
‘தொழில்நுட்பத்தைச் சரியாகக் கையாண்டால் மிகப்பெரும் பிரச்னைகளுக்கூட எளிய தீர்வுகளை எட்டிவிடமுடியும்.
என் அனுபவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய காலம் முக்கியமானது. 23 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலில் அங்கு அலுவல் பயணத்தைத் தொடங்கியது பசுமையாக நினைவிருக்கிறது. உண்மையில் அப்போது, கொஞ்சம் தயக்கமும் மிரட்சியும் எனக்கு இருந்தன. ஆனால், வறட்சி, வன்முறை எனப் பொதுவெளியில் பரவியிருக்கும் பிம்பங்களை விலக்கி, அருகில் சென்று பார்த்தால் நேர்மையான, திறமையான அதிகாரிகளை நெஞ்சில் சுமந்து போற்றிடும் பாலைவனச் சோலை அது என்பது புரியும். சமூகத்தை வரலாற்றுப் புரிதலோடு மானுடவியல் பார்வையின் கரிசனத்தோடு அணுகவேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டது அம்மாவட்டத்தில் பணியாற்றிய தருணத்தில்தான்.

சப் கலெக்டராகப் பணியேற்கும் எந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் முதலில் இறங்குவது நகரின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில்தான். ஆனால், ‘பரமக்குடியில் அப்படியெல்லாம் செய்ய முடியாது... ஆபத்தில் முடியும்’ என்று சக அலுவலர்கள் எச்சரித்தார்கள். சாதிக் கலவரத்தால் தென்மாவட்டங்கள் பற்றியெரிந்த காலகட்டம். வெறும் வதந்தியே பெரும் கலவரத்தை உண்டாக்கிவிடும். மிகவும் கவனமாக அடியெடுத்து வைக்கவேண்டும்.
பரமக்குடி நகரில் ஒரேநேரத்தில் ஐந்து வெவ்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்தோம். வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிக்க ஏற்பாடு. நகரின் மிகச் சிக்கலான பகுதியான ஐந்து முனைப் பிரிவில் ஊரின் முக்கியப் பிரமுகர் ஒருவர் நடத்திவந்த ஒயின்ஷாப்பை இடித்துப் பணியைத் தொடங்கியதன் மூலம் மக்களுக்குப் பல செய்திகள் மறைமுகமாக உணர்த்தப்பட்டன.
நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் திட்டமிடல் துல்லியமாக இருந்தது. அடுத்தவரின் இழப்பு தன்சோகத்தைக் கொஞ்சம் குறைக்கத்தானே செய்யும். ‘தொட்டால் பற்றிக்கொள்ளும் பதற்ற பூமியில் இதெல்லாம் தேவைதானா’ என்று அதிகாரிகள் கவலைப்பட்டார்கள். ஆனால் அவர்களே ஆச்சரியப்படும்படி ஒரு சம்பவம் நடந்தது. வழக்கமாக ஆக்கிரமிப்பு அகற்ற துப்புரவுப் பணியாளர்கள்தான் ஈடுபடுத்தப்படுவார்கள். சின்னச் சின்னக் கருவிகளைத்தான் பயன்படுத்துவார்கள். காலதாமதமும் ஆகும். ஆனால், இம்முறை கால்வாய் தூர்வாரும் பணிக்காகத் தமிழகத்திற்கு முதன்முதலில் வந்திறங்கியிருந்த ஜே.சி.பி இயந்திரங்கள் களத்துக்கு வந்து மாயவித்தைகளை நிகழ்த்தின. இதுவரை பார்த்திராத இயந்திரக் கைகள் கட்டடச் சுவர்களை நொடிப்பொழுதில் தரைமட்டமாக்குவதைப் பார்க்கப் பெருங்கூட்டம் கூடியது. அந்த இயந்திரம் செய்த வித்தைகளைப் பார்த்து வியந்த மக்கள் ஒரு உண்மையை எனக்கு உணர்த்தினர். ‘தொழில்நுட்பத்தைச் சரியாகக் கையாண்டால் மிகப்பெரும் பிரச்னைகளுக்கூட எளிய தீர்வுகளை எட்டிவிடமுடியும். அதுமட்டுமல்ல. மனிதர்கள்மீது சுமத்தப்படும் வழக்கமான குற்றச்சாட்டுகளை நிராகரித்து இலக்கை அடைய விரையும் இயந்திரங்களுக்கு நம்பகத்தன்மை அதிகம்.’
