லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
ஹெல்த்
Published:Updated:

வாழ்க்கைத்துணை, உங்கள் உடைமை அல்ல!

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்

மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்

கொ.மு 2019-ம் ஆண்டு. காற்றில் குளிர் ஊடுருவிக்கொண்டிருந்த நவம்பர் மாதத்து மாலை. சென்னை, கடற்கரையில் கௌதமும் பிரியங்காவும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) பேசிக்கொண்டிருந்தார்கள். கௌதம், அரசாங்க அதிகாரி. பிரியங்கா, ஐடி கம்பெனியில் புராஜெக்ட் லீடர். ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் நிச்சயமாகி யிருந்தது.

“ஒரு புராஜெக்ட் விஷயமா யுஎஸ் போறோம்” என்றாள் பிரியங்கா.

“போறோம்னா?”

“நான், நித்ரா, ஆகாஷ்” என்றவுடன் கௌதமின் முகம் லேசாக மாற, “எவ்ளோ நாள்...” என்று கேட்க, “ரெண்டு மாசம்” என்றாள் பிரியங்கா.

“எல்லாரும் எங்க தங்கியிருப்பீங்க?”

“மூணு பேரும் ஒரே ஃப்ளாட்ல.”

“ஆம்பளைகூட ஒரே ஃப்ளாட்ல இருப்பீங்களா?”

“ஆமாம்... ஏன்?” என்றவுடன் கௌதம் வேகமாக, “இதையெல்லாம் நீ முன்னாடி சொல்லவே இல்லையே...” என்றான் கொஞ்சம் கோபத்துடன்.

வாழ்க்கைத்துணை, உங்கள் உடைமை அல்ல!

“என்ன சொல்லியிருக்கணும்?”

“இந்த மாதிரி ஆம்பளைங்ககூட வெளிநாடு போய் ஒண்ணா ஒரே ஃப்ளாட்ல தங்குவோம்னு” என்றவுடன், அவன் என்ன நினைக்கிறான் என்பது புரிந்துவிட்டது.

சுள்ளென்று கோபம்வர, “ஒண்ணா தங்கியிருப்போம்னுதான் சொன்னேன். ஒண்ணா படுத்திருப்போம்னு சொல்லலை” என்று சத்தமாகக் கூறிவிட்டு வேகமாக எழுந்து நடந்தாள்.

ஒரு மாதம் கழித்து, “அதுக்குப் பிறகு கௌதம் ரொம்ப மாறிட்டான். ஒரு நாளைக்கு தினம் பத்து கால். இப்ப எங்கே இருக்க... யாருடன் இருக்க... நான் முதல்ல போன் பண்ணப்ப ஏன் அட்டென்ட் பண்ணலை... எத்தனை மணிக்கு ஆபீஸைவிட்டு கிளம்புவ... வீட்டுக்கு எத்தனை மணிக்கு போவே... ராத்திரி ஒரு மணிக்கு வாட்ஸ்அப்லேயும் ஃபேஸ்புக்லேயும் என்ன பண்ணிட்டிருக்க... கேள்விகள், கேள்விகள், கேள்விகள். வேற வழியில்லைனு சகிச்சுக்கிட்டேன்” என்று என்னிடம் சொன்ன பிரியங்காவின் கன்னத்தில் நீர் வழிந்தது. துயரத்தின் வடிகால் என்பதால் அழுகையைத் தடுக்க முயலவில்லை.

சற்று இடைவெளிவிட்டு பிரியங்கா, “ஒருநாள் ஈவ்னிங் பார்த்தப்ப பேசிக்கிட்டே என் போனை எடுத்தான். நான் பாஸ்வேர்டு போட்டு வெச்சிருந்தேன். பாஸ்வேர்டு என்னன்னு கேட்டான். சொன்னேன். ஓப்பன் பண்ணி கால் ஹிஸ்டரி, வாட்ஸ்அப் எல்லாம் பார்த்தான். அப்பவும் நான் ஒண்ணும் சொல்லலை. ‘பொம்பளைங்களைவிட ஆம்பளைங்ககூடதான் நிறைய பேசுவே போல’ன்னான். அதுக்கு மேல பொறுக்க முடியலை. ‘டேய் முட்டாள்... எங்க ஸ்டாஃப், க்ளையன்ட்னு நிறைய பேரு ஆம்பளைதான்டா. அவங்களோட பேசினா, அவங்களோட எல்லாம் படுத்து எந்திரிப்பேனு அர்த்தமில்லைடா’ன்னு சொல்லிட்டு கல்யாணத்தை நிறுத்திட்டேன்” என்று சொல்லி முடித்தபோது, துக்கத்தில் அவளுக்கு தொண்டை அடைத்தது.

