரி, செளராஸ்டிரா ஹை ஸ்கூல், மதுரைக் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்களின் நாடகங்களும் பொதுமக்களால் கண்டுகளிக்கப்பட்டன.

மதுரகவி பாஸ்கரதாஸ்
மதுரகவி பாஸ்கரதாஸ்
கே.பி.ஜானகியம்மாள்
கே.பி.ஜானகியம்மாள்
நடிகர்களுக்குப் பலவகையான ஜடை அலங்காரங்கள் அன்றைய காலகட்டத்தில் தேவைப்பட்டன. பிரிமனைக் கொண்டை, புஷ்ப வலைக்கொண்டை, இரட்டை புஷ்ப பிச்சோடாக் கொண்டை, சுருள்பின்னல் கொண்டை, கோடாலிப் புஷ்பக் கொண்டை, இரட்டை சாதாபிச்சோடாக் கொண்டை, சுருள் தாழம்பூக் கொண்டை என நாடகத்தில் அலங்காரங்கள் முக்கியப் பங்குவகித்தன. நாடகங்களுக்கான அமைப்புகள், மேடையலங்காரங்களைச் செய்வதில் கிளாஸ்காரத்தெரு டோப்பா ராமசாமி புகழ்பெற்றுத் திகழ்ந்திருக்கிறார்.

நாட்டுப்புற இசை, திருமுறை இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, காவடிச்சிந்து, மேற்கத்திய இசை எனப் பல வகைமைகள் நாடகங்களுக்கு ஏற்ப இயற்றப்பட்டன. நாடகங்களுக்கான இசைக்கருவிகளான ஊதுகொம்புகள், தபேலா, தாகிரா, ஹார்மோனியப்பெட்டி எனக் கருவிகள் சிம்மக்கல் பகுதியில் விற்பனை செய்யப்பட்டன. இன்றும் நீங்கள் சிம்மக்கலில் உள்ள மதுரை மாவட்ட மைய நூலகத்தின் அருகிலுள்ள சந்துகளில் இசைக் கருவிகளை பலர் சரி செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.

மதுரை நாடகம்
மதுரை நாடகம்

இராஜலஷ்மி, கமலவேணி, பைரவ சுந்தரம், டி.ஆர்.செல்லையா, தேவுடு ஐயர், ஏ. கார்மேகாச்சாரியார், கல்லிடைக்குறிச்சி முகைதீன் பாட்சா, கே.ஆர்.சாரதா, டி.ஆர். முத்துலஷ்மி , வேலம்மாள், லோகநாயகி , தாமோதரன், சண்முகம், டி.பி. தனலஷ்மி, எம்.கே. கமலம், டி.எஸ்.கமலம், நவாப்ராஜ மாணிக்கம், டி.கே.சண்முகம் சகோதரர்கள் ஆகியோர் மதுரையின் பிரபல நாடக நடிகர்கள், இவர்கள் மதுரையில் பெரும் நாயகர்களாக வலம் வந்திருக்கிறார்கள். மதுரை அருகே இருக்கும் வளையங்குளம் கிராமத்தில் இப்பொழுதும் திருவிழாவில் 100 நாள்களுக்கு 100 நாடகங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

மதுரையில் வரலாற்று நாடகங்கள்
மதுரையில் வரலாற்று நாடகங்கள்
கலைக்கு ஒரு அழுத்தமான நோக்கம் இருந்தது. அன்றைய பல நாடகங்கள், பாடல்கள் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. இதிகாசம், வரலாறு என நாடகங்கள் எந்தத் தலைப்பில் இருந்தாலும் அதன் ஊடே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும், சுதந்திர வேட்கையை உருவாக்கும் வசனங்கள், பாடல்கள் இடம் பெறும். மதுரையில் நிகழ்த்தப்பட்ட பல நாடக அரங்குகளுக்கு வெளியே காவல்துறை முகாமிட்டிருக்கும். நடிகர்கள் நாடகம் முடிந்த பின்னும், சில நேரம் நாடகம் நிகழ்த்தும் போதும்கூட கைது செய்யப்பட்ட வரலாறுகளும் அதற்கு எதிராக நாடகம் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் போராடியதும் நம் வரலாற்றின் ஒரு பகுதியே.