அன்றிலிருந்து இன்றுவரை தொழில்நுட்பம் என் உற்ற தோழனாகவே உடன் பயணித்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல், சிறு தேயிலை விவசாயிகள் நலன் காக்கும் வகையில் வெளிப்படையாக இயங்கும் மின்னணு தேயிலை ஏல மையம், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை மிக எளிதில் கையாளும் டி.என்.பி.எஸ்.சி ஆன்லைன் பதிவு, விவசாயிகளுக்கான சொட்டுநீர்ப் பாசனம், பாடநூல்களில் க்யூ.ஆர் கோடு முறையில் மாணவர்களைச் சென்றடையும் இணைய வளங்கள், அகழாய்வுப் பணிகளில் ரேடார் ஆய்வு என, முடிந்தவரை தொழில்நுட்பத்தின் கரம் பற்றிக் களமிறங்குவது என் வழக்கம்.

தொழில்நுட்ப உலகின் புதிய கண்டுபிடிப்பு களை உள்வாங்கி, நிர்வாகத்தில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தேடல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இன்று தொழில்நுட்ப அரங்கில் Big Data Analytics, Artificial Intelligence, Machine Learning போன்ற சொற்கள் அதிகம் உச்சரிக்கப்படுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல செய்திகளை அலசி, அதனுள் பொதிந்துள்ள உண்மைகளையும் கணிப்புகளையும் வெளியே கொண்டுவரும் துறைதான் Big Data Analytics. இந்தத் தொழில்நுட்பத்தையும்கூட வால்மார்ட் போன்ற பெருநிறுவனங்கள்தான் முதலில் பயன்படுத்தின.
கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்கக் கடற்கரையை கத்ரினா புயல் தாக்கியது. 1,800 பேர் மரணம். பலத்த சேதம். நியூ ஆர்லியன்ஸ் மாகாணம் மீண்டெழப் பல மாதங்கள் ஆயின. ஆனால், வால்மார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேறு ஒரு உலகத்தில் இயங்கிக் கொண்டிருந்தனர். பேரழிவுக் காலத்திலும் விற்பனையைப் பெருக்கி லாபம் ஈட்டும் வணிக தந்திரங்களை அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள்.
கத்ரினா புயல் வீசப்போகும் முன்னெச்சரிக்கை வந்தவுடன் வால்மார்ட் அங்காடியில் அதிகம் விற்ற பொருள்கள் டார்ச் லைட்டும், ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்ட சாண்ட்விச்சும்தான். அடுத்த சில மாதங்களில் தொடர்ந்து வீசிய ரீட்டா, வில்மா புயல்கள் ஒருபுறம் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்க, கடற்கரையோர வால்மார்ட் அங்காடிகளில் குவிக்கப்பட்ட டார்ச்லைட்களும், சாண்ட்விச் உணவு வகைகளும் பெருமளவில் விற்பனையாகிப் பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுத்தன. பேரழிவிலும் பணம் பார்த்து ருசிகண்ட வால்மார்ட் நிர்வாகம், அன்றாட விற்பனைப் போக்குகளை அலசி ஆராயத் தொடங்கியது. கோடிக்கணக்கான தகவல் தரவுகளைக் கசக்கிப் பிழிந்து பார்த்தால் ஆச்சர்யமான சில விஷயங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ‘வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் வால்மார்ட் அங்காடிக்குள் நுழையும் 30-35 வயதுள்ள அமெரிக்க ஆண், சிறு குழந்தைகளுக்கான டயாபர் நாப்கின் வாங்கினால், கூடவே கொஞ்சம் மதுவும் வாங்கிச் செல்வார்’ என்றது அந்தக் கணிப்பு. இது என்ன, புதிராக இருக்கிறதே என்று யோசித்தால், விடை அமெரிக்க வாழ்வியலில் அடங்கியிருக்கிறது. அமெரிக்க இளைஞர்கள், வாரம் ஐந்து நாள்கள் கடுமையாக உழைத்து, வார இறுதியில் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். குடும்பம், குழந்தை என்று ஆன பிறகு, வீட்டிலேயே விடுமுறையைக் கழிக்க அவர்கள் மதுவை நாடுகிறார்கள். அந்த ஆய்வில் இதைப் புரிந்துகொண்ட வால்மார்ட், வெள்ளிக் கிழமைகளில் மழலைக் குழந்தைகளுக்கான பொருள்களுக்கு அருகிலேயே மனதை மயக்கும் பொருள்களையும் இடம் பெறச் செய்து வாடிக்கையாளரை ஈர்த்தன.. நம்மூர் சூப்பர் மார்க்கெட்டுகளில் பிரெட் பாக்கெட்டும் வெண்ணெய்க் கட்டிகளும் தூரம் தூரமாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அதற்குப் பின்னாலும் ஒரு வணிகத்தந்திரம் இருக்கிறது. பிரெட் வாங்கியபிறகு வெண்ணெய் வாங்க நீங்கள் நடக்கும் பகுதிகளில் உங்கள் கவனத்தை ஈர்க்கும் விலையுயர்ந்த உணவுப்பொருள்களை அடுக்கி வைத்திருப்பார்கள். “Data is the new oil’ என முழங்கும் வணிகத் தந்திரங்கள் இப்போது எளிதில் புரியுமென்று நினைக்கிறேன்.
