
கல்வியை முழுமையாக கற்று, தன்னுடைய ஆழ்மனதில், லட்சியத்தை ஏற்படுத்தினால், கட்டாயம் வெற்றி பெறலாம்.

பள்ளியிலேயே கண்டிப்பான ஆசிரியர் அவர். எனினும், அவர் பாடம் சொல்லித்தரும் அழகில் மாணவர்கள் சொக்கித்தான் போவார்கள். திடீரென்று ஒருநாள் யாராவது ஒரு மாணவர் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த மலரைப் பரிசளிக்கும்போது, அவருடைய கண்டிப்பான ஆசிரியர் வேடத்தைக் கலைத்து, மழலையாக மலர்ந்து சிரிப்பார். அப்படி மலர் கொண்டு வந்த ஓரு மாணவனையும், உணர்ச்சிமயமான ஓர் ஆசிரியரையும் எதிர்கொண்ட அனுபவம் இப்போதும் என் இதயத்தில் உறைந்திருந்து இனிப்பூட்டுகிறது.
ஈரோடு கலெக்டராகப் பணியாற்றிய காலம். அன்று முகாம் அலுவலகத்தில் காலை முதலே அலுவலர்கள், பொதுமக்கள் எனப் பலரையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஈரோடு மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதையொட்டி புதிய திட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காலை 10:00 மணிக்குத் தொடங்க வேண்டும். அனைத்துப் பார்வையாளர்களையும் சந்தித்து முடித்துவிட்டு எழுந்தபோது, ‘`இன்னும் ஒருவர் மட்டும் இருக்கிறார்’’ என்கிறார் உதவியாளர். விரைந்து அனுப்பச் சொல்லிவிட்டு அமர்ந்த தருணத்தில் உள்ளே நுழைகிறான் ஒரு பள்ளிச் சிறுவன். உடன் யாராவது வந்திருக்கிறார்களா என்று தேடினேன். இல்லை. தனியாகத்தான் வந்திருக்கிறான். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பேசத் தொடங்கினான். ‘`உங்களிடம் பதினைந்து நிமிடங்கள் பேச வேண்டும்!’’
கடந்த இரண்டு மணி நேரமாக, பணிவு கலந்த உரையாடலில் தோய்ந்து போயிருந்த எனக்கு இது சற்று அதிர்ச்சிதான். எனினும், பால் வடியும் அந்த முகத்தைப் பார்த்து புன்னகைத்தேன். ‘`ஏற்கெனவே ஆய்வுக் கூட்டத்துக்கு தாமதமாகிவிட்டது. மூன்று நிமிடங்கள்தான். சொல் கண்ணா...’’ என்றவுடன், தயக்கத்துடன் பேச ஆரம்பித்தான். ஈரோடு மாநகரின் புகழ்பெற்ற தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதாகக் கூறிய அவன், ‘`பள்ளியில் ஒரு சிறு பிரச்னை’’ என்றான் பதற்றத்தோடு. அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் மோதல். ‘`அடிதடி சண்டையா...’’ சட்டம் ஒழுங்கு சிக்கல்களையே நாள்தோறும் பார்த்த பழக்கத்தில் நான் கேட்க, வேகமாகத் தலையாட்டுகிறான். `‘இல்லையில்லை. வாய்ச் சண்டைதான். ஆனால், ஃபேஸ்புக் வரை போய்விட்டது. இரண்டு தரப்பும் மாறி மாறி ஃபேஸ்புக்கில் மோதியது பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், விடுதி மாணவர்களுக்குச் சாதகமாக முடிவெடுத்துவிட்டது நிர்வாகம். எதிர்த்துக் கேள்வி கேட்ட என்னைப் போன்ற எட்டு மாணவர்களுக்குத் தேர்வெழுத ஹால் டிக்கெட் கொடுக்க மறுக்கிறார்கள்’’ என்று சொன்ன அந்தச் சிறுவனின் முகத்தில் அவ்வளவு கோபம். என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அடுத்து அவன் கூறியதுதான் அதிர்ச்சியைக் கொடுத்தது.