மதுரையில் திரையரங்குகளின் வருகை நாடகங்களுக்கும் பெரும் வசதியான அரங்குகளாக மாறி வாய்ப்பளித்தன. மேலமாசி வீதியில் இருந்த ஒரு கொட்டகையிலும் ஏராளமான நாடகங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரி, மதுரை சோமு, காருக்குறிச்சி அருணாசலம், மாயவரம் கோவிந்தராஜ் பிள்ளை, மதுரை மணி ஐயர், வி.வி.சடகோபன், ஜி.என்.பி, ப்ளூட் மகாலிங்கம், எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி எனப் பலரது இசைக் கச்சேரிகள் மதுரையில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இசைக் கச்சேரிகள் நிகழும் இடமாக சேதுபதி பள்ளி திகழ்ந்துள்ளது, இசை வித்துவான்கள் பலரது விருப்பமான தங்கும் இடமாக மங்கம்மா சத்திரம் இருந்துள்ளது.

இம்பீரியல் டாக்கீஸின் விளம்பரம்
இம்பீரியல் டாக்கீஸின் விளம்பரம்
1890-ல் மதுரைக்கு மின்சாரம் அறிமுகமாகும் முன்பே, ஜெனரேட்டர் மூலம் சோத்துக்கடைத் தெருவில் இருந்த இம்பீரியல் தியேட்டரில் மௌனப்படங்கள் ஓடின. இம்பீரியல் தியேட்டரில் படம் பார்க்க ஆங்கிலேயர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் மதுரையின் வசதிபடைத்த சீமான் சீமாட்டிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
சென்ட்ரல் திரையரங்கின் திறப்பு விழா அழைப்பிதழ்
சென்ட்ரல் திரையரங்கின் திறப்பு விழா அழைப்பிதழ்

1902-ல் மதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே மேலவெளி வீதியில் விக்டோரியா எட்வர்டு ஹால் கட்டப்பட்டது. கோதிக், போர்த்துகீசிய, விக்டோரிய கட்டடக்கலைகளின் சங்கமமாக இந்தக் கட்டடம் திகழ்ந்தது. பிரித்தானியர்கள் மாலை நேரத்தில் சந்திக்கும் இடமாக இது விளங்கியது. மாலையில் ஆங்கிலப் படங்கள் இங்கே திரையிடப்பட்டன. நாடகங்கள் மற்றும் அரசு விழாக்கள் நடக்கும் பெருமதிப்பு உடைய விழா அரங்காக அது திகழ்ந்தது. விரைவில் மதுரையில் ஆகமுக்கியக் கூடுகையின் இடமாக மாறியது. அங்கு 30,000 அரிய நூல்களுடனான நூலகம் அமைக்கப்பட்டது. மதுரையில் முக்கியஸ்தர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எனப் பலரும் சந்தித்து விவாதிக்கும் இடமாக அது மாறியது.

விக்டோரியா எட்வர்டு ஹால்
விக்டோரியா எட்வர்டு ஹால்

மதுரைத் தெற்குமாசிவீதியில் 1921-ல் கல் கட்டடமாக சிட்டி சினிமா திறக்கப்பட்டது, இங்கும் ஊமைப்படங்களே முதலில் ஓடின. 1939-ல் சென்ட்ரல் மற்றும் சிந்தாமணி தியேட்டர்கள் கட்டப்பட்டது, 1952 தங்கம் திரையரங்கம் என மதுரையில் நவீனத்தின் பெரும் வீச்சாக மதுரையெங்கும் சினிமா தியேட்டர்கள் முளைத்தன. கொஞ்ச காலத்திலேயே சிடிசினிமா, நியூசினிமா, கோபால கிருஷ்ணா தியேட்டர், சந்திரா டாக்கீஸ், தேவி டாக்கீஸ், கல்பனா தியேட்டர், பரமேஸ்வரி தியேட்டர் எனப் பல திரையரங்குகளில் தமிழ், ஆங்கில மொழிப் படங்கள் திரையிடப்பட்டன. 1944 இ.மா.கோபால கிருஷ்ணா திரையரங்கைத் திறக்க என்.எஸ்.கிருஷ்ணன் மதுரைக்கு வருகை தந்தார். இதில் பல திரையரங்குகள் டூரிங் டாக்கீஸாகத் தொடங்கி பின்னர் வளர்ச்சி பெற்றுத் திரையரங்குகளாக மாறின.

