Published:Updated:

மதுர மக்கள்: "கலைக்குப் பணம் தடையா இருக்கக்கூடாது. அதனால..." நாட்டுப்புறக் கலைஞர் தங்கப்பாண்டியன்

மதுர மக்கள் | தங்கப்பாண்டியன் - நாட்டுப்புறக் கலைஞர்

"இந்தக் கலைகள்ல ஈடுபடுறதால பசங்க தீய வழியில போறது தடுத்துடுவேன். பீடி, சிகரெட், தண்ணி இந்தப் பழக்கம் இருந்தா கத்துக்க வராதே. நீ என்னதான் கத்துக்கிட்டாலும் உன் உடம்பு ஒத்துழைக்காதுன்னு திருப்பி அனுப்பிருவேன்!" - தங்கப்பாண்டியன்

Published:Updated:

மதுர மக்கள்: "கலைக்குப் பணம் தடையா இருக்கக்கூடாது. அதனால..." நாட்டுப்புறக் கலைஞர் தங்கப்பாண்டியன்

"இந்தக் கலைகள்ல ஈடுபடுறதால பசங்க தீய வழியில போறது தடுத்துடுவேன். பீடி, சிகரெட், தண்ணி இந்தப் பழக்கம் இருந்தா கத்துக்க வராதே. நீ என்னதான் கத்துக்கிட்டாலும் உன் உடம்பு ஒத்துழைக்காதுன்னு திருப்பி அனுப்பிருவேன்!" - தங்கப்பாண்டியன்

மதுர மக்கள் | தங்கப்பாண்டியன் - நாட்டுப்புறக் கலைஞர்

”எங்க குடும்பம் நாலு தலைமுறையா எல்லா விதமான நாட்டுப்புறக்கலைகளும் கத்து வச்சுருந்தாங்க. ஆனா, என்னோட தலைமுறைக்கு வந்தப்போ வெறும் சிலம்பம் மட்டும்தான் என்கிட்ட விட்டுப்போனாங்க. ஆனா எனக்கு அடுத்து அது கூட இல்லாம போயிருமோங்கிற பயம். இது எல்லாருக்கும் போயி சேர்க்கணும்ங்கிற கனவுதான் வெறும் பதினோரு ரூபாய் காணிக்கையில சிலம்பம், கபடி, மயிலாட்டம், ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம், வர்ம பிடிகள், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பு, மாடு பிடிக்கிறதுன்னு எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிக்குடுத்துட்டு இருக்கேன்" - நிறைய கனவுகளோடும் திட்டங்களோடும் பேசத் தொடங்குகிறார் தங்கப்பாண்டியன், நாட்டுப்புறக்கலைஞர்.

தங்கப்பாண்டியன் - நாட்டுப்புறக் கலைஞர்
தங்கப்பாண்டியன் - நாட்டுப்புறக் கலைஞர்

"எனக்கு பூர்வீகம்னு சொன்னா இதே மதுரை ஆனையூர் பகுதிதான். சின்ன வயசுலயே வீட்டு உண்டியல்ல இருந்து காச தூக்கிட்டு ஜல்லிக்கட்டு பார்க்கப்போயிருவேன். பள்ளிக்கூட லீவு நாள்ல ஆடு, மாடு மேய்க்கப்போயிட்டு சம்பளத்துக்குப் பதிலா கோழிக்குஞ்சு குடுங்கன்னு வாங்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சிருவேன். எட்டாவது படிக்கும்போது, எங்களுக்குன்னு ஒரு வீடு இல்லை. ஒரு மண் சுவர்ல வீடுகட்டலாம்னு இருந்தோம். பள்ளிக்கூடம் எனக்கு இடைஞ்சலா இருந்துச்சு. வீடு வேணுமா படிப்பு வேணுமான்னு கேட்டப்போ எனக்கு படிப்புதான் வேணும்னு வந்துட்டேன்.

எங்க அப்பா கபடி பிளேயர், ஜல்லிக்கட்டு மாடு பிடிக்கிறவர். மாடுகளும் வளர்க்குறவரு. அதனாலயே எனக்கும் கபடி மேல தீராத காதல் இருந்துச்ச. ஊருக்குள்ள கபடி மேட்ச் எல்லாம் எங்க நடந்தாலும் கிளம்பி போயிருவேன். அப்போதான் என் கூட படிச்ச பசங்க கபடில ஜெயிச்சு கோப்பையோட வந்தப்போ, ஸ்கூல் மேட்ச்ல ஜெயிச்சோம்னு சொன்னானுங்க. கபடிக்காகவே மூணுவருஷம் கேப் விட்டு திரும்பவும் அரும்பு மீசையோட எட்டாவதுல இருந்து படிக்க ஆரம்பிச்சேன்.