‘`பள்ளி நிர்வாகம் பற்றி ஜூனியர் விகடனில் செய்தி கொடுக்கலாம் என்று நண்பர்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கு முன்னர் நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா... இல்லையென்றால் வேறு வழியில்லை எங்களுக்கு’’ என்று அலட்சியமாக அங்குமிங்கும் பார்க்கத் தொடங்கினான். அசந்துபோய்விட்டேன். அப்படியொரு காலக்கெடு விதிக்கும் உரையாடலை அதுவரை நான் சந்தித்ததே இல்லை.

முகாம் உதவியாளரை அழைத்து அந்த மாணவனின் பெயர், விவரம் குறித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பள்ளியின் தாளாளரை தொலைபேசியில் அழைக்கச் சொன்னேன். அவர், மிக நீண்ட குற்றப் பத்திரிகையை வாசிக்கத் தொடங்கினார். பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘`சரி பரவாயில்லை. இம்முறை எச்சரிக்கை செய்து விட்டுவிடுங்கள். தேர்வுக்குப் படிக்க வேண்டிய நேரத்தில் கவனம் சிதறுவது தேவையில்லைதானே...’’ என்று நான் கூற, அரை மனதுடன் ஒப்புக்கொண்டார். தொலைபேசி உரையாடல் முடியும்போது அவர் கேட்ட கேள்வி ‘`கலெக்டரிடம் வந்து புகார் சொன்ன மாணவரின் பெயர் என்ன?’’ நான், ‘`அந்தச் சிறுவனின் ரகசியம் காப்பது கலெக்டரின் கடமை’’ என்று சொன்னவுடன் தொலைபேசியின் இருமுனைகளும் சிரிப்பலைகளால் அதிர்ந்தன.
இது நடந்து ஒரு மாதம் கழித்து, சுகாதாரத்துறை அலுவலர்கள் கூட்டம் முடிந்து என்னைச் சந்திக்க வந்த ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஹூசைன் தயங்கியபடியே பேசத் தொடங்கினர். ‘`கலெக்டர் மன்னிக்கணும். அன்று பள்ளியில் நடந்த சிக்கல் குறித்து புகார் சொன்னது என் மகன்தான். எனக்குத் தெரியாமலேயே நடந்துவிட்டது’’ என்றார். நான் புன்னகைத்தேன். மிகக் கடும் உழைப்பாளி அவர். ஈரோடு மருத்துவமனையில் பொதுமக்கள் பங்களிப்போடு பல திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு அவர்தான் முக்கியக் காரணம். ‘`இதிலென்ன இருக்கிறது டாக்டர்... தேர்வு நடக்கும் நேரத்தில் உங்கள் மகனிடம் எதுவும் விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். தேர்வு முடிந்தவுடன் என்னுடன் தேநீர் அருந்த அவனைக் கூட்டி வாருங்கள்’’ என்று அனுப்பி வைத்தேன். இடையில் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, சில மாதங்கள் கழித்து ஈரோடு புத்தகத் திருவிழாவில் பங்கேற்கச் சென்றபோது குடும்பத்தோடு வந்து பார்த்தார்கள். ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற அம்மாணவனுக்கு சென்னைக்கு அருகே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதாகக் கூறி மகிழ்ந்தார்கள். அம்மாவுக்குப் பின்னால் மறைந்துகொண்டிருந்த மாணவப் புரட்சியாளரைச் சீண்டினேன்... வெட்கத்துடன் நெளிந்துகொண்டிருந்தான். கண்களில் மட்டும் தோன்றி மறைந்த குறும்பு என்னென்னவோ சொன்னது அன்று.