மதுரையில் பல பழைய திரையரங்குகளுக்கான கட்டுமானப் பொருள்களான பெரும் இரும்பு கர்டர்கள் இங்கிலாந்திலிருந்து வந்தன, புரொஜெக்டர்கள் அமெரிக்காவிலிருந்து வந்தன, ஒலியமைப்புக் கருவிகள் ஜெர்மனி என இந்தக் கட்டுமானங்கள் பெரும் பரபரப்புடன் எழும்பின. தேவி தியேட்டர் கட்டியபோது மேற்கூரைத் தகரத்தில் பொருத்தும் வாஷர்கள் கிடைக்காமல், அன்று புழக்கத்தில் இருந்த ஓட்டைக் காலணாக் காசுகளை வாஷர்களாகப் பயன்படுத்தினர். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் தியேட்டருக்கு அபராதம் விதித்து, காலணாக்களைப் பறிமுதல் செய்தார்கள்.

மதுரையின் சிந்தாமணி திரையரங்கம்
மதுரையின் சிந்தாமணி திரையரங்கம்

மதுரையின் பார்வையாளர்கள் போல் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறவர்களை நீங்கள் பார்க்க இயலாது, திரையில் அழுதால் அழுவார்கள், சிரித்தால் சிரிப்பார்கள், சினிமா என்கிற வடிவத்தின் ஆகப்பெரிய வீச்சை நான் மதுரையில் பார்த்திருக்கிறேன். மதுரையில் ஒரு படம் வெற்றி என்றால் அது தமிழகம் முழுவதும் வெற்றிபெரும் என்கிற மதிப்பீடு தமிழ்நாட்டில் நிலவிவந்தது, இன்றும் நிலவிவருகிறது.

மதுரை சென்ட்ரல் திரையரங்கம்
மதுரை சென்ட்ரல் திரையரங்கம்
அரங்கம் நிறைந்த காட்சி என்றால் தங்கம் தியேட்டரில் படம் முடிந்ததும் 2,563 பேர் வெளியே வருவார்கள், சென்ட்ரல் தியேட்டரில் 1762 பேர் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தால் ஒரு திருவிழாப் போல் அருகிலுள்ள தெருக்கள் காட்சியளிக்கும், படம் முடிந்து ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் வரை அருகில் இருக்கும் ஒவ்வொரு டீக்கடையிலும் படம் பற்றிக் குழு குழுவாக நண்பர்கள் நின்று விவாதித்துக்கொண்டிருப்பார்கள்.
தங்கம் திரையரங்கம்
தங்கம் திரையரங்கம்

மதுரைக்கான தனித்த படம் பார்க்கும் கலாச்சாரம் ஒன்று இருந்தது. பிறந்த நாள், பரீட்சையின் இறுதி நாள் என்றால் எல்லாத் திரையரங்குகளுமே ஹவுஸ்ஃபுல்தான். திருமண முகூர்த்தங்கள் உள்ள மாதங்களில் புதுமணத் தம்பதிகளை ஒவ்வொரு திரையரங்கிலும் காணலாம். சௌராஸ்டிராக்களிடம் ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இருந்தது. அவர்கள் எண்ணெய்க்குளியல் முடித்த நாளில் மதியம் உறங்குவதில்லை என்கிற பழக்கத்தைக் கறாராக வைத்திருந்தார்கள், அதனால் சனிக்கிழமைகளில் அவர்கள் முனிச்சாலை, காமராஜர் சாலையில் உள்ள எல்லாத் திரையரங்குகளையும் ஹவுஸ்ஃபுல் செய்துவிடுவார்கள். நல்லெண்ணை மணக்க மணக்க அந்தக் காட்சிகள் நடைபெறும். டிக்கெட் தீர்ந்தால், அதே கவுன்டரில் காத்திருந்து அடுத்த காட்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று படம் பார்த்து மகிழ்ந்த மதுரை மாந்தர்கள் இருந்தனர். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்தத் திரையரங்குகள்தான் ஒரே கேளிக்கையின் வடிகாலாகவும் இருந்தது.

களியக்காவிளையிலிருந்து திருச்சி வரையிலும், மேற்கே மூணாறு முதல் கிழக்கே ராமேஸ்வரம் வரையிலும் பழைய - புதிய படங்களின் பிலிம் சுருள் பெட்டிகள் மதுரையிலிருந்துதான் சென்றது. ஜட்கா வண்டிகள் ரீல் பெட்டிகளைச் சுமந்துகொண்டு பஸ் ஸ்டாண்டு ரயில் நிலையங்களிலிருந்து தானப்பமுதலி தெருவிற்கு வரவும் போகவுமாக இருக்கும். சினிமா போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் பசை வாளியுடன் கிளம்பி நள்ளிரவுகளில் எங்கு நின்றாலும் அவர்களிடம் நலம் விசாரித்து என்ன படம் என்பதை அறிந்துகொள்ள ஒரு கூட்டம் காத்திருக்கும்.