வாழ்க்கைத்துணை, உங்கள் உடைமை அல்ல!

`பெண்களுக்குக் கிடைத்த சுதந்திரமே, அவர்களுக்குத் தண்டனையாகவும் மாறிவிட்ட அவலத்தை எப்படி சரிசெய்யப் போகிறோம்’ என்ற சிந்தனையுடன் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

கௌதம் - பிரியங்கா விஷயத்தில் அடிப்படையாக ஒரு பிரச்னை இருக்கிறது. அரசு ஊழியரான கௌதம், பணி விஷயமாக கும்மிடிப்பூண்டியைத் தாண்டி எங்கும் சென்றதில்லை. பிரியங்கா ஐடி ஊழியர். இருவரின் பணி கலாசாரமும் முற்றிலும் வேறு வேறு. கௌதமுக்கு முன்பே இதெல் லாம். தெரிந்திருக்கலாம். ஆனால், அப்போது ஏற்படாத பிரச்னை, நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு ஏன் வந்தது?

ன்னொரு சம்பவம் அப்போது நினைவுக்கு வந்தது.

நான்காண்டுகள் காதலித்து, தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோருடன் போராடி சம்மதம் பெற்று, நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஒரு ஜோடியை நான் அறிவேன். நான்காண்டில் ஏற்படாத பிரச்னை இப்போது ஏன் வந்தது?

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு ஆண்/பெண் மனத்தில் அவர்கள் அறியாமலேயே மிகவும் நுட்பமான மாற்றம் நிகழ் கிறது. ஆணோ, பெண்ணோ தங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைத்துணையைத் தங்களுக்கு முற்றிலும் உடைமையான பொருளாக நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதனால், நிச்சயதார்த்தம் ஆனவுடன், வாழ்க்கைத்துணையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை சட்டென்று கையில் எடுக்கிறார்கள். முன்பேகூட அவர்கள் மனத்தில் இந்த மாதிரியான எண்ணங்கள் இருந்திருக்கலாம். வெளிப்படையாகப் பேசினால் பிரச்னையாகும் என்பதால் மௌனமாக இருந்திருக்கலாம்.

வாழ்க்கைத்துணை, உங்கள் உடைமை அல்ல!

தீர்வைத் தேடி...

நிச்சயதார்த்தத்துக்கு முன்பே சில எண்ணங்கள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், உள்ளுக்குள்ளேயே மறைத்துக்கொண்டு, நிச்சயத்துக்குப் பிறகு அந்தப் பெண்/ஆணை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கக் கூடாது. அந்தக் காலமெல்லாம் மலை ஏறிவிட்டது. எனவே, நிச்சயதார்த்தத்துக்கு முன்பே பேசிவிடுங்கள். சரிபட்டுவந்தால் பாருங்கள். இல்லையெனில், விலகிக்கொள்ளுங்கள். நிச்சய தார்த்தத்துக்குப் பிறகு திருமணத்தை நிறுத்துவது, சம்பந்தப்பட்ட மணமக்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களின் வாழ்க்கையில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு ஏற்படும் இன்னொரு பிரச்னை, ஓவர் எக்ஸ்போஷர். இப்போதெல்லாம் நிச்சயமானவுடன் மணமக்கள் சுதந்திரமாக வெளியில் சுற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, அவர்கள் நெடுநேரம் ஒன்றாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அந்த தோள் உரசலும், காதோர கிசுகிசுப்பும், மெல்லிய அணைப்பும் கொஞ்சம் கிளுகிளுப்பாகத்தான் இருக்கும். அதையும் தாண்டி அவர்கள் அதிகமாகப் பேச, பேச... பிரச்னைகள் ஆரம்பம்.

ளைஞன் ஒருவன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணோடு ஹோட்டலில் அருமையான சாப்பாடு சாப்பிட்டு முடித்த கையோடு, “நீ இந்த மாதிரி சமைச்சுப் போட்டீன்னா எங்கம்மா உன்னை தலையிலே தூக்கிவெச்சிட்டு ஆடுவாங்க” என்று வார்த்தையை விட்டிருக்கிறான். அதன்பிறகு உரை யாடல் பின்வருமாறு தொடர்ந்தது...