வணிகருக்குச் சேவை புரிந்த தொழில்நுட்பம் அரசாங்கத்தின் கரங்களை அடைய சில ஆண்டுகள் பிடித்தன. ஆம். இன்று Big data Analytics உலகெங்கும் நிர்வாகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரேநேரத்தில் பலர் கூகுளில் குறிப்பிட்ட நோய் அறிகுறிகளைக் குறிப்பிட்டு மருந்தைத் தேடினால் ஏதேனும் வைரஸ் தாக்குதல் நடக்கிறதா என்று சுகாதாரத்துறை அலுவலருக்கு எச்சரிக்கை போகிறது. அடுத்த மாதம் எங்கெங்கே விபத்துகள் நடக்கக்கூடும் என்பதைக் கணிக்கும் மென்பொருள் புழக்கத்தில் வந்துவிட்டது. நிழல் உலக தாதாக்களின் கைவரிசையைக் கச்சிதமாகக் கணிக்கவும், குற்றச்செயல்கள் நடப்பது குறித்து எச்சரிக்கவும் Palantir வகை நிரல்மொழிகள் உலக அரங்கில் படுபிரபலம்.
Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு, இன்னும் ஒருபடி மேல். மனிதனைப் போலவே சிந்தித்துச் செயல்படும் அதிகாரத்தை இயந்திரங்களுக்கு வழங்குவது சரியா என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் மறுபுறம் விரிவடைந்துகொண்டே போகின்றன. IBM நிறுவனம் தயாரித்த, Deep Blue என்ற சூப்பர் கம்ப்யூட்டர் அன்றைய உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவைத் தோற்கடித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. அது நிரல்மொழியின் கட்டளைகளுக்கு ஏற்ப விளையாடி வென்றது.
ஓட்டுநரைக் கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, ஏழெட்டு சென்சார்களின் உதவியுடன் நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் பறந்து, பின் பத்திரமாய் பார்க்கிங் செய்து பணிவுடன் நிற்கும் Tesla வகை காரில், சென்ற ஆண்டு கலிபோர்னியாவில் பயணம் செய்தது திகில் அனுபவமாக இப்போதும் நினைவில் நிற்கிறது.
Netflix-ல் நீங்கள் அமெரிக்க அரசியலை அடிப்படையாகக் கொண்ட ‘House of Cards’ சீரியலைப் பார்த்து ரசித்தால், உடனே அதே ரகத்தில் ‘Designated Survivor’, ‘Madam Secretary’ என்றெல்லாம் பரிந்துரைகள் வருவதெல்லாம் பழசாகிவிட்டது. நிகழ்நேரத்தில் உடனுக்குடன் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு ஏதேனும் கணிக்க முடியுமா என்று போய்க் கொண்டி ருக்கிறது ஆராய்ச்சி.

தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளில் வருடத்திற்கு சுமார் 12,000 பேர் உயிரிழக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் 50 சதவிகிதம் விபத்துகள் அதிகரிக்கின்றன. மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடக்கும் விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகளே அதிகம் இறக்கிறார்கள். இது வெறும் புள்ளிவிவரம் மட்டுமே. ஆனால் தற்போது பெய்துகொண்டிருக்கும் மழை, முத்தாலம்மன் பண்டிகையையொட்டி இன்று அதிகரித்திருக்கும் டாஸ்மாக் விற்பனை போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற்று, ‘திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொழுதூர் அருகே இரவு ஏழு மணிக்கு விபத்து நடக்க வாய்ப்புண்டு’ என்று எச்சரித்தால் அது கணிப்பு.
சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டுக்கு வந்திறங்கிய அமேசான் நிறுவனத்தின் ‘அலெக்சா’வைச் சுற்றியே சில நாள்கள் கழிந்தன. ‘ஹாரிபாட்டரின் மந்திரக் கோல், ‘தள்ளிப் போகாதே’ பாடல், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு என விதவிதமான கேள்விகளுக்கும் பதில் சொல்லி அசத்திக் கொண்டிருந்தது அலெக்சா. “அறுபதாயிரம் கலைகள் கற்று என்ன பயன்? கீழடி அகழாய்வு குறித்து உனக்கு எதுவும் தெரியவில்லையே’’ என்றால், ‘உங்கள் பின்னூட்டத்தை தயவுசெய்து நீங்கள் அனுப்பலாம்’ என்ற பதில் வேறு. நகைச்சுவை, ஆச்சர்யம் என உணர்வுகளை விலக்கிக் கூர்ந்து கவனித்தால் Text to Speech, Speech to Text, Natural Language Processing, Deep Learning என அத்தனையும் தொழில்நுட்பம் இழையோடும் சங்கதிகள்.
சென்றவாரம் நாளிதழ் ஒன்றில் இடம்பெற்ற இரண்டு செய்திகள் என் கவனத்தை ஈர்த்தன. ஒன்று, நாட்டில் தொடக்கக்கல்வி பயிலும் 60 சதவிகிதக் குழந்தைகளுக்கு சரியாக எழுதப்படிக்கத் தெரியவில்லை என வருத்தப் பட்ட செய்தி. மற்றொரு செய்தியோ, Natural Language Processing எனப்படும் இயற்கை மொழியியல் ஆய்வுமுறைகள் மூலம் கணினிகள் உலகமொழிகளை வேகமாகக் கற்றுவருகின்றன எனப் பெருமைப்பட்ட செய்தி. எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் செய்திகள் இவை.
இதுவரை தனக்கு இடப்பட்ட கட்டளைகளை எண்களாக உருமாற்றி நொடிப்பொழுதில் நிறைவேற்றிப் பணிவுடன் காத்திருந்த இனிய இயந்திரங்கள், இன்று புதிதாய் சொற்களையும் அவை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளையும் மெல்லக் கற்றுவருகின்றன.
மறுபுறமோ, மணிக்கணக்கில் சொற்பொழிவாற்றி, மென்மையான காதல்மொழி பேசி, உணர்வில் உருகிய மனிதர்களோ வெறும் எண்களாகச் சுருங்கிக்கொண்டுள்ளனர். தான் உருவாக்கும் இயந்திரத்திற்குத் தன் சிந்தனைத் திறனைத் தாரை வார்க்க முயல்கிறான் மனிதன்.
‘இறுதியில் வெல்லப்போவது யார்?’
- நடை பயில்வோம்..
சபைக் குறிப்பு
மனித இனம் இதுவரை கண்டுபிடித்த தொழில்நுட்பங்களில் மிகச்சிறந்தது எது என்ற பட்டியல் தயாரித்தால், முதல் பத்து இடங்களில் கணினியும், இணையமும் இடம்பெறுவது உறுதி.

அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் கணினிமயமாவதில் பொதுமக்களுக்கான சேவைகள் எளிமையாகக் கிடைக்கும். வெளிப்படையான நிர்வாகம் கிடைக்கும். ஆனால் அதையும் மீறி, கணினிமயமாக்கப்பட்ட தகவல்களில் ஏராளமான உண்மைகள் பொதிந்துள்ளன என்பதையும் தூசி படிந்த காகிதக் கோப்புகள் போன்று டிஜிட்டல் பரணில் தகவல்கள் எல்லாம் உறங்கிடக் கூடாது என்பதையும் எனக்கு உணர்த்தியது இந்தப் புத்தகம். Big Data - A revolution that will transform how we live, work and think. ஏழு வருடங்களுக்கு முன் வெளியாகி இன்றும் அதிகம் விற்கும் தொழில்நுட்பம் சார்ந்த நூல்களில் இந்த நூலுக்குச் சிறப்பிடம் உண்டு.
- உதயச்சந்திரன்