கதைச்சுருக்கத்தை வாசித்துவிட்டு ஆங்கிலப் படங்களைப் பார்த்த மதுரை மக்கள் மார்லன் பிராண்டோ, யூல்பிரின்னர், மர்லின் மன்றோ, எலிசபெத் டெய்லர் என ஆங்கில நடிகர்களுக்கே மன்றம் வைத்திருந்தனர். இதை எழுதும்போது ஆங்கில நடிகர்களின் படங்களை ஒட்டிய சைக்கிள் ரிக்சா ஒன்று என் நினைவில் வந்து செல்கிறது.

சினிமா புரொஜெக்டர்
சினிமா புரொஜெக்டர்

மதுரைத் திருநகரில்தான் தமிழ் சினிமாவின் முக்கிய ஸ்டூடியோக்களில் ஒன்றான சித்ரகலா ஸ்டூடியோ இயங்கியுள்ளது. திருநகரில் இருந்த இந்த ஸ்டூடியோவில்தான் தாய்நாடு, பரமகுரு, அல்லி அர்ச்சுனா போன்ற தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்பட்டன. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் நடிகைகள் இந்தப் பகுதியில் முகாமிட்டிருப்பார்கள்.

சங்க காலம் தொட்டு இலக்கியத்தை வளர்த்த ஊர் என்பதால் எழுத்தாளர்களுக்கும், இலக்கியக் கூட்டங்களுக்கும் என்றும் பஞ்சம் இருந்ததில்லை. பாரதியார், ஜி.நாகராஜன், பா.சிங்காரம் தொடங்கி தமிழ் இலக்கியத்தில் கொண்டாடப்பட்ட ஆளுமைகள் புழங்கிய கல்சந்துகள் மதுரை நகரில் திசையெங்கும் இருக்கின்றன.

டவுன் ஹால் ரோட்டில் இருக்கும் பேனா ரிப்பேர்காரர்களிடம் தங்களின் பேனாக்களுடன் எழுத்தாளர்கள் வருவார்கள், பேனா ரிப்பேர் செய்துவிட்டு மையூட்டியில் மை நிரப்பிக்கொண்டு மேலமாசிவீதி காபி கிளப்பில் காபி அருந்தவோ அல்லது மது விடுதிகளுக்கோ செல்வார்கள். 1942-ல் முத்தமிழ் மாநாடு மதுரைப் புதுமண்டபத்தில் நடைபெற்றுள்ளது. மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டு விழாக்களும் கூட்டங்களும் சந்திரா டாக்கீஸில் வைத்தே நடந்துள்ளன.

இலக்கியக் கூட்டங்கள், சொற்பொழிவுகள் என மதுரையில் தினசரி எங்காவது ஒரு நிகழ்வு இருப்பதை ஒரு வால் போஸ்டர் அறிவித்தபடி இருக்கும், அன்றைய தினங்களில் எல்லா திசைகளிலும் செல்லும் அரசுப் பேருந்துகளில் வால் போஸ்டர் ஒட்டி அனுப்புவார்கள், அதுவே அன்றைய துரித ஊடகமாகத் திகழ்ந்தது. இதைப் பார்த்து மதுரையில் எல்லா திசைகளிலுமிருந்து கலா ரசிகர்கள் மதுரை நகரம் நோக்கி வந்து குவிவார்கள். சுதந்திரப்போராட்டக் காலம் தொட்டே தேசியத் தலைவர்கள் பலர் மதுரைக்கு வந்தவண்ணம் இருப்பார்கள். இவர்களின் உரைகளைக் கேட்க பெரும் திரளாய் மக்கள் கூடுவார்கள்.

மதுரையில் நாட்டுப்புறக் கலைகள்
மதுரையில் நாட்டுப்புறக் கலைகள்
எத்தனை எத்தனை மாற்றங்கள், எத்தனை எத்தனை புதுமைகள் என இந்த உலகத்தின் அனைத்தையும் மதுரை மக்கள் வரலாறு நெடுகிலும் பார்த்து வந்திருக்கிறார்கள். இந்த உலகத்தின் எல்லா நவீனத்தையும் தன்வயப்படுத்தும் நகரமாக மதுரை இருந்துள்ளது, அதனால்தான் 3000 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மக்கள் வசிக்கும் தொல்நகரமாகவும் மிளிர்கிறது.

நன்றி:

சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு

மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்