Published:Updated:

How to: மின் அதிர்ச்சிக்கு முதலுதவி செய்வது எப்படி?| How to give first aid for Electric shock?

Representational Image ( Photo: Pixabay )

திடீரென வீட்டிலோ, வெளியிலோ குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாரேனும் மின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி என்ன என்பது பற்றி கூறுகிறார், அவசர மருத்துவ நிபுணர்.

Published:Updated:

How to: மின் அதிர்ச்சிக்கு முதலுதவி செய்வது எப்படி?| How to give first aid for Electric shock?

திடீரென வீட்டிலோ, வெளியிலோ குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாரேனும் மின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி என்ன என்பது பற்றி கூறுகிறார், அவசர மருத்துவ நிபுணர்.

Representational Image ( Photo: Pixabay )

மின்சாரம் இன்று உணவு, உடை, இருப்பிடம் போல மனிதனின் அத்தியாவசியங்களில் ஒன்றாகியுள்ளது. ஆனால் எதிர்பாராத வகையில் நடக்கும் மின்சார விபத்துகளால் சிறிய காயங்களில் இருந்து மரணம்வரை ஏற்படுகின்றன. எனவே, நெருப்பின் ஆபத்தை மனிதன் எதிர்கொள்ளப் பழகியதுபோல, மின்சாரத்தின் ஆபத்தையும் எதிர்கொள்ளப் பயில வேண்டும். திடீரென வீட்டிலோ, வெளியிலோ குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாரேனும் மின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி என்ன என்பது பற்றி கூறுகிறார், திருச்சியைச் சேர்ந்த அவசர மருத்துவ நிபுணர் டாக்டர் முகமது ஹக்கீம்.

அவசர மருத்துவ நிபுணர் டாக்டர் முகமது ஹக்கீம்
அவசர மருத்துவ நிபுணர் டாக்டர் முகமது ஹக்கீம்

``எதிர்பாராத விதத்தில் யாருக்கேனும் உடலில் மின்சாரம் தாக்கினால் அருகில் இருப்பவர்கள், உடனடியாக அவர் தாக்கப்பட்ட இடத்திலிருந்து உடனே மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவருக்கும் மின்சார இணைப்பிற்கும் தொடர்பு இல்லாததை உறுதிசெய்த பின்னரே, அருகில் சென்று அவருக்கு உதவ வேண்டும். உதவிக்கு இன்னும் சிலரையோ, அவசர முதலுதவி எண்ணையோ அழைக்க வேண்டும்.

பின்னர், மின்சாரத்தால் தாக்கப்பட்டவர் சுய நினைவுடன் இருக்கின்றாரா, இல்லையா எனப் பார்க்க வேண்டும். சுய நினைவுடன் இருந்தால் அவருக்கு ஏதேனும் காயமோ, கீழே விழுந்ததனால் ஏதேனும் எலும்பு முறிவோ ஏற்பட்டுள்ளதா என ஆராய வேண்டும். மின்சார விபத்தில் நெருப்புக் காயங்கள் போலவே, எலும்பு முறிவும் அதிகமாக ஏற்படும் என்பதனை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.

CPR (Representational Image)
CPR (Representational Image)
Photo by RODNAE Productions from Pexels

* சுயநினைவு இல்லை எனில் சுவாசத்திற்கு ஏதேனும் தடங்கல் உள்ளதா என ஆராய வேண்டும். வாயில் ஏதேனும் உமிழ் நீரோ, அல்லது நாக்கு சுவாசத்திற்கு தடையாகவோ இருந்தால் அந்த நபரின் உடலை ஒரு பக்கமாகச் சாய்க்க வேண்டும். ஒருவேளை மூச்சற்ற நிலையில் அவர் இருக்கும் பட்சத்தில் CPR எனப்படும் இதய இயக்க மீட்பு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சையை அதில் தேர்ந்த நபர்களான அவசர மருத்துவர், துணை மருத்துவர், செவிலியர், தீயணைப்பு வீரர் போன்றவர்கள் அளிக்கலாம். இல்லையெனில் சுய நினைவு இழந்தவர்களை அதிவிரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும்.

* மின்சாரம் இதயத்தில் உள்ள மின்னணு ஓட்டத்தை சீர்குலைப்பதனால், மின் அதிர்ச்சிக்குப் பின் சுய நினைவுடன் நன்றாக இருக்கும் நபருக்கும் `அரித்மியா (Arrhythmia)' எனப்படும் சீரற்ற இருதய துடிப்போ, மாரடைப்போ ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சுய நினைவுடன் இருந்தாலும் மருத்துவமனைக்குச் சென்று இ.சி.ஜி, ரத்த ஆய்வு போன்ற அடிப்படை பரிசோதனைகளை மேற்கொண்டு சிறிது நேரம் மருத்துவக் கண்காணிப்பிற்குப் பின்னரே வீடு திரும்ப வேண்டும்.

* மின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தாக்கிய மின்சாரத்தின் அளவிற்கேற்ப பாதிப்பு ஏற்பட்டிருக்கும். வலிப்பு, மறதி, காய்ச்சல், சிறுநீரகப் பிரச்னை, எலும்பு முறிவு, தசை பாதிப்பு, கண்ணில் புரை விழுதல் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். மருத்துவ உதவி எவ்வளவு சீக்கிரமாக அவருக்கு கிடைக்கிறதோ அந்தளவுக்கு அவருக்கு பாதிப்புகள் குறைவாக ஏற்படும்.

* குழந்தைகள், முதியவர்கள் உள்ள வீடுகளில் மின்சார உபகரணங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும். மின்சாரம் அதிகம் பாயும் ஆலைகளில் பணிபுரியும் நபர்களுக்கு தகுந்த பாதுகாப்பு முறைகளும், முதலுதவி பயிற்சிகளும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.''