என்னோட பள்ளிப்படிப்பு எல்லாம் மதுரை எம்.சி ஸ்கூல்தான். திரும்ப பள்ளிக்கூடத்துல சேர்ந்ததும் கபடி டீம்ல சேர்ந்தேன். டிவிஷன் போக முடியாத அளவுல இருந்த ஸ்கூலை மாநில அளவுல போற அளவுக்கு கொண்டு போனேன். தங்கப்பாண்டி இருந்தான்னா கப்பு நமக்குதான்னு ஆசிரியர்கள் எல்லாரும் கூட அப்போ சொல்லுவாங்க. கூடவே ஒயிலாட்டம் சிலம்பாட்டம்னு அங்க இருந்த மோகன் சார், சிவா சார் கூட சேர்ந்து பழக ஆரம்பிச்சேன். அதுக்கும் சேர்த்து கப் அடிக்க ஆரம்பிச்சோம். அதுக்கு அப்பறம் இசைக்கல்லூரில சேர்ந்து படிச்சுட்டு இருக்கும்போதே கலைநிகழ்ச்சிக்காக நிறைய வாய்ப்புக்கள் வந்தன. அப்படித்தான் கரகம் வச்சுக்கிட்டே கட்டைக்கால் கட்டிக்கிட்டு ஆட ஆரம்பிச்சேன். அதுக்கும் நல்ல வரவேற்பு இருந்துச்சு.

பள்ளிக்கூடம் படிச்சப்போ கபடி சிலம்பம்னு தமிழ்நாடு முழுதும் சுத்தி வந்தேன். இசைக்கல்லூரில சேர்ந்தப்போ கலை நிகழ்ச்சிக்காக இந்தியா முழுதும் சுத்தி வந்தேன். படிச்சுட்டு இருக்கப்போதான் எனக்கும் தோணுச்சு. இதை எல்லாருக்கும் கொண்டு போயி சேர்க்கணும்னு! அதுக்கு பொருளாதாரம் ஒரு தடையா இருந்துரக்கூடாதுன்னு எல்லாருக்கும் இலவசமாவே சொல்லிக்குடுத்துக்குவோம்னு முடிவு பண்ணுனேன்.

"பசங்க எப்படி ஆர்வமா இருக்காங்க?" என்று கேட்டதற்கு, "இப்போவரைக்கும் என்கிட்ட ஆனையூரை சுத்திலுமே 600 பேரு கத்துக்கிட்டு இருக்காங்க. சேவற்கட்டு, ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பு, சிலம்பம், வர்மக் கலை, ஓயிலாட்டம்னு எல்லா வயசுலயும் ஆளுங்க வந்து கத்துக்கிட்டுதான் இருக்காங்க. வறுமைக்குக் கீழே இருக்க பசங்களுக்கு இதுவே சமயத்துல வாழ்வாதராமவும் இருக்கு. இதுவரைக்கும் 13 நாடுகளுக்கு கலைநிகழ்சிகளுக்காக மாணவர்களை அனுப்பியுருக்கேன். பசங்க யாருகிட்டயும் சொல்லித்தர்றதுக்கு பணம் வாங்குறது இல்ல. இப்படி வெளிநாட்டுல கலைநிகழ்ச்சி மூலமா வர்றா பணத்தை அவுங்க வீட்டுக்கே குடுத்துருவேன். இதனால் தங்கப்பாண்டியன் கிட்ட புள்ளைய விட்டா பாதுகாப்பாதான் இருக்கும்னு பெத்தவங்களும் நம்புறாங்க.

அதுபோக இந்தக் கலைகள்ல ஈடுபடுறதால பசங்க தீய வழியில போறது தடுத்துடுவேன். பீடி, சிகரெட், தண்ணி இந்தப் பழக்கம் இருந்தா கத்துக்க வராதே. நீ என்னதான் கத்துக்கிட்டாலும் உன் உடம்பு ஒத்துழைக்காதுன்னு திருப்பி அனுப்பிருவேன். கலையைக் கத்துக்கணுங்கிறதுக்காகவே பசங்களும் வேற கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் போறது இல்ல. கலைக்கும் மனிதனுக்குமான தூரத்த பணம் இன்னும் அதிகப்படுத்திடக்கூடாதுங்கிற ஒரே காரணம்தான் இதை காசுக்காக பண்ணாம இருக்கது. நாளைக்கு நான் இல்லாம போகலாம், என்கிட்ட கத்துக்கிட்ட போன ஒருத்தன், நான் கத்துக்குடுத்த கலையை இன்னும் நூறு பேருக்கு கத்துக்குடுப்பான். அந்த நம்பிக்கை எனக்கு எப்போவும் இருக்கு." என்று தெளிவாகப் பேசுகிறார் தங்கப்பாண்டியன்.