மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாபெரும் சபைதனில் - 17

மாபெரும் சபைதனில்
பிரீமியம் ஸ்டோரி
News
மாபெரும் சபைதனில்

காலம் கடந்தும் நிறைவேறாத கோரிக்கைகள்...

ருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை எனப் பலதுறைகள் சார்ந்த அதிகாரிகளும்... ஏன் கலெக்டரும்கூட பதற்றத்தோடு ஒரு அரங்கத்துக்குச் செல்கிறார்கள் என்றால், நடக்கப்போவது விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என்று முடிவுசெய்துவிடலாம். காலம் கடந்தும் நிறைவேறாத கோரிக்கைகள்; அதனால் ஏற்பட்ட விரக்தி; கவனத்தை ஈர்க்கப் புதுமையான போராட்ட வடிவங்கள் எனப் பரஸ்பர அவநம்பிக்கைகளோடு வேளாண் சமூகமும், அதிகார வர்க்கமும் அடிக்கடி சந்தித்து விலகும் அரங்கம் அது.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

எனினும் விதிவிலக்குகள் உண்டு. உழவும் தொழிலும் இணைந்து செழிக்கும் ஈரோடு மாவட்டத்தில் நான் பணியாற்றிய காலத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும் நாளை நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன். விவாதத்தின் இடையே அடிக்கடி இடம்பெறும் திருக்குறள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தொழில்நுட்ப ஆலோசனை கூறும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் சங்கத்தின் கௌரவ ஆலோசகர்களாகச் செயல்படும் அதிகாரிகள் என வித்தியாசமான உலகம் அது. சில சமயம் நேர்த்தியான ஆங்கிலத்திலும் விவாதம் நடப்பதுண்டு. ‘Liquid Fertiliser-க்கு Import duty குறைக்க ஏதேனும் வழியுண்டா’ என்று மத்திய, மாநில அரசுகளை நோக்கி மென்மையான கோரிக்கைகள் எழும்பும். அவ்வப்போது உலக வர்த்தக உடன்படிக்கையின் குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து சாதகபாதகங்களும் அலசப்படும்.

வயது முதிர்ந்த விவசாய சங்கத் தலைவர் முதல் இளைஞர்கள் வரை கண்ணியமாக, அதேநேரம் அழுத்தம் திருத்தமாகத் தங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் பதிவுசெய்வது உண்டு. அப்படி எழுப்பப்பட்ட ஒரு கேள்வி இன்றும் அடிக்கடி என் நினைவுக்கு வரும். ‘பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரைகளும் வருடா வருடம் பண வீக்கத்தை ஈடுசெய்ய அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படுகிறதே... இவையெல்லாம் விவசாயிகளுக்குப் பொருந்தாதா’ என்ற கேள்விதான் அது.

ஈரோடு மாவட்டத்தின் வேளாண் வரைபடம் மரபும் தொழில்நுட்பமும் இணைந்து உருவாக்கப்பட்டது. பொதுவாகவே புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும்போது அதை உடனடியாக ஏற்றுக்கொள்வதில் வணிகர்களைவிட விவசாயிகள் பின்தங்கியிருப்பார்கள். ஈரோடு மாவட்ட விவசாயிகள் அதிலும் வித்தியாசமானவர்கள். புதிய பரிசோதனை முயற்சிகளுக்கு என்றும் தயாராக இருப்பார்கள். பதின்மூன்று வருடங்களுக்கு முன், வேளாண்துறை அறிமுகப்படுத்தும் முன்பே தாராபுரம் பகுதியில் ஒரு சிறு விவசாயி தன் சொந்தமுயற்சியில் நெல் விதைக்கும் கருவியை உருவாக்கிப் பரிசோதித்துக்கொண்டிருந்தார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரும்பு அறுவடை இயந்திரத்தை சத்தியமங்கலம் பகுதிகளில் பார்த்து வியந்திருக்கிறேன். வாழையில் Tissue culture unit உருவாக்க வெள்ளித்திருப்பூர், சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் ஆர்வமாக முன்வந்ததும் இப்போதும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.

மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்

புதிய தொழில்நுட்பங்களை ஆர்வத்துடன் பயன்படுத்தும் அவர்கள், மரபை என்றும் கைவிட்டதே இல்லை. அதற்குமுன் மதுரை மாவட்டத்திற்கு நம்மாழ்வாரை அழைத்துவந்து இயற்கை வேளாண்மை, மரபுப் பயிர்கள் பாதுகாப்பு எனக் கூட்டங்கள் நடத்தி, போதிய வரவேற்பு கிடைக்காமல் சோர்ந்துபோயிருந்த எனக்கு, ஈரோட்டு விவசாயிகள் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்குகள், கண்காட்சிகள், விழாக்களில் நம்மாழ்வாருக்குக் கிடைக்கும் வரவேற்புகள் மலைப்பாக இருக்கும். மரபுசார் வேளாண் வழிமுறைகளை அறிவியல்பூர்வமாக விளக்கியபடியே மாசானபு ஃபுகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூலைப் பரிசளித்துச் செல்லும் சிறு, குறு விவசாயிகள் பலரைப் பார்த்திருக்கிறேன்.

மாவட்டத்தின் சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 48 டன்தான். இயற்கை வேளாண் வழிமுறைகளைப் பயன்படுத்தி, கரும்புத் தோகைகளை மக்கவைத்து இயற்கை உரமிட்டு 92 டன் கரும்பை அறுவடை செய்து வியக்க வைத்த விவசாயிகள் அங்கே உண்டு. இந்தியாவெங்குமிருந்து முன்னணி விவசாயிகளை அழைத்துவந்து zero based budgeting கருத்தரங்கு நடத்தியபோது ஆயிரக்கணக்கில் விவசாயிகள் பங்கேற்று ஆச்சர்யப்படவைத்தார்கள்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் மாவட்டத்தின் பல்வேறு உட்புறப் பகுதிகளுக்குப் பயணித்துக் கள ஆய்வு செய்வதுண்டு. அப்படி ஒருமுறை மேற்கொண்ட ஆய்வுப்பயணம் ஒரே நாளில் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தந்தது. ஏர் பிடித்து உழவுசெய்யும் பெண்கள் நிறைந்த பகுதி என்பது முன்னரே தெரிந்திருந்தாலும் அன்றைய பயணம் பல புதிய தரிசனங்களை எனக்குள் ஏற்படுத்தியது.

பவானிசாகர் அருகே ஒரு கிராமம். வேளாண் அதிகாரிகள் ஒரு விவசாயியின் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்கள். விவசாயி ஊரில் இல்லை. வெளியூர் சென்றுவிட்டார். திரும்ப எத்தனித்த எங்களை அந்த விவசாயியின் மனைவி நிறுத்தினார். ‘என் வீட்டுக்காரர் இல்லாட்டி என்ன... நீங்க கேட்கும் விளக்கங்களையும் விவரங்களையும் என்னாலும் தரமுடியும்’ என்றார்.

மாசானபு ஃபுகோகா
மாசானபு ஃபுகோகா

தெளிவாகவும் இயல்பாகவும் பேசத் தொடங்கினார். 12 ஏக்கர் நிலம்... பத்துமாதம் பராமரிக்க வேண்டிய கரும்புப் பயிர் 5 ஏக்கரில்... 120 நாள்களில் பலன் கொடுக்கும் பொன்னி நெல்; 10-12 மாதங்கள் பாதுகாக்க வேண்டிய பூவன், தேன் வாழை ரகங்கள் கொஞ்சம் எனப் பிரித்துப் பிரித்துப் பயிரிட்டிருக்கிறார்கள். அருகிலேயே, பட்டுப்புழு வளர்ப்புக் கூடத்திற்குத் தேவைப்படும் மல்பெரி செடிகள்... பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை எடுக்கவேண்டும். கைச்செலவுக்கு அவ்வப்போது உதவ, கொஞ்சம் மல்லிகையும் சாமந்தியும்... உண்மையிலேயே விக்கித்து நின்றேன்.

நிச்சயமற்ற பருவமழை; ஏறி இறங்கும் சந்தை நிலவரம்; எதிர்பாரா வீட்டுத் தேவை அனைத்தையும் சமாளிக்க ஒரே பயிரை நம்பியிருக்காமல் அந்த விவசாயக் குடும்பம் கடைப்பிடித்த எளிய வழிமுறைகளை Multi-cropping, Portfolio Management, Risk Mitigation என்றெல்லாம் பெயரிட்டு வல்லுநர்கள் கருத்தரங்கக் கட்டுரைகள் வாசிக்கக்கூடும். ஆனால் ஈரோட்டு விவசாயிகள் அதை மிக எளிதில் தங்கள் மரபாகக் கடந்து செல்கிறார்கள்.

