
சுசீலா இல்லாவிட்டால் உலகச் சாம்பியன் ஆனந்த் உருவாகியிருக்கமாட்டார்.
வாஷிங்டன் நகரின் தெருக்கள் பனிப்பொழிவை ஏந்தி வெள்ளை மாளிகையின் நிறத்தை நகலெடுக்க முயன்றுகொண்டிருந்தன. பகல் நேரப் பனிப்பொழிவும் அந்த ஜனவரி மாதக் கடுங்குளிரும் பன்னிரண்டு மாதங்கள் கழிந்தபிறகும் என் கைவிரல்களில் இன்னும் ஒட்டிக்கொண்டுள்ளன. ஆபிரகாம் லிங்கன் நினைவகம், அருங்காட்சியகங்கள் என எனது அந்தப் பயணம் கழிந்தது. மலைக்க வைக்கும் டைனோசர் எலும்புகள், எகிப்திய மம்மி, ரைட் சகோதரர்களின் முதல் விமானம் என அரிய படைப்புகள் ஒருபுறம்... உலகப்போரில் நடந்தேறிய இனப்படுகொலையின் அவலம், அமெரிக்கக் கறுப்பின மக்களின் வலி மிகுந்த வாழ்க்கை குறித்த காட்சிக்கூடங்கள் மறுபுறம்... ஒவ்வொன்றாய் ஏறி இறங்கியபின் நான் நுழைந்தது, பத்திரிகைச் சுதந்திரத்தை முன்வைத்து எழுப்பப்பட்ட ‘Newseum’ ஒன்றில். அச்சுக்கலை, செய்தித்தாள் உருவான விதத்தில் தொடங்கி, தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வழியாக வளர்ந்த இதழியல் போக்குகள் குறித்த மிக அரிய அழகிய சித்திரிப்புகள் கொண்ட புதுவகை மியூசியம் அது.

அங்கே என்னைப் பெரிதும் கவர்ந்தது, உலகில் பனிப்போர் முடிவுக்கு வந்த பின் இடிக்கப்பட்ட பெர்லின் சுவரின் ஒரு பகுதிதான். கூடவே, மேற்கு பெர்லினில் இருந்து கிழக்கு பெர்லினுக்கு ரகசியமாகச் சென்ற செய்தித்தாள்கள், பெர்லின் சுவர் தாண்டி ஒலிபரப்பான வானொலி நிகழ்ச்சிகளில் தோய்ந்திருந்த சுதந்திர தாகம், மேற்குலகம் தயாரித்த தொலைக்காட்சித் தொடர்களிடம் காதல் வயப்பட்ட கிழக்கு ஜெர்மனி மக்கள் என மக்களின் மனங்கள் ஒன்றிணைந்தபின் தானாகவே வீழ்ந்த பெர்லின் சுவர் என்ற சுவையான பின்னணியும் அங்கே விளக்கப்பட்டிருந்தது.
அடுத்து நடந்துசெல்கிறேன்... அமெரிக்க அரசியலை உலுக்கிய ஓர் நிகழ்வில் பத்திரிகையாளர்கள் எப்படிச் செயல்பட்டனர் என்பது குறித்த பதிவுகள் என்னை ஈர்த்தன. தலைப்பு, ‘வாட்டர் கேட்’ என்று வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்தவுடன் ஊரில் இருக்கும் அம்மாவிடம் பேசவேண்டும் போல் இருந்தது. அலைபேசியில் எண்களைத் தட்டினேன்.