‘‘அப்ப... உங்கம்மாவுக்குச் சமைச்சுப்போடத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீயா?’’ என்று நீண்ட உரையாடல்...

``ஏண்டா டீ போடுற?’’

(அதிபயங்கர கோபத்துடன்) ``ஏண்டீ டா போடுற?’’ என்று வந்து நின்றது.

ஓர் எளிய பொதுவான உதாரண மாகத்தான் இதைச் சொல்கிறேன். இதுபோன்று பல விஷயங்கள் குறித்தும் பேசப் பேச... கருத்து வேறுபாடுகள் அதிகரித்து, பேசப் படும் விஷயங்கள் மிகவும் சென்ஸிட்டிவ்வாக அமைந்து விட்டால், அது திருமணத்தை நிறுத்தும் அளவுக்குச் சென்று விடுகிறது.

எவ்வாறு தவிர்க்கலாம்?

இப்படி யோசித்துப் பாருங்கள். ஒருவேளை நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு நீங்கள் பேசிப் பழகாமலேயிருந்து, திருமணத்துக்குப் பிறகு இந்த மாதிரி பிரச்னைகள் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக உடனே விவாகரத்து செய்துவிடுவீர்களா... நிச்சயமாக மாட்டீர்கள். எனவே, வெறும் வாக்குவாதங்கள் மூலமாக ஏற்படும் சண்டைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

அடுத்து, அதிகம் பழகுவதால் அவர் களின் உண்மை முகங்கள் வெளியே தெரிந்துவிட்டால் திருமணத்தை நிறுத்தும் அளவுக்கு அது முக்கியமான விஷயமா என்று யோசியுங்கள்.

இன்னும் உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால், இதே பிரச்னை திருமணத்துக்குப் பிறகு வந்தால், நீங்கள் அவர்களைக் கண்டிப்பாக விவாகரத்து செய்வீர்கள் என்றால், இப்போது நீங்கள் திருமணத்தை நிறுத்தலாம். இல்லையென்றால் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதீர்கள்.

அடுத்த முக்கியமான பிரச்னை காதல். நம்மவர்கள் பலர் பெற்றோரின் வற்புறுத்தலால் தங்கள் காதலைக் கைவிட்டுவிட்டு, வீட்டில் பார்த்த வரனை ஓகே செய்து நிச்சயம் செய்துவிடுவார்கள். அதற்குப் பிறகுதான் அவர்களுடைய காதல் பீறிட்டுக்கொண்டு அடிக்கும். உடனே அவர்கள் மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டை அணுகி விஷயத்தைச் சொல்ல திருமணம் நிறுத்தப்படும் அல்லது திருமணத்துக்கு முன்பு தங்கள் காதலரோடு ஓடிவிடுவார்கள்.

வாழ்க்கைத்துணை, உங்கள் உடைமை அல்ல!

இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்றால், வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமான பிறகு, இனி என்றென்றைக்கும் தங்கள் காதலரை அடையவே முடியாது என்ற நிலை வந்தவுடன்தான் உண்மையில் அவர்கள் தங்கள் காதலின் வீரியத்தையும், இழப்பின் பரிபூர்ணமான துயரத்தையும் உணர்கிறார்கள். அதனால்தான் திருமணம் நிறுத்தப்படும் சூழ்நிலை வருகிறது.

ஓர் அன்பு வேண்டுகோள்...

உங்கள் காதலில் உறுதியாக இருந்தால், எந்த முடிவாக இருந்தாலும் நிச்சயதார்த்தத்துக்கு முன்பே எடுத்துவிடுங்கள். நிச்சயமான பிறகும் திருமணத்தை நிறுத்தலாம். அதற்குச் சரியான காரணங்கள் வேண்டும்.

வசிஷ்ட ராமாயணத்தில், ‘அவர்கள் ஒழுக்கமில்லாதவர்கள், பெரிய நோய் உள்ளவர்கள், அவர்கள் குடும்பத்தில் ஒழுக்கக் கேடானவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தால் திருமணத்தை நிறுத்தலாம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இதை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்திக் கொண்டபிறகே நிறுத்த வேண்டும். இதற்காக, தனியார் துப்பறியும் நிறுவனங்களைக்கூட அணுகலாம்.

ஆக, தீர விசாரித்து, விவாதித்து முடிவெடுத்த பிறகே நிச்சயதார்த்தத்துக்கு சம்மதம் சொல்லுங்கள்.

(தொடரும்)