பத்து வருடங்கள் கழித்து திரும்பிப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. இணையவெளிக்கு இடம்பெயர்ந்த சிறுவர் மோதல், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பயன்படுத்தத் துணியும் பதின்பருவத் துணிச்சல், கலெக்டருக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு... என்றென்றும் நினைக்கத் தூண்டும் தருணங்கள் அவை!
பள்ளி மாணவனின் போர்க்கோலத்தை தரிசித்த சில நாள்களிலேயே பள்ளி தலைமையாசிரியர் ஒருவரின் அறச்சீற்றத்தைச் சந்திக்க நேர்ந்தது. கல்வித்துறைச் செயல்பாடுகள் குறித்தான காலாண்டு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முடித்து திரும்பியிருந்த என்னைச் சந்திக்க தலைமை ஆசிரியர் ஒருவர் காத்திருப் பதாகக் கூறினார்கள். வரச் சொன்னேன். சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர். மாணவர் நலனுக்காக எடுக்கப்படும் சிறப்பு முயற்சிகள் குறித்துப் பட்டியலிட்டவர், திடீரென்று என்னை நோக்கி அம்பெய்யத் தொடங்கினர்.
‘சென்ற வாரம் சத்தியமங்கலம் பகுதிக்கு நீங்கள் ஆய்வு செய்ய வந்ததாகக் கேள்விப் பட்டேன். ஒரு நாள் முழுக்க அந்தப் பகுதியில் இருந்தபோதும் எங்கள் பள்ளிக்கு ஏன் வரவில்லை?’ என்று ஆரம்பித்து, வாள் வீச்சுப் போட்டியில் அவர் பள்ளி மாணவர்கள் வென்ற தேசிய அளவிலான பரிசுகள் முதல் நூலகத்தில் அவர் சொந்தச் செலவில் வாங்கிக் கொடுக்கும் இலக்கியப் பத்திரிகைகள் வரை பட்டியலிட்டுக் கொண்டே போனார். ‘மாவட்டத்தின் கடைக் கோடியில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு கலெக்டரே உரிய முக்கியத்துவம் கொடுக்கா விட்டால் எப்படி?’ - சுழன்றடித்து நின்றது சூறாவளி.
அழகுத் தமிழ்கொண்டு எழுந்த அவரின் ஆதங்கமும் கோபமும் என்னைக் கவர்ந்தன. ‘சென்ற முறை சத்தியமங்கலம் பயணத்தின்போது பொதுப்பணித்துறை, வேளாண்துறை, குடிநீர் வழங்கல் பணி என்று நேரம் கடந்துவிட்டது. அடுத்த முறை அவசியம் வருகிறேன்’ என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். பத்து நாள்களுக்குப் பிறகு மீண்டும் சத்தியமங்கலம் சென்றேன். அன்று ருத்ரதாண்டவம் ஆடிய தலைமை ஆசிரியர், இன்று குழந்தையாக மாறிப்போனார். ஒரு மணி நேரம் பள்ளி வளாகம் முழுக்கச் சுற்றிப் பார்த்தோம். ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடிவிட்டு வரும் வழியில், அப்பகுதியில் இருந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்துவரும் பள்ளிக் கட்டடப் பணிகளை ஒரு சில நிமிடங்கள் ஆய்வு செய்துவிட்டு வந்தேன். அடுத்த சில நாள்களில் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாள்வீச்சுப் பயிற்சிக்கூடம் அமைக்க மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்கி உத்தரவிடப்பட்டது. நூலகத்துக்கு எனச் சிறப்பு நிதி வேறு. ஆசிரியரின் சீற்றம் அதன் பிறகாவது சற்று தணிந்திருக்கும்.
வாள்வீசி, சொல் அம்பெய்தி கலெக்டரை வரவழைத்த அந்தத் தருணம் பல ஆண்டுகள் கழித்து ஒரு பட்டாம்பூச்சி விளைவை ஏற்படுத்தும் என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆம். ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் மாலை தலைமைச் செயலகத் திலிருந்து இல்லம் திரும்பிக் கொண்டிருந்த போது அலைபேசி ஒலித்தது. பேசிய பெண்ணின் பெயர் வான்மதி. ‘நான் பொறியியல் பட்டதாரி. இன்று வெளியான யூபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் நானும் வெற்றி பெற்றிருக்கிறேன். எனக்கு ஐ.ஏ.எஸ் பணி கிடைக்கும்’ என்று உற்சாகமாகச் சொன்னார். ‘என்னுடைய வெற்றிக்கு நீங்களும் ஒரு காரணம்’ என்று சொன்னபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரைச் சந்தித்த தாகவோ, ஆலோசனைகள் சொன்னதாகவோ நினைவில்லை. சில நாள்கள் கழித்து சென்னை தலைமைச் செயலகத்தில் என்னைச் சந்தித்தபோதுதான் புரிந்தது. நான் ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, அன்று சத்தியமங்கலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று விட்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தேனல்லவா... அந்தச் சில நிமிட நிகழ்வுகளில் கலெக்டருக்குச் சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரம் அந்தப் பெண்ணைக் கவர்ந்திருக்கிறது. ‘ஐ.ஏ.ஏஸ் தேர்வெழுத அன்றுதான் முடிவு செய்தேன்’ என்று அவர் சொன்னபோது ஆச்சர்யம் தாங்கவில்லை எனக்கு.
எங்கோ ஓரிடத்தில் வாள் முனையில் எழும்பிய அறச்சீற்றம், சொல் அம்பாய் உருமாறித் தாக்கியதில் உதயமானது புது நிலவு. வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளில் விரிகிறது வானம்!
- நடை பயில்வோம்...
கல்வியை முழுமையாக கற்று, தன்னுடைய ஆழ்மனதில், லட்சியத்தை ஏற்படுத்தினால், கட்டாயம் வெற்றி பெறலாம். நான் படித்த இப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும்போது, அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டர் உதயசந்திரன், ஒரு விழாவிற்கு வந்து பேசினார்.

அப்போதே, நான் கலெக்டராகி, இந்த பள்ளிக்கு வரவேண்டும் என முடிவு செய்தேன். பிளஸ் 2 முடித்துச் சென்றவுடன் இந்த பள்ளிக்கு இதுவரை வந்ததில்லை. பள்ளிக்கு நான் மீண்டும் வரும்போது என்னால் இந்த பள்ளி பெருமை கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன், பிளஸ் 2 முடித்துவிட்டு வெளியே சென்றேன். இன்று அந்த லட்சியத்தை அடைந்து விட்டேன்.
சபைக் குறிப்பு
ஒரு தனிநபரால், ஒரே ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியால் இந்தச் சமூகத்தில் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு பதில் ‘சமூக நீதிக்கான அறப்போர்’ என்ற புத்தகத்தில் இருக்கிறது.

கேரளாவில் `உயர் சமூகம்’ என்று கருதப்பட்ட பிரிவில் பிறந்தும், தன்னைச் சாதி மறுப்பாளர் என்று கருதி தன் வாழ்நாள் முழுக்க ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் நலன்கருதி உழைத்தவர் பி.எஸ்.கிருஷ்ணன். இந்தியாவின் சமூகநீதித் தளத்தில் நிகழ்ந்த பல சரித்திர நிகழ்வுகளில் அவருடைய பங்கு முக்கியமானது. பழங்குடி மக்களுக்கான சிறப்புத் திட்டங்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்ததில் திரு.கிருஷ்ணனின் அசாத்திய உழைப்பு இருந்தது. `ஐ.ஏ.எஸ் என்னும் மந்திரச்சொல்லைப் பயன்படுத்தி, இறக்கும்வரை சாதிய அமைப்பின் மீது இடைவிடாமல் போர் தொடுத்த தனிநபர் ராணுவம்’ என்றே அவர் அறியப்படுகிறார்.
- உதயச்சந்திரன்