தமிழ்நாட்டில் இரவு நேரம் என்பதால் உடனே தொடர்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அம்மாவின் குரல் ஒலிக்கிறது. அமெரிக்கக் குளிர், கிடைக்கும் உணவு வகைகள், உடல் நிலை என வழக்கமான விசாரிப்புகள். எல்லா விசாரிப்புகளுக்கும் அவசரமாகப் பதில் தந்தபடியே நான் சொன்னேன்... “இப்போது நான் எங்கு இருக்கிறேன் தெரியுமா, வாஷிங்டன் நகர மியூசியம் ஒன்றில்... வாட்டர்கேட் ஊழல் வெளிவந்த விதம் குறித்த அரிய பதிவுகள் கொண்ட பகுதி இது... நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது கலந்துகொண்ட கட்டுரைப் போட்டியில், ‘செய்தித்தாள்’ என்ற தலைப்பில் எழுதிக் கொடுத்தீர்களே... அது ஞாபகம் இருக்கிறதா அம்மா?” எனக் கேட்கிறேன். மறுமுனையில், உறக்கம் கலைந்து உற்சாகக் குரல். முப்பத்தாறு வருடங்களுக்கு முன் கடும் காய்ச்சலுடன் கலந்துகொண்ட கட்டுரைப் போட்டி. அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் துணிவுடன் செயல்பட்டு வெளிக்கொண்டுவந்த ஊழலையும் உள்ளடக்கியிருந்தது அந்தக் கட்டுரை. ஆசிரியர்களின் பாராட்டு, முதற்பரிசாகக் கிடைத்த மு.மேத்தாவின் கவிதைகள் என அலைபேசியின் இருமுனைகளும் நினைவலைகளை மீட்டிக்கொண்டிருந்தன சில நிமிடங்களுக்கு. ‘உன் கண்களில் உலகைப் பார்க்கிறேன்’ என்ற வரிகளுடன் முடிவுற்றது அம்மாவின் உரையாடல். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த தருணம் அது.

‘உன் கண்களில் உலகைப் பார்க்கிறேன்’
எங்கள் தலைமுறையில் பல குடும்பங்களில் ‘அப்பா’ என்ற சொல்லுக்கு, ‘தங்கப் பதக்க நடை உடை பாவனை கொண்டவர்’ என்றுதான் பொருள். ஆனால், ‘அம்மா’ என்ற சொல்லுக்கு, ‘அளவில்லா அன்பு, அரவணைக்கும் கரங்கள், தவறிழைத்தாலும் தஞ்சம் தரக் காத்திருக்கும் பெருந்தன்மை’ என்று பொருள். வார இறுதி நாள்களில் விளையாட்டுப்போட்டிகள், திரைப்படம், கல்விச்சுற்றுலா செல்ல அனுமதி என அனைத்துக் கோப்புகளும் அம்மாவின் வழியே நகர்ந்து போவது வழக்கம். வழக்கறிஞர் என்னதான் திறமையாக வாதாடினாலும்... உடன்பிறந்தவரின் வலுவான சாட்சியங்கள் உதவிக்கு வந்தாலும்... பல நேரங்களில் அனுமதி தாமதமாவதும், சில நேரங்களில் மறுக்கப்படுவதும் உண்டு. பெருத்த ஏமாற்றத்தை நாட்குறிப்பில் பதிவு செய்துகொண்ட எங்களுக்கு, பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் அனைத்தும் அப்பாவின் பெயரில் வெளிவந்தவை என்றாலும் திரைக்கதை, இயக்கத்தில் தாய்மையின் பங்கு அதிகம் என்பதைத் தெரிந்துகொள்ளப் பல ஆண்டுகள் பிடித்தன.
தாய்க்கும் குழந்தைக்குமான உறவில் உணர்வுபூர்வமான ஆயுதங்கள் பல நேரங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. தாயின் மிகச்சிறந்த ஆயுதம், கண்ணீர். உண்ணாவிரதம், குழந்தை ஏவிடும் பிரம்மாஸ்திரம். உலகெங்கும் சுற்றியாயிற்று. ‘பிடித்த உணவு எது?’ என்று கேட்டார் நண்பர் ஒருவர். என்னையறியாமல் வந்துவிழுந்தது பதில்... ‘புதினா சாதமும், தேங்காய்த் துவையலும்!’ நண்பர்களின் முகத்தில் புன்னகை மறைய சிறிது நேரமனது . பின், அந்தக் கேள்விக்கு ஒவ்வொருவராகப் பதில் சொல்லத் தொடங்கினார்கள். அத்தனை பேரும் பல ஆண்டுகளுக்கு முன் சுவைத்த மிக எளிய உணவு வகைகளைப் பட்டியலிட, எல்லோரும் ஆச்சர்யப்பட்டோம். உண்மைதானே..! எளிய உணவு என்றாலும் அன்பைக் குழைத்துச் சமைத்து அம்மா பரிமாறினால் அதன் சுவை காலம் கடந்து நிற்கும்தானே!