அதேநாளில் ஓய்வுபெற்ற கைத்தறித் துறை அதிகாரி ஒருவருடைய கரும்புத் தோட்டத்துக்குச் சென்றோம். ஓய்வுபெறும் முன் தன் சேமிப்பு நிதி அனைத்தையும் போட்டு வாங்கிய பத்து ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தார். முழுக்க முழுக்கச் சொட்டு நீர்ப்பாசனம். உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்தும் சிறுகுழாய் வழியே பயணித்து வேரில் விழுகின்றன.

அந்தக் கரும்புத் தோட்டத்தைக் கண்காணித்துப் பராமரிப்பது சென்னையில் பணியாற்றிவரும் அந்த அதிகாரியின் மனைவியும், அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் பிரின்டிங் டெக்னாலஜி படிக்கும் மகளும்தான். ‘காலையில் மொட்டைமாடியில் நின்று படித்துக் கொண்டிருக்கும்போதே தோட்டத்தில் எந்த இடத்தில் பயிர் வாடியிருக்கிறது என்று பார்த்துவிடுவேன்... ஆங்காங்கே எலெக்ட்ரானிக் சென்சார் பொருத்தப்பட்டிருப்பதால் பெரிய சிக்கல் எதுவும் இல்லை’ என்று அந்தக் கல்லூரி மாணவி சொன்னபோது எதிர்காலத் தலைமுறை மீதே நம்பிக்கை தளும்பியது. தொழில்நுட்பத்தை உள்வாங்கிக்கொண்டு தமக்கான வழிமுறைகளை வடிவமைக்க ஈரோட்டின் அடுத்த தலைமுறை விவசாயிகள் தயாராகிவிட்டார்கள்.

இறுதியாக அன்று நாங்கள் பார்த்தது, ஒற்றை நாற்று நெல் நடவுமுறை. அதிக மகசூல் கொடுக்கும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். அதிகாரிகளை அழைத்து விசாரித்தேன். ‘தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 ஹெக்டேர் அளவுக்கு மாதிரித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கலெக்டர் விரும்பினால் 500 ஹெக்டேர் அளவுக்கு அதை விரிவுபடுத்தலாம்’ என்றார்கள். ‘ஈரோட்டு விவசாயிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். 5000 ஹெக்டேர் முயற்சி செய்வோம்’ என்றேன் நான். அதிகாரிகள் ஒரே வாரத்தில் செயல்திட்டத்தோடு வந்தார்கள்.

நம்மாழ்வார்
நம்மாழ்வார்

வேளாண் இடுபொருள்கள், கருவிகள், செயல்விளக்கம் என அடுத்தடுத்த திட்டங்கள் தயாராயின. ஒரு சில வாரங்கள் ஓடின. ஆய்வுக் கூட்டம் ஒன்றில், அதிகாரிகள் ஏதோவொன்றைச் சொல்லவந்து தயங்கி மறைப்பதை உணர்ந்தேன். அருகே அழைத்து விசாரித்தேன். ஒரு விநோதமான சிக்கல். ஒற்றை நாற்று நடவு முறையில் நெல் கதிர் பிடிக்கப் பதினைந்து முதல் இருபது நாள்கள் வரை ஆகக்கூடும். அதுவரை யிலான தருணங்களில் பிற விவசாயிகளின் ஏளனப் பேச்சைப் புதிய முறை விவசாயிகள் எதிர்கொண்டு தடுமாறுகிறார்கள். அதிலும் தங்கள் மனைவியின் அதிருப்தியையும் அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்றார்கள்.

உதவி வேளாண் அலுவலரான இளைஞர் ஒருவர் அற்புதமான வழியொன்றைச் சொன்னார். ‘புதிய நெல் நடவு முறை பயிற்சிக் கூட்டங்களுக்கு விவசாயிகள் தங்கள் மனைவியையும் அழைத்துவரலாம். தங்கள் சந்தேகங்களுக்குத் தெளிவு பெறலாம்’ என்பதுதான் அது. பத்தே நாள்களில் நிலை மாறியது. ‘செம்மை நெல் சாகுபடித் திட்டம்’ மிகப்பெரிய வெற்றிபெற்றது. 50 ஹெக்டேரில் இருந்து 5,000 ஹெக்டேர் என நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, வருட முடிவில் 12,000 ஹெக்டேர் அளவில் விரிந்து பரவியது. எதிர்பார்ப்பை மீறிய வெற்றி மகிழ்ச்சியைத் தந்தாலும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மனித உளவியல் போக்குகளையும் உள்வாங்கவேண்டும் என்று நான் கற்றுக்கொண்டது தான் முக்கியம். அதுமட்டுமல்ல, ஆணாதிக்கச் சமூகத்தில் கிராமப் பொருளாதாரம், வேளாண் நடைமுறை களில் பெண்களின் பங்கு குறித்துத் தெளிவு கிடைத்ததற்கு ஈரோட்டு விவசாயிகளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

ஈரோட்டு கலெக்டர் அலுவலகத்தில் ஒரு திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. முதியவர் ஒருவர் மனுவோடு முன்வந்தார். “அய்யா, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையை உருவாக்க எட்டு ஏக்கர் நிலம் கொடுத்தேன். அரசு தந்த இழப்பீட்டை வைத்து அன்றைய மதிப்பீட்டில் புதிதாய் ஒரு ஏக்கர் நிலம்தான் என்னால் வாங்க முடிந்தது. இப்போது சிப்காட் விரிவாக்கம் செய்ய இந்த ஒரு ஏக்கரையும் அரசாங்கம் எடுத்துக்கொண்டால் நீங்கள் தரும் இழப்பீட்டை வைத்து இன்றைக்கு ஒரு சென்ட்கூட வாங்க முடியாது” என்று அவர் கூறியபோது அதிர்ச்சியில் உறைந்துபோனேன். ‘அவருடைய வாழ்வாதாரத்தைக் குலைக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபடப்போவதில்லை’ என்று அவருக்கு அன்று உறுதி கொடுத்தேன். அந்த உறுதிமொழியை இறுதிவரை காப்பாற்ற முடிந்ததில் எனக்குத் திருப்தி. எனினும் நாடெங்கிலும் விவசாயிகளின் சோகம் ததும்பும் கண்ணீர்க் கதைகள் வெளிவரும்போதெல்லாம் அந்த முதியவரின் முகம் மட்டும் என் கண்முன் அடிக்கடி வந்து நிழலாடுகிறது.

“வரப்புயர . . . ”

- நடை பயில்வோம்...

சபைக் குறிப்பு

இந்தியாவில் வெண்மைப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர் வர்கிஸ் குரியன். பாலக்காட்டில் பிறந்த குரியன் ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிப்படிப்பு, சென்னை லயோலாவில் இயற்பியல், கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல், அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் எனப் படித்தாலும் இறுதியில் அவர் தேர்ந்தெடுத்த துறை கால்நடைப் பொறியியல். கால்நடைப் பராமரிப்பிலும், பால் உற்பத்தியிலும், எளிய மனிதர்களும் பின்பற்றும் வகையில் புதிய தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டிய பால் பொருள்களை மார்க்கெட்டிங் தந்திரங்களுடன் விற்பனை செய்து பன்னாட்டு நிறுவனங்களை வெற்றிகண்டது, இடைத்தரகர்கள் இன்றி ‘அமுல் ‘ பிராண்டை நிலைநிறுத்தியது என 60 ஆண்டுகளில் அவர் சாதித்தது ஏராளம்.

 IAS officer Udhayachandran shares his experiences part 17
IAS officer Udhayachandran shares his experiences part 17

பத்மபூஷண், மகசேசே விருது, உலக உணவு விருது எனப் பல அங்கீகாரங்கள் கிடைத்தாலும் அவர் மனதார ஏற்றுக்கொண்டது ‘இந்தியாவின் பால்காரர்’ என்ற எளிய விவசாயிகள் வழங்கிய பட்டத்தைத்தான். அவர் எழுதிய `எனக்கும் ஒரு கனவு’ என்ற நூலை, பொதுவாழ்க்கையில், அரசு நிர்வாகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.

- உதயச்சந்திரன்