
தமிழக அரசு சார்பாக இந்த ஆய்வுகள் இருக்கை அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் மாதம் ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.
தமிழ்மொழியின் தொன்மையையும் வளமையையும் உலக அரங்கிற்குத் தெரியப்படுத்துவதில் உலக நாடுகளின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும் தமிழ் இருக்கைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இத்தகைய முன்னெடுப்புகளைத் தன்னார்வம் கொண்ட மக்களின் நிதி மூலமாகவும், அரசின் உதவியைப் பெற்றும் நிகழ்த்திவருகிறார்கள். புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மற்றொரு மாகாணமான டெக்ஸாஸில் இருக்கும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை ஒன்றை நிறுவ இருக்கின்றனர் என்பது உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி.

இதற்காக 2018-ம் ஆண்டு ‘ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை’ என்ற பெயரிலேயே தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், பெருமாள் அண்ணாமலை, டாக்டர் நா.கணேசன், டாக்டர் திரு.அப்பன், சொக்கலிங்கம் நாராயணன், துபில் நரசிம்மன் மற்றும் டாக்டர் திருவேங்கடம் ஆறுமுகம் ஆகியோர் நிறுவியுள்ளனர். இவர்கள் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கையை நிறுவத் தேவையான நிதியை டெக்ஸாஸ் மாகாண மக்களிடமும் உலகத் தமிழர்களிடமும் பெற்றுவருகின்றனர். இந்தத் தமிழ் இருக்கையை அமைக்கத் தேவையான 42 கோடி ரூபாயில் பாதித் தொகையான 21 கோடி ரூபாயை டெக்ஸாஸ் மாகாண அரசே வழங்கு கிறது. மீதமுள்ள 21 கோடி ரூபாயை சர்வதேச அளவில் அனைத்துத் தமிழர்களிடமிருந்தும் நிதியாகத் திரட்ட தற்போது பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றனர். இதற்கான முதற்கட்ட நிதியாக ஒரு கோடி ரூபாயை ஹூஸ்டனிலுள்ள தமிழர்கள் வழங்கியுள்ளனர்.

தமிழக அரசு சார்பாக இந்த ஆய்வுகள் இருக்கை அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த டிசம்பர் மாதம் ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் சொந்த நிதியிலிருந்து ஏழு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இதன் அடுத்தகட்டமாக, வரும் அக்டோபர் 10-ம் தேதி, ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கைக்கு நிதி சேர்க்கும் விதமாக ‘இணையத்தில் இசை விருந்து’ என்ற நிகழ்ச்சியை நடத்தவிருக்கின்றனர். சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பாக நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் உள்ள தமிழ்ச் சங்கங்கள், ஊடகங்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் உதவி செய்ய முன்வந்துள்ளன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில் ‘மக்கள் இசைக் கலைஞர்கள்’ செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியினர் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வை facebook.com/HoustonTamilStudiesChair என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இலவசமாகக் கண்டுகளிக்கலாம். இந்த நிகழ்வின் மூலம் ஹூஸ்டன் தமிழ் இருக்கை தொடர்பான விழிப்புணர்வை உலகத் தமிழர்களுக்குக் கொண்டுசேர்க்கவிருக்கின்றனர். தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பதற்கு நிதியளிக்க விரும்புபவர்கள் houstontamilchair.org என்ற இணையதளத்தில் அளிக்கலாம்.

இதில் கூடுதல் சிறப்பாக, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அதிகாரபூர்வமாக அமைக்கப்படுவதற்கு முன்பாகவே பல்கலைக்கழகத்தின் உதவியுடனும் தன்னார்வலர்களின் உதவியுடனும் தமிழ்மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த பல்வேறு நலத்திட்ட முன்னெடுப்புகளை இவர்கள் செய்து வருகின்றனர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் தலைவர் ரேனு கத்தார், டீன் ஆண்டனியோ டில்லிஸ் ஆகியோருக்கு ஜல்லிக்கட்டு தொடங்கி கீழடி, கல்லணை போன்ற தமிழின் பண்பாட்டுப் பெருமைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஜமைக்காவைச் சேர்ந்த ஆண்டனியோ, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்வையிட்டு வியந்திருக்கிறார். தற்போது மெக்ஸிகோ, ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் பிரபலமாக இருக்கும் ரோடியோ (Rodeo) என்ற கால்நடைகள் பிடிக்கும் போட்டிக்கும் நம் ஜல்லிக்கட்டுக்கும் பண்பாட்டு ரீதியான ஒரு தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகளில் இருக்கின்றனர். அதேபோல் மதுரைப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ‘இருண்ட வீடு’ உள்ளிட்ட படைப்புகளை மேடை நாடகங்களாகவும் அரங்கேற்றியுள்ளனர்.
உலகமெங்கும் தமிழினத்தின் சிறப்பு பரவட்டும்!