‘தாயின் அளவுகடந்த அன்பு, பல நேரங்களில் மூச்சை முட்டச்செய்கிறது’ என்றார் ஒரு நண்பர். மற்றொருவர், ‘அம்மாவின் அன்பு மூட நம்பிக்கையை வளர்க்கிறது’ என்றார். யோசித்துப் பார்த்தால் ஒரு வகையில் உண்மைதான். அம்மா தவிர்க்கச் சொன்ன உணவுகளைத் தொட இன்னும் தயக்கம் இருக்கிறது. சில நேரங்களில் நண்பர்களின் நகைப்பிற்கும் உள்ளாக நேரிடுகிறது. ஒருமுறை நண்பர்களுடன் மதிய உணவு முடித்து வெளிவரும்போது நீட்டப்பட்ட வெற்றிலை பீடாவை மறுத்து ஒதுக்குகின்றன என் கரங்கள். ‘மதுவையும், புகைபிடித்தலையும் தவிர்ப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெற்றிலை பீடாவில் என்ன சிக்கல், உடலுக்கும் நல்லதுதானே?’ என்றார்கள் நண்பர்கள். பதில் சொன்னால் தீராப்பழி வரும் என்று தயக்கம் எனக்கு. தொடர் வற்புறுத்தலால் உண்மையைச் சொன்னேன். ‘வெற்றிலை போட்டால் கோழி முட்டும்’ என்று சின்ன வயதில் அம்மா சொல்லியிருக்கிறார். எல்லோருமே விழுந்து, விழுந்து கேலியாகத்தான் சிரித்தார்கள். உண்மைதான். தெரிந்தே சில மூடநம்பிக்கைகளைச் சுமப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு முறை திருச்சியில் ‘சுட்டி விகடன்’ இதழ் சார்பான நிகழ்ச்சியில், ‘உங்கள் ரோல் மாடல் யார்’ என்று ஒரு சிறுமி கேட்டார். யோசித்துப் பார்த்தேன். ‘தெரியவில்லை. ஆனால் அம்மாவுக்குப் பிடிக்காத எதையும் செய்துவிடக்கூடாது என்பது மட்டும் தெரியும்’ என்ற என் பதிலை அரங்கில் இருந்த எல்லோரும் ஆரவாரித்து ஏற்றுக்கொண்டார்கள். என் அலுவல் பயணத்தின் ஏற்ற இறக்கங்களைக் கூர்ந்து கவனிக்கும் சிலர் ‘நீங்கள் மிகத் துணிச்சலாக இயங்குபவர்’ என்று சொல்லும்போதெல்லாம் எனக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மென்மையாகச் சிரிப்பார்கள். அவர்களுக்குத்தான் தெரியும், ஒரு சுமாரான தமிழ்ப்படத்தின் சராசரி அம்மா சென்டிமென்ட் காட்சிகளுக்கே கண்ணீர் சிந்தும் நபர் நான் என்று.
தென்னக ரயில்வேயில் பணிபுரிந்த விஸ்வநாதனுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் பணிபுரிய ஒரு வாய்ப்பு. உலக செஸ் சாம்பியன் அனடாலி கார்போவ் - விக்டர் கோர்ச்னாய் இடையேயான போட்டி முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. மணிலா இன்னும் சதுரங்கக் காய்ச்சலிலிருந்து விடுபடவில்லை. விஸ்வநாதன் குடும்பத்தினரும் அதில் மூழ்கிப் போனார்கள். ஆனந்த் பள்ளி சென்ற நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செஸ் டுடே’ நிகழ்ச்சியைக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு, பின்னர் ஓய்வுநேரத்தில் மகன் சதுரங்கப் புதிருக்கு விடை தேட உதவினார் சுசீலா. சென்னை திரும்பியவுடன் மீண்டும் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பு. மகன் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளவும் அரசு, தனியார் அமைப்புகளிடம் உதவிகள்பெறவும் அலைந்து திரிந்து உழைத்தவர் ஆனந்தின் அம்மாதான்.தன்னைக் கரைத்துத் தன் குழந்தைகளை வெற்றிப்பாதையில் தவழ விடுவதே தாய்மையின் இலக்கணம். அதற்கு உதாரணமாக, தமிழ்நாட்டின் நடுத்தரக் குடும்பத்து இல்லத்தரசிகளாக இருந்துகொண்டே உலக சாம்பியன்களை உருவாக்கிய இரண்டு பெண்மணிகளைப் பற்றிப் பேச நினைக்கிறேன்.
நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஒருநாள், சென்னையில் உள்ள ரஷ்ய பண்பாட்டு மையத்தில் சதுரங்கப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. சுமார் 600 வீரர்கள் கலந்து கொள்ளும் திருவிழா அது. நேரம் செல்லச் செல்ல பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட இடம் நோக்கிக் குவிகிறார்கள். பத்து வயதுச் சிறுவன் ஒருவன் தன்னைவிட வயதில் பெரிய வீரர்களையும்கூட அதிரடியாய்த் தோற்கடித்துக் கொண்டிருக்கிறான். அந்தச் சிறுவனின் பெயர், விஸ்வநாதன் ஆனந்த். தன் அம்மாவும், சித்தியும் விளையாடும் செஸ் விளையாட்டை அருகிலிருந்து ஆர்வத்தோடு கவனித்து உள்வாங்கிய ஆனந்துக்கு ஆறு வயது முதல் அம்மா சுசீலாதான் குரு.
தென்னக ரயில்வேயில் பணிபுரிந்த விஸ்வநாதனுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் பணிபுரிய ஒரு வாய்ப்பு. உலக செஸ் சாம்பியன் அனடாலி கார்போவ் - விக்டர் கோர்ச்னாய் இடையேயான போட்டி முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்தது. மணிலா இன்னும் சதுரங்கக் காய்ச்சலிலிருந்து விடுபடவில்லை. விஸ்வநாதன் குடும்பத்தினரும் அதில் மூழ்கிப் போனார்கள். ஆனந்த் பள்ளி சென்ற நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செஸ் டுடே’ நிகழ்ச்சியைக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு, பின்னர் ஓய்வுநேரத்தில் மகன் சதுரங்கப் புதிருக்கு விடை தேட உதவினார் சுசீலா. சென்னை திரும்பியவுடன் மீண்டும் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பு. மகன் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளவும் அரசு, தனியார் அமைப்புகளிடம் உதவிகள்பெறவும் அலைந்து திரிந்து உழைத்தவர் ஆனந்தின் அம்மாதான்.
ரஷ்யர்களே கோலோச்சிய விளையாட்டில் தமிழகத்து நடுத்தரக் குடும்பத்து மகன் வெற்றி வாகை சூடுவான் என்ற நம்பிக்கை ஆனந்தின் அம்மா சுசீலாவுக்கு இருந்தது. மின்னல் வேகக் குழந்தை என்று அழைக்கப்பட்ட ஆனந்த், 15 வயதில் ஆசிய ஜூனியர் சாம்பியன், 16 வயதில் தேசிய சாம்பியன், 18 வயதில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர், பத்மஸ்ரீ விருது, 5 முறை உலக சாம்பியன் என வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கினார். இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் செஸ் விளையாட்டு மக்களிடம் சென்றுசேர்வதற்கு ஒற்றைக் காரணம் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே. எளிமையும் புன்சிரிப்பும் திறமையும் கலந்த ஆனந்த் இல்லையென்றால் இந்தியாவில் சதுரங்க விளையாட்டு இல்லை. அதேபோல் ஆனந்தின் அம்மா, அவரின் முதல் குரு... சுசீலா இல்லாவிட்டால் உலகச் சாம்பியன் ஆனந்த் உருவாகியிருக்கமாட்டார்.
சென்னையின் ஒருபுறத்தில் சதுரங்கத்தின் உலக சாம்பியன் உருவாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் டென்னிஸ் விளையாட்டில் மூன்று சாம்பியன்களை உருவாக்க ஒருவர் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். அவர் பெயர் மார்க்ரெட் அமிர்தராஜ். தன் மகன்கள் மூவரையும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் விளையாட வைக்கவேண்டும் என்ற கனவு அவருக்கு.

கல்லூரியில் டென்னிஸ் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. கணவர் ரயில்வேயில் பணிபுரிய, மார்க்ரெட் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில் தொடங்கினார். அதில் கிடைத்த வருமானம் முழுவதையும் தன் மூன்று குழந்தைகளின் டென்னிஸ் பயிற்சிக்குச் செலவழித்தார். இறுதியில் வெற்றிபெற்றார். ஆம்... அவரின் மகன்கள்தான் ஆனந்த், விஜய், அசோக் அமிர்தராஜ் சகோதரர்கள். ஒரு குழந்தையை வெற்றிபெற வைக்கவே போராடும் காலத்தில், தன் மூன்று குழந்தைகளையும் சாம்பியன்களாக்கி அழகுபார்த்தார் அந்தத் தாய். அதுமட்டுமல்ல, பிற்காலத்தில் பிரிட்டானியா - அமிர்தராஜ் டென்னிஸ் அகாடமி மூலம், லியாண்டர் பயஸ், சோம்தேவ் வர்மன் எனப் பல புதிய வீரர்களையும் உருவாக்கினார். கண்டிப்பும் அன்பும் ஒருசேர திருமதி மார்க்ரெட்டின் பங்களிப்பு அவருக்கு ‘இந்திய டென்னிஸின் தாய்’ என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது. ஒருமுறை வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது ஸ்டவ் வெடித்து உடலெங்கும் தீக்காயம், சாலை விபத்தொன்றில் சிக்கிப் பல மாதங்கள் படுக்கையிலேயே சிகிச்சையெனப் பல தடைகளைத் தாண்டித் தன் கனவை எட்டிப் பிடித்திருக்கிறார் மார்க்ரெட்.
தவழும் குழந்தை தவறி விழுந்தால் தாங்கிப் பிடிக்கும் தாயின் கரங்கள். அதே குழந்தை வளர்ந்து வெற்றிக்கொடி நாட்டும்போது தாயின் கண்கள் மட்டும் சுட்டிக்காட்டும்... ‘வானமே எல்லை!’
- நடை பயில்வோம்...
சபைக் குறிப்பு
‘Hidden Figures’- தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறத் துடிக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அமெரிக்க, ரஷ்ய நாடுகளிடையேயான போட்டி விண்வெளி வரை பரவியிருந்த காலம்... ரஷ்யாவின் யூரி ககாரின் விண்வெளியில் பறந்து ஆய்வு செய்ததை அடுத்து, அமெரிக்காவின் நாசாவுக்கு தம் வீரர்களையும் விண்வெளிக்கு அனுப்ப வேண்டிய நெருக்கடி.

அப்போது நாசா நிறுவனத்தில் மனித கம்ப்யூட்டர்களாகப் பணிபுரிந்த மூன்று கறுப்பினப் பெண்கள், நிறவெறி, ஆணாதிக்கம், தொழில் நுட்பச்சிக்கல் என எல்லாத் தடைகளையும் வென்று, இறுதியில் அமெரிக்காவின் விண்வெளிப் பயணக் கனவையும் வெற்றிபெறச் செய்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம்!
- உதயச்சந